மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மரத்தடி மாநாடு

சிக்கிய குரு... சிக்குமா பணம்? படம்: தி. விஜய்

##~##

'வாத்தியார்’ வெள்ளைச்சாமி மின்சாரக் கட்டணம் செலுத்திவிட்டு, கழனியை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தார். விவசாயக் கூட்டுறவு வங்கியில் வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட வந்திருந்த 'ஏரோட்டி’ ஏகாம்பரம்... வழியில் வாத்தியாரைப் பார்த்தவுடன் குரல் கொடுக்க, இருவரும் பேசிக்கொண்டே நடக்க ஆரம்பித்தனர். கொஞ்ச தூரத்திலேயே 'காய்கறி’ கண்ணம்மாவும் வந்து சேர்ந்து கொள்ள... அப்படியே ஆரம்பித்தது, அன்றைய மாநாடு.

''அதிக மகசூல் எடுக்குற முப்பத்தாறு விவசாயிகளைத் தேர்ந்தெடுத்து, ஊக்கப்பரிசு கொடுக்கணும்னு முதலமைச்சரம்மா சொல்லியிருக்காங்க. விவசாயத்தை மேம்படுத்துறதுக்காகத்தான் இந்தத் திட்டமாம். நீயும் போட்டியில கலந்துக்க வேண்டியதுதானேய்யா..?!'' என்று ஏரோட்டியிடம் கேட்டார், வாத்தியார்.

''அவனவன் தண்ணியில்லாம வெந்து நொந்து கிடக்கான். இதுல போட்டி... பரிசுதான் குறை. பவானிசாகர் அணை காய்ஞ்சு கிடக்கறதால... கிட்டத்தட்ட ரெண்டரை லட்சம் ஏக்கர்ல நெல், கரும்பு, வாழை, மஞ்சள்னு பரிதாப நிலையில இருக்கு. வழக்கமா ஆகஸ்ட் 15-ம் தேதி திறக்க வேண்டிய எல்.பி.பி. வாய்க்கால்லயும் தண்ணி திறக்கல. மேட்டூர் அணையிலயும் தண்ணி இல்லாததால... டெல்டா மாவட்டங்கள்ல குறுவை காலியாகிடுச்சு. சம்பாவும் கேள்விக்குறியா இருக்கு. ராமநாதபுரம் மாவட்டத்துல தண்ணி பாய்ச்ச முடியாம தென்னை மரங்ககூட காய்ஞ்சு கிடக்கு. தோப்புக்கள அழிச்சு பிளாட் போட ஆரம்பிச்சுட்டாங்க பலரும். மானாவாரியா ஆடிப்பட்டத்துல விதைச்ச கடலை, மக்காச்சோளம்... அத்தனையும் காலியாகற நிலைமை. கிட்டத்தட்ட தமிழ்நாடு முழுக்க இதுதான் நிதர்சனம். இப்போதைக்கு அதுலதான் இந்தம்மா கவனத்தைச் செலுத்தணும்...'' என்று நொந்தபடியே சொன்னார், ஏரோட்டி.

மரத்தடி மாநாடு

''நீ சொல்றதும் சரிதான்யா...'' என்று ஆமோதித்த வாத்தியார், தானொரு செய்தியைச் சொல்ல ஆரம்பித்தார்.

''ஈமு கோழி, நாட்டுக்கோழினு ஒப்பந்தப் பண்ணையம் ஆரம்பிச்ச கம்பெனிகள்லாம் கிடைச்சதைச் சுருட்டிக்கிட்டு ஓடிட்டே இருக்காங்க. இப்போ இன்னும் ரெண்டு கம்பெனி மேல புகார் கிளம்பியிருக்கு. ஈரோடு மாவட்டம், விஜயமங்கலத்துல 'அம்மன் ஈமு ஃபார்ம்' கம்பெனி காலி. ரிடையர்டான அரசு ஊழியர்கள் கொஞ்ச பேர் சேர்ந்து மொத்தமா 75 லட்சம் ரூபாயை இந்த கம்பெனியில முதலீடு செஞ்சுருந்தாங்களாம். பாவம்... ரிடையர்டான காலத்துல போலீஸ் ஸ்டேஷனுக்கு அலைஞ்சுட்டிருக்காங்க. அப்புறம், சித்தோடு பகுதியில 'கிரீன் லைஃப் பார்ம்ஸ் அண்ட் பவுல்ட்ரி’ங்கிற கம்பெனியையும் பூட்டிட்டு ஓடிட்டாங்களாம். ஏமாந்த மக்கள் கலெக்டர்கிட்ட புகார் கொடுத்திருக்காங்க'' என்று கவலைக்குரலில் சொன்னார், வாத்தியார்.

''இந்த 'கிரீன் லைப் ஃபார்ம்ஸ்’னு ஒண்ணப் பத்தி சொன்னீல்ல... அதுல ஏமாந்தவங்கெல்லாம் மொத்தமா சேர்ந்து போய் பண்ணையோட பூட்டை உடைச்சு உள்ள நுழைஞ்சு, பண்ணையை துவம்சம் பண்ணிட்டாங்க. கம்பெனியை நடத்தின விஸ்வநாதன் தலைமறைவாகிட்டாராம். முக்கியமான ஆளுங்கெல்லாம் ஒளிஞ்சுட்டுருக்க... சேலம் மாவட்டம், மல்லசமுத்திரம் ஏரியா மேனேஜர் சண்முகம் மட்டும் சிக்கிட்டாராம். தர்ம அடி கொடுத்து, போலீஸ்ல ஒப்படைச்சுருக்காங்க மக்கள்'' என்றார், ஏரோட்டி சிரித்தபடியே.

''சுசி ஈமு பண்ணை ஓனர் குருவும்கூட இப்ப போலீஸ்கிட்ட பிடிபட்டுட்டார். டி.வி-யில கூட காட்டினாங்க. இந்தக் கொள்ளைக்காரங்ககிட்ட இருந்தெல்லாம் பணத்தை வாங்கிக் கொடுத்துடும்ல போலீஸ்''  என்று அப்பாவியாகக் கேட்டார், காய்கறி.

''இந்த கோல்மால் பார்ட்டிங்ககிட்ட இருக்கற பணத்தை, போலீஸ்ல ஆரம்பிச்சு, அரசியல்வாதிங்க வரைக்கும் கீழிடம் மேலிடம்னு முதல்ல பங்கு போட்டுக்குவாங்க. மிச்சம் மீதியிருக்கறதத்தான் மக்களுக்குக் கொடுப்பாங்க. அந்தக் காசு எந்த அளவுக்கு இருக்கும்கறத பொறுத்திருந்துதான் பாக்கணும்'' என்ற வாத்தியார், அடுத்தச் செய்திக்குத் தாவினார்.

மரத்தடி மாநாடு

''கிருஷ்ணகிரி மாவட்டத்துல 'சந்தூர்’னு ஒரு ஊர் இருக்கு. இது மாங்கன்னுக்குப் பேர் போன ஊர். தமிழ்நாடு மட்டுமில்லாம பக்கத்து மாநிலத்துல இருந்தெல்லாம் வந்து வாங்கிட்டுப் போவாங்க. கிட்டத்தட்ட முன்னூறு நாத்துப் பண்ணைக்கு மேல இருக்குதாம் இங்க. தமிழ்நாடு வேளாண்மைத்துறைத் திட்டங்கள்ல விவசாயிகளுக்குக் கொடுக்கறதுக்காக இந்த ஊர்லதான் மாங்கன்னு கொள்முதல் பண்றாங்களாம். அதுல நிறைய தில்லுமுல்லு நடக்குதுனு ஒரே புலம்பலா இருக்கு. ஒவ்வொரு ஆட்சியிலயும் ஆளும்கட்சிக்கு வேண்டிய நர்ஸரிகாரங்களுக்கு மட்டும்தான் கன்னு சப்ளை பண்றதுக்கு டென்டர் கிடைக்குதாம். இதுல சிலருக்கு தரச் சான்றே கிடையாதாம். மத்த நாத்துப் பண்ணைகள்ல விற்பனைக்கு தகுதியில்லாம கழிக்கிற செடிகளைக் குறைஞ்ச விலைக்கு வாங்கி, 33 ரூபாய்னு அரசாங்கத்துக்கு சப்ளை பண்றாங்களாம். நிறைய விவசாயிகளுக்குக் கொடுத்த செடிகள் முளைக்கவே இல்லையாம். கொள்முதல் செய்யாமலே பொய் கணக்கு எழுதுறதும் நடக்குதாம்'' என்று வாத்தியார் நிறுத்த,

''இதே மாதிரிதான்யா கலப்பு உரத்துல கலப்படம்னு ஒரு பிரச்னை கிளம்பியிருக்கு'' என்ற ஏரோட்டி, அந்த விஷயத்தைச் சொல்ல ஆரம்பித்தார்.

''சேலம் மாவட்டம் நங்கவள்ளி, ஜலகண்டபுரம், தாரமங்கலம் பகுதியில வேர்க்கடலை, பருத்தி, உளுந்து சாகுபடி ஆரம்பிச்சுருக்கு. இந்தப் பயிர்களுக்குப் போடுறதுக்காக டி.ஏ.பி., யூரியா, பொட்டாஷ் மூணு உரமும் கலந்த கலப்பு உரத்தை விவசாயிகள் வாங்கி போட்டப்போ... பொட்டாஷ் மட்டும் தண்ணியில கரையலையாம். அதை சோதனை பண்ணிப் பாத்தப்போ உரத்துக்குப் பதில வெள்ளைக்கலர் கல்லை உடைச்சு தூளாக்கிப் போட்டு இருந்ததைக் கண்டுபிடிச்சுருக்காங்க. 100 கிராம் உரத்துல, கிட்டத்தட்ட 40 கிராம் அளவுக்கு கல் தூள் இருந்துருக்கு. இப்போ உரக்கடைக்காரங்க மேல புகார் கொடுக்கலாம்னு இருக்காங்க விவசாயிங்க'' என்றார், ஏரோட்டி.

''ம்... விவசாயினாலே எல்லாரும் மொளகா அரைக்கறாங்க'' என்று காய்கறி மூக்கை சிந்த...

''நிஜம்தான் கண்ணம்மா, இதோ பாரேன்... மயிலாடுதுறை என்.பி.கே.ஆர்.ஆர் சர்க்கரை ஆலை, மதுராந்தகம் சர்க்கரை ஆலை, திருத்தனி சர்க்கரை ஆலைனு மூணு கூட்டுறவு ஆலைகளும் கரும்பு அனுப்பின விவசாயிகளுக்கு, ஆறு மாசமா பணத்தை பட்டுவாடா செய்யலையாம். கிட்டத்தட்ட 44 கோடி ரூபாய் நிக்குதாம். மத்திய அரசோட கரும்புக் கட்டுப்பாட்டுச் சட்டப்படி,

14 நாளுக்குள்ள பணத்தைக் கொடுக்கணுமாம். அப்படி இல்லாட்டி வட்டி கொடுக்கணுமாம். 'வட்டிகூட வேணாம். உள்ளைதை மட்டுமாவது கொடுங்கப்பா'னு கெஞ்சிக்கிட்டிருக்காங்க விவசாயிங்க. ஆனாலும் அலைய விட்டுகிட்டேதான் இருக்காங்களாம் அதிகாரிங்க'' என்று சொன்னார் வாத்தியார்.

''ஒரே ஒரு சேதி என்கிட்ட இருக்கு. அதை மட்டும் சொல்லிட்டு, மாடுகளைக் குளிப்பாட்ட போகணும்'' என்ற ஏரோட்டி,

''பொள்ளாச்சி நகராட்சியில சேகரமாகுற குப்பைக் கழிவுகளைப் பயன்படுத்தி, மண்புழு உரம் தயாரிச்சு விவசாயிகளுக்குக் குறைஞ்ச விலையில விற்பனை செய்யப் போறாங்களாம். பொள்ளாச்சியில இயற்கை உரங்களுக்குத் தேவையும் அதிகமா இருக்கறதால இந்த விற்பனை மூலமா நகராட்சிக்கு நல்ல வருமானமும் கிடைக்கும்னு எதிர்பார்க்குறாங்களாம்'' என்று சொல்லிவிட்டுக் கிளம்ப, மாநாடும் முடிவுக்கு வந்தது.

நிறைவேறிய கனவு!

'நாகர்கோவில்திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில், வில்லுக்குறி பாலத்தில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மலைப்பகுதியில் உற்பத்தியாகும் தண்ணீரை அணை கட்டி தேக்கி பாசனத்துக்கு பயன்படுத்த வேண்டும்’ என்பது அப்பகுதி விவசாயிகளின் நீண்ட நாள் கனவு. அது தற்போது நிறைவேறியிருக்கிறது.

99ம் ஆண்டு முதல் நடைபெற்று வந்த மாம்பலத்துறையாறு அணை கட்டும் பணிகள் நிறைவடைந்து, அணை முழு கொள்ளளவை எட்டிய நிலையில், கடந்த 30ம் தேதி முதல் முறையாக பாசனத்துக்கு திறந்து விடப்பட்டது. வனத்துறை அமைச்சர் பச்சைமால் அணையை திறந்து வைக்க, மாவட்ட ஆட்சியர் நாகராஜன் மற்றும் விவசாயிகள் இதில் பங்கேற்றனர்.

மரத்தடி மாநாடு

இதைப்பற்றிப் பேசிய குமரி மாவட்ட பாசனத் துறை தலைவர் வின்ஸ் ஆன்றோ, ''வில்லுக்குறி, இரணியல், தக்கலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள ஆயிரக்கணக்கான ஏக்கரில் நடைபெறும் நெல், வாழை, தென்னை விவசாயிகள் இதனால் பலனடைவார்கள். நேரடியாகவும், மறைமுகமாகவும் 16 பாசனக் குளங்களுக்கு இந்தத் தண்ணீர் செல்லப் போகிறது. விளவங்கோடு, கல்குளம் தாலூகா விவசாயிகளும், தண்ணீர் இல்லாமல் தவித்துக் கொண்டிருந்தனர். அதுவும் இப்போது தீர்ந்துவிட்டது'' என்றார் சந்தோஷமாக.

என். சுவாமிநாதன், படங்கள்.ரா. ராம்குமார்

சங்கம் வைத்து மரம் வளர்ப்போம் !

வனவளம் குறைந்துள்ள தமிழக மாவட்டங்களில் ஒன்று நாமக்கல். இங்கே வனவளத்தை அதிகரிக்கத் தேவையான விழிப்பு உணர்வை ஏற்படுத்தும் நோக்கில், 'மரம் மற்றும் மூலிகை வளர்ப்போர் நல சேவை சங்கம்’ துவக்கப்பட்டிருக்கிறது. ஆகஸ்ட் 27 அன்று நாமக்கல்லில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 'இயற்கை வேளாண்

விஞ்ஞானி' நம்மாழ்வார், மாவட்ட வன அலுவலர் அனுராக் மிஸ்ரா, 'நபார்டு’ வங்கியின் உதவிப் பொதுமேலாளர் பூவராகவன், மாவட்ட மரம் மற்றும் மூலிகை வளர்ப்போர் நல சேவை சங்க தலைவர் சத்தியமூர்த்தி, கள் இயக்கத் தலைவர் நல்லசாமி உள்ளிட்ட பிரமுகர்களும், மர வளர்ப்பு ஆர்வலர்களும் பங்கேற்றனர்.

மரத்தடி மாநாடு

நம்மாழ்வார் தனது பேச்சில், ''மழை ஈர்ப்பு மையங்களை அதிக அளவு உருவாக்கினால், தண்ணீருக்காக பூமியைத் தோண்ட வேண்டிய அவசியம் இருக்காது. புதுக்கோட்டை மாவட்டத்தில் இப்போது நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக உயர்ந்திருக்கிறது. காரணம்... அங்கு அதிக அளவு மரங்கள் நடப்பட்டதுதான். இங்கேயும் பொது இடங்களில் மக்கள் பங்களிப்புடன் மரங்களை நடுவதோடு, பண்ணைக்குட்டைகளையும் அமைக்க வேண்டும்'' என்று சொன்னார்.

சங்கத்தின் செயலாளர் தில்லை சிவகுமார், ''மரங்கள் நடுவதை ஓர் இயக்கமாகக் கொண்டு சென்று, இந்த மாவட்டத்தை மழை ஈர்ப்பு மையமாக மாற்ற சங்கம் முழுமூச்சுடன் பாடுபடும்'' என்று உறுதியான குரலில் சொன்னார்.

ஜி. பழனிச்சாமி படம்: க. ரமேஷ்