கால்நடை
நாட்டு நடப்பு
Published:Updated:

25 சென்ட்... ரூ.95,000... இயற்கையில் செழிக்கும் செங்கரும்பு! குறைவான பரப்பில் நிறைவான லாபம்!

பொங்கல் கரும்புகளுடன் சித்தர்
பிரீமியம் ஸ்டோரி
News
பொங்கல் கரும்புகளுடன் சித்தர்

மகசூல்

பொங்கல் கொண்டாட்டத்தின் முக்கிய அடையாளமாகச் செங்கரும்பு திகழ்கிறது. இது நம் மண்ணின் பன்பாட்டு அடையாளம். இதைச் சுவைப்பதால் மனித உடலுக்குப் பலவிதமான நன்மைகள் விளைகின்றன. அதனால்தான் நம் முன்னோர்கள் பன்னெடுங் காலமாகப் பொங்கல் பண்டிகையில் முதன்மை அம்சமாக இதை இடம்பெறச் செய்திருக் கிறார்கள்.

ஆனால், சமீபகாலமாக அதிக அளவில் ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி பயன்படுத்தியே பெரும்பாலும் செங்கரும்பு விளைவிக்கப்படுவதால், இதன் இயல்பான சத்துகள் குறைந்துவிடுவதாக ஆதங்க குரல்கள் ஒலிக்கின்றன.

செங்கரும்புத் தோட்டத்தில் பராமரிப்பு பணி
செங்கரும்புத் தோட்டத்தில் பராமரிப்பு பணி

இந்நிலையில்தான் சில விவசாயிகள் இதை இயற்கை முறையில் சாகுபடி செய்து கவனம் ஈர்க்கிறார்கள். தஞ்சாவூர் மாவட்டம், புன்னைநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த சித்தர் 25 சென்ட் பரப்பில் சாகுபடி செய்துள்ள செங்கரும்பு செழிப்பாக விளைந்து தற்போது அறுவடைக்கு வந்துள்ளது. இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட கரும்பு என்பதால், பலரும் மிகுந்த ஆர்வத்தோடு இதை வாங்கிச் செல்கிறார்கள்.

இதைப் பார்வையிட ஒரு பகல் பொழுதில் சித்தரின் செங்கரும்பு தோட்டத்துக்குச் சென்றோம். இவர் பசுமை விகடன் வாசகர்களுக்கு ஏற்கெனவே அறிமுகமானவர். 10.10.2021 தேதியிட்ட இதழில் ‘முன்னாள் உரக்கடைக்காரரின் இயற்கை விவசாயம்’ என்ற தலைப்பில் வெளியான கட்டுரையில் தன்னுடைய நெல் சாகுபடி அனுபவங்களைப் பகிர்ந்திருந்தார். தற்போது இவர் விளைவித்திருக்கும் செங்கரும்பு அனுபவம் குறித்து அறிந்துகொள்வதற்காக மீண்டும் சந்தித்தோம்.

பொங்கல் கரும்புகளுடன் சித்தர்
பொங்கல் கரும்புகளுடன் சித்தர்

மிகுந்த உற்சாகமாகப் பேசத் தொடங்கியவர், ‘‘நிலத்துக்கு நெல்லும், கரும்பும் அணிகலன்கள்னு தமிழ் இலக்கிய நூல்ல சொல்லப்பட்டுருக்கு. இதுல இருந்தே நாம உறுதிப்படுத்திக் கலாம்... செங்கரும்பு நம் மண்ணோட பாரம்பர்ய பயிர்னு. நான், சின்னப் புள்ளையா இருந்தப்ப, எனக்குத் தெரிஞ்சு நிறைய வயல்கள்ல செங்கரும்பு விளைஞ்சு நிக்கும். ஆனா, இப்ப அந்த மாதிரி இல்லை. இப்பெல்லாம் கரும்பு சாகுபடினு சொன் னாலே, ஆலைக் கரும்புதான் எல்லாருக்கும் ஞாபகத்துக்கு வருது. ஒரு சில பகுதிகள்ல மட்டும்தான் செங்கரும்பு சாகுபடி செய்றாங்க. அதுவும்கூட அதிக அளவு ரசாயனங்கள் பயன்படுத்தி விளைவிச்சதா இருக்கு. பயிரோட வேர்ப்பகுதியில பூஞ்சணக் கொல்லி, நூற்புழு கொல்லி வைக்குறதோடு மட்டுமல்லாம, பயிர் வளர்ச்சி ஊக்கியாகவும் நிறைய ரசாயன உரங்கள் பயன்படுத்துறாங்க. பூச்சி, நோய்த்தாக்குதல்களைக் கட்டுப் படுத்தவும் ரசாயனங்கள் பயன்படுத்துறாங்க. இதனால செங்கரும்புல இருந்து கிடைக்க வேண்டிய நுண்ணூட்ட, பேரூட்ட சத்துகள், தாது உப்புகளோட அளவு குறைஞ்சு போயிடுது. செங்கரும்போட இயல்பான சுவையும் மாறிப்போயிடுது. விவசாயிகள் ஒவ்வொருத்தரும் தங்களோட வீட்டுத் தேவைக்காகவும், எளிமையா சந்தைப்படுத்துறக்கு வசதியாவும், 20 - 30 சென்ட் பரப்புல இயற்கை முறையில இதைச் சாகுபடி செய்யலாம்.

செங்கரும்புத் தோட்டம்
செங்கரும்புத் தோட்டம்

இன்னொரு வாய்ப்பா... நெல் வயல்களோட வரப்பு ஓரங்கள்ல செங்கரும்பு பயிர் பண்ணலாம். இயற்கை முறையில இதைச் சாகுபடி செஞ்சா செலவு ரொம்ப குறைவு. பொங்கல் சமயத்துல எல்லாத்தையும் முழுமையா அறுவடை செஞ்சு வித்து முடிச்சுடணும்னு நினைக்கக் கூடாது. பயிர் பண்ணின பத்து மாசத்துல இது முதிர்ச்சி அடைஞ்சு அறுவடைக்குத் தயாரானாலும் கூட, அடுத்த நாலஞ்சு மாசம் வரைக்கும் வச்சிருந்து கொஞ்சம் கொஞ்சமா வெட்டி சாப்பிட்டுக்கலாம். வெளியிலயும் விற்பனை பண்ணிக்கலாம். அதிக பரப்புல இதைச் சாகுபடி செஞ்சு, ஒரே சமயத்துல எல்லாத் தையும் விற்பனை பண்ணிடம்னு நினைச்சா தான் விவசாயிகளுக்குப் பிரச்னை ஏற்படும்’’ என்று சொன்னவர், செங்கரும்பு சாகுபடி குறித்த தன்னுடைய அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்.

‘‘மாசி மாசம் இந்த 25 சென்ட் பரப்புல அடியுரமா 1 டன் எரு போட்டு, உழவு ஓட்டிட்டு 3,000 விதைக் கரணைகள விதைப்பு செஞ்சேன். அதுக்குப் பிறகு மேலுரமா... கனஜீவாமிர்தம். ஜீவாமிர்தம், சூடோமோனஸ், ட்ரைக்கோ டெர்மா விரிடி கொடுத்தேன். மாசத்துக்கு ஒரு தடவை தோகையை உரிச்சு எடுத்தேன். 2 முறை களையெடுத்தேன். பயிர் நல்லா செழிப்பா விளைஞ்சு இப்ப அறுவடைக்கு வந்துடுச்சு. ஒவ்வொரு விதைக் கரணையில இருந்தும் குறைந்தபட்சம் 2, அதிகபட்சம் 8 தூர்கள் வெடிச்சு வந்திருக்கு. இந்த 25 சென்ட் பரப்புல, விற்பனைக்கு ஏத்த முதல் தர கரும்புகள் 6,000-க்கும் அதிக மான எண்ணிக்கையில விளைஞ்சிருக்கு. இங்கவுள்ள கரும்புகள் கருநீல நிறத்துல இருக்கு. இதுமாதிரி இருந்தாதான் கரும்பு நல்லா சுவையா இருக்கும். கணுக்கள் ரொம்ப நெருக்கமாவும் இல்லாம, அதிக இடை வெளியிலயும் இல்லாம இருந்தாதான் மக்கள் விரும்பி வாங்குவாங்க.

கரும்புத் தோட்டத்தில்
கரும்புத் தோட்டத்தில்

என்னோட கரும்புல சுமார் 4 - 5 அங்குல இடையில கணுக்கள் அமைஞ்சிருக்கு. கரும்பு நல்லா பெருத்திருந்தா, அதிகமா தண்ணி இருக்கும்... ஆனா, இனிப்புத் தன்மை குறைவா இருக்கும்... அதேசமயம் ரொம்ப மெல்லியதா இருந்தா நீர்ச்சத்து குறைவா இருக்கும். என்னோட கரும்பு ரொம்ப பெருத்தும் இல்லாம, மெல்லியதாவும் இல்லாம, இடைப்பட்ட சைஸ்ல இருக்கு. என்னோட கரும்புகளை நான் வியாபாரிகள்கிட்ட விற்பனை செய்றதில்லை. என்னோட நண்பர்கள், இயற்கை விவசாய ஆர்வலர்கள் என்னோட தோட்டத்துக்கே வந்து கரும்புகள் வாங்கிகிட்டுப் போறாங்க. என் பண்ணையில மீன் குளம் இருக்கு. அதுல வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமை மீன் பிடிச்சு விற்பனை செய்வேன். மீன் வாங்க வரக்கூடிய பொதுமக்களும் ரொம்ப ஆர்வமா கரும்பு வாங்கிக்கிட்டு போறாங்க.

ஒரு கரும்பு 20 ரூபாய்னு விற்பனை செஞ்சுகிட்டு இருக்கேன். 6,000 கரும்புகள் விற்பனை செய்றது மூலம் எனக்கு மொத்தம் 1,20,000 ரூபாய் வருமானம் கிடைக்கும். உழவு, விதைக்கரணை, விதைப்புக்கூலி, இடுபொருள்கள், களையெடுப்பு, அறுவடை கூலி எல்லாச் செலவுகளும் போக, நிகர லாபமா 95,000 ரூபாய் கிடைக்கும். இது எனக்கு நிறைவான லாபம். ஆனா, இந்த லாபத்தை எதிர்பார்த்து மட்டுமே இதை நான் செய்யல. இயற்கை முறையில செங்கரும்பு சாகுபடி செஞ்சு, மத்த விவசாயிகள் மத்தியில விழிப்புணர்வை ஏற்படுத்தணும். இதைப் பரவலாக்கம் செய்யணுங்கறதுதான் என்னோட முதன்மையான நோக்கம்’’ என்று சொல்லிமுடித்தார்.தொடர்புக்கு, சித்தர்,

செல்போன்: 94431 39788

இப்படித்தான் சாகுபடி

25 சென்ட் பரப்பில் செங்கரும்பு சாகுபடி செய்ய, சித்தர் சொல்லும் செயல்முறைகள், இங்கே பாடமாகத் தொகுக்கப்பட்டுள்ளன.

தேர்ந்தெடுக்கப்பட்ட நிலத்தில் அடியுரமாக 1 டன் எரு போட்டு நன்கு உழவு ஓட்டி, மண்ணை சமப்படுத்த வேண்டும். வரிசைக்கு வரிசை 2 அடி... குத்துக்குக் குத்து முக்கால் அடி இடைவெளி விட்டு, விதைக்கரணையை விதைப்பு செய்ய வேண்டும். விதைக் கரணையில் குறைந்தபட்சம் 2 பருக்கள் இருக்க வேண்டும். பருக்கள் மண்ணில் படுமாறு விதைக்கரணையைப் படுக்கை வாக்கில் வைத்து, அதன் மீது மண்ணைப் போட்டு மூட வேண்டும். மண்ணின் ஈரத்தன்மைக்கு ஏற்ப அவ்வப்போது தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.

செங்கரும்புத் தோட்டம்
செங்கரும்புத் தோட்டம்

2-ம் மாதம் 200 கிலோ கனஜீவாமிர்தம் போட்டு மண் அணைக்க வேண்டும். அதன் பிறகு 45 நாள்கள் இடைவெளியில் இரண்டு முறை வேர்ப்பகுதியில் கனஜீவாமிர்தம் போட வேண்டும். 3-ம் மாதம் 40 லிட்டர் ஜீவாமிர்தத்தில் தலா 100 மி.லி சூடோமோனஸ், ட்ரைக்கோ டெர்மா விரிடி திரவம் கலந்து, தெளிப்பு செய்ய வேண்டும். அதன் பிறகு 45 நாள்கள் இடைவெளியில் இரண்டு முறை இதேபோல் தெளிக்க வேண்டும். தேவைக்கேற்ப அவ்வப்போது களை எடுக்க வேண்டும். 4 அல்லது 5 மாதங்களுக்குப் பிறகு தோகையை உரிக்க வேண்டும். மாதம் ஒரு முறை தோகை உரிப்பது அவசியம். தோகை உரிக்கவில்லை என்றால், தண்ணீர் தேங்கி நின்று பூச்சி, நோய்த்தாக்குதல்கள் ஏற்பட வாய்ப்புள்ளன. 10-ம் மாதம் செங்கரும்பு முதிர்ச்சி அடைந்து அறுவடைக்கு வரத் தொடங்கும்.

பூச்சிகளைக் கட்டுப்படுத்துதல்

கரும்புப் பயிரை தாக்கக்கூடிய பூச்சிகள் தென்பட்டால்... ஒரு மண்சட்டியில நெருப்பு மூட்டி... அதில் தலா 25 கிராம் வசம்புத்தூள், மஞ்சள் தூள், வேப்பம்பிண்ணாக்கு, சாம்பிராணி போட்டு, புகை ஏற்படுத்த வேண்டும். அந்த மண்சட்டியை கையில் ஏந்தியவாறு, செங்கரும்புத் தோட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் நடந்து வர வேண்டும். காலை அல்லது மாலை நேரங்களில்தான் பூச்சிகளின் நடமாட்டம் அதிகம் இருக்கும். அந்த நேரத்தில் மண்சட்டி ஏந்தி நடப்பது நல்ல பலன் கொடுக்கும். இதுபோல் புகை மூட்டம் ஏற்படுத்திய பிறகு, பூச்சிகள் தென்பட்டால், 10 லிட்டர் தண்ணீருக்கு 1 லிட்டர் வீதம் மூலிகைப் பூச்சிவிரட்டி கலந்து பயிர்கள் மீது தெளிக்கலாம்.இந்த 9 அம்சங்களும் விவசாயிகள்கிட்ட இருக்கணும்

‘‘பொங்கல் விழானு சொன்னாலே... நெல், கரும்பு, வாழை, தேங்காய், இஞ்சி, மஞ்சள், பால், நெய், தயிர்... இந்த 9 அம்சங்களும் கண்டிப்பா இடம்பெறும். இது எல்லாமே ஒரு விவசாயியோட பண்ணையில உற்பத்தி செய்யப்படணும். வியாபார நோக்கத்துல பெரிய அளவுல செய்யணும்னு அவசியமில்லை. தன்னோட வீட்ல பொங்கல் கொண்டாடுற அளவுக்காவது இதையெல்லாம் உற்பத்தி செய்யணும். நான் இதுல ஓரளவுக்குத் தன்னிறைவு அடைஞ்சிருக்கேன்’’ என்கிறார் சித்தர்.

கரும்பு கணு இடைவெளி
கரும்பு கணு இடைவெளி

செங்கரும்போட மகத்துவம்!

‘‘அப்பெல்லாம், பொங்கல் பண்டிகை நெருங்க ஆரம்பிச்சதுமே மக்கள் கட்டுக் கட்டாதான் கரும்பு வாங்கிக்கிட்டு போவாங்க. தாத்தா-பாட்டிங்க கரும்பை சின்னச் சின்ன துண்டுகளா வெட்டி, பேரக்குழந்தைங்களுக்குச் சாப்பிட கொடுப்பாங்க. சின்ன பசங்க, இளைஞர்கள், பெண்கள், வயசானவங்கனு எல்லாருமே கரும்பு கடிச்சு மெல்லுவதை எல்லா வீடுகள்லயுமே பார்க்க முடியும். அதனால பல் உறுதி அடையும். வாய், வயிறு சுத்தமடையும். வயிற்றுப்புண் ஆறும். செரிமானப் பிரச்னை இருந்தா, சரியாயிடும். இவ்வளவு மகத்துவங்கள் நிறைஞ்சிருந்தும் கூட, காலப்போக்குல கரும்பு கடிச்சு சுவைக்குற பழக்கம் நம்ம மக்கள்கிட்ட படிப்படியா குறைஞ்சு போயிடுச்சு. கரும்பு இல்லாம பொங்கல் கொண்டாட கூடாதுங்கற ஒரு சம்பிரதாயத்துக்காக, பெரும்பாலான வீடுகள்ல ரெண்டு கழி மட்டும் வாங்கிகிட்டு போயி, சாமி கும்பிட்ட பிறகு, அதை வீசி எறிஞ்சுடுறாங்க.

பொங்கல் கரும்புகளுடன் சித்தர்
பொங்கல் கரும்புகளுடன் சித்தர்

இப்பவுள்ள சின்ன பசங்களுக்குக் கரும்பு கடிச்சு மெல்ல தெரியலை. காரணம், கரும்பு சுவைக்க, பெற்றோர்கள் சொல்லித் தர்றதில்லை. இந்த நிலை மாறணும். பாரம்பர்ய நெல் ரகங்கள், சிறுதானியங்கள், செக்கு எண்ணெய் பத்தி மக்கள்கிட்ட எப்படி விழிப்புணர்வு ஏற்பட்டுச்சோ, அது மாதிரி செங்கரும்போட மகத்துவம் பத்தியும் மக்கள்கிட்ட விழிப்புணர்வு ஏற்படணும். விவசாயிகள் இயற்கை முறையில இதைச் சாகுபடி செய்யணும்’’ என்கிறார் சித்தர்.

தமிழக அரசுக்குப் பாராட்டுகள்

‘‘தமிழக அரசு, குடும்ப அட்டை தாரர்களுக்குக் கொடுக்குற பொங்கல் பரிசு தொகுப்புல செங்கரும்பும் கொடுக்க முன் வந்தது, பாராட்டப்பட வேண்டிய விஷயம். இதை ஒவ்வொரு வருஷமும் கடைப்பிடிக்கணும். இதைச் செய்யலைன்னா, எதிர்காலத்துல நம்ம மக்கள் செங்கரும்பை மறந்துபோனாலும் கூட ஆச்சர்யப்படுறதுக்கில்ல. விவசாயிகள் கிட்ட இருந்து அரசாங்கம் இதை நேர்மை யான முறையில கொள்முதல் செஞ்சாதான், விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்கும். விவசாயிகள் தொடர்ந்து சாகுபடி செய்வாங்க. இல்லைன்னா, வெளிமாநிலங்கள்ல இருந்தோ... வெளிநாடுகள்ல இருந்தோதான் செங்கரும்பு இறக்குமதி செய்ய வேண்டிய நிலை உருவாகிடும்’’ என்கிறார் சித்தர்.

வாழை
வாழை
வாழைத்தாருடன்
வாழைத்தாருடன்

வாழை, மஞ்சள்...

‘‘25 சென்ட் பரப்புல வாழை சாகுபடி செஞ்சிருக்கேன். நெய்பூவன், ரஸ்தாலி, பூவன் உட்பட எல்லா ரகங்களும் கலந்து மொத்தம் 250 மரங்கள் இருக்கு. ஒரு தாரோட விலை குறைந்தபட்சம் 200 ரூபாய்னு விற்பனை செய்றேன். ஒரு வாழை மரத்துக்கு 6-7 இலைகள் இருந்தால் போதும். தார் உற்பத்திக்கு இந்த எண்ணிக்கையே போதுமானது. இதைவிடக் கூடுதலா உருவாகக்கூடிய இலைகள் அறுத்து விற்பனை செஞ்சுடுவேன். விற்பனை வாய்ப்புக்கு ஏற்ப வாழை மரமாவும் விற்பனை செய்றேன். ஒரு ஜோடி 600-650 ரூபாய்னு விற்பனை செய்றேன். வாழைக்கு இடையில ஊடுபயிரா, மஞ்சள் பயிர் பண்ணியிருக்கேன். பொங்கல் பண்டிகைக்குக் கொஞ்சம் எங்களுக்கு மஞ்சள் தேவைப்படும். மீதியுள்ளதை கால்நடைகளுக்கு மருந்துகள் தயாரிக்கப் பயன்படுத்திக்குவேன்’’ என்கிறார் சித்தர்.