பனை மரம்! எப்போதும் இந்த மரத்திற்கு நமது பாரம்பரியத்திலும், பயன்பாட்டிலும் தனி இடம் உண்டு என்றே சொல்லலாம். ஒரு காலத்தில் ஏரிக்கரை தொடங்கி வீட்டுக்கூரை வரை பனைமரம் ஒரு தனி இடத்தை பிடித்திருந்தது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக பனை மரங்களை காண்பதே அரிதாகிவிட்டது.
நமது பயணத்தின்போது, நாம் பனை மரங்களை பார்த்தும் இருப்போம், கடந்தும் இருப்போம். ஆனால் நாம் அதை அருகி வருவதை யோசித்து பார்த்து இருக்கமாட்டோம். ஏன்? நாம் அதை கவனித்துக்கூட பார்த்து இருக்க மாட்டோம். இதை கவனித்து இந்த மரத்தை பெருக்கவும், இந்த மரத்தின் மூலம் மக்களின் பொருளாதாரத்தை வளப்படுத்தவும் பொன்னேரியை சேர்ந்த பாலகிருஷ்ணன் களம் இறங்கியுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்தம் 526 ஊராட்சிகள் உள்ளன. இன்னும் சில ஆண்டுகளில் ஒவ்வொரு ஊராட்சியிலும் தலா 10,000 பனைவிதைகளை விதைப்பதே தனது இலக்கு என்று இவர் கூறுகிறார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் கும்மிடிப்பூண்டி, ஆர்.கே பேட்டை, பள்ளிப்பட்டு, திருத்தணி ஆகிய ஒன்றியங்களில் அதிக அளவில் பனை மரங்கள் இருக்கின்றன. இந்த ஒன்றியங்களில் உள்ள பனை விதைகளை சேகரித்து, பனை மரங்கள் இல்லாத பிற ஊராட்சிகளில் இந்த பனை விதைகளை விதைப்பதே இவரது திட்டமாகும்.
இந்த பயணத்தை இவர் 2016-ம் ஆண்டே தொடங்கி பல முயற்சிகளை எடுத்திருந்தாலும், அவை ஏனோ கைக்கூடவில்லை. இருந்தாலும் இவர் தனது முயற்சியை சிறிதும் கைவிடவில்லை.
விடமுயற்சி கண்டிப்பாக ஒருநாள் வெற்றிகனியைக் கொடுக்கும் என்று சொல்வார்கள்தானே! இவர் விஷயத்திலும் அது உண்மையாகி உள்ளது. தற்போது திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக இருக்கும் ஆல்பின் ஜான் வர்கீஸிடம் இவரது திட்டத்தை எடுத்துக்கூற, அவரும் உடனடியாக திருவள்ளூர் மாவட்ட அளவில் "பனைவிதை வங்கி" என்ற அமைப்பை உருவாக்கியுள்ளார். மேலும் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 14 ஒன்றியத்தையும் இணைத்து, ஒவ்வொரு ஒன்றியத்திலும் பனை விதை வங்கியை தொடங்கி, பிற ஊராட்சியில் சேகரிக்கப்பட்ட பனை விதைகளை வங்கிகளில் சேகரித்து வைத்து பின்னர் அவை தேவைப்படும் ஊராட்சிக்கு வழங்க ஏற்பாடும் செய்துள்ளார்.
பனை மரம் வளர்ப்பு மற்றும் தனது இலக்கு குறித்தி பாலகிருஷ்ணன் கூறியதாவது, "திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கற 526 ஊராட்சியிலும் தலா 10,000 பனைவிதைகளை விதைக்கறதுதான் என்னோட லட்சியம். இந்த திட்டம் மூலமா மக்களுக்கு பனைமரம் சார்ந்த தொழில் அமைச்சு தரணும்ங்கறதுதான் என்னோட ஆசை.
என்னோட இந்த திட்டம் பத்தி திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பின் ஜான் வர்கீஸ் சார்கிட்ட சொல்லும்போது, இந்த திட்டத்தோட எதிர்கால பலன்கள பத்தி புரிஞ்சுகிட்டு பனை விதை வங்கி அமைச்சு கொடுத்தார். இந்த திட்டத்துக்கு ஊராட்சி மன்ற தலைவர்கள், உறுப்பினர்கள், பணியாளர்கள்னு எல்லாரும் ரொம்ப உதவி செஞ்சாங்க.
தமிழ்நாட்டிலேயே திருவள்ளூர் மாவட்டத்தில்தான் முதன்முதல்ல பனை விதை வங்கி அமைச்சுருக்கோம். கடந்த மூணு-நாலு வருசமா சேலம், தர்மபுரி மாதிரியான மாவட்டங்கள்ல இருந்துதான் பனை விதைகளை வாங்கிட்டு இருந்தோம். இதனால ஒரு டன்னுக்கு ரூ.8,500-9,000 தர வேண்டியதா இருந்துச்சு. இதுபோக போக்குவரத்து செலவுகளும் இருந்துச்சு. இப்படி வாங்கிட்டு வந்தாலும், ஒரு டன்னுக்கு 3,000 விதைகள்தான் வரும். இதனால செலவுகள்தான் அதிகம். இதுமட்டுமில்லாம இப்படி வாங்கிட்டு வரும்போது இது வியாபாரமா மாறிடுது.
இதுவே இங்கேயே இருக்கற கிராம மக்களை வைச்சு, பனை விதைகளை சேகரிக்கும்போது செலவுகள் மிச்சம்ங்கறதவிட, மக்களுக்கு நல்ல விழிப்புணர்வு கிடைச்சுடும்.
இப்போ பனை விதை விதைக்கறது மூலம் அடுத்த 10 வருஷத்துல ஒவ்வொரு ஊராட்சியிலும் 10,000 பனை மரங்கள் இருந்துச்சுனா, பனை பொருள் உற்பத்தி அதிகமாகும். அப்புறம் இது கிராம மக்கள் பொருளாதாரத்தை பெருக்கி தர்றதாவும் இருக்கும்.
இப்போ பனை விதை சேகரிக்கற பணியாளர்கள்கிட்ட பனை மரம் பத்தியும், அதோட எதிர்கால பயன்கள் பத்தியும் சொல்லிடறதால, மக்கள் ரொம்ப ஆர்வத்தோட பனை விதைய சேகரிக்கறாங்க. இந்த மரம் இப்போ இந்த மக்களுக்கு உதவலனாலும், அவங்களோட சந்ததிக்கு கண்டிப்பா இது கைகொடுக்கும்.
இதுக்காக ஒவ்வொரு பஞ்சாயத்திலும் பனை சங்கம் அமைச்சு, இப்போ இந்த பனை விதை சேகரிச்சு, நட உதவி செய்யுற மக்கள்ல உறுப்பினர் ஆக்கணும். அப்போதான் இந்த மரம் வளர்ந்ததுக்கப்புறம், இதே மக்களுக்கு இதோட பலன் போய் சேரும். இதுதான் நாங்க அரசுக்கு வைக்கும் கோரிக்கை" என்று கூறினார்.
பனை விதை வங்கி குறித்து திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் ஆல்பின் ஜான் வர்கீஸ் கூறியதாவது, "திருவள்ளூர் மாவட்டத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் பனை விதை வங்கியை ஒரு முன்னோடி திட்டமாக தொடங்கியுள்ளோம். இந்த பனை வங்கியில் சேகரிக்கப்பட்ட விதைகளை குறிப்பாக ஏரிக்கரைகளில் விதைக்க குழுக்களை அமைத்துள்ளோம்.
இதுவரை திருவள்ளூர் மாவட்டத்தில் 3,00,000 பனை விதைகளை 100 நாள் வேலைத்திட்டம் பணியாளர்கள் மூலம் சேகரித்துள்ளோம். கடந்த ஆறு மாதங்களாக, பொதுப் பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறைக்கு சொந்தமான ஏரிக்கரைகளில் இந்த பனை விதைகளை விதைத்து வருகிறோம். இந்த திட்டத்தின் மூலம் நீர்நிலைகளையும், அதன் கரைகளையும் காப்பது ஒரு முக்கிய அம்சம் ஆகும். மேலும் இந்த திட்டம் ஊரக பொருளாதாரத்தையும் மேம்படுத்தும். இதற்கு பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது.
நாங்கள் ஒவ்வொரு பஞ்சாயத்திலும் பனை விதை வங்கிகளை தொடங்கியுள்ளோம். மேலும் மக்கள் கொண்டுவருகிற ஒவ்வொரு பனை விதைக்கும் 2 ரூபாய் தரவும் ஏற்பாடும் செய்துள்ளோம். ஊராட்சி மன்ற தலைவர்கள், உறுப்பினர்கள், பல தன்னார்வ அமைப்புகளும் சேர்ந்து மக்கள் இயக்கம் போல இந்த திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம்.
கடந்த ஆண்டைவிட, இந்த ஆண்டு இந்த திட்டத்தை மிக சிறப்பாக கொண்டு செல்லவேண்டும் என்பது எங்களது முக்கிய இலக்காக இருக்கிறது. தவிர பனை மரங்களை வெட்டக்கூடாது என்ற விழிப்புணர்வையும் பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தி வருகிறோம். மேலும் மாவட்ட நிர்வாகம் சார்பில் பனை மரங்களை ஊரக பொருளாதார வளர்ச்சிக்கு எப்படி பயன்படுத்தலாம் என்ற பயற்சியும் மக்களுக்கு கொடுக்க உள்ளோம்" என்று கூறினார்.
பனை மரம் குறித்து கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜே எஸ். கோவிந்தராஜன் கூறியதாவது, "பனை மரத்தை யாரும் வெட்டக்கூடாது. வெட்ட வேண்டுமென்றால், மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற வேண்டும் என்று முதலமைச்சர் தற்போது ஆணை பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது. பொதுவாக பனை மரத்தின் வேர்கள் நீரை ஈர்த்து வைக்கும் சிறப்பை உடையது. இதனால் பனை மரம் இருக்கும் இடங்களில் எப்போதும் நீர் வளம் அதிகம் இருக்கும்.
இந்த பனைமர எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கிலே, திருவள்ளூர் மாவட்டத்தில் முதன்முதலாக பனை விதை வங்கியை மாவட்ட ஆட்சியர் தொடங்கிவைத்துள்ளார். எங்களது இந்த திட்டத்தின்படி, அரசு புறம்போக்கு நிலங்களிலும், ஏரிக்கரைகளிலும் பனைமர விதைகளை விதைத்து வருகிறோம்.
ஒரு குடும்பத்தின் மொத்த வருமானத்திற்கு 20 பனை மரங்கள் போதுமானது. பனை மரம் ஏறத்தெரிந்தவர்களுக்கு, பனை மரங்கள் நல்ல பொருளாதாரத்தை ஏற்படுத்தி கொடுக்கும்.
தமிழ்நாட்டிலேயே அதிக நீர்நிலைகள் இருக்கக்கூடிய மாவட்டங்களில் திருவள்ளூர் மாவட்டமும் ஒன்று. அந்த காலத்தில் நீர் வளத்தை பாதுகாக்கவும், பெருக்கவும் மன்னர்கள் ஏரிக்கரைகளில் பனை மரங்களை வளர்த்துள்ளனர்" என்று பேசினார்.

பனை விதை சேமிப்பு குறித்து மெரட்டூர், ஊராட்சி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட மேற்பார்வையாளர் சி. பிரேமா மற்றும் மேல் முதலம்பேடு ஊராட்சி மன்ற மக்கள் நலப் பணியாளர் நளினி விளக்குகிறார்கள்.
"முதல்ல பனை விதை சேமிக்கறத பத்தி எங்க பி.டி.ஓ தான் சொன்னார். அப்புறம் இதபத்தி தலைவர் எங்ககிட்ட சொன்னப்போ, நாங்க 100 நாள் வேலை பாக்கறவுங்க மூலமா பனை விதை சேமிக்க ஆரம்பிச்சோம். அவங்க வீட்டுல இருந்து வரும்போதே கூடையில பனை விதைகள எடுத்துட்டு வந்துருவாங்க. அவங்க எடுத்துட்டு வர்ற பனை விதைகள ஒரு வாரத்துக்கு காய வெச்சுடுவோம். அப்புறம், 1 அடி ஆழம், 2 அடி அகலத்துக்கு குழிய வெட்டி, விதைகள விதைச்சு, அத பத்திரமா பாத்துப்போம்" என்று கூறினார்கள்.
பனை மர பொருளாதாரத்தை குறித்து அனுப்பம்பட்டு முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் சார்லஸ் கூறியதாவது, "எங்க ஊர்பக்கம் விவசாயம் குறைஞ்சுட்டே வருது. இதனால மக்களோட பொருளாதாரமும் பாதிக்குது. இப்போ இந்த பனை மரம் வளர்க்கறது மூலமா இத சரி செஞ்சுடலாம். ஒரு பனை மரம் வளர கிட்டதட்ட 10 வருஷம் ஆகும். ஆனா இது வளர்ந்த அப்புறம், இதுல இருந்து பனங்கருப்பட்டி, கிலுகிலுப்பை, விசிறி மாதிரி பொருட்கள்ல செய்யலாம். இது மூலமா எங்க பகுதியில சிறுதொழில்களும், மக்களோட பொருளாதாரமும் அதிகமாகும்" என்று பேசினார்.