மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நீங்கள் கேட்டவை

''இயற்கை வேளாண்மையை பல்கலைக்கழகத்தில் படிக்க முடியுமா?'' படங்கள்: க. ரமேஷ் புறா பாண்டி

 'குதிரை வளர்க்க விரும்புகிறேன். நம் நாட்டில் இப்போது குதிரைகளின் பயன்பாடு எந்தளவுக்கு உள்ளது?''

-எஸ். தாஸ், காளையார்கோவில்.

கோயம்புத்தூர் மாவட்டம், சேத்துமடையில் குதிரை வளர்த்து வருபவரும், முன்னோடி விவசாயியுமான உதயகுமார் பதில் சொல்கிறார்.

''அந்தக் காலத்தில், ஊரில் பெரிய மனிதர் என்றால், நிச்சயம் அவரிடம் குதிரை வண்டி இருக்கும். போக்குவரத்துக்கு குதிரை வண்டியைத்தான் நம்பி இருந்தார்கள். காலமாற்றத்தில், குதிரை வண்டியின் இடத்தை, கார் பிடித்து விட்டது. ஆனாலும், சிலர் குதிரைகளை மறக்காமல் பராமரித்து வருகிறார்கள்.

நீங்கள் கேட்டவை

எனக்கும் சிறிய வயதில் இருந்தே குதிரைகள் மீது பிரியம். இப்போது, குதிரைகளை வண்டியில் பூட்டுவதில்லை. என்றாலும், செல்லப்பிராணி போல ஐந்து குதிரைகளை வளர்த்து வருகிறேன். ஜோதிட சாஸ்திரத்தில், 'அஸ்வம்’ என்று சொல்லப்படும் குதிரை இருந்தால், வீட்டில் செல்வம் பெருகும் என்ற நம்பிக்கை உண்டு. சிலருக்கு தோஷம் இருந்தால், குதிரை வாங்கி வளர்ப்பதும் உண்டு. மருத்துவ

நீங்கள் கேட்டவை

ரீதியாகவும் சிலரை குதிரை சவாரி செய்யச் சொல்கிறார்கள். உடல் வலி, கை, கால், மூட்டு வலி தீரும். சிறுநீரகக் கற்களைக் கரைக்க, குதிரை வண்டிப் பயணம் செய்ய வேண்டும் என்றெல்லாம் ஆயுர்வேத மருத்துவத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர், குருநாத சுவாமி கோயிலில் ஆடி மாதம் தேர்த்திருவிழா நடைபெறும். அப்போது குதிரைச் சந்தை நடப்பது வழக்கமாக இருக்கிறது. வடமாநிலங்களில் தீபாவளி சமயம் மற்றும் கோயில் திருவிழா சமயங்களில் குதிரைச் சந்தை நடக்கிறது. ராஜஸ்தான் மாநிலத்தில் குதிரைகளை வைத்துதான் ஒருவரின் செல்வாக்கு நிர்ணயிக்கப்படுகிறது. சிந்தி, பனாரஸ்... போன்றவை இந்தியக் குதிரை ரகங்கள். வெளிநாட்டுக் குதிரை இனங்கள்தான், பந்தயம், சவாரி... போன்றவற்றுக்குப் பயன்படுகின்றன. குதிரையின் நிறம், உடல் அமைப்பு, சுழி.. போன்றவற்றைப் பொறுத்து, விலை நிர்ணயிக்கப்படுகிறது.''

தொடர்புக்கு, செல்போன்: 99765-59999.

''தவசி முருங்கைக் கன்றுகள் எங்கு கிடைக்கும்?''

-எம். சுமதி, திண்டிவனம்.

நாமக்கல்லைச் சேர்ந்த கவிதா பதில் சொல்கிறார்.

''எங்கள் தோட்டத்தில் தவசி முருங்கைச் செடி புதர் போல முளைத்துக் கிடந்தது. ஆனால், அதன் அபரிமிதமான பயன்கள் எங்களுக்குத் தெரியாததால் அதை நாங்கள் அவ்வளவாகக் கண்டுகொள்ளவில்லை. அக்கம்பக்கம் உள்ளவர்கள்தான் இதன் பெயரையும் மூலிகைப் பயனையும் சொன்னார்கள். அதைத் தொடர்ந்து, 'பசுமை விகடன்’ இதழின் 'நீங்கள் கேட்டவை’ பகுதிக்கு, என் கணவர் அதைப் பற்றி கேட்டு கடிதம் எழுதினார். அதற்கான பதில், 10.01.12-ம் தேதியிட்ட இதழில் வெளியானது. அதன் பிறகுதான் தவசி முருங்கையை நாங்கள் சாப்பிட ஆரம்பித்தோம்.

நீங்கள் கேட்டவை

இது பெண்களுக்கு ஏற்படும் வயிற்று வலியில் இருந்து, பலவிதமான நோய்களுக்கும் நிவாரணியாக உள்ளது. தொடர்ச்சியாக இந்தக் கீரையை சாப்பிட்டு வந்தால், நோய் எதிர்ப்பு சக்தி கூடுகிறது. இந்த ஒரு கீரை மற்ற அத்தனைக் கீரைகளுக்கும் சமமாக இருக்கிறது (இதனால்தான் இதை ஆங்கிலத்தில் 'ஆல் விட்டமின் லீஃப்’ என்கிறார்கள்). ஒரு செடியை நடவு செய்தாலே... வாராவாரம் கீரை அறுவடை செய்யலாம். இதை வீடுகள்தோறும் வளர்த்து, தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், எந்த நோயும் நம்மை அண்டாது. நாங்கள் இதை நாற்றுகளாக உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறோம்.''

''பாரதிதாசன் பல்கலைக்கழகம் மூலம் 'இயற்கை வேளாண்மை’ சான்றிதழ் பயிற்சி வகுப்பு நடைபெறுவதாகக் கேள்விப்பட்டேன். அதில் சேர்வது எப்படி?''

-ஆர். கண்ணன், திருவண்ணாமலை.

திருச்சி, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின், தொழில்முனைவோர் மேம்பாட்டு மைய, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் குமார நித்தியானந்த ஜோதி பதில் சொல்கிறார்.

''கல்வி என்பது பல்கலைக்கழகத்துடன் முடிந்து விடக்கூடாது, வாழ்க்கை முழுவதும் தொடர வேண்டும் என்பதுதான் மேம்பாட்டு மையத்தின் நோக்கம். விவசாயத் தொழில் நலிந்துகொண்டே வருகிறது.

விவசாயத்தை விட்டு, மக்கள் வெளியேறாமல் இருக்க வேண்டுமென்றால், விவசாயம் லாபகரமான தொழிலாக இருக்க வேண்டும். இன்றையக் காலகட்டத்தில் இயற்கை வேளாண்மை செய்தால் மட்டுமே விவசாயிகள் லாபம் பெறமுடியும். நீண்ட ஆய்வுக்குப் பிறகே, இயற்கை வேளாண்மை பற்றிய சான்றிதழ் பாடத்தைத் தொடங்கினோம். இந்தச் சான்றிதழ் பாடத்தின் பெயர் 'இயற்கை வழி வேளாண்மை’. இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ. நம்மாழ்வார் அவர்களின் வழிகாட்டுதலுடன், பாடம் நடத்தப்படுகின்றது. பயிற்சிக் காலம் நான்கு மாதங்கள். கடந்தப் பருவப் பயிற்சிக்கு 2 ஆயிரத்து 450 ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டது. அடுத்தப் பருவப் பயிற்சிக்கு இந்தக் கட்டணத்தில் சிறிது மாற்றம் இருக்கலாம்.

பயிற்சியில் சேர வயது தடையில்லை. குறைந்தபட்சம் எட்டாம் வகுப்பு வரை படித்திருப்பது நல்லது. வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை நேர்முகப் பயிற்சி நடைபெறும். புத்தகப் பாடம் மட்டுமல்லமால், வயல்வெளியிலும் பாடம் நடத்துகிறோம். இயற்கை விவசாயத்தில் வெற்றி பெற்ற விவசாயிகள்தான், இங்கு பேராசிரியர்கள். பயிற்சிக் காலத்தில், விவசாயச் சுற்றுலாவும் அழைத்துச் செல்கிறோம். ஏறத்தாழ, நான்கு மாத காலத்தில் இயற்கை விவசாயம் குறித்த, அடிப்படைத் தகவல்கள் அனைத்தையும் தெரிந்து கொள்ளலாம்.

பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படுகிறது. விவசாயத் தொழிலில் ஈடுபட்டாலும், இயற்கை விளைபொருட்கள் அங்காடி நடத்தினாலும், இச்சான்றிதழ் நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும்.

வேலைவாய்ப்பு அலுவலகத்திலும், பதிவு செய்யலாம். இவை அனைத்தையும் தாண்டி, இயற்கை விவசாயத்தால் மட்டும்தான் ஜெயிக்க முடியும் என்கிற நம்பிக்கையை இது உருவாக்கும். இந்தப் பாடம் சம்பந்தமான நேர்முகப்பயிற்சி வகுப்பு, கரூரில் உள்ள அருட்பெரும்ஜோதி கல்வி அறக்கட்டளையில் நடைபெற்று வருகிறது.''

தொடர்புக்கு, செல்போன்: 92445-52225.

''பொதுவாக எண்ணெய்கள் அனைத்துமே இயந்திரங்கள் மூலமாகத்தான் தற்போது பிரித்தெடுக்கப்படுகின்றன. விளக்கெண்ணெயும் இதே ரீதியில்தான் எடுக்கப்படுகிறதா?''

-ஜெகன், சென்னை.

மர செக்கு மூலம் எண்ணெய் எடுத்து வரும் பொள்ளாச்சி, குஞ்சிராமன்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த 'வந்தேமாதரம்’ முரளிதரன் பதில் சொல்கிறார்.

''விளக்கு எரிக்க ஒரு எண்ணெய், சமையலுக்கு ஒரு எண்ணெய், தலைக்குத் தேய்க்க ஒரு எண்ணெய்... என்று ஒவ்வொன்றையும், தனித் தனியாகவே நம் முன்னோர்கள் பிரித்து வைத்துள்ளார்கள். இதில் விளக்கெண்ணெய், விளக்கு எரிக்கவும்... மருந்துப் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. மின்சார வசதி இல்லாத அந்தக் காலத்தில், வீடுகள்தோறும் விளக்கு எரிக்க விளக்கெண்ணெய்தான் பயன்படுத்தப்பட்டது.

நீங்கள் கேட்டவை

நம்மவர்கள், எந்தப்பயிர் செய்தாலும், ஊடுபயிராக ஆமணக்கு விதைப்பார்கள். ஆமணக்குக் கொட்டைகளை உரலில் இடித்து, அதை ஒரு பானையில் போட்டு தண்ணீர் ஊற்றிக் கொதிக்க வைத்தால்... அதில் எண்ணெய் மிதந்து வரும். இதை, வடிகட்டி சேகரிப்பார்கள்.

இன்று இப்படி செய்ய யாருக்கும் நேரம் இல்லை. ஆகையால், செக்கில் கொடுத்து எண்ணெய் எடுக்கிறார்கள். சிலபகுதிகளில் மட்டுமே இன்றளவும் மர செக்கில் எண்ணெய் எடுக்கும் பழக்கம் இருக்கிறது. விளக்கெண்ணெயை, வாகை மரங்களில் தயாரிக்கப்பட்ட செக்கில் மட்டுமே, ஆட்ட வேண்டும். வாகை மரத்திலிருக்கும் மருத்துவக் குணமும் சேரும்போது, இந்த எண்ணெய் கூடுதல் நன்மை தருவதாக இருக்கும்.''

தொடர்புக்கு, செல்போன்: 91508-71973.

விவசாயம், கால்நடை, மீன்வளம் மற்றும் சுற்றுச்சூழல் என்று பல துறைகள் பற்றி வாசகர்களின் சந்தேகங்களுக்கான பதில்களை உரிய நிபுணர்களிடம் பெற்றுத் தருவதற்காகவே 'புறா பாண்டி' சும்மா 'பறபற'த்துக் கொண்டிருக்கிறார். உங்கள் கேள்விகளை

'நீங்கள் கேட்டவை', பசுமை விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-2.

என்ற முகவரிக்கு தபால் மூலமும்

pasumai@vikatan.com என்ற முகவரிக்கு இ-மெயில் மூலமும்  PVQA (space)-உங்கள் கேள்வி (space) உங்கள் பெயர் டைப் செய்து 562636 என்ற எண்ணுக்கு செல்போன் மூலமும் அனுப்பலாம்.