மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மரத்தடி மாநாடு

ஏறு முகத்தில் தேங்காய் !

##~##

ஆடிக் காத்துக்கு முன்னோட்டமாக, இப்போதே சூறைக்காற்று சுழன்றடிக்க... வங்கிக்குச் சென்றிருந்த 'வாத்தியார்’ வெள்ளைச்சாமி, வேலையை முடித்துவிட்டு தட்டுத் தடுமாறி தோட்டத்துக்கு நடந்து கொண்டிருந்தார். குறுக்கு வழியில், தானும் கூடையோடு தடுமாறியபடியே வந்த 'காய்கறி’ கண்ணம்மா, வாத்தியாரைப் பார்த்ததும்... ''நீங்க தோட்டத்துல இருப்பீங்கனுல்ல நினைச்சேன். இப்பத்தான் போயிக்கிட்டிருக்கீங்களோ!'' என்றார் ஆச்சரியப்பட்டவராக!

''வேற ஒண்ணும் இல்ல கண்ணம்மா... பென்ஷன் பணத்தை பேங்குலதான போடுறாங்க. அப்பப்ப தேவைக்கு எடுக்கறதோட சரி. ரொம்ப நாளா பாஸ்புக்ல என்ட்ரி போடவே இல்லை. அதான், சரினுட்டு இன்னிக்குக் கிளம்பினேன். அங்க ரெண்டு மூணு சினேகிதக்காரங்க வந்துட்டாங்க. அவங்களோட பேசிட்டே இருந்ததுல... நேரம் போனது தெரியல'' என்று விவரம் சொன்னார் வாத்தியார்.

இருவரும் தோட்டத்தில் கால் பதித்த நேரம்... 'சூறைக்காற்றில் மாட்டுக் கொட்டகை பறந்துவிடும்' என்று பயந்து மாடுகளை இடம் மாற்றிக் கட்டிக் கொண்டிருந்த 'ஏரோட்டி’ ஏகாம்பரம், வேலையை முடித்துவிட்டு வந்து அமர... அன்றைய மாநாடு ஆரம்பமானது.

''ஆனி மாசத்துலேயே இப்படிக் காத்தடிக்குதே!'' என்றார், காய்கறி.

''ஆடிக்கு, இன்னும் ஒரு மாசம் இருக்கறப்பவே காத்து பலமாத்தான் அடிக்க ஆரம்பிச்சுருக்கு. சுத்தியடிக்கிற காத்துக்குத் தாக்குப் பிடிக்க முடியாம, நிறைய இடங்கள்ல வாழையெல்லாம் சாய்ஞ்சுகிடக்காம். மரம் சாயாம இருக்க முட்டுக் கொடுத்துருக்கற இடங்கள்ல... இலையெல்லாம் கிழிஞ்சுடுதாம். திருப்பூர் மாவட்டத்துல அவிநாசி, ஊத்துக்குளி, பல்லடம், குன்னத்தூர் பகுதியிலெல்லாம் நிறைய பாதிப்பாம். அதனால, இலை வரத்து ரொம்ப குறைஞ்சு... விலை எகிறியிருக்கு'' என்றார், வாத்தியார்.

மரத்தடி மாநாடு

''தேங்காய்க்கும்கூட இப்ப விலை அதிகரிக்க ஆரம்பிச்சுருச்சு தெரியுமா?'' என்ற ஏரோட்டி,

''கொப்பரை விலை ரொம்ப சரிஞ்சு கிடந்ததால, தேங்காய் விலையும் அதல, பாதாளத்துலதான் இருந்துச்சு. இந்த நிலையில தேங்காய் எண்ணெய்க்குத் தேவை அதிகரிச்சுருக்கறதால, கொப்பரை விலை ஏற ஆரம்பிச்சுருக்கு. அரசாங்கத் தரப்புலயும் கொள்முதல் ஆரம்பிச்சுட்டதால வெளி மார்க்கெட்லயும் கூடுதல் விலை கிடைக்குதாம். போன வருஷம் ஜூன் மாச ஆரம்பத்துல கிலோ எழுபது ரூபாய்க்குப் போயிட்டிருந்த கொப்பரை... இந்த ஜூன் மாசத்துல

33 ரூபாய்க்குத்தான் போயிக்கிட்டிருந்துச்சு. இப்பத்தான் கிலோவுக்கு 10 ரூபாய் கூடி,

43 ரூபாய் வரைக்கும் வந்திருக்கு. அதனால, தேங்காய்க்கும் விலை கூடிக்கிட்டு இருக்கு. ரெண்டு ரூபாய்க்குக் கூட வாங்க ஆளில்லாம இருந்த நிலை மாறி, அஞ்சு ரூபா வரைக்கும் விலை போகுது'' என்றார்.

''விலை ஏற ஆரம்பிச்சு என்ன... ஈரோடு சுத்து வட்டாரத்துல இருக்குற சென்னிமலை, சித்தோடு, கவுந்தப்பாடி, பவானி பகுதியிலெல்லாம் தென்னை மரங்கள்ல ஒரு வகையான நோய் தாக்கி... காயே காய்க்கறதில்லைங்கற சேதி தெரியுமா!'' என்ற வாத்தியார்,

''இந்த ஏரியால ஆயிரத்துக்கு மேற்பட்ட தென்னந்தோப்புகள் இருக்கு. ஏதோ மர்ம நோய் தாக்கி, தென்னங்கீத்தெல்லாம் வெள்ளையாகிப் போயிடுதாம். விவசாயிகளெல்லாம் பயந்து கிடக்குறாங்க. வேளாண்மைத்துறை அதிகாரிங்க வந்து பார்த்துட்டு... ஒரு வகையான புழுவைத் தெளிச்சு விடுறாங்களாம். 'சீக்கிரம் நோய் சரியாயிடும்’னு சொல்றாங்களாம். ஆனா, என்ன நோய்னு சரியான விவரத்தைச் சொல்ல மாட்டேங்கறாங்களாம். விவசாயி

களெல்லாம் புலம்பிக்கிட்டு இருக்காங்க'' என்று சொன்னார்.

கூடைக்குள் இருந்து ஆப்பிளை எடுத்து நறுக்கி, இருவருக்கும் கொடுத்த காய்கறி... ''என்னய்யா... ஆப்பிளைப் பார்த்ததுமே முகம் கோணலாகுது. இது, ஒரு வருஷத்துக்கு முன்ன பறிச்சு, ஐஸ் ரூம்ல வெச்சுருந்து, பிறகு மெழுகெல்லாம் பூசி, பளபளப்பா வர்ற வெளிநாட்டு ஆப்பிள் இல்ல. நம்ம கொடைக்கானல் ஆப்பிள். பறிச்ச கையோடதான் இங்க வந்திருக்கு... தைரியமா சாப்பிடுங்க. நம்ம வாடிக்கைக்காரங்க சில பேருக்கு கொடைக்கானல்ல எஸ்டேட் இருக்கு. அவங்க தோட்டத்துல விளைஞ்சுதுனு கொஞ்சத்தை எனக்கு கொடுத்து விட்டாங்க...'' என்று சொல்லி, தானும் சாப்பிட்டுக் கொண்டே பேச்சைத் தொடர்ந்த காய்கறி,

''ரெண்டு வருஷமா கொடைக்கானல்ல ஆப்பிள் சரியா விளையலையாம். இந்த வருஷம் ஆரம்பத்துலேயே நல்ல விளைச்சல் கிடைச்சுருக்காம். அதனால அங்குள்ள விவசாயிங்க சந்தோஷமா இருக்காங்களாம்'' என்று சொன்னார்.

''கொடைக்கானல் பத்தி என்கிட்டயும் ஒரு தேதி இருக்குல்ல...'' என்று குஷியோடு சொன்ன ஏரோட்டி, ''கொடைக்கானல்ல இருக்குற 'மகேந்திரபாபு’ங்கிறவர்... மதுரை, ஹை-கோர்ட் கிளையில பொது நல மனு தாக்கல் செஞ்சுருந்தார்.

'கொடைக்கானல் ஏரியைச் சுத்தியிருக்குற பங்களாக்கள்ல இருந்து கழிப்பறை தண்ணியெல்லாம் ஏரியில கலக்குது. இந்தத் தண்ணியை தனியார் ஆளுங்க லாரி மூலமா மக்களுக்கும், ஹோட்டல்களுக்கும் சப்ளை செஞ்சு நோயைப் பரப்பிக்கிட்டிருக்காங்க. இதைத் தடுத்து நிறுத்தணும்'னு அதுல கேட்டிருந்தார். இதை விசாரிச்ச நீதிபதிகள், 'கழிவு நீர் கலந்து, ஏரி அழுக்காகாம நகராட்சி பாதுகாக்கணும். தனியார் லாரிகள், ஏரியிலிருந்து தண்ணீ எடுத்தா, கடுமையா நடவடிக்கை எடுக்கணும். ஏரியில் இருக்குற பாசி, களைச் செடிகளை உடனடியா எடுத்து ஏரியைச் சுத்தப்படுத்தணும். இதையெல்லாம் நகராட்சி செயல்படுத்துதானு மாவட்ட கலெக்டர் கண்காணிக்கணும்’னு உத்தரவு போட்டிருக்காங்க'' என்று சொன்னார்.

''ம்... நகரத்துல மக்கள் நல்லா வாழறதுக்குத் தேவையான உதவிகளை செய்றதுக்குத்தான் நகராட்சினு ஒரு அமைப்பையே உருவாக்கி வெச்சுருக்காங்க. 'அதை சாதிப்போம்'னு சொல்லிட்டு, தேர்தல்ல நின்னு ஜெயிக்கற கவுன்சிலருங்க... அதையெல்லாம் கண்டுக்கறதே இல்ல. ஹை-கோர்ட் தலையிட்டுத்தான் சாக்கடைக்குக்கூட தீர்வு காண வேண்டியிருக்கு நம்ம நாட்டுல... எல்லாம் நம்ம தலையெழுத்து!'' என்று நொந்து கொண்டார் வாத்தியார்.

''சென்னை மாநகராட்சியில கூட ஆளும்கட்சி கவுன்சிலருங்க கமிஷன் வாங்கற வேலையை மட்டும்தான் பாக்கறாங்கனு அவங்களையெல்லாம் கூட்டி வெச்சு, லெப்ட்... ரைட் வாங்கியிருக்காங்க அம்மா. தலைநகரத்துலயே இப்படினா... மத்த மத்த நகரங்கள்ல வேற எப்படி இருக்கும். கவுன்சிலர் ஆகறதே... 'கமிஷன்'னர் வேலைக்காகத்தானே!'' என்று சொல்லி ஏரோட்டி நக்கலாக சிரிக்க... அந்த நேரம் பார்த்து... சடசடவென தூறல் தொடங்க...  முடிவுக்கு வந்தது அன்றைய மாநாடு!

வாத்தியார் சொன்ன கொசுறு...

எத்தனாலுக்கு அனுமதி வேண்டும்...

தமிழ்நாடு கள் இயக்க ஆலோசனைக் கூட்டம், அதோட ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி தலைமையில கோயம்புத்தூர்ல நடந்திருக்கு. 'கள், கரும்பு மற்றும் வீணாகும் பொருட்களில் இருந்து, எத்தனால் தயாரித்து பெட்ரோலில் கலக்க அனுமதி அளிக்க வேண்டும். இதன் மூலம் கரும்புக்கும் அதிக விலை கொடுக்க முடியும். பெட்ரோல் விலையையும் குறைக்க முடியும்.

கள் தடை நீக்கம் பற்றி, 2009-ம் ஆண்டு மே மாதம் 31-ம் தேதி நீதிபதி சிவசுப்பிரமணியம் தலைமையிலான குழுவின் அறிக்கையை உடனடியாக வெளியிட வேண்டும். சட்டமன்றத் தேர்தலின் போது முதலமைச்சர் ஜெயலலிதா வாக்குறுதி கொடுத்தபடி, கள்ளுக்கான தடையை நீக்க வேண்டும்’ங்கறது உட்பட பல தீர்மானங்களை நிறைவேத்தியிருக்காங்க.