மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மரத்தடி மாநாடு

காலை வாரும் கரன்ட்...கண்ணீரில் விவசாயிகள்..!

 ##~##

''என்னய்யா வேலை ஒண்ணும் இல்லியா... காலங்காத்தாலயே தூங்கிட்டி ருக்கீரூ''

- 'காய்கறி’ கண்ணம்மாவின் குரல் கேட்டு, கல் திட்டில் படுத்திருந்த 'ஏரோட்டி’ ஏகாம்பரம் திடுக்கிட்டு எழுந்து கண்களைக் கசக்கியபடியே...

''ஓ... கண்ணம்மாவா? தென்னந்தோப்புக்குத் தண்ணி பாய்ச்சி ரொம்ப நாளாச்சு. மழையுமில்லாம போயிடுச்சு. அதனாலதான் காலையிலயே வந்தேன். இன்னமும் கரன்ட் வரவேயில்லை. அதுதான் மாடுகள மேய்ச்சலுக்குக் கட்டிவிட்டுட்டு... தூங்கிட்டேன்'' என்றபடி எழுந்து முகம் கழுவி வந்தமர... 'வாத்தியார்’ வெள்ளைச்சாமியும் வந்து சேர்ந்தார்.

''ம்... கொஞ்ச நாள் பிரச்னை இல்லாம இருந்துச்சு. இப்போ திரும்ப கரன்ட் பிரச்னை ஆரம்பிச்சுடுச்சு. இதை சரி பண்ணவே முடியாதாய்யா?' வாத்தியாரைப் பார்த்துக் கேட்டார், காய்கறி.

''பிரச்னை இல்லைனு எப்படி சொல்லுவ? முன்ன எட்டு மணி நேரம் கட் ஆச்சு. இப்போ 16 மணி நேரம். பிரச்னை இருந்துக்கிட்டேதான் இருக்கு'' என்றார், ஏரோட்டி.

''தமிழ்நாட்டுல காற்றாலை மூலமா 3 ஆயிரத்து 500 மெகாவாட் கரன்ட்டை உற்பத்தி பண்ணிட்டு இருந்தாங்க. அதனால, மேட்டூர், தூத்துக்குடி, எண்ணூர் அனல் மின் நிலையங்கள்ல கரன்ட் உற்பத்தி பாதிக்கிறப்பெல்லாம்... காற்றாலை மின்சாரத்த வெச்சு சமாளிச்சுட்டுருந்தாங்க. இப்போ, காத்து அதிகமா இல்லாததால, காற்றாலை மூலமா 150 மெகாவாட் கரன்ட்தான் உற்பத்தியாகுது. அதனாலதான் இவ்ளோ தட்டுப்பாடு. 'வெளிமாநிலத்துல இருந்து கரன்ட்டை வாங்கறது மட்டும்தான் தீர்வு’னு அதிகாரிகள் சொல்லிட்டாங்க. ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் கரன்ட் வர்றதே பெரிய விஷயமா இருக்கு'' என்று இடைவெளிவிட்ட வாத்தியார்...

மரத்தடி மாநாடு

''சின்னச் சின்னத் தொழிற்சாலைகள்லாம் ரொம்ப கஷ்டத்துல இருக்குதாம். இந்த நேரத்துல டீசல் விலையையும் ஏத்திப்புட்டாங்க. அதனால ஜெனரேட்டர் வெச்சு ஓட்டுறது, விவசாயத்துக்கு டீசல் மோட்டார் வெச்சு ஓட்டுறது எல்லாத்துக்கும் ஆப்பு ஆகிப் போச்சு. வீட்டுல இன்வெர்ட்டர் போட்டுருக்கறவங்களுக்கு பேட்டரி சார்ஜ் ஏறுறதுக்குகூட கரன்ட் வர்றதில்லை. ஒட்டுமொத்தமா தமிழ்நாடே புழுங்கிக்கிட்டிருக்கு. மின்சாரத்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதனே... தன்னோட வீட்டுக்குப் புதுசா பெரிய சைஸ் ஜெனரேட்டர் வாங்கிட்டாராம். இதையெல்லாம் பார்க்கறப்ப... இந்த கரன்ட் பிரச்னை இன்னும் பெருசாத்தான் ஆகும்போல'' என்று சொன்னார் வாத்தியார்.

''அது சரிங்கய்யா... சென்னையில மட்டும் கரன்ட் கட்டே இல்லனு சொல்றாங்களே. பேப்பர்லயெல்லாம்கூட 'சென்னையைத் தவிர தமிழ்நாட்டில் மின்வெட்டு'னுதான் போடுறாங்க'' என்று கேட்டார், ஏரோட்டி.

''என்னய்யா, விவரம் தெரியாதவனா இருக்குற. அந்த ஊர்லதானய்யா தமிழ்நாட்டை ஆளுற மகாராணி, முன்னாடி ஆண்ட மகாராஜா, அமைச்சர் பெருமக்கள்லாம் இருக்காங்க. அங்க கரன்ட் கட்டாச்சுனா... தமிழ்நாடு ஸ்தம்பிச்சுப் போயிடாதா?'' என்று நக்கலாகச் சொன்ன வாத்தியார் தொடர்ந்தார்.

''சரி சரி, அந்த ஊர்ல இருக்குற மக்களாவது கரன்ட் பிரச்னையில்லாம இருக்கட்டும் பரவாயில்லை. ஆனா, ரோட்டுல வெச்சுருக்குற பெரிய பெரிய விளம்பரப் பலகை, கடைகளோட போர்டுகள்னு எல்லாத்துக்கும் எந்தக் கட்டுப்பாடும் இல்லாம கரன்ட் கொடுக்குறதுதான்யா வேதனை. இங்க அவனவன் காத்தாடி ஓடுறதுக்குக்கூட வழியில்லாம கஷ்டப்பட்டுட்டுருக்கான். ஆனா, அங்க ராத்திரி முழுக்க வெட்டியா ஆயிரக்கணக்கான வாட்ஸ்ல பெரிய பெரிய பல்புகளை எரிய விடுறாங்க. ஹோட்டல், பார்க், பீச்னு தேவையில்லாம இஷ்டம்போல லைட்ட எரிக்கறாங்க. ஏ.சி. மெஷின்களை வீட்டுக்கு ரெண்டு, மூணுனு ஓடவிடறாங்க... அதுக்கெல்லாம் கரன்ட் கொடுக்கறதுதான் வேதனையா இருக்கு'' என்றார், வாத்தியார்.

''விவசாயிங்களையும், கிராமங்களையும் மதிக்கற அரசியல்தலைவருங்க இருந்தாத்தான்... இதையெல்லாம் சரிப்படுத்த முடியும். இல்லாட்டி, இப்படி அனாவசிய விஷயங்களுக்குத்தான் முக்கியத்துவம் கொடுப்பாங்க. இதுதான் பல வருஷமா தமிழ்நாட்டோ தலையெழுத்தாவும் இருக்கு... இதைப் பேசி ஒண்ணும் ஆகப்போறதில்லய்யா...'' என்று வாத்தியாருக்கு 'மருந்து' போட்ட ஏரோட்டி,

''மழை, மாரி பெய்யாமப் போனதால ரொம்பக் கஷ்டமா இருக்குதுய்யா. கிணறு, போர் எல்லாம் வத்திப் போயிடுச்சு. தண்ணிக்கே வழியில்லை. சேலம் மாவட்டம், பனைமரத்துப்பட்டி சுத்து வட்டாரத்துல ஆயிரம் ஏக்கர்ல கொய்யா உற்பத்தி பாதிச்சுருக்காம். வழக்கமா... புரட்டாசி மாசம் அறுவடை ஆரம்பிச்சுடுமாம். இந்த வருஷம் தண்ணி இல்லாததால இன்னும் கொய்யாக்காயெல்லாம் பெருக்கவேயில்லையாம். பிஞ்சாவே இருக்குதாம்.

காய்கறிக்குப் பேர் போன ஒட்டன்சத்திரம் பகுதியிலயும், விவசாயிகள் வேலையை ஆரம்பிக்காம சுணங்கிப் போய்க் கிடக்குறாங்களாம். மானாவாரி நிலத்துல எல்லாம் இன்னும் முதல் உழவு கூட ஓட்ட முடியலையாம். ஆடிப்பட்டத்துல விதைக்கிற காலமெல்லாம் மாறிப்போச்சு. விவசாயிகளெல்லாம் நொந்துக்கறாங்க'' என்று சொன்னார்.

''ம்ம்க்கும்... ஊரு கதை இப்படியிருக்கு. ஆனா, இந்த நேரத்துல காய்கறி சாகுபடியில உயர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, உற்பத்தியை அதிகரிக்கறதுக்காக தமிழ்நாடு முழுக்க 75 கிராமங்களைத் தேர்ந்தெடுத்திருக்காங்களாம். அஞ்சு கிராமத்துக்கு 6 கோடி ரூபாய்னு பணம் ஒதுக்கியிருக்காங்களாம். அதுக்காக உதவி தோட்டக்கலை அலுவலர்களையும் நியமிச்சுருக்காங்களாம். கிராமத்துல ஒரு அலுவலகம் ஆரம்பிச்சு கம்ப்யூட்டர், இன்டர்நெட் வசதியெல்லாம் செஞ்சு கொடுக்கப் போறாங்களாம். அவனவன் தண்ணியில்லாம கஷ்டப்பட்டுக்கிட்டுக் கிடக்கான். இந்தத் திட்டத்தால என்னத்த சாதிக்கப் போறாய்ங்கனு தெரியலயே... இதனால யாருக்கு லாபமோ?! என்று வருத்தம் பொங்கிய வாத்தியார் தொடர்ந்தார்.

''எல்லாமே இப்படித்தான்யா இருக்கு. காவிரித் தண்ணீரை கர்நாடகா விடாததால... டெல்டா மாவட்டங்கள்ல குறுவை சாகுபடி அடியோட நின்னுபோச்சு. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி, செப்டம்பர் 19-ம் தேதி காவிரி நதிநீர் ஆணையத்தைக் கூட்டினாங்க. 'வறட்சி காலத்துல, இருக்கற தண்ணீரைப் பகிர்ந்துக்கலாம்’னு நடுவர் மன்றம் சொல்லியிருக்குறதை அமல்படுத்தணும்னு நம்ம முதலமைச்சரம்மா கோரிக்கை வெச்சுருக்காங்க. ஆனா, பிரதமர் முன்னாடியே... கர்நாடகா முதலமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டர், 'தமிழ்நாட்டுக்குக் கொஞ்சம்கூட தண்ணி கொடுக்க முடியாது’னு திட்டவட்டமா சொல்லிட்டாராம். பிரதமர், 'தினமும் 9 ஆயிரம் கனஅடி கொடுங்க'னு சொல்ல... அதுக்கும் ஒப்புக்காம வெளிநடப்பு செய்திருக்காரு கர்நாடக முதலமைச்சர். 'சுப்ரீம் கோர்ட்டுக்குப் போறதத் தவிர வேற வழியில்ல'னு ஊருக்குத் திரும்பிஇருக்காங்க நம்ம முதலமைச்சர். ம் கேஸு... வாய்தானு முடியறதுக்குள்ள... சம்பா பருவமே முடிஞ்சுடும். 'எரியுற வீட்டை அணைக்க தண்ணி கொண்டு வாடானு சொன்னா, போர் வண்டியைக் கூப்பிடப்போன' கதையா இருக்கு'' என்றார்.

''பிரதமரு சொல்லிக்கூடவா கேக்கல?'' என்று அப்பாவியாகக் கேட்டார், காய்கறி.

''இதெல்லாம் ஒரு நாடு. ஒவ்வொரு முதலமைச்சரும் தனித்தனி ராஜா மாதிரி நினைச்சுக்கிட்டு அலையறாங்க. கர்நாடகாவால காவிரியில பிரச்னை; ஆந்திராவால பாலாத்துல பிரச்னை; கேரளாவால முல்லைப் பெரியாறு, பவானினு ஏகப்பட்ட பிரச்னை... இதையெல்லாம் கேக்குறதுக்கு இந்த துப்புக்கெட்ட மத்திய அரசாங்கத்துக்கு யோக்கியதை கிடையாது. அவய்ங்களுக்கு இப்போதைக்கு ஒரே பிரச்னை, வர்ற எலக்ஷன்ல திரும்பவும் மத்திய அரசாங்கத்தைப் பிடிக்கணும். கோடி கோடியா கொள்ளையடிச்சு,  சொத்து வாங்கிப்போடணுங்கிறதுதான். அதுக்காக என்னா வேணாலும் செய்யத் தயாரா இருக்காய்ங்க. 'இனி... ஒரு வீட்டுக்கு மானிய விலையில வருஷத்துக்கு ஆறு கேஸ் சிலிண்டர்தான் கொடுப்போம்’னு மத்திய அரசு அறிக்கை விடுது. அதேநேரத்துல, காங்கிரஸ் ஆட்சி செய்ற மாநிலங்கள்ல ஒவ்வொரு மாநிலமா கூடுதல் சிலிண்டர்களுக்கு மாநில அரசு மானியம் கொடுக்கும்னு அறிவிச்சுட்டுருக்குது. மக்களை எப்படி கிறுக்கனாக்குறாய்ங்க பாரு...'' என்று கோபமானார், வாத்தியார்.

''சரி விடுங்கய்யா... நீங்க ஏன் இவ்ளோ கோபப்படுறீங்க'' என்ற கண்ணம்மா கூடையிலிருந்து ஆளுக்கு இரண்டு கொய்யா பழங்களை எடுத்துக் கொடுத்தபடியே...

''திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டியில தங்கவேல்ன்றவர் 22 கலப்பின பால் மாடுகளை வெச்சு பால் பண்ணை நடத்திக்கிட்டிருக்கார். அவர் நாலு வருஷத்துக்கு முன்ன பழனி பக்கமிருந்து ஒரு பால் மாடு வாங்கிட்டு வந்திருக்கார். அது, 2010-ம் வருஷம் ஒரே ஈத்துல ரெண்டு காளைக்கன்னு போட்டிருக்கு. 2011-ம் வருஷம் ஒரே ஈத்துல ஒரு காளை, ஒரு கிடேரினு ரெண்டு கன்னு போட்டிருக்கு. இப்போ போன செப்டம்பர் 15-ம் தேதி, ஒரே ஈத்துல ஒரு கிடேரி, ரெண்டு காளைனு மொத்தம் மூணு குட்டி போட்டிருக்காம். மூணு கன்னுமே நல்ல ஆரோக்கியமா இருக்குறதால தங்கவேல் குடும்பம் ரொம்ப சந்தோஷத்துல இருக்குதாம்'' என்றவர்,

''வெயில் கொஞ்சம் இறங்கிஇருக்கு. நான் கிளம்புறேன்'' என்று சொல்லிக்கொண்டே கூடையைத் தூக்க, முடிவுக்கு வந்தது, அன்றைய மாநாடு.