மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நீங்கள் கேட்டவை

சீக்கிரம் சினை பிடிக்க என்ன செய்ய வேண்டும் ?படங்கள்: வீ. சிவக்குமார், எஸ். சாய் தர்மராஜ்

 புறா பாண்டி

##~##

''என் பண்ணையில் உள்ள கறவை மாடுகளுக்கு பல முறை சினை ஊசி போட்டால்தான், சினையே பிடிக்கிறது. இதற்கு என்ன காரணம்?''

ஆர். குணசீலன், திருவண்ணாமலை.

பாரம்பரிய கால்நடை மருத்துவர் ராஜமாணிக்கம் பதில் சொல்கிறார்.

''இயற்கை முறையில் காளையுடன் இனச்சேர்க்கை செய்வதுதான் நல்லது. நம்மிடம் போதுமான காளைகள் இல்லாததால், செயற்கை முறையில் கருவூட்டல் செய்ய வேண்டியுள்ளது. செயற்கை முறையில் சினையூட்டும்போது... சில விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். காளைகளின் விந்து, உறைநிலையில் ஹைட்ரஜன் நிரம்பிய குடுவைக்குள் வைக்கப்பட்டிருக்கும். அதை எடுத்து வெது வெதுப்பான நீரில் போட்டு இளக வைத்து, மாட்டின் கருப்பைக்குள் செலுத்த வேண்டும். இளகிய விந்தணுக்கள் மூன்று நிமிடங்களில் செயலிழந்துவிடும். அதனால், காலதாமதம் செய்யாமல் விரைவாக செலுத்திவிட வேண்டும்.

சிலர் பத்து, பதினைந்து உறைவிந்துக் குச்சிகளை சுடுநீரில் போட்டு வைத்து ஒவ்வொன்றாக எடுத்து மாடுகளுக்கு செலுத்துவார்கள். இது தவறான நடைமுறை. இப்படிச் செய்தால், கடைசியாகச் செலுத்தப்பட்ட மாடுகளுக்கு, கரு பிடிக்காது. கரு ஊட்டுபவர்களுக்கு இந்த விஷயம் தெரிந்திருந்தாலும், செயல்படுத்தத் தவறுகிறார்கள். இந்த விஷயத்தில் நீங்கள் கவனம் செலுத்தினாலே 90% கரு பிடித்தலை உறுதி செய்துவிட முடியும்.

நீங்கள் கேட்டவை

கருவூட்டல் செய்த பிறகு, மாட்டைப் படுக்க விட்டால் கரு கலைந்துவிடும் என்கிற தவறான நம்பிக்கையில்... நாள் முழுவதும் நிற்க வைக்கிறார்கள். இது மாட்டை சித்ரவதை செய்யும் வேலை. கருவூட்டல் செய்த பிறகு, மேடு பள்ளங்களில் ஏறி இறங்காமல் இருக்க வேண்டும். மற்றபடி படுத்துக்கிடப்பதன் காரணமாக கரு கலைவதில்லை.

மாடு சினைக்குத் தயாரான பிறகுதான் கருவூட்டல் செய்ய வேண்டும். இனப்பெருக்க உறுப்பில் இருந்து தேங்காய் எண்ணெய் போன்ற வழுவழுப்பான திரவம் வெளிவரும். இதுதான் அறிகுறி. சில சமயங்களில் இத்திரவத்தோடு வெள்ளைப்படுதல் இருந்தால், கருப்பையில் புண் இருக்கலாம். அப்படி இருக்கும்பட்சத்தில் புண்ணை ஆற்றாமல் எத்தனை முறை கருவூட்டல் செய்தாலும் கரு பிடிக்காது.

நெட்டிலிங்கம், அரசன், பூச்சிக்கொல்லி தெளிக்கப்படாத பருத்தி இலை இவற்றில் ஏதாவதொன்றை ஒரு கைப்பிடி அளவுக்கு எடுத்து அரைத்து தொடர்ந்து பத்து நாட்களுக்குக் கொடுத்து வந்தால், கருப்பைப் புண் குணமாகி விடும்.''

தொடர்புக்கு, செல்போன்: 99432-65061

''களிமண் கண்டம் உள்ள எங்களது நிலத்தில் பாக்கு சாகுபடி செய்ய விரும்புகிறேன். சிறந்த ரகம் எது? அதில், ஊடுபயிராக எதை சாகுபடி செய்யலாம்?''

கே. சரஸ்வதி, சேலம்.

பாக்கு சாகுபடியில் அனுபவம் வாய்ந்த முன்னோடி இயற்கை விவசாயி, நவநீதகிருஷ்ணன் பதில் சொல்கிறார்.

''பாக்கு களிமண் பூமியிலும் வளரும். ஆனால், போதுமான தண்ணீர் வசதி இருக்க வேண்டும். களிமண் நிலத்தில் மூடாக்குத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வளமான நிலமாக மாற்றலாம்.

'மொகித் நகர்’ என்ற பாக்கு ரகம் களிமண் நிலத்தில் சாகுபடி செய்ய ஏற்றது. இது நல்ல துவர்ப்பு சுவையைக் கொண்டிருப்பதால், சந்தை வாய்ப்பும் உள்ளது. வாழை, பாக்கு, ஜாதிக்காய் மூன்றையும் இணைத்து சாகுபடி செய்யலாம். தேர்வு செய்த நிலத்தில் வரிசைக்கு வரிசை, பக்கத்துப் பக்கம் எட்டு மீட்டர் இடைவெளியில் ஜாதிக்காய் கன்றை நடவு செய்ய வேண்டும். இதற்கு இடையில் இரண்டரை மீட்டர் இடைவெளியில் ஒரு வரிசையில் வாழையையும் இன்னொரு வரிசையில் பாக்குக் கன்றையும் நடவு செய்ய வேண்டும்.

நீங்கள் கேட்டவை

அடுத்த ஆண்டிலிருந்து வாழையில் வருமானம் கிடைக்கத் தொடங்கி விடும். நான்காம் ஆண்டிலிருந்து பாக்கு மற்றும் ஜாதிக்காயிலிருந்து வருமானம் கிடைக்கத் தொடங்கி விடும்.

ஒரு கிலோ ஜாதிக்காய் 600 ரூபாய்க்கும், ஒரு கிலோ ஜாதிபத்திரி 1,500 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. பாக்கு மற்றும் ஜாதிக்காய் கன்றுகள் கேரளாவில் உள்ள நர்சரிகளில் கிடைக்கின்றன. தரமான கன்றுகள் காசர்கோடு பகுதியில் உள்ள ஆராய்ச்சி நிலையத்தில் கிடைக்கும்.''

தொடர்புக்கு: Central Plantation Crops Research Institute P.O. Kudlu, Kasaragod - 671 124, Kerala, India

Phone: 04994&232974, 874, 894.

நவநீதகிருஷ்ணன், செல்போன்: 94878-50277.

''தென்னந்தோப்பில் பண்ணைக்குட்டை வெட்டினால், பலன் கிடைக்குமா?'

வே. முத்துராமலிங்கம், ஏ.ஜி.புத்தூர்.

முன்னோடி இயற்கை விவசாயி மது. ராமகிருஷ்ணன், பதில் சொல்கிறார்.

''தென்னந்தோப்பில் பண்ணைக்குட்டை அமைப்பதால், பல பயன்கள் உண்டு. மண் அரிப்பு தடுக்கப்படும். நீர்மட்டம் உயரும். தோட்டத்தில் குளுமையான சூழ்நிலை நிலவும். இக்குட்டைகளில் மீன் வளர்க்கலாம். குட்டையின் கரைப்பகுதிகளில் பலவித மரங்களை வளர்ப்பதன் மூலம் பலவிதப் பறவைகளை வரவழைக்கலாம்.

நீங்கள் கேட்டவை

குறிப்பாக, சிங்கப்பூர் செர்ரி பழ மரங்கள் நடும்போது, அதிக பறவைகள் வரும். அவற்றின் எச்சம் மூலம் பல மரங்கள் முளைக்கும். நான்கு ஏக்கருக்கு ஒரு குட்டை என்ற கணக்கில் வெட்டலாம். 60 அடி அகலம், 60 அடி நீளம், 4 அடி ஆழம் என்ற அளவில் குட்டை வெட்ட வேண்டும். பொதுவாக, பண்ணைக் குட்டையை மழைநீரை சேமிக்கும் வகையில் தாழ்வானப் பகுதியில் அமைக்க வேண்டும்.''

தொடர்புக்கு, செல்போன்: 92458-93294.

''மண்பானை 'ஃபிரிட்ஜ்’ இருப்பதாக கேள்விப்பட்டேன். அது எங்கு கிடைக்கும்?''

ரா. செல்வகுமார், நக்கசேலம்.

மதுரை மாவட்டம், டி. கல்லுப்பட்டியில் உள்ள காந்தி நிகேதன் ஆசிரமத்தின், மண்பாண்ட கலைஞர் பெத்தண்ணன், பதில் சொல்கிறார்.

''மண்பானையில் சமையல் செய்து சாப்பிட்டால், ஆரோக்கியம் என்று இப்போது சொல்லி அதைத் தேடி அலைகிறார்கள். ஆனால், நம் முன்னோர்கள் காலங்காலமாக இதைத்தான் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள் என்பதை நாம் மறந்து விட்டோம். எங்கள் ஆசிரமத்தில் மண்பாண்டம் தயாரிக்கத் தனி தொழிற்கூடம் உள்ளது.

நீங்கள் கேட்டவை

இங்கு பலவகையான மண்பாண்டங்களைத் தயாரித்துக் கொடுக்கிறோம். முன்பு, நாங்கள் மண்பானை ஃபிரிட்ஜையும் தயாரித்தோம். இதில், காய்கறிகளை ஏழு நாட்கள் வரை சேமித்து வைக்கலாம். அதிகபட்சம் 3 கிலோ காய்கறிகளை வைக்க முடியும். இட்லி மாவு, தயிர்... போன்றவற்றையும் சேமிக்கலாம்.

தற்சமயம், எங்கள் ஆசிரமத்தில் மண்பானை ஃபிரிட்ஜ் உற்பத்தி செய்யவதில்லை. சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் உள்ள  மண்பாண்டத் தொழிலாளர்கள் கூட்டுறவுச் சங்கத்தில் தற்போது மண்பானை ஃபிரிட்ஜ் உற்பத்தி செய்யப்படுகிறது.''

தொடர்புக்கு,  மானாமதுரை மண்பாண்டத் தொழிலாளர்கள் கூட்டுறவுச் சங்கம், தொலைபேசி: 04574-269057.

''ஏலக்கி வாழை, நெய் பூவன் வாழைக் கன்றுகள் பற்றிய தகவல்கள் எங்கு கிடைக்கும்?''

ஆர். ராஜகோபாலன், சென்னை.

திருச்சி மாவட்டத்தில், தேசிய வாழை ஆராய்ச்சி மையம் செயல்படுகிறது. இங்கு வாழை ரகங்கள் மற்றும் புதிய சாகுபடி முறைகளைத் தெரிந்து கொள்ளலாம்.

தொடர்புக்கு, தேசிய வாழை ஆராய்ச்சி மையம், தோகைமலை ரோடு, தாயனூர் அஞ்சல், திருச்சி-620102. தொலைபேசி: 0431-2618104.

நீங்கள் கேட்டவை