மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நீங்கள் கேட்டவை

அகர் மரம் வளர்த்தால்... கோடிகளில் வருமானம் கிடைக்குமா ?படங்கள்: தி. விஜய், வீ. சிவக்குமார்,பா. காளிமுத்து, ஆ. முத்துக்குமார்

 புறா பாண்டி

##~##

''நர்சரி பண்ணை ஆரம்பிக்கலாம் என்று முடிவு செய்துள்ளேன். அத்தொழிலில் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும். இதற்கு அரசு அனுமதி பெற வேண்டுமா?''

எம். பானுமதி, சிவகாசி.

வேலூர் மாவட்டம், திருப்பத்தூரில் மூன்று தலைமுறைகளாக நர்சரி நடத்தி வரும் முனைவர். ரா. பிரபுராம் பதில் சொல்கிறார்.

''தற்சமயம் நர்சரி தொழிலுக்கான தேவை அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதேநேரத்தில் புற்றீசல் போல உருவாகும் பல நர்சரிகள் காணாமல் போவதும் நடக்கிறது. சரியான புரிதல், திட்டமிடல் இல்லாததுதான் காரணம். பழச்செடி நர்சரி, மரப்பயிர் நர்சரி, காய்கறி நர்சரி என மூன்று வகை நர்சரிகள் உள்ளன. பழ மரங்கள் சாகுபடி அதிகமாக நடக்கும் பகுதிகளில் பழச்செடிகளுக்கான தேவை இருக்கும். சற்று வறட்சியான பகுதிகளில் மரக்கன்றுகளுக்கான தேவை இருக்கும். நல்ல செழிப்பான பகுதிகளில்... அதாவது, காய்கறிகள் விளையும் பகுதிகளில் அவற்றுக்கான தேவை இருக்கும். ஆகவே, அந்தந்தப் பகுதியின் தேவையைப் பொறுத்து, உரிய நர்சரியை ஆரம்பிப்பதுதான் நல்லது.

நீங்கள் கேட்டவை

ஆந்திரா, கர்நாடகா... போன்ற மாநிலங்களில் தக்காளி, கத்திரி... போன்ற காய்கறி நாற்றுகளை நர்சரியில் வாங்கித்தான் பயிர் செய்கிறார்கள். தமிழ்நாட்டிலும் இந்த முறை மெதுவாக பரவி வருகிறது. இதனால், நாற்றங்கால் விட்டு, நாற்றுகளை உற்பத்தி செய்யும் வேலை குறைகிறது. மேலும், ஒரு மாத நாற்று என்கிறபோது... விவசாயிக்கு ஒரு மாதத்துக்கான உரம், பயிர் பாதுகாப்புச் செலவு மிச்சமாகிறது. இந்த விவரங்களை உங்கள் பகுதி விவசாயிகளுக்குப் புரிய வைத்தால்... அவர்களும் காய்கறி நாற்றுகளை வாங்கத் தொடங்குவார்கள். ஒரு ஏக்கர் அளவு நிலத்தில்,  ஒரு மாதத்தில் 6 லட்சம் காய்கறி நாற்றுகளை குழிதட்டு முறையில் உற்பத்தி செய்ய முடியும். ஒரு நாற்று 50 காசு என்ற அளவில் விற்பனை செய்தாலே போதுமான லாபம் கிடைக்கும். இப்படி ஒவ்வொரு நர்சரிக்கும் ஒவ்வொரு தனித்துவம் உண்டு.

தரமான கன்றுகளை உற்பத்தி செய்யவும், போலிகளை தண்டிக்கவும் 'நர்சரி சட்டம்’ அவசியம் என்பதை உணர்ந்திருக்கும் வடமாநிலங்கள் பலவும்... நர்சரி சட்டத்தின்படி பதிவு செய்யப்பட்ட நர்சரிகள் மட்டுமே கன்றுகளை விற்பனை செய்ய முடியும் என்கிற ஏற்பாட்டைச் செய்துள்ளன. ஆனால், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை நர்சரிகளுக்கு என்று எந்தச் சட்டமும் கிடையாது. தமிழ்நாடு அரசின் வேளாண்மை துறையின் கீழ் இயங்கும் விதைச் சான்றுத் துறை, நர்சரிகளுக்கு அங்கீகாரம் கொடுக்கிறது. அடுத்து, தேசியத் தோட்டக்கலை வாரியத்திடம் விண்ணப்பித்தால், நர்சரியை ஆய்வு செய்து அங்கீகாரச் சான்று கொடுப்பார்கள். இந்த அங்கீகாரம் பெற்றுக்கொள்வது கட்டாயத் தேவையில்லை. ஆனால், இது நம்முடைய நர்சரி பற்றி பொதுமக்களிடம் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தும்.''

தொடர்புக்கு: தேசியத் தோட்டக்கலை வாரியம், சென்னை. தொலைபேசி: 044-22501151. முனைவர். ரா.பிரபுராம், செல்போன்: 94432-32944.

''நன்னீர் முத்து வளர்க்க விரும்புகிறேன். தமிழ்நாட்டில் இது சாத்தியமா?''

ஜெ. சசிகுமார், பல்லடம்.

எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி மையத்தின் விஞ்ஞானி முனைவர். செல்வம் பதில் சொல்கிறார்.

நீங்கள் கேட்டவை

''முத்து உருவாவவது பற்றி பல சுவாரஸ்யமான கட்டுக்கதைகள் இருப்பதால், உண்மையில் முத்து உருவாவது எப்படி என்பதை கூறிவிடுகிறேன். முத்து என்பது, கடல் பகுதியில் உள்ள ஒரு வகை மெல்லுடலியின் எச்சில்தான். அதாவது, மெல்லுடலியின் மீது தூசு, தும்புகள் படிந்தால் அவற்றுக்கு அரிப்பு ஏற்படும். அந்த சமயங்களில் மெல்லுடலி தூசியின் மீது எச்சிலை உமிழும். அதிலிருந்துதான் முத்துக்கள் உருவாகின்றன. முத்து உருவாக, ஒன்பது மாதங்கள் காத்திருக்க வேண்டும். ஒரு கிராம் முத்து குறைந்தப்பட்சமாக 1,500 ரூபாய் அளவில் விற்பனையாகிறது.

கடலில், தானே வளர்ந்திருக்கும் இயற்கை முத்துக்கள் தவிர...கடல் உள்ளே செயற்கை முத்து வளர்ப்பு, நன்னீர் முத்து வளர்ப்பு என இரண்டு வகையில் முத்து வளர்ப்பு நடக்கிறது. இதில் கடல் நீர் மூலம் கிடைக்கும் முத்துக்களுக்குத்தான் அதிக விலை கிடைக்கிறது. நன்னீர் முத்துக்கள் பார்வைக்கு நன்றாக இருந்தாலும், அதிக விலைக்கு விற்பனையாவதில்லை. 'ஐதராபாத் முத்து’ என்று சொல்லப்படுபவை நன்னீர் முத்துக்கள்தான்.

நீங்கள் கேட்டவை

தமிழ்நாட்டில் தாராளமாக நன்னீர் முத்து வளர்ப்பில் ஈடுபடலாம். சில ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் மையத்தின் மூலம் ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் கடல் பகுதியில் மீனவர்களுக்குக் கூடுதல் வருமானம் கிடைக்கும் வகையில், கடல் நீரில் முத்து வளர்ப்பில் ஈடுபட்டோம். ஆனால், அதை விட நன்னீரில் முத்து வளர்ப்பது எளிதானது. ஆந்திர மாநிலத்தில் நன்னீர் முத்து வளர்ப்புத் தொழில் சிறப்பாக நடந்து வருகிறது. ஒடிசா மாநிலத்தில் இயங்கிவரும், மத்திய நன்னீர் மீன் வளர்ப்பு ஆராய்ச்சி மையம் இதற்கான பயிற்சியை அளித்து வருகிறது.''

நீங்கள் கேட்டவை

தொடர்புக்கு:Central Institute of Freshwater Aquaculture Kausalyanga, Bhubaneswar-751002, Odisha, India Phone: 91-674-2465421, 2465446 Fax: 91-674-2465407 E-Mail: cifa@ori.nic.in, Website: www.cifa.in

''அகர் மரம் வளர்த்தால் கோடிக்கணக்கில் வருமானம் கிடைக்கும். உங்களிடம் நிலம் இல்லாவிட்டாலும், ஒரு லட்ச ரூபாய் பணம் கட்டினால், ஐந்து ஆண்டுகளுக்கு, மாதம்

10 ஆயிரம் ரூபாய் வீதம் கொடுப்போம் என்றெல்லாம் விளம்பரங்கள் வருகின்றன. இவை உண்மையா?''

ஆர். பாலகிருஷ்ணன், அன்னூர்.

கர்நாடக மாநிலத்தில் அகர் சாகுபடியில் ஈடுபட்டு வரும் 'வனதுர்கா அகர் வுட் இந்தியா லிமிடெட்’ நிறுவனத்தின் தலைவர் தர்மேந்திரா குமார் பதில் சொல்கிறார்.

நீங்கள் கேட்டவை

''அகர் மரம் குறித்த மாயை வேகமாகப் பரவி வருகிறது. உண்மையிலேயே அகர் மரம் நல்ல வருமானம் கொடுக்கக் கூடியதுதான். ஆனால், இதுபோன்ற மிகைப்படுத்தப்பட்ட விளம்பரங்களை நம்ப வேண்டாம். எங்கள் அனுபவத்தில் மலைப்பிரதேசங்களிலும், மலைச்சாரல்களிலும் மட்டும்தான் அகர் மரங்கள் நன்றாக வளர்கின்றன. சமவெளிப் பகுதிகளில் பாக்கு, தென்னை... போன்ற பயிர்களுடன் ஊடுபயிராக சாகுபடி செய்யலாம்.

சமவெளியில் சாகுபடி செய்யும்போது கூடுதல் கவனத்தைச் செலுத்த வேண்டும். அதுவும் தமிழ்நாட்டில் சமவெளி பகுதிகளில் அகர் மர உற்பத்தியின் தரம் எப்படி உள்ளது என்று தெரியவில்லை. தரமான அகர் மரங்களுக்குத்தான் சந்தையில் நல்ல விற்பனை வாய்ப்புகள் உள்ளன.

நீங்கள் கேட்டவை

இன்றைய சந்தை மதிப்பில் 10 ஆண்டுகள் வயது கொண்ட ஒரு மரம் 40 ஆயிரம் ரூபாய் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை விற்பனையாகிறது. மத்திய அரசு அகர் மரம் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு மானியம் வழங்குவதாகச் சொல்கிறார்கள். இதுவரை அந்த மானியம் யாருக்கும் கிடைக்கவில்லை. 'ஒப்பந்த முறையில் அகர் மரம் வளர்க்கிறோம்’ என்று சொல்பவர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவும். பெரும்பாலும் ஒப்பந்தப் பண்ணையம் என்ற பெயரில் பல இடங்களில் மோசடிகள்தான் நடந்து வருகின்றன. ஆகவே, விவசாயிகள் உஷாராக இருக்கவும்.''

தொடர்புக்கு: தொலைபேசி: 080-25592426.

''எங்கள் நிலத்தில் ஆழ்துளை கிணறு அமைத்துள்ளோம். அதற்கு எந்த வகையான பம்ப் செட்டை பொருத்த வேண்டும்?''

க. முத்துபாண்டி, புதுக்கோட்டை.

வேளாண் பொறியியல் ஆலோசகர் எம். பாலசண்முகம் பதில் சொல்கிறார்.

நீங்கள் கேட்டவை

''ஆழ்துளை கிணறுகளில் முன்பெல்லாம், கம்ப்ரஸர் பொருத்தி நீர் இரைத்தார்கள். ஆனால், இதன் மூலம் தொடர்ச்சியாக நீர் வெளி வராது. அதனால், நீரின் பாயும் வேகம் குறையும். இந்தக் குறையைப் போக்கும் விதமாக நீர்மூழ்கி பம்ப் செட்கள் வேலை செய்கின்றன. மிகக்குறைந்த, மின் அழுத்தத்திலும் இயங்கக்கூடிய பம்ப் செட்கள் உள்ளன. உங்கள் ஆழ்துளை கிணறில் கிடைக்கும் நீர்வரத்துக்கு தகுந்தபடிதான் பம்ப் செட்களை தேர்வு செய்ய வேண்டும். சாகுபடி பரப்பளவு அதிகமாக இருந்தால், அதிக குதிரைசக்தி கொண்ட மோட்டார்களைப் பயன்படுத்த வேண்டும்.

ஆகவே, உங்கள் பகுதியில் உள்ள பம்ப் செட் பொருத்திக் கொடுக்கும் வல்லுநரை அழைத்து ஆலோசனை செய்து, அதன் பிறகு தேவைக்குத் தகுந்த நீர்மூழ்கி பம்ப் செட்டை வாங்கிப் பயன்படுத்தவும்.''

நீங்கள் கேட்டவை
நீங்கள் கேட்டவை