மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நீங்கள் கேட்டவை

உயிர்வேலி மூலமே சந்தன மரங்களைப் பாதுகாக்க முடியுமா ?படங்கள்: வீ. ராஜேஷ், வீ. சிவக்குமார், பா. காளிமுத்து

 புறா பாண்டி

##~##

''மரக்கன்றுகள் நடவு செய்ய வேண்டுமானால், குறைந்தபட்சம் மூன்று அடி ஆழத்துக்குக் குழி எடுக்க வேண்டும் என்கிறார்கள். கண்டிப்பாக இவ்வளவு ஆழம் தேவையா? ஓர் அடி ஆழத்திலேயே நடவு செய்தால், கன்றுகள் பிழைக்காதா?''

கே. பார்வதி, விழுப்புரம்.

மரம் வளர்ப்பில் அனுபவம் வாய்ந்த விழுப்புரம் மாவட்ட, முன்னோடி இயற்கை விவசாயி ஏ.ஆர்.சுந்தரம் பதில் சொல்கிறார்.

''மரக்கன்றுகள் நட, மண்ணின் தன்மைக்குத் தகுந்தவாறு குழியின் ஆழத்தைக் கூடுதலாகவோ... குறைவாகவோ தீர்மானித்துக் கொள்ளலாம். 'களர் நிலத்தில் மரங்கள் வளராது’ என்பார்கள். ஆனால், அத்தகைய நிலத்தில் ஐந்து அடி ஆழத்துக்குக் குழி எடுத்து... அதில் செம்மண், மணல், மட்கிய எரு ஆகியவற்றை சம அளவில் கலந்து இட்டு, கன்றுகளை நடலாம். குழி ஆழமாக இருப்பதால், பூமிக்குள் வேர்கள் வேகமாக இறங்கி, கன்று வேகமாக வளர்வதோடு, வறட்சிக் காலங்களிலும் தாக்குப்பிடித்துக் கொள்ளும்.

இதே நுட்பத்தை... கரடுமுரடான நிலத்துக்கும் பயன்படுத்தலாம் என்பது வல்லுநர்களின் கருத்து. இந்த இடத்தில் என்னுடைய அனுபவத்தைச் சொல்வது பொருத்தமாக இருக்கும். எனது நிலத்தில் மண் கண்டம் சரியாக இல்லை. ஒரு அடிக்கு கீழே, பாறை போல கற்கள் இருக்கும். ஆனால், அங்கும், விதவிதமான மரங்கள் வளர்ந்து வருகின்றன. இத்தனைக்கும் ஓர் அடி ஆழம் மட்டுமே குழி எடுத்தேன். நிலத்தில் மண்புழுக்கள் உருவாகும்படி ஜீவாமிர்தம், கன ஜீவாமிர்தம்... போன்றவற்றை நிறைய பயன்படுத்தினேன். உழவு இயந்திரம் கொண்டு செய்ய வேண்டிய வேலைகளை, மண்புழுக்கள் செய்துவிட்டன. இதனால், செடிகள், வேர்விட்டு, வளர்ந்து மரமாகிவிட்டன.

நீங்கள் கேட்டவை

மணல் சாரியான மண் வகை கொண்ட நிலத்தில், ஓர் அடி ஆழத்தில் நடவு செய்தாலே போதும். சில மணல் சாரி நிலங்களில், மண்வெட்டியால் இரண்டு வெட்டு வெட்டி, நடவு செய்து தொடர்ந்து தண்ணீர் பாய்ச்சி வந்தாலே... கன்றுகள் நன்கு வளர்ந்து விடும். மறந்துவிடாமல், மண்புழுக்கள் பெருக, இயற்கைவளர்ச்சி ஊக்கிகளை அதிகம் பயன்படுத்தலாம்.

ரசாயன உரம் பயன்படுத்தப்படும் நடுத்தர மண் வகை நிலங்களுக்கு, மூன்று அடி ஆழம் தேவை. குழி எடுக்க, எளிதாக இயக்கக் கூடிய நவீனக் கருவிகளும் தற்போது புழக்கத்தில் உள்ளன. அவற்றின் மூலம் குழி எடுத்துக் கொள்ளலாம். அதனால், நீங்கள் உங்கள் நிலத்தின் தன்மையைப் பொறுத்து குழி எடுத்துக் கொள்ளுங்கள். நிலம் எந்தத் தன்மையாக இருந்தாலும், 24 மணி நேரமும் துளை போட்டுக் கொண்டே இருக்கும், மண்புழுக்களின் நடமாட்டத்தை அதிகப்படுத்துங்கள்.''

தொடர்புக்கு: செல்போன்: 94436-58728.

''மலைவேம்பு கன்று நடவு செய்துள்ளேன். செடிகள் 'நெடுநெடு’வென வளர்கின்றன. ஆனால், அடி மரம் பெருக்கவில்லை. என்ன செய்வது?''

கே. பாலு, திருவண்ணாமலை.

மலைவேம்பு வளர்ப்பில் அனுபவம் வாய்ந்த, ஈரோடு மாவட்டம், சென்னம்பட்டியைச் சேர்ந்த நாச்சிமுத்து பதில் சொல்கிறார்.

''மலைவேம்பு வளர்ப்பு தற்போது அதிகரித்து வருகிறது. இது நல்ல லாபம் தரும் மரம்தான். என்றாலும், முறையாகப் பராமரித்தால்தான், எதிர்பார்க்கும் விளைச்சல் கிடைக்கும். மற்ற மரங்களைப் போல மலைவேம்பையும் கவாத்து செய்தால்தான், வளர்ச்சி நன்றாக இருக்கும். இதை சோதனை அடிப்படையில் செய்து பார்த்தும் உறுதி செய்திருக்கிறேன். சோதனையின்போது, நுனி கிள்ளப்பட்ட மரங்களில்தான் அதிகமாக பக்கக்கிளைகள் உருவாகி, அடிமரமும் பெருத்து வளர்ந்தன. நுனி கிள்ளாத மரங்கள், உயரமாக வளர்ந்தனவே தவிர, பெருக்கவில்லை. பலமானக் காற்றைத் தாங்க முடியாமல் முறியவும் செய்தன. நுனி கிள்ளி விட்டால் மட்டுமே, பெருத்து உறுதித் தன்மையுடன் வளரும். இந்த மரங்கள், 11 மாதங்களிலேயே கிட்டத்தட்ட 20 அடி உயரத்துக்கு வளர்ந்து விடும் என்பதால், ஏணியைப் பயன்படுத்தி நுனி கிள்ள வேண்டும்.

நீங்கள் கேட்டவை

மரத்துக்கு... இயற்கை உரங்கள், நிலக்கரித்தூள்... போன்றவற்றை ஊட்டமாகப் பயன்படுத்தலாம். நிலக்கரித்தூள், மத்திய அரசின் நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் ஒரு கிலோ 2 ரூபாய் என்ற விலையில், விற்பனை செய்யப்படுகிறது. இது மரப்பயிர்களுக்கான கார்பன் சத்துத் தேவையைப் பூர்த்தி செய்கிறது.''

''சந்தன மரங்களைப் பாதுகாக்க உயிர்வேலி அமைக்கலாமா?''

கே. கணபதி, காட்டூர்.

திருப்பூர் மாவட்டத்தில் சந்தன மரம் வளர்ப்பில் ஈடுபட்டு வருபவரும், இதில் அனுபவம் வாய்ந்தவருமான, 'சந்தன’ மோகன் பதில் சொல்கிறார்.

''கடந்த 15 ஆண்டு காலமாக சந்தன மரம் வளர்ப்பு பற்றி பிரசாரம் செய்து வருகிறேன். எனது நிலத்தில், ஒரு பகுதியில் சந்தன மரங்களை சாகுபடி செய்து அறுவடையும் செய்துள்ளேன். சில ஆண்டுகளுக்கு முன்பு, சந்தன மரம் வளர்ப்பு என்பது மிகவும் சிக்கலானதாக இருந்தது. தற்போது அந்த நிலை மாறியுள்ளது. 'தனியார் நிலங்களில் சந்தன மரங்களை வளர்க்கலாம்’ என்று அரசு அனுமதி வழங்கி உள்ளதால் பிரச்னை இல்லை. ஆனால், பாதுகாப்புதான் கேள்விக்குறியாக உள்ளது. முதல் பத்தாண்டுகளுக்கு இம்மரங்களுக்குக் காவல் தேவையில்லை. அதன் பிறகு, கண்டிப்பாக காவல் தேவை. உயரமான வேலி அமைத்து ஆட்களைப் போட்டுப் பாதுகாப்பதைவிட, உயிர்வேலி அமைப்பது சிறந்தது. ஆனால், இதற்கு வழக்கமான தாவரங்களைப் பயன்படுத்தாமல், விஷ முள் (கோயம்புத்தூர், திருப்பூர் மாவட்டங்களில் சுர முள் என்றும் அழைக்கப்படுகிறது) என்று சொல்லப்படும் முள் வகையை நிலத்தைச் சுற்றிலும் வளர்க்கலாம்.

நீங்கள் கேட்டவை

சந்தன மரங்கள் நடவு செய்யப்பட்ட பத்தாண்டுகளுக்குப் பிறகு, சுர முள் விதையை, நிலத்தைச் சுற்றிலும் விதைக்க வேண்டும். பருவமழை தொடங்கும் சமயத்தில் விதைப்பது நல்லது. அடுத்த இரண்டு ஆண்டுகளில், நிலத்தைச் சுற்றிலும் முட்புதர் உருவாகி விடும். இந்த முள் உடலில் பட்டால், காய்ச்சல் வருவதோடு குத்திய பகுதி புண்ணாகிவிடும். பொதுவாக, பத்தாண்டுகள் கடந்த சந்தன மரங்களுக்குப் பராமரிப்பு எதுவும் தேவையில்லை என்பதால், நாம் சென்று பார்க்கவும் அவசியமில்லை. அதனால், நிலத்தைச் சுற்றிலுமே வேலி அமைத்து விடலாம். 20 வயதுக்குக்குப் பிறகு மரங்களை வெட்ட வேண்டிய வேளையில், பொக்லைன் இயந்திரத்தின் மூலம் முள் வேலியை அகற்றிக் கொள்ளலாம். எங்கள் பகுதியில் சந்தன மரங்களுக்கு இந்த உயிர் வேலியைத்தான், விவசாயிகள் அமைத்திருக்கிறார்கள்.''

''கால்நடைத் தீவனங்களை விலைக்கு வாங்கித்தான் ஆக வேண்டுமா? இதற்கு மாற்று வழி உண்டா?''

ஆர். சங்கரன், சேத்தியாதோப்பு.

நாகப்பட்டினம் மாவட்டம், சீர்காழி பகுதியில் உள்ள முன்னோடி 'இயற்கை விவசாயி' புலவர். நா. ராசாராமன் பதில் சொல்கிறார்.

''ஆடு, மாடு, கோழி... போன்றவற்றுக்கு கடையில் தீவனம் வாங்கிப் போடும் பழக்கம் சில பல ஆண்டுகளாகத்தான் அதிகரித்துள்ளது. அந்தக் காலத்தில் தவிடு, புண்ணாக்கு, பருத்தி... போன்றவை விவசாயிகளின் வீட்டிலேயே இருந்ததால், தீவனத்தை விலைக்கு வாங்க மாட்டார்கள். அப்படி விலை கொடுத்து வாங்கிப் போடுவது பொருளாதார ரீதியிலும் கட்டுபடியாகாத ஒன்று. அதனால், இலை மற்றும் தழைகளை தீவனமாகக் கொடுத்துப் பழக்குவது நல்லது.

நீங்கள் கேட்டவை

மாடுகளுக்கு வைக்கோல் கிடைக்காத சமயத்தில்... மர இலைகளும், வேலியோரம் முளைத்துள்ள

நீங்கள் கேட்டவை

கொடிகளும் விவசாயிகளுக்குக் கை கொடுக்கும். கிளுவை, வாதநாராயணன், வேம்பு, கிளரிசீடியா... போன்ற மரங்களின் இலைகளை கால்நடைகள் விரும்பி உண்ணும். கட்டுக்கொடி என்ற செடி உள்ளது. இதை ஆடுகள் விரும்பி உண்ணும். இது, வேலியோரத்தில் அடர்த்தியாகப் படர்ந்து கிடக்கும். மேலே சொன்ன மரம் மற்றும் செடிகளை நிலத்தின் ஓரத்தில் வளர்த்தால், அவை, உயிர்வேலியாக இருப்பதோடு... கால்நடைகளுக்குத் தீவனமாகவும் பயன்படும்.''

தொடர்புக்கு: செல்போன்: 96556-50125.

 ''பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் பாலிதீன் பைகளை மறுசுழற்சி செய்ய யாரைத் தொடர்பு கொள்ள வேண்டும்?''

எஸ். ராஜமோகன், புதுக்கோட்டை.

''ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 1-ம் தேதி தேசிய மறுசுழற்சி தினமாக கொண்டாடப்படுகிறது. ஐ.டி.சி. நிறுவனம் இந்த தினத்தில், மக்கள் மத்தியில் மறுசுழற்சி குறித்த விழிப்பு உணர்வு பிரசாரத்தை செய்து வருகிறது. மறுசுழற்சி மூலம் விதம்விதமான பொருட்களை உற்பத்தி செய்வதையும் சொல்லித் தருகிறார்கள்.''

தொடர்புக்கு: ஐ.டி.சி. லிமிடெட்,
6-இ, செஞ்சுரி பிளாசா,
560, அண்ணாசாலை, சென்னை-600 018.

செல்போன்: 97897-73371.

விவசாயம், கால்நடை, மீன்வளம் மற்றும் சுற்றுச்சூழல் என்று பல துறைகள் பற்றி வாசகர்களின் சந்தேகங்களுக்கான பதில்களை உரிய நிபுணர்களிடம் பெற்றுத் தருவதற்காகவே 'புறா பாண்டி' சும்மா 'பறபற'த்துக் கொண்டிருக்கிறார். உங்கள் கேள்விகளை

'நீங்கள் கேட்டவை', பசுமை விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-2.

என்ற முகவரிக்கு தபால் மூலமும்

pasumai@vikatan.com என்ற முகவரிக்கு இ-மெயில் மூலமும்  PVQA (space) உங்கள் கேள்வி (space) உங்கள் பெயர் டைப் செய்து 562636 என்ற எண்ணுக்கு செல்போன் மூலமும் அனுப்பலாம்.