மவுசு கூடிய மதுரை மல்லி !
##~## |
ஓய்வூதியப் பணத்தை, கணக்குப் புத்தகத்தில் வரவு வைப்பதற்காக வங்கிக்குச் சென்ற 'வாத்தியார்' வெள்ளைச்சாமி, திரும்பிக் கொண்டிருந்தார். வழியில் தேநீர்க்கடை பெஞ்சில் அமர்ந்து கொண்டிருந்த 'ஏரோட்டி’ ஏகாம்பரம், அவருடன் சேர்ந்துகொள்ள... இருவரும் தோட்டம் நோக்கி நடைபோட்டனர். தோட்டத்துக்குள் நுழைந்தபோது... ஓர் ஆடு நொண்டிக் கொண்டிருக்க... அதைத் தூக்கி தோளில் போட்டுக் கொண்டு நடந்தார். கொஞ்ச தூரத்திலேயே காத்திருந்த 'காய்கறி’ கண்ணம்மா, 'இன்னிக்கு என்னங்கய்யா முக்கியமான சேதி வெச்சுருக்கீங்க?' என்றபடியே தானும் எழுந்து நடக்க... ஆரம்பமானது அன்றைய மாநாடு!
''இப்போதைக்கு முதலமைச்சரம்மா நெல் விலைக்கு ஆதாரத் தொகையை ஏத்தியிருக்கறதுதான் முக்கியமான சேதி. ஆனா, விவசாயிங்க அந்த விஷயத்துல அதிருப்தியிலதான் இருக்காங்க. சாதாரண நெல்லுக்கு ஒரு குவிண்டால் ஆயிரத்து இருநூத்து அம்பது ரூபானு கொள்முதல் விலை இருந்துச்சு. இதுக்கு அம்பது ரூபா கூட்டி, இனிமே ஆயிரத்து முன்னூறு ரூபாய்க்கு கொள்முதல் செய்யப் போறதா சொல்லிருக்காங்க. சன்ன ரக நெல்லுக்கு எழுபது ரூபா கூட்டி, ஆயிரத்து முன்னூத்தைம்பது ரூபாய்க்கு கொள்முதல் செய்யப் போறதா சொல்லியிருக்காங்க.

இப்போ வெளி மார்க்கெட்லயே இதைவிட கூடுதல் விலை கிடைச்சுட்டுருக்குதாம். ஒரு குவிண்டால் ஆயிரத்து எழுநூத்தைம்பது ரூபா வரைக்கும் வெளியில விக்கிறதால, நிறைய இடங்கள்ல அரசு கொள்முதல் மையமெல்லாம் காத்தாடிக்கிட்டு இருக்குதாம். அதில்லாம கொள்முதல் மையத்துல நெல்லைக் கொடுத்து காசு வாங்குறதுக்குள்ள படாதபாடு படணும். வியாபாரினா... அப்படிக் கிடையாது. நேரடியா களத்துலேயே எடை போட்டு காசைக் கொடுத்து எடுத்துக்குவாங்க. அதனால, 'இப்ப முதல்வர் தந்திருக்கிற தொகை போதாது. இன்னமும் கூடுதல் விலை கொடுக்கணும். இல்லாட்டி... உர விலையையாவது குறைக்கணும்’னு விவசாயிகள்லாம் கோரிக்கைக் குரல் கொடுத்திட்டு இருக்காங்க'' என்றார், வாத்தியார்.
''இப்போதைக்கு நெல்லுக்கு டிமாண்ட் இருக்குதுய்யா. அதனால வெளி மார்க்கெட்ல அதிக விலை கிடைக்குது. குறிப்பா, வெளி மாநில வியாபாரிங்கதான் அதிக விலை கொடுத்து எடுத்துக்குறாங்க. நெல் வரத்து ஆரம்பிச்சுடுச்சுனா... விலை தானா குறைஞ்சுடும். கொஞ்ச நாளைக்கு முன்ன கொள்முதல் மையத்துல ஆயிரம் ரூபாய்க்கு மேல அரசாங்கம் கொடுத்து வாங்குறப்போ, வியாபாரிங்க எழுநூறு ரூபாய்க்குதானே வாங்கிட்டிருந்தாங்க. அதேசமயம், இப்போ அரசாங்கம், அம்பது ரூபாய் ஏத்தியிருக்கறதெல்லாம் ரொம்பவே அநியாயம்தான். விவசாயிங்க கேக்கறபடி இன்னும் அதிகரிக்கறதுதான் அம்மாவுக்கு அழகு'' என்றார், ஏரோட்டி.
''அதுவும் சரிதான். அரிசியை நாப்பது ரூபாய்க்கு விக்கிறாய்ங்க. ஆனா, நெல்லுக்கு அநியாயம் பண்றது கொடுமைதானே'' என்று ஆமோதித்த காய்கறி,
''எங்கிட்ட ஒரு சுவாரஸ்யமான சேதி இருக்கு'' என்று சொல்ல ஆரம்பித்தார்.
''மழை மாரியில்லாம வறண்டு கிடக்குதுல்ல நாடு. அதனால திருப்பூர் பக்கத்துல இருக்குற முருகம்பாளையம் ஏரியாவைச் சேந்த பொம்பளைகள்லாம் ஒண்ணு சேர்ந்து, மழைக்காக வேண்டுதல் பண்ணிருக்காங்க. வீடு விடா போய் பழைய சோத்தை பிச்சை எடுத்துக்கிட்டு வந்து, விநாயகர் கோவில்ல வெச்சு எல்லாரும் சாப்பிட்டுருக்காங்க. இதுக்குப் பேரு மழைச்சோறாம். அதுக்கப்பறம் இதுக்காக விரதம் இருந்த மூணு கன்னிப் பொண்ணுங்கள உக்கார வெச்சு... மழைச்சொம்பு, படைச்சொம்பு, பஞ்சசொம்புனு கொடுத்து பூஜை பண்ணி இருக்காங்க. இந்த சொம்புகளை சுடுகாட்டுக்கு எடுத்துட்டுப் போய், மரத்துல கட்டி வெச்சுட்டு... பாட்டி பொம்மை ஒண்ண செஞ்சு, ஒப்பாரி வெச்சு புதைச்சாங்களாம். இப்படிச் செஞ்சா கண்டிப்பா மழை வரும்கிறது அவங்களோட நம்பிக்கை'' என்றார், காய்கறி.
''அது சரி... மழை வந்துச்சா, வரலையா?'' என்று கேட்டார், ஏரோட்டி.

''ஒவ்வொரு பகுதியிலயும் இப்படி வித்தியாசம் வித்தியாசமான நடைமுறைகள் இருக்கத்தான் செய்யுது. அதையெல்லாம் நோண்டிக்கிட்டு இருக்கக் கூடாது. அதெல்லாம் அவங்கவங்க நம்பிக்கையைப் பொறுத்த விஷயம்'' என்று அந்தப் பேச்சை முடித்த வாத்தியார், அடுத்த செய்திக்குத் தாவினார்.
''இந்த மதுர மல்லி இருக்கு பாரு. அதுக்கு மத்திய அரசு, 'புவிசார் குறியீடு’ அந்தஸ்து கொடுத்துருக்கு. ஒரு இடத்தையோ அல்லது தோற்றத்தையோ ஒரு பொருளோட பேரோட சேர்த்து சொல்றதுதான் புவிசார் குறியீடு. அதை மத்திய அரசாங்கம் முறையா ஆய்வு பண்ணி அறிவிக்கும். ஏற்கெனவே, தமிழ்நாட்டுல 'காஞ்சிபுரம்’ பட்டு, 'பவானி’ ஜமுக்காளம், 'மதுரை’ சுங்குடி, 'தஞ்சாவூர்’ ஓவியம்னு நிறைய பொருள்களுக்கு இந்த அந்தஸ்து கிடைச்சுருக்கு. விவசாய விளைபொருட்கள்ல 'விருப்பாச்சி’ மலை வாழைக்கும், 'சிறுமலை’ மலைவாழைக்கும்தான் இதுவரை இப்படி அந்தஸ்து இருக்குது. இப்போ இந்த வரிசையில மதுரை மல்லியும் சேர்ந்திருக்கு. இதைவிட முக்கியமானது, இதுவரைக்கும் இந்தியாவுல எந்த மாநிலத்துலயும் பூவுக்கு இந்த மாதிரி அந்தஸ்து கிடைச்சதில்லை. முதல் பூ மதுரை மல்லிகைப்பூதானாம். இதுக்காக பெரிய அளவுல முயற்சி எடுத்தது... மதுரையில இருக்கற விவசாயக் கல்லூரி ஆராய்ச்சி நிலையம்தான்' என்று சொன்னார்.
''பரவாயில்லையே... இந்த அதிகாரிங்க நல்ல வேலைகளை செய்திருக்காங்க. ஆனா, சில அதிகாரிங்க இருக்காங்களே...'' என்று பீடிகை போட்ட ஏரோட்டி...
''வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களுக்கு விவசாயிகள கூட்டிட்டுப் போய் புது சாகுபடி முறை, தொழில்நுட்பம் எல்லாம் சொல்லிக் கொடுக்கறதுக்காக தேசிய தோட்டக்கலை இயக்கம் வருஷா வருஷம் ஏகப்பட்ட நிதி ஒதுக்குது. தேனி மாவட்ட தோட்டக்கலைத்துறை, விவசாயத்துறைக்கு ஒவ்வொரு வருஷமும் ஒதுக்குற நிதியை சரியா பயன்படுத்துறதில்லைனு குற்றச்சாட்டு கிளம்பிருக்கு. கொஞ்ச நாளைக்கு முன்ன திராட்சை விவசாயிகளை மட்டும் 'புனே’க்கு கூட்டிட்டுப் போனாங்களாம். ஆனா, வாழை, மா... னு அதிகமா சாகுபடி செய்ற விவசாயிகளை கண்டுக்கவேயில்லையாம். இதுல என்னா கொடுமைனா அரசாங்கம் ஒதுக்குற நிதியை ஒவ்வொரு வருஷமும் முப்பது லட்ச ரூபா அளவுக்குத் திருப்பி அனுப்பிடறாங்களாம். இப்படி செய்துட்டிருந்தா...

பணம் கொடுக்குறதையே நிறுத்திடுமாம் மத்திய அரசு. விவசாயிகளெல்லாம் புலம்பிட்டு இருக்காங்க'' என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே... அருகிலிருந்த புதரில் 'சரசர’வென சத்தம் கேட்க, ஒரு கம்பை எடுத்துக் கொண்டு வேகமாக எழுந்தார், ஏரோட்டி.
''ஏய், ஏய்... அவசரப்படாதய்யா... பாம்பு, பல்லினு எதையாவது நீ பாட்டுக்கு அடிச்சுக் கொன்னுப்புட்டு ஜெயிலுக்குப் போயிறாதே'' என்று வாத்தியார் தடுக்க... ஏரோட்டி அப்படியே நிற்க...
''என்னது, பாம்பை அடிச்சா, ஜெயிலுக்குப் போகணுமா?'' என அதிர்ந்தார் காய்கறி!
''அட, ஆமாம் கண்ணம்மா.. ஸ்ரீவில்லிபுத்தூர் பக்கத்துல ராக்காச்சி கோவில்னு ஒரு ஊர் இருக்கு. இங்க அப்பையா நாயக்கர்ன்றவர் காலையில தோட்டத்துல வேலை செஞ்சுட்டு இருந்தப்போ... ஒரு பாம்பை மிதிச்சுப்புட்டாராம். பாக்க பதினஞ்சு அடிக்கு மேல ரொம்ப நீளமா இருக்கவும் பயத்துல அந்தப் பாம்பை அடிச்சுக் கொன்னு தோட்டத்துக்குள்ளயே புதைச்சுட்டார். அதைப் பாத்தவங்க 'ரொம்பப் பெரிய பாம்பு’னு அதிசயப்பட்டு பேச... அப்படியே விஷயம் ஃபாரஸ்ட்காரங்க காதுக்குப் போயிடுச்சு. கடமை தவறாத அதிகாரிக வந்து, புதைச்சுருந்த பாம்பை தோண்டிப் பாத்தப்போ அது ராஜநாகம்னு தெரிஞ்சுருக்கு. உடனே அப்பையா நாயக்கரை வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்துல கைது செஞ்சுட்டாங்க. இப்போ அவர் கோர்ட்டு... கேஸுனு அலைஞ்சுக்கிட்டிருக்கார்'' என்றார் வாத்தியார்.
''ஏதோ தோலுக்காக, கடத்தலுக்காக அடிச்சுக் கொன்னுருந்தா ஜெயில்ல போடறதுல தப்பில்ல. பாவம், பயந்து போய் அடிச்சவருக்கும் அதேகதியா?'' என்று நொந்து கொண்ட ஏரோட்டி,
''ஆடு நொண்டுது, அதோட காலுக்கு பச்சிலை வெச்சுக் கட்டணும். மாடுகளை அவுத்து இடம் மாத்திக் கட்டணும். ஏகப்பட்ட வேலை இருக்கு'' என்று கிளம்ப, மாநாடும் முடிவுக்கு வந்தது.