மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மரத்தடி மாநாடு

ஈமு வழியில்...நாட்டுக்கோழி !

##~##

காலையிலேயே தோட்டத்துக்கு வந்துவிட்ட 'ஏரோட்டி’ ஏகாம்பரம், மோட்டாரைப் போட்டுவிட்டு... வரப்பில் புல் அறுத்துக்  கொண்டிருந்தார். வரப்போரத்து கல் திட்டில் அமர்ந்திருந்த 'வாத்தியார்’ வெள்ளைச்சாமி, கண்களை மூடி வானொலியில் கசிந்த பழையப் பாடலை ரசித்துக் கொண்டிருந்தார். சற்றுநேரத்தில் வந்து சேர்ந்தார் 'காய்கறி’ கண்ணம்மா. உடனே, அறுத்தப் புல்லை உருட்டுக் கட்டாகக் கட்டி வைத்துவிட்டு, வரப்புக்கு வந்த ஏரோட்டி, ''எங்கிட்ட ஒரு நல்ல சேதி இருக்கு'' என்றபடி அன்றைய மாநாட்டைத் துவக்கி வைத்தார்.

''அந்தியூர், குருநாதசுவாமி கோவில்ல வருஷா வருஷம் ஆடி மாசம் தேர் திருவிழா நடக்கும். அதையட்டி குதிரைச் சந்தையும் கூடும். இந்த வருஷம் ஆகஸ்ட் 8-ம் தேதியில இருந்து 11-ம்தேதி வரைக்கும், சந்தை நடந்துச்சு. குதிரைகளோட காங்கேயம் மாடுக, ஆலம்பாடி மாடுக, மலை மாடுகனு ஏகப்பட்ட மாடுகளும் விற்பனைக்கு வந்துருந்துச்சு. 1 லட்ச ரூபாய்ல இருந்து, பத்து லட்ச ரூபாய் வரைக்கும் குதிரைங்க விலை போச்சு. குதிரை வாங்க வர்றவங்க சவாரி செஞ்சு பாக்குறதுக்கும் வசதி செஞ்சுருந்தாங்க. இந்த வருஷமும் நாலு நாட்டியக் குதிரைகளும் வந்துருந்துச்சு'' என்று ரசித்துச் சொன்னார், ஏரோட்டி.

'குதிரைச் சந்தைக்கு நீ எதுக்குய்யா போயிருந்தே?'' என்று கேட்டார், காய்கறி.

''தேரோட்டத்தோட... சந்தையையும் ஒரு நோட்டம் வுட்டுப்புட்டு வந்தேன். ஏன், குதிரை வாங்கறவங்க மட்டும்தான் போகணுமா? எங்களையெல்லாம் பாத்தா வாங்கறவங்க மாதிரி தெரிலீயா'' என்று முறைத்தார், ஏரோட்டி.

மரத்தடி மாநாடு

''வந்ததுமே ஆரம்பிச்சுட்டீங்களா... விடுங்கப்பா. ஒரு முக்கியமான சேதி சொல்றேன். அதைக் கேளுங்க..'' என்ற வாத்தியார், தொடர்ந்தார்.  

''ஈமு கோழி... ஒப்பந்தப் பண்ணைனு போட்டு பணத்தை சுருட்டிக்கிட்டு நிறைய பேர் ஓட ஆரம்பிச்சுருக்காங்கள்ல. அதேமாதிரி, ஈரோடு மாவட்டத்துல, நடந்துகிட்டிருந்த 'ஸ்ரீ நித்யா நாட்டுக்கோழி பண்ணை’யும் ஓடிப் போச்சாம். ஈமு கணக்காவே ஏமாந்து 600 பேருக்கு மேல, லட்சக்கணக்குல பணம் கட்டியிருக்காங்க. ஜூலை மாசம் வரைக்கும் கம்பெனியில இருந்து பணம் வந்திருக்கு. ஆகஸ்ட் மாசம் வரலை. நேர்ல போய்ப் பாத்தா... பூட்டுதான் தொங்குச்சாம். ஏறத்தாழ 12 கோடி ரூபாயோட தலைமறைவாயிட்டாராம் நிர்வாகி. ஏமாந்தவங்க கலெக்டர், போலீஸ்னு அலையறாங்க... பாவம்'' என்றார், வாத்தியார்.

'இப்படியே எத்தனை காலத்துக்குத்தான் ஏமாறுவாங்க?'' என்று அப்பாவியாகக் கேட்டார், காய்கறி.

''சம்பாதிக்கணுங்கிற ஆசை, கண்ணை மறைக்குது. இவ்வளவு நடந்தும் இன்னமும் திண்டுக்கல், கரூர் பக்கமெல்லாம் ஒப்பந்த கம்பெனிகள்ல பணம் கட்டுறதுக்கு மக்கள் க்யூவுல நிக்கறாங்க. இவங்கள என்னானு சொல்றது?'' என்று எரிச்சலாகச் சொன்னார், வாத்தியார்.

''டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடிக்கு காவிரித் தண்ணீர் கிடைக்காததால், கடும் அதிருப்தியில் இருக்கிற விவசாயிகள் சங்கத்துக்காரங்க... அரசியல் கட்சிக்காரங்க எல்லாம் வரிசையா போராட்டத்துல குதிச்சுருக்காங்க. 'விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 10 ஆயிரம் ரூபாய், விவசாயத் தொழிலாளர்கள் குடும்பத்துக்கு 10 ஆயிரம் ரூபாய் நிவாரணமா வழங்கணும்... தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்கணும்’னு சாலை மறியல், ரெயில் மறியல்னு டெல்டாவே ரெண்டு படுது'' என்று சட்டென்று ஒரு தகவலைத் தட்டிவிட்ட ஏரோட்டி, யாருக்கும் இடம் கொடுக்காமல், அடுத்த செய்தியையும் தானே ஆரம்பித்தார்...

மரத்தடி மாநாடு

''பெரம்பலூர் மாவட்டம், கீழப்பெரம்பலூர்ல ஒரு மாசமா அடுத்தடுத்து மாடுகள்லாம் செத்துக்கிட்டே இருக்குதாம். இதுவரைக்கும் பதினஞ்சு, இருபது மாடுக செத்துப் போச்சாம். தனியார் டாக்டருங்க சிலர், 'ஆந்த்ராக்ஸ்’ நோய்னு சொல்லியிருக்காங்க. கால்நடைத்துறை அதிகாரிக வந்து பார்த்துட்டு, 'ஆந்த்ராக்ஸ்னு வெளியில சொல்லாதீங்க'னு சொல்லிட்டு போயிட்டாங்களாம். அந்த ஊர்ல ஆயிரக்கணக்கான ஆடு, மாடுக இருந்தும்... அக்கம்பக்கத்துல கால்நடை மருந்தகம் எதுவுமே இல்லையாம். டாக்டருங்கள கூப்பிட்டாலும் வர்றதேயில்லையாம்'' என்று கவலையோடு சொன்னார், ஏரோட்டி.  

''போனாவாரம் கால்நடை பராமரிப்புத்துறையில வேலை பாக்குற டாக்டர். புகழேந்திகிட்ட ஆந்த்ராக்ஸ் பத்தித்தான் பேசிட்டிருந்தேன். அவர் சொன்ன விஷயத்தை சொல்றேன். மாடுகளுக்கு உடம்புல நடுக்கம் வர்றது; கால் விரைக்கிறது; வாயில் நுரை தள்றதெல்லாம் ஆந்த்ராக்ஸ் நோய்க்கு அடையாளமாம். இந்த நோய் வந்துச்சுனா... உடனே டாக்டரை வரவழைச்சு சிகிச்சை கொடுக்கணுமாம்.

இல்லாட்டி மாடுகளைக் காப்பாத்த முடியாமப் போயிடும். இறந்துப் போன மாடுகளோட வாயிலயும், ஆசனவாயிலயும் ரத்தம் வரும். இந்த நோய் வந்து இறந்த மாடுகளை நாலரை அடி ஆழத்துக்குக் குழி தோண்டிப் புதைச்சுடணுமாம். இந்தக் கிருமி காத்துலயே மூணு கிலோமீட்டர் தூரம் வரைக்கும் பரவுமாம்.

அதனால சுத்துப்பட்டுல இருக்குற அத்தனை மாடுகளுக்கும் உடனே தடுப்பூசி போட்டுடணும். நீயும் உடனே உன்னோட ஆடு, மாடுகளுக்குத் தடுப்பூசி போட்டுடுய்யா' என்று ஏரோட்டியிடம் சொன்னார், வாத்தியார்.

''நானெல்லாம் 'அலர்ட்’ ஆறுமுகம் மாதிரி கரெக்டா இருப்போம்ல்ல. போன வாரமே தடுப்பூசியெல்லாம் போட்டாச்சு'' என்ற ஏரோட்டி.

''அறுத்து வெச்ச புல்லெல்லாம் வெயில்ல வாடிக்கிட்டு இருக்கு. கொட்டகைக்குள்ளாற எடுத்து வெக்கணும்'' என்று சொல்லி எழுந்து போக, மாநாடும் முடிவுக்கு வந்தது.