மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மரத்தடி மாநாடு

தேங்காய்க்கு இரண்டு ரூபாய்... இளநீர்க்கு ஏழு ரூபாய் !

##~##

தென்னந்தோப்பில் ஆட்கள் காய் இறக்கி, மரம் கழித்துக் கொண்டிருந்ததை பார்வையிட்டுக் கொண்டிருந்தார், 'ஏரோட்டி’ ஏகாம்பரம். ஓரமாக மரத்தடியில் அமர்ந்து

கூழ் குடித்துக் கொண்டிருந்தார், 'காய்கறி’ கண்ணம்மா. கொஞ்சம் தாமதமாகவே ஆஜரான வாத்தியார் 'வெள்ளைச்சாமி',

''என்னய்யா... காய் முத்துறதுக்குள்ள வெட்டிக்கிட்டிருக்கே... கொஞ்ச நாளைக்கு முன்னதானே மரங்கழிச்சே?'' என்ற கேள்வியைப் போட்டு மாநாட்டைத் தொடங்கி வைத்தார்!

''அடப்போங்கய்யா... முத்தவிட்டு தேங்காயா வித்தா... காய்க்கு ரெண்டு ரூபாய்கூட விலை கிடைக்க மாட்டேங்குது. இளநியா வித்தா... அஞ்சு ரூபாய்க்கு மேல கிடைக்குது. நம்மூர் பஸ் ஸ்டாப்புல இளநி விக்கிற முத்துகருப்பன்தான் இந்த யோசனை சொன்னார். இளநிக்கு பயங்கரத் தட்டுப்பாடா இருக்குதாம். சின்னக்காயா இருந்தாக்கூட எடுத்துக்கிறாங்களாம். அதனாலதான 'வெட்டிக்கோ'னு சொல்லிட்டேன். 'சைஸைப் பொறுத்து ஏழு ரூபாய் வரை விலை கொடுக்குறேன்'னு சொல்லிருக்கார்ல'' என்று குஷியோடு பதில் தந்தார் ஏரோட்டி!

''நல்ல விஷயம்தான்யா. சீக்கிரம் பணமாகுதுங்கிறதோட... அதிக விலையும் கிடைக்குதுல்ல. விலை கிடைக்காததால், உடுமலைப்பேட்டை பக்கமெல்லாம் தோட்டத்துச் சாலையிலேயே தேங்காயைப் போட்டு வெச்சுருக்காங்களாம். அந்தப் பகுதியில ஏறத்தாழ 15 ஆயிரம் ஏக்கருக்கு மேல தென்னை சாகுபடி நடக்குது. விலை ரொம்ப கம்மியா போறதால கொள்முதல் பண்றதுக்குக் கூட ஆளுங்க வர்றதில்லையாம். கொப்பரை விலையும் சரிஞ்சு கிடக்கறதால, நொந்து போய் நிக்கறாங்க, விவசாயிங்க'' என்று கவலை பொங்கினார் வாத்தியார்.

மரத்தடி மாநாடு

''எங்கிட்டயும் தேங்காய் பத்தின ஒரு சேதி இருக்குதுல்ல...'' என்ற காய்கறி,

''எல்லாத் தேங்காய்க்கும் பொதுவா மூணு கண்ணுதான் இருக்கும். கன்னியாகுமரி மாவட்டம், திங்கள்சந்தை அருகே பிலாக்கோடு என்னும் இடத்தில் விற்பனைக்காக கொண்டு வந்த ஒரு தேங்காய்ல ரெண்டு கண்தான் இருந்துச்சாம். நிறைய பேரு அதிசயமா பாத்துட்டு போயிருக்காங்க'' என்று சொல்லிச் சிரித்தார்.

''ம்... நம்ம ஆளுங்களுக்கு எதுனாலும் அதிசயம்தான. என்ன நடந்தாலும் வேடிக்கை பாக்குறதுக்கு ஒரு கூட்டம் வந்துடும்ல'' என்று நக்கலடித்த வாத்தியார்,

''முல்லை- பெரியாறு அணை தொடர்பா சுப்ரீம் கோர்ட்டுல நடக்கற கேஸுக்கு தமிழக அரசு வக்கீலா இருக்கற குப்தா, கூடுதல் அட்வகேட் குருகிருஷ்ணபிரசாத், தமிழகப் பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் சம்பத், காவிரி தொழில்நுட்பக் குழுத் தலைவர் சுப்ரமணியன் எல்லாம் ஒரு குழுவா வந்து, அணைப்பகுதியை சமீபத்துல பார்வையிட்டாங்க. அப்போ, கம்பம் பொதுப்பணித்துறை ஆபீஸுக்கும் அந்தக் குழு வந்திருக்கு.

முல்லை-பெரியாறு நீரால பயன்படுற ஐந்து மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவர் அப்பாஸ், முல்லை-பெரியாறு நீரை பயன்படுத்துவோர் சங்க நிர்வாகி ராமகிருஷ்ணன் ரெண்டு பேரும் விவசாயிகள் சிலரோட போய் அந்தக் குழுவைச் சந்திச்சுருக்காங்க. 'முதல் போக சாகுபடிக்கு நாத்து வளர்க்க 200 கனஅடி தண்ணீர் திறந்துவிட அரசாங்கத்துக்குப் பரிந்துரை செய்யணும்’னு கோரிக்கையும் வெச்சுருக்காங்க. ஆனா, தலைமைப் பொறியாளர் சம்பத், 'அணையில 112 அடி தண்ணி இருந்தா மட்டுந்தான் பரிந்துரை செய்ய முடியும். இப்போ,

111 அடிதான் இருக்கு. அதனால தண்ணீர் திறக்க முடியாது’னு சொல்லிட்டாராம்'' என்றார், வாத்தியார்.

''ஒரு அடி குறைவா இருந்தாகூட திறக்கக் கூடாதா... கேரளாக்காரங்களவிட, இவங்க ரொம்பத்தான் அலும்பு பண்றாங்க'' என்று கடுகடுத்தார் காய்கறி.

''ஏற்கெனவே 108 அடி இருந்தப்பல்லாம்கூட திறந்துருக்காங்க. இப்போ சட்டம் பேசுறாங்க. முதலமைச்சர் தலையிட்டு நடவடிக்கை எடுக்கணும்னு விவசாயிகள் எதிர்பாக்கறாங்க'' என்ற வாத்தியார்,

''மேட்டூர் அணையிலயும் தண்ணி ரொம்ப குறைவா இருக்குதாம். வழக்கமா அணை திறக்குற நாளான ஜூன் 12-ம் தேதி இந்த வருஷம் திறக்க முடியாது போல. அதனால டெல்டா பகுதியில இந்த வருஷம் காவிரிப் பிரச்னை பெருசா வெடிக்கும்போலத்தான் இருக்கு'' என்று மற்றொரு செய்தியையும் சொல்லி நிறுத்தினார்.

''தண்ணி பிரச்னை மாதிரியே, மண்ணெண்ணெய் பிரச்னையும் பெருசாத்தான் இருக்கு. எந்த ரேஷன் கடையிலயும் மண்ணெண்ணெயை ஒழுங்கா கொடுக்கறதே இல்லை. ரெண்டு மாசத்துக்கொரு தடவைதான் கொடுக்கறாங்க. அதுவும் பத்து லிட்டர் கொடுக்க வேண்டிய கார்டுக்கு, எட்டு லிட்டர்தான் கொடுக்கறாங்க. ஒரே ரோதனையா இருக்கு. கேட்டா சப்ளை இல்லேனு சொல்றாங்க'' என்று புலம்பினார்.

''கரன்ட் தட்டுப்பாடு இருக்கறதால ரேஷன் கடைக்காரங்க, பங்க்காரங்க எல்லாம் கார்டுக்கு மண்ணெண்ணெய ஊத்தாம... கடைகள்ல ஜெனரேட்டருக்கு ஊத்துறதுக்கு திருட்டுத்தனமா வித்துப்புடறாங்களாம். அதனாலதான் இந்தப் பிரச்னை'' என்று விளக்கம் தந்தார் வாத்தியார்.

உடனே, ''ஆமா... உனக்குத்தான் போன ஆட்சியில கேஸ் கனெக்ஷன் கொடுத்தாங்கள்ல. அப்பறம் எதுக்கு மண்ணெண்ணெய தேடுறே?'' என்று கேள்வியைப் போட்டார் ஏரோட்டி.

''அத ஏன்யா கேக்குறே. கேஸ் கனெக்ஷன் வாங்கிட்டா... ரேஷன்ல மாசத்துக்கு மூணு லிட்டர்தான் மண்ணெண்ணெய் ஊத்துவாங்க. அதுவும் இப்போ சுத்தமா ஊத்துறதில்லை. இந்தத் திட்டத்துல கேஸ் சிலிண்டர் வாங்கினவங்க, சிலிண்டர் சப்ளை செஞ்ச நாள்ல இருந்து ரெண்டு மாசம் கழிச்சுதான் அடுத்த சிலிண்டருக்கு புக் பண்ண முடியும். புக் பண்ணி ஒரு மாசம் கழிச்சுதான் சிலிண்டர் கொடுப்பாங்க. ஏறத்தாழ மூணு, முன்றரை மாசத்துக்கு ஒரு தடவைதான் சிலிண்டரே கிடைக்குது. புள்ளைக் குட்டிகளை வெச்சுக்கிட்டு எப்படிய்யா சமாளிக்கிறது?'' என்று புலம்பித் தள்ளினார், காய்கறி.

அப்போது... இளநீர் வெட்டிக் கொண்டிருந்தவர்கள் வந்து நிற்க, அவர்களிடம் இருந்து இரண்டு இளநீரை வெட்டி வாத்தியாருக்கும் கண்ணம்மாவுக்கும் கொடுத்த ஏரோட்டி, கணக்கு வழக்கில் மூழ்க... முடிவுக்கு வந்தது, அன்றைய மாநாடு.

பொறுப்பு துணைவேந்தர்!

மரத்தடி மாநாடு

கோயம்புத்தூர், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த முருகேசபூபதி, மூன்றாண்டு பதவிக்காலம் முடிந்த நிலையில், ஜூன் 3 அன்று ஓய்வுபெற்றுவிட்டார். அதையடுத்து, தமிழக ஆளுநரின் உத்தரவுப்படி, பல்கலைக்கழகத்தின் பதிவாளர் சுப்பையன், பொறுப்பு துணைவேந்தராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

 கோயில் கழிவுகளிலிருந்து இயற்கை உரம்!

உத்தர பிரதேச மாநிலம், காசியில் இருக்கும் பிரபலமான விஸ்வநாத சுவாமி கோயிலுக்கு தினம்தோறும் நாடு முழுக்க இருந்து பக்தர்கள் கூட்டம் குவிந்தபடியே இருக்கும். வில்வ இலைகள், பூக்கள், தேன், பால், இளநீர் என பலவிதமானப் பொருட்களையும் இந்த பக்தர்கள் கோயிலுக்குக் கொடுப்பது வழக்கம். பயன்பாட்டுக்குப் பிறகு, இத்தகையப் பொருட்கள் மற்றும் கழிவுகள் கங்கை நதியில்தான் கொட்டப்படும். இதன் காரணமாக நதி நீர் மற்றும் சுற்றுச்சூழல் மாசுபடுவது தொடர்கதையாகவே இருக்கிறது.

இந்நிலையில், இப்பகுதியைச் சேர்ந்த ரகுவன்ஷி எனும் விவசாயி, சூழல் மாசுபாட்டுக்குத் தீர்வு காணும் வகையில் இக்கழிவுப் பொருட்களை விலைக்கு வாங்கி இயற்கை உரம் தயாரிக்க முடிவு செய்து, அதை செயல்பாட்டுக்கும் கொண்டுவந்துள்ளார். கோயிலில் தினமும் தேங்கும் ஐந்து முதல் ஏழு டன் வரையிலான கழிவுகளை, தினமும் 211 ரூபாய் வீதம் கொடுத்து எடுத்துச் சென்று, மட்க வைத்து இயற்கை உரம் தயாரிக்கிறார்.