மழையைக் காவு வாங்கிய எல்நினோ!
##~## |
அன்றைய தினம், காலையிலேயே விவசாயத்துக்கு மும்முனை மின்சாரம் வந்திருந்தது. 'வாத்தியார்’ வெள்ளைச்சாமி, மோட்டார் அறையின் முன்புறம் தொட்டி மேல் அமர்ந்திருக்க... வயலுக்குத் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தார், 'ஏரோட்டி’ ஏகாம்பரம். சிறிது நேரத்தில் 'காய்கறி’ கண்ணம்மாவும் வந்து சேர்ந்துவிட... ஆரம்பமானது அன்றைய மாநாடு.
''என்னா கண்ணம்மா... வரும்போதே நியூஸ் பேப்பரோட வர்றே..! அறிவை வளர்த்துக்கிட்டு இருக்கியாக்கும்'' என்று கலாய்த்தார், ஏரோட்டி.
''ஏய்... உன்னைய மாதிரி எழுதபடிக்கத் தெரியாதவனு நெனைச்சியாக்கும்... அந்தக் காலத்துலயே எட்டாங்கிளாஸ் வரைக்கும் படிச்சுருக்கேன். தெரிஞ்சுக்கோ'' என்று பதிலடி கொடுத்தார், கண்ணம்மா.
''ஏய், விடுங்கப்பா. காலங்காத்தாலயே உங்க சண்டையை ஆரம்பிச்சுட்டீங்களா? நாடு மட்டுமில்ல... உலகமே இப்ப திக்திக்னு ஒரு விஷயத்தைப் பத்தி கவலைப்பட்டுக்கிட்டிருக்கு. அதைவிட்டுட்டு உப்பு பெறாத விஷயத்த பேசிட்டிருக்கீங்களே...'' என்று ஏகத்துக்கும் கவலைக்குரலில் சொன்னார் வாத்தியார்.
''அதென்ன திக்திக் வாத்தியாரய்யா...?'' என்று இருவருமே சட்டென ஆர்வமாக, தொடர்ந்தார் வாத்தியார்.

''இந்த வருஷம், இந்த நேரம் நம்ம நாட்டுல தென்மேற்குப் பருவமழை பொளந்து கட்டியிருக்கணும். ஆனா, சரியா மழையே பெய்யல. அங்கங்க ஏதோ பேருக்கு நாலு தூத்தல் போட்டுக்கிட்டிருக்கு. நம்ம மாநிலத்துல இருக்குற ஏரி, குளம் அணைனு அத்தனை நீர் நிலைகளும் வறண்டு கிடக்கு. குடிக்கறதுக்கும், விவசாயத்துக்கும் தண்ணிப் பஞ்சம் ஆரம்பிச்சு... படாதபாடு படுத்திட்டிருக்கு.
உலக அளவுல பருவ நிலை மாறிக்கிட்டே வர்றதால... பசிபிக் கடல்ல இந்த வருஷம் 'எல் நினோ’ங்கிற வெப்பசலனம் உருவாகியிருக்காம். அதனால. நம்ம நாட்டுக்கும் ஆஸ்திரேலியா நாட்டுக்கும் இந்த வருஷம் பருவமழை போதுமான அளவு கிடைக்காதாம். இதுவரைக்கும் உலகத்துல 1,857 வெப்பசலனம் வந்துருக்காம். அந்தமாதிரி சமயங்கள்ல ஒரு தடவைகூட கூடுதலா மழை பேய்ஞ்சதில்லையாம். அதனால, இந்த வருஷம் கண்டிப்பா மழை பெய்யாதுனு அடிச்சு சொல்றாங்க. இப்படியே நிலைமை போனா, இன்னும் அஞ்சாறு வருஷத்துல இந்தியாவுல கடுமையான பஞ்சம் வந்துடும்னு சொல்றாங்க'' என்று கவலையோடு சொன்னார், வாத்தியார்.
''இதுக்கு நாம என்னய்யா பண்ண முடியும்? சாமிகிட்ட மழை வேணும்னு வேண்டிக்க வேண்டியதுதான்'' என்று பாரத்தைத் தூக்கி கடவுள் மீது போட்டார் கண்ணம்மா.
''சாமிகிட்ட வேண்டினா சரியாகிடுமா... கிடைக்கிற மழைத் தண்ணியை சேமிக்கறது; இருக்கற தண்ணியை சிக்கனமா பயன்படுத்துறது; மரங்களை நிஜமாவே வளர்த்தெடுக்கிறதுனு அரசாங்கம் கவனம் செலுத்தி... உடனடியா நடவடிக்கை எடுத்தா... வர்ற காலங்கள்லயாவது தண்ணி பிரச்னையை ஓரளவுக்கு சரி பண்ண முடியுமே'' என்றார், வாத்தியார்.
அதை ஆமோதித்த ஏரோட்டி... ''பாரு... ஒவ்வொரு வருஷமும் ஏதாவது பிரச்னை ஆகி, டெல்டா விவசாயிகளுக்கு நெல் சாகுபடிக்கு தண்ணி கிடைக்காம போயிடுது. ஒண்ணு காவிரி ஆத்துல தண்ணி இல்லாமப் போயிடுது. இல்லாட்டி கர்நாடகாக்காரனுங்க தில்லுமுல்லு பண்ணி விட்டுடுறானுங்க. 'ஆத்துல தண்ணி வந்தாத்தான் விவசாயம்'னு புலம்பிக்கிட்டு இருக்காங்க விவசாயிங்க. ஆனா, ராமநாதபுரம் மாவட்டத்துல எல்லாம் நேரடி விதைப்பு மூலமா மழையை வெச்சே மானாவாரியா நெல் சாகுபடி பண்ணிக்கிட்டு இருக்காங்க. டெல்டா விவசாயிகளையும் இதேமாதிரி முயற்சி பண்றதுக்கு அரசாங்கம்தான் தூண்டணும். ஏதோ... பத்துக்கு, ரெண்டு பழுதில்லாம விளைச்சல் கிடைக்கும்ல'' என்று தெம்பாகச் சொன்னார்.
''எப்படிய்யா உனக்கு இப்படியெல்லாம் மூளை வேலை செய்யுது? ரூம் போட்டு யோசிப்பியோ'' என்று சிரித்துக் கொண்டே கேட்ட வாத்தியார்,
''ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டத்துல எல்லாம் பெரும்பாலான நிலம் புழுதிக்காடுய்யா. அதனால, அங்க கோடை உழவு ஓட்டி நேரடி விதைப்பு மூலமா நெல் சாகுபடி செய்யலாம். ஆனா, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாதிரி டெல்டா மாவட்டங்கள்ல மண்கண்டம் அப்படி இருக்காது. இறுகிப்போன மண். அதுல தண்ணி பாய்ச்சாம உழவு ஓட்ட முடியாது. சில பகுதிகள்ல வேணும்னா கோடை உழவு ஓட்டி நெல் விதைக்கலாம். பெரும்பாலான இடத்துல இது சாத்தியம் கிடையாது. ஆத்துல தண்ணி இல்லேனா... கிணத்துப் பாசனம் பண்ணலாம். அல்லது போர் போட்டு தண்ணி எடுத்து விவசாயம் பாக்கலாம். அதுதான் அங்க சாத்தியமாகும். அதேசமயம்... தண்ணியை எப்படி சிக்கனமா பயன்படுத்தணும்னு வேணும்னா அவங்களுக்குச் சொல்லிக் கொடுக்கலாம். மாற்றுப்பயிர் சாகுபடிக்கும் வழி செஞ்சு கொடுக்கணும்னு விவசாயிங்க கேக்குறாங்களாம்'' என்றார்.
''இதையெல்லாம் இந்த அரசாங்கம் செய்து தராதா...?'' என்று அப்பாவியாகக் கேட்டார் காய்கறி!
''ம்க்கும்... அரசாங்கத்துல கிழிச்சாய்ங்க. நம்ம மத்திய விவசாயத்துறை அமைச்சர் சரத் பவார் இருக்கார்ல. அவருக்கு உரிய மரியாதை கிடைக்கலையாம்... அதனால, புதுமாப்பிள்ளை கணக்கா பிரதமரோட ஒறண்டு பண்ணிட்டு கிடக்கறார். பிரதமர், மத்த காங்கிரஸ் அமைச்சருங்க எல்லாம் ஆட்சியைத் தக்க வெக்கணுங்கிறதுக்காக பவாரை சமாதானம் பண்ணிட்டுக் கிடக்குறாங்க. எல்லாரும் மொத்தமா சேர்ந்து சுருட்டுறதுலதான் கவனம் வெக்கிறாய்ங்களே தவிர... நாட்டைக் காப்பாத்தணுங்கிற எண்ணம் யாருக்குமே இல்ல'' என்று கோபமாகச் சொன்னார், வாத்தியார்.
தொண்டையைக் கனைத்த ஏரோட்டி, ''மத்திய அரசு, ஒரு கிலோ கொப்பரைக்கு 51 ரூபாய்னு நிர்ணயம் பண்ணியிருக்கு. அந்த விலைக்குத்தான் இப்போ கொப்பரை கொள்முதல் நடந்துக்கிட்டிருக்கு. விவசாயிங்க இந்த விலை கட்டாதுனு போராட்டம் நடத்திக்கிட்டிருக்காங்க. அதனால, 'ஒரு கிலோ கொப்பரைக்கு 65 ரூபாயாவது கொடுக்கணும்’னு தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையம், மத்திய அரசுக்கு கோரிக்கை வெச்சுருக்கு. இதை முடிவு செய்ய வேண்டியது சரத் பவார்தான். ஆனா, அவர் இதைக் கண்டுக்கவே இல்லையாம். அதனால, ஆகஸ்ட் மாசம் தமிழ்நாட்டுல இருக்குற அ.தி.மு.க-வோட எம்.பி-க்கள் சரத் பவாரைப் பாத்துப் பேசலாம்னு இருக்காங்களாம்'' என்றார், ஏரோட்டி.
தன் பங்குக்கு ஒரு செய்தியைச் சொல்ல ஆரம்பித்த காய்கறி, ''கன்னியாகுமரி மாவட்டத்தில் ரப்பர் கொட்டை சீசன் ஆரம்பிச்சுடுச்சாம். அதனால, வெளி மாநிலங்கள்ல இருந்தெல்லாம் ஏகப்பட்ட வியாபாரிகள் குவிஞ்சுருக்காங்களாம். முன்ன இதுல எண்ணெய் எடுப்பாங்களாம். அதனால நல்ல விலை கிடைச்சுட்டு இருந்துச்சாம். இப்போ விதைக்காக மட்டும்தான் ரப்பர் கொட்டையை வாங்குறாங்களாம். ஒரு கிலோ முப்பது ரூபாய் வரை விற்பனையாகுதாம்'' என்று காய்கறி சொல்லிக் கொண்டிருக்கும்போதே... மோட்டாரில் இருந்து கரகரவென சத்தம் கேட்க...
''அய்யய்யோ கிணத்துல தண்ணி இல்ல போல. வெறும் மோட்டார் ஓடுது. காயில் போயிடுமே'' என்று கத்திக்கொண்டே மோட்டாரை நிறுத்துவதற்கு ஏரோட்டி எழுந்து ஓட, மாநாடும் முடிவுக்கு வந்தது.
காற்றிலிருந்து குடிநீர்... சரியா, தவறா?
தனியார் நிறுவனம் ஒன்று, காற்றின் ஈரப்பதத்தில் இருந்து, குடிநீர் உற்பத்தி செய்யும் இயந்திரத்தைத் தயாரித்துள்ளது. இது, சென்னை, சைதாப்பேட்டையில் உள்ள மாநகராட்சி பள்ளியில் தற்போது அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. நான்கு அடி உயரமுள்ள இந்த இயந்திரம் மின்சாரம் மூலம் இயங்குகிறது. வெளிக்காற்று இயந்திரத்துக்குள் இழுக்கப்பட்டு, சுத்தப்படுத்தப்பட்டு குளிர்விக்கும்போது தண்ணீராக மாறுகிறது. இதன் மூலம் நாளன்றுக்கு
150 லிட்டர் தண்ணீர் வரை உற்பத்தி செய்ய முடியுமாம். இது, 90 ஆயிரம் ரூபாய் விலையில் கிடைக்கிறது.
இதுஒருபுறமிருக்க, 'இப்படி தண்ணீர் உற்பத்தி செய்வது, சம்பந்தபட்ட பகுதியில் காற்றிலிருக்கும் ஈரப்பதத்தை உறிஞ்சிவிடும், அப்பகுதியில், வெப்ப நிலை அதிகரிக்கும்... தேவையற்ற சூழல் பிரச்னைகள் உருவாகும்' என்று சிலர் இதை விமர்சிக்க ஆரம்பித்துள்ளனர்.