புறா பாண்டி படங்கள்: எஸ். சாய் தர்மராஜ்
##~## |
''வெணிலா சாகுபடி செய்ய விரும்புகிறோம். ஆனால், நிறைய நண்பர்கள்... 'கையை சுட்டுக் கொள்ளாதே' என்று தடை போடுகிறார்கள். அதில் உள்ள நிறை மற்றும் குறைகளைச் சொல்ல முடியுமா?'
கே.ஆர். வெங்கட், கோத்தகிரி.
கேரள மாநிலம், கொச்சி நகரில் உள்ள இந்திய வாசனைப் பொருட்கள் வாரியம் மூலமாக வெளியிடப்படும் 'ஸ்பைசஸ் இந்தியா’ இதழின் ஆசிரியர் எஸ். பழனிச்சாமி பதில் சொல்கிறார்.
''வெணிலா பார்ப்பதற்கு பீன்ஸ் போலவே இருக்கும். இதை தென்னை மற்றும் பாக்குத் தோப்புகளில் ஊடுபயிராகவும் பயிர் செய்யலாம். இதிலிருந்து எடுக்கப்படும் எசன்ஸ், ஐஸ்கிரீம், பிஸ்கட்... போன்றவற்றில் மணமூட்டும் பொருளாகப் பயன்படுகிறது.
மடகாஸ்கர் நாடுதான் வெணிலா சாகுபடியில் உலகளவில் முதலிடத்தில் உள்ளது. 7 ஆண்டுகளுக்கு முன்பு அந்த நாட்டில் ஏற்பட்ட இயற்கைச் சீற்ற பாதிப்புகளால், வெணிலா செடிகள் அழிந்தன. அதனால், சர்வதேசச் சந்தையில் அதன் விலை உச்சத்துக்குச் சென்றது. ஒரு கிலோ பச்சை வெணிலா, கிட்டத்தட்ட 3 ஆயிரத்து 500 ரூபாய் அளவில் விற்பனை செய்யப்பட்டது. அதனால், நம் நாட்டில் பலரும் இந்த சாகுபடியில் ஈடுபடத் துவங்கினர். குறிப்பாக... தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் நிலவும் தட்பவெப்ப நிலை... வெணிலாவுக்கு ஏற்றதாக இருந்ததால், பலரும் பயிரிட்டனர். ஆனால், அடுத்த சில ஆண்டுகளிலேயே மடகாஸ்கர் நாட்டில் மீண்டும் வெணிலா உற்பத்தி சூடுபிடிக்கத் தொடங்கியதும், விலை சரிந்துவிட்டது.

தற்போது, ஏற்றுமதித் தரம் வாய்ந்த ஒரு கிலோ பச்சை வெணிலா 150 ரூபாய் அளவில்தான் விற்பனையாகிறது.
இந்த விலை நஷ்டமில்லாத விலைதான் என்றாலும், நம் நாட்டில் உற்பத்தி குறைவு என்பதால்... சர்வதேசச் சந்தையில் போட்டி போட்டு விற்பனை செய்வதில் சில சிரமங்கள் இருக்கின்றன. அதனால், விவசாயிகள் சாகுபடி செய்யத் தயங்குகின்றனர். வெணிலா சாகுபடி மற்றும் விற்பனை வாய்ப்புகள் குறித்து, கோயம்புத்தூரில் உள்ள எங்கள் கள அலுவலகத்தில் தகவல் கிடைக்கும்.''
தொடர்புக்கு, தொலைபேசி: 0422 -2474430.
''என்னிடம் திறந்தவெளி கிணறு இருக்கிறது. இதைப் பயன்படுத்தி சொட்டுநீர்ப் பாசனம் செய்யும்போது, குழாய்களில் பாசி அடைத்துக் கொள்கிறது. இதை எப்படி தடுப்பது?'
என். நாட்ராயன், காடாரம்புதூர்.
கோபாலகிருஷ்ணன், மண்டல மேலாளர், ஐ.டி.இ.ஐ. தொண்டு நிறுவனம், (கே.பி.டிரிப்) பெங்களூரு.
''நீர் இரைக்கும்போது, பாசி குழாய்களில் அடைத்துக் கொள்வது இயற்கைதான். இதைத் தடுக்க, அவ்வப்போது கிணற்றுக்குள் இறங்கி, பாசியை அகற்றவேண்டும். கிணற்றில் சுண்ணாம்புத்தூளைப் போடுவதன் மூலம், பாசி வளர்ச்சியைக் கட்டுப்படுத்தலாம். சிலர் குளோரின் பவுடரையும் போடுகிறார்கள்.

இதையெல்லாம்விட முக்கியமான விஷயம்... சொட்டு நீர் வடிப்பானை, வாரம் ஒரு முறையாவது சுத்தம் செய்ய வேண்டும். அப்படி செய்யாமல் விட்டால், பாசி அல்லது குப்பைகள் என்று ஏதாவது அடைத்துக் கொண்டு, நீர்பாய்ச்சுவதில் சிக்கலை ஏற்படுத்தத்தான் செய்யும். எனவே, பாசி இருந்தாலும்... இல்லாவிட்டாலும் வடிப்பானை வாரம் ஒரு தடவை சுத்தப்படுத்துங்கள். அதுதான் இதுபோன்ற பிரச்னைக்கு சரியான தீர்வு.''
''வீட்டுத் தோட்டத்தில் செடிமுருங்கை நடவு செய்துள்ளேன். இரண்டு ஆண்டுகள் ஆகியும் காய்ப்புக்கு வரவில்லை. இதற்கு காரணம் என்ன... தீர்வு என்ன?''
கி. கோவிந்தராஜன், முத்தியால்பேட்டை.
சென்னையைச் சேர்ந்த வீட்டுத் தோட்ட ஆலோசகர், லட்சுமி ஸ்ரீராம் பதில் சொல்கிறார்.
'’விரைவாக காய்ப்புக்கு வரவேண்டும் என்றுதான் செடிமுருங்கை நடவு செய்கிறோம். இது, ஆறு மாதங்களில் காய்ப்புக்கு வந்திருக்க வேண்டும். ஆனால், இரண்டு ஆண்டுகள் கழித்தும், காய்க்கவில்லை என்பது ஆச்சரியமாகத்தான் உள்ளது. செடிமுருங்கை ஒரு மீட்டர் அளவுக்கு வளர்ந்தவுடன் கவாத்து செய்தால்தான், செடியின் தண்டுப் பகுதி பெருத்து, காய்க்கும். இல்லையென்றால், செடி உயரமாக வளர்ந்து காய்ப்புத் தன்மை குறைய வாய்ப்புகள் உள்ளன. காலம் கடந்துவிட்டாலும், இப்போது கவாத்து செய்வது, உங்களுக்குப் பலனளிக்கலாம்.

காய்க்காத செடிகளைச் சுற்றி, ஒரு கைப்பிடி பெருங்காயத்தூள், ஒரு கைப்பிடி மஞ்சள் தூள் போட்டு... நீர் பாய்ச்சும் தொழில்நுட்பத்தை கிராமப்புறங்களில் கடைபிடித்து வருகின்றனர். இதன் காரணமாக உடனே செடி காய்க்கத் தொடங்கிவிடுகிறது. இந்த யுக்தியையும் செயல்படுத்திப் பாருங்கள்.''
தொடர்புக்கு, செல்போன்: 94444-12111.
'’ஐந்து ஏக்கர் பரப்பளவில் மீன் பண்ணை அமைத்துள்ளேன். ஆனால், பண பற்றாக்குறை காரணமாக தற்போது, மூன்று ஏக்கரில் மட்டுமே வளர்த்து வருகிறேன். கடன் உதவி கிடைத்தால், இதை விரிவுபடுத்த முடியும். மீன் வளர்ப்புக்கு வங்கிக் கடன் கிடைக்க வாய்ப்புகள் உண்டா?''
வே. முத்துராமலிங்கம், மங்கலம்.
தமிழ்நாடு கால்நடைப் பல்கலைக்கழகத்தின் புதுக்கோட்டை மண்டல ஆராய்ச்சி மைய பேராசிரியர். கே. ராவணேஸ்வரன் பதில் சொல்கிறார்.
'’மீன் பண்ணைத் தொழில் நல்ல லாபம் கொடுக்கக் கூடியது. எனவே, கடன் கொடுத்தால், நிச்சயம் திரும்ப வந்து விடும் என்கிற நம்பிக்கை வங்கிகளுக்கு உண்டு. தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் அனைத்தும் மீன் பண்ணை அமைக்கக் கடன் கொடுத்து வருகின்றன.
ஏற்கெனவே, உங்களுக்கு மீன் வளர்ப்பில் அனுபவம் இருந்தாலும், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பயிற்சி மையங்கள் நடத்தும், பயிற்சியில் கலந்து கொண்டால்... அங்கே வழங்கப்படும் சான்றிதழ், 'தொழில்நுட்ப ரீதியாக நீங்கள் தகுதியானவர்’ என்பதை எடுத்துச் சொல்வதாக இருக்கும். கடன் பெறவும் அது மிக உதவியாக இருக்கும்.

கே.வி.கே. மற்றும் கால்நடைப் பல்கலைக்கழக ஆராய்ச்சி மையங்களில் வங்கிக் கடனுக்கான திட்ட அறிக்கை தயார் செய்து கொடுப்பார்கள். இந்தத் திட்ட அறிக்கையின் அடிப்படையில்தான் உங்களுக்குக் கடன் கொடுப்பார்கள். மேலும், தமிழ்நாடு மீன் வளத்துறை மூலம், மீன்குஞ்சுப் பொரிப்பகம் அமைக்கவும், மானியம் கிடைக்கிறது. மீன் வளர்ப்பு குறித்து மேலும் தகவல் பெற எங்கள் மையத்தைத் தொடர்பு கொள்ளவும்.''
தொடர்புக்கு: பேராசிரியர் மற்றும் தலைவர், தமிழ்நாடு கால்நடைப் பல்கலைக்கழக மண்டல ஆராய்ச்சி மையம், தொழிற்பேட்டை அஞ்சல், புதுக்கோட்டை-622004. தொலைபேசி: 04322-271443.
'’திருவண்ணாமலை மாவட்டத்தில் கால்நடைப் பல்கலைக்கழகப் பயிற்சி மையம் உள்ளதா?''
உ. ரூபன்ராஜ், நாடழகானந்தல்.
'தமிழ்நாடு கால்நடைப் பல்கலைக்கழகத்தின் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், திருவண்ணாமலை மாவட்டத்தில் இல்லை. உங்கள் பக்கத்து மாவட்டமான வேலூரில் உள்ளது.
தொடர்புக்கு: பேராசிரியர் மற்றும் தலைவர், கால்நடைப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், சத்துவாச்சேரி, வேலூர்- 632 009.
தொலைபேசி: 0416- 2253022.
'’பச்சை மிளகாயிலிருந்து மதிப்புக் கூட்டிய பொருட்களைத் தயாரிக்க முடியுமா? அதற்கு எங்கு பயிற்சி கொடுக்கிறார்கள்?''
பேராலி. முகுந்தன், புதுச்சேரி.
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில், அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு விளைபொருட்களை, அறுவடைக்குப் பின் மதிப்புக் கூட்டுவது பற்றிய பயிற்சியைக் கொடுக்கிறார்கள்.
தொடர்புக்கு: பேராசிரியர் மற்றும் தலைவர், அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம், வேளாண் பொறியியல் கல்லூரி, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்-3. தொலைபேசி: 0422- 6611268.
விவசாயம், கால்நடை, மீன்வளம் மற்றும் சுற்றுச்சூழல் என்று பல துறைகள் பற்றி வாசகர்களின் சந்தேகங்களுக்கான பதில்களை உரிய நிபுணர்களிடம் பெற்றுத் தருவதற்காகவே 'புறா பாண்டி' சும்மா 'பறபற'த்துக் கொண்டிருக்கிறார். உங்கள் கேள்விகளை
'நீங்கள் கேட்டவை', பசுமை விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-2. என்ற முகவரிக்கு தபால் மூலமும் pasumai@vikatan.com என்ற முகவரிக்கு இ-மெயில் மூலமும் PVQA(space) உங்கள் கேள்வி (space) உங்கள் பெயர் டைப் செய்து 562636 என்ற எண்ணுக்கு செல்போன் மூலமும் அனுப்பலாம்.