மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நீங்கள் கேட்டவை

'விவசாயக் கடனைக் கட்ட வழியில்லை...சலுகை பெற வழிகள் உண்டா?’புறா பாண்டி

''பத்து ஆண்டுகளுக்கு முன்பு ஈரோடு பகுதியில் நிறைய பால் பண்ணைகள் தொடங்கப்பட்டன. ஆனால், அவற்றில் ஒரு சில மட்டுமே இப்போது உள்ளன. என்ன காரணம்? பால் பண்ணைத் தொழில் வெற்றிபெற என்ன செய்ய வேண்டும்?''

ஆர். கவிதா, சென்னிமலை.

##~##

காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு பகுதியில் பால் பண்ணை நடத்தி வரும், முகுந்தன் பதில் சொல்கிறார்.

''பால் பண்ணை நடத்தும்போது சில அடிப்படையான விஷயங்களைக் கடைபிடித்தால்... வெற்றிகரமாக நடத்த முடியும். 'விற்றால் போதும்’ என பண்ணைகளுக்கும் தரகர்களுக்கும் பால் கொடுப்பதை நிறுத்திவிட்டு, நேரடி விற்பனையில் ஈடுபட வேண்டும். விவசாயிகளிடம் 15 ருபாய்க்கு கொள்முதல் செய்யப்படும் பால், நுகர்வோருக்கு 32 ரூபாய்க்கு விற்கப்படுவதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

விலை உயர்ந்த வெளிநாட்டு மாடுகள் பால்பண்ணைக்கு ஏற்றவை அல்ல. ஆரம்பத்தில் 15 லிட்டர் பால் கொடுக்கும் இந்த மாடுகள், போகப்போக குறைவாகத்தான் கறக்கும். குறிப்பாக, சினை சமயத்தில் கறவை வற்றிவிடும். ஆனால், தீவனச் செலவைக் குறைக்க முடியாது.

குறைவான தீவனத்தை உண்ணும் நாட்டு மாடுகள், கன்று போட மூன்று மாதம் இருக்கும் வரை பால் கறந்து கொண்டே இருக்கும். இந்த மாடுகள் 5 லிட்டர் மட்டுமே கறந்தாலும், நமக்கு லாபம்தான். தீவனம் போட்டு கட்டுப்படியாகாமல், பண்ணையை மூடியவர்கள்தான் அதிகம். அதேபோல தீவன உற்பத்திக்கு, சொந்தமாக நிலம் இருக்க வேண்டும். விலைக்கு வாங்கி தீவனம் போட்டால், எந்தக் காலத்திலும் லாபம் கிடைக்காது.

நீங்கள் கேட்டவை

எனது பால் பண்ணையில் நம் நாட்டு இனமான தார்பார்க்கர் மாடுகள் மட்டுமே உள்ளன. இவற்றுக்குப் பிரத்யேக தீவனம் தேவை இல்லை. வைக்கோல், கோ-4, தவிடு... போன்றவை கொடுத்தால் போதும். என்னுடைய மாடுகள் சராசரியாக 8 லிட்டர் அளவுக்குக் கறக்கின்றன. இதுவே எனக்கு அதிகம்தான். நாட்டு மாடுகள் 3 மூன்று லிட்டர் கறந்தாலே லாபம் பார்க்க முடியும்.

என்னுடைய பண்ணையில் உற்பத்தியாகும் பாலை, ஒரு லிட்டர் 30 ரூபாய் என நேரடியாக விற்பனை செய்கிறேன். இதனால், மற்ற விவசாயிகளைவிட 50% அளவுக்கு லாபம் கூடுதலாகக் கிடைக்கிறது. உங்களிடம், மூன்று மாடுகள் இருந்தாலும்கூட பரவாயில்லை. நான்கைந்து பேர் இணைந்து, தினமும் 100 லிட்டர் பாலை நேரடியாக விற்பனை செய்யுங்கள். கண்டிப்பாக லாபம் பார்க்கலாம்.''

தொடர்புக்கு, செல்போன்: 93823-37818.

''நான் கத்தார் நாட்டில் வேலை பார்க்கிறேன். சென்னையில் உள்ள என் வீட்டை ஒட்டி 8 தென்னை மரங்கள் உள்ளன. அந்த மரங்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி, மற்றொரு இடத்தில் நடவு செய்ய முடியுமா?''

ஏ. அசோக்குமார், கத்தார்.

சென்னையைச் சேர்ந்த வீட்டுத் தோட்ட ஆலோசகர், ராமகிருஷ்ணன் பதில் சொல்கிறார்.

நீங்கள் கேட்டவை

''தென்னை மரத்தைப் பொறுத்தவரை சல்லி வேர்கள்தான் அதிகம். ஆணி வேர் கிடையாது. இதை பொக்லைன் இயந்திரம் மூலமாக பெயர்த்து நடவு செய்ய முடியும். ஒரு மரத்தை மறுநடவு செய்ய

10 ஆயிரம் ரூபாய் வரை செலவாகலாம். ஆனால், இவ்வளவு செலவு செய்தும் மரம் பிழைக்குமா? என்றால், சந்தேகம்தான். ஆகையால் புதிய மரங்களை நடவு செய்வதே சிறந்தது...''

''கிணறு வெட்டவும், நிலச் சீர்த்திருத்தம் செய்யவும், சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் கடன் பெற்றேன். கிணறு வெட்டியபோது, நீர் கிடைக்கவில்லை. கடந்த சில ஆண்டுகளாக விளைச்சலும் சரியாக கிடைக்கவில்லை. இதனால், கடன் கட்டமுடியாத நிலையில் உள்ளேன். வங்கி அதிகாரிகள் கடனைத் திருப்பிச் செலுத்த நெருக்கடி கொடுக்கிறார்கள். ஆனால், வாழவே வழியில்லாத நிலையில், கடனை எப்படி கட்டுவது? இப்பிரச்னையில் இருந்து மீள வழி சொல்லுங்கள்?''

ஓம். நமச்சிவாயம், குளித்தலை.

சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் முன்னாள் தலைமை அதிகாரி எம். ராமச்சந்திரன் பதில் சொல்கிறார்.

நீங்கள் கேட்டவை

''விவசாயக் கடன் பெற்று, இயற்கைச் சீற்றத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, வங்கி நினைத்தால் சில சலுகைகளை அளிக்க முடியும். கடன் பெற்ற வங்கியின் கிளை மேலாளருக்கு, தங்களின் நிலை குறித்து விரிவாக விண்ணப்பம் எழுத வேண்டும். அதில், இப்போது உள்ள சூழ்நிலையில் உடனே கடனைத் திரும்பச் செலுத்த முடியாது. ஆகவே, கடனைத் திரும்ப செலுத்த 5 ஆண்டுகள் கால அவகாசம் கொடுக்க வேண்டும். மேலும், கடனுக்கான வட்டி முழுவதையும் தள்ளுபடி செய்து உதவி செய்யுங்கள் என்று குறிப்பிடவும். இந்த  விண்ணப்பத்தின் நகலை, 'மண்டல மேலாளர், சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா, ஒப்பணக்கார வீதி, கோயம்புத்தூர்-1’ என்ற முகவரிக்கும் அனுப்பி வைக்கவும். மண்டல மேலாளர், தங்களின் கோரிக்கை உண்மைதானா? என்று ஆய்வு செய்து, அதிகாரிகள் மட்டத்தில் பரிந்துரை பெறுவார்.

நீங்கள் பெற்றுள்ள கடன் தொகைக்கான வட்டியைத் தள்ளுபடி செய்யவும், தவணைக் காலத்தை நீட்டிக்கவும், மண்டல மேலாளருக்கு அதிகாரம் உண்டு. எனவே, உடனே விண்ணப்பத்துடன் கிளை மேலாளரை நேரில் சந்தியுங்கள். நிச்சயம் வங்கி அதிகாரிகள் உதவி செய்வார்கள். எக்காரணத்தைக் கொண்டும், வேறுவிதமான வழிமுறைகள் எதையும் தேட வேண்டாம்.''

செல்போன்: 98404-36250.

''உயிர்வேலி அமைக்க விரும்புகிறேன். எந்த வகையான தாவரங்கள் உயிர்வேலி அமைக்க ஏற்றவை?''

ராஜேஷ், கோவை.

சேலம் மாவட்டம் ஆறகளூர் பகுதியைச் சேர்ந்த முன்னோடி இயற்கை விவசாயியும், ஐக்கிய விவசாயிகள் சங்கத்தின் தலைவருமான சி. வையாபுரி பதில் சொல்கிறார்.

நீங்கள் கேட்டவை

''நிலத்துக்கு இரும்பு வேலி கட்டும் கலாச்சாரம், இப்போது பரவி வருகிறது. இரும்பைவிட உறுதியான உயிர்வேலிகள் உள்ளன. உயிர்வேலி இருப்பதால், ஆடு, மாடுகள் உள்ளே வருவதைத் தடுக்கலாம் என்றுதான் பலரும் நினைக்கிறார்கள். ஆனால். அது மட்டுமல்ல, நிலத்தின் உயிர்ச்சூழல் நிலையே மேம்படும். உயிர்வேலியை ஒட்டி, பறவைகள், பூச்சிகள்... கூடு கட்டி வாழத் தொடங்கும். பாம்புகளும்கூட தங்கும். இந்தப் பாம்புகள் விளைச்சலை விழுங்கும் எலிகளுக்கு எமன். இப்படி எத்தனையோ நன்மைகள் உண்டு.

பச்சைக் கிளுவை, கொருக்காப்புளி, ஆறுமுகக் கள்ளி... போன்றவை உயிர்வேலிக்கு ஏற்றவை. மருதாணி சிறந்த உயிர்வேலி என்ற விஷயம் பரவலாக அறியப்படாமலே உள்ளது. வேகமாக வளரும் தன்மை கொண்ட இதன் இலைகள், மூலிகையாகப் பயன்படுவதால், உயிர்வேலி மூலமும் வருமானமும் பார்க்க முடியும்.

உங்கள் பகுதியில் எந்த வகையான உயிர்வேலி அதிகம் உள்ளதோ, அதை உயிர்வேலியாக நடவு செய்யவும். கிளுவை கிடைக்கவில்லை என்று, வேறு ஊர்களுக்கு வண்டி கட்டி கிளம்ப வேண்டாம்.''

செல்போன்: 94435-18861.

'கன்னி ஆடுகள் சந்தை எங்கு நடக்கிறது?’

பி. சந்திரன், தத்தனேரி.

நீங்கள் கேட்டவை

''கன்னி ஆடுகள், விருதுநகர் மற்றும் திருநெல்வேலி (குருவிக்குளம், சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர்) மாவட்டத்தின் சில பகுதிகளில் அதிக அளவில் வளர்க்கப்படுகின்றன. கன்னி ஆடுகளை திருநெல்வேலி மாவட்டம், கோவில்பட்டி அருகில் உள்ள திருவேங்கடம் என்ற கிராமத்தில் ஞாயிற்றுக் கிழமைதோறும் நடைபெறும் சந்தையில் வாங்கலாம். இந்தக் கன்னி ஆடுகள் பிற வெள்ளாடுளைவிட, அதிகமான அளவில் 2 அல்லது மூன்று குட்டிகளை ஈனும் திறன் பெற்றவை. குட்டிகளை நன்றாகப் பேணி, பாதுகாக்கும் பண்புடையவை. உயரமாகவும், திடகாத்திரமாகவும், ஒரே நிறமுடன் இருப்பதும் கூட்டமாக நடக்கும்பொழுது ஒரு 'ராணுவ அணிவகுப்பு’ போல தெரியும்.''

நீங்கள் கேட்டவை