புதுப்புல் ஜாக்கிரதை!
##~## |
வாராது வந்த மாமணியாக வந்திருக்கும் மழை காரணமாக வறண்டு கிடந்த தோட்டம் பசுமைக் கட்டிக் காட்சியளித்தது. உற்சாகமாக இருந்த 'ஏரோட்டி’ ஏகாம்பரம், நிலத்தை உழுவதற்காக டிராக்டருக்குச் சொல்லி அனுப்பிவிட்டு, வயலில் காத்திருந்தார். அவரோடு காலையிலேயே தோட்டத்துக்கு வந்துவிட்ட 'வாத்தியார்’ வெள்ளைச்சாமி, கையோடு கொண்டு வந்திருந்த நாளிதழ்களில் பார்வையை ஓட்டிக் கொண்டிருந்தார். கொஞ்ச நேரத்திலேயே வரப்பில் 'காய்கறி’ கண்ணம்மாவின் தலை தெரிய, நாளிதழ்களை மடித்து வைத்துவிட்டு, வாத்தியார் எழுந்தார்!
''ஒரு மழை பேஞ்ச உடனேயே ஊரு எவ்வளவு செழிப்பா ஆயிடுச்சு. காய்ஞ்சு போயிருந்த செடி, செத்தை எல்லாம் எந்திரிச்சுருச்சு. பாக்குறதுக்கே சந்தோஷமா இருக்கு'' என்று குதூகலமாகச் சொன்னபடி வந்து காய்கறி அமர... ஆரம்பமானது மாநாடு!
''சம்சாரிகள் எல்லாருக்குமே சந்தோஷம்தான். எவ்வளவு நாள் கழிச்சு மழை பெய்ய ஆரம்பிச்சுருக்கு. நிறைய மாவட்டங்கள்ல குடிக்கறதுக்கே தண்ணியில்லாத நிலை. நல்லவேளையா மழை வந்து காப்பாத்திடுச்சு. தொடர்ந்து பேய்ஞ்சுதுனா நல்லாருக்கும். அணைக்கட்டுகள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமா நிரம்பிட்டிருக்கதால... போதுமான அளவு நிரம்புச்சுனா, நீர் மின்சார உற்பத்தி மூலமா கரன்ட் பிரச்னைகூட கொஞ்சம் குறையுங்கிறாங்க. 'எப்படியும் ஜனவரி மாசம் வரைக்கும் வடகிழக்குப் பருவமழை நீடிக்கும்’னு வானிலை அதிகாரிங்க சொல்றாங்க. அதனால, மாநிலத்துல ஓரளவுக்கு வறட்சி குறையுறதுக்கு வாய்ப்பு இருக்கு'' என்று சந்தோஷமாகச் சொன்னார் வாத்தியார்.
அவ்ர் சொன்ன உடனே, ''ஆனா, இந்த மழையால வர்ற பாதிப்புகள்தான் கவலையைக் கூட்டுது'' என்று சோகக்குரலில் சொன்ன ஏரோட்டி,
''மின்னல் தாக்கி, மின்சாரம் தாக்கி, கட்டடம் இடிஞ்சு விழுந்து...னு பத்து பேர் வரைக்கும் இறந்துட்டாங்களாம். தூத்துக்குடி மாவட்டத்துல நாத்து நடவுல இருந்த பொம்பளைங்க, மழைக்கு பயந்து போர்செட் கட்டடத்துல ஒதுங்கியிருக்காங்க. அது இடிஞ்சு விழுந்து நாலு பேர் பரிதாபமா இறந்து போயிருக்காங்க. மேலாத்தூர் பக்கத்துல சூறாவளிக் காத்தோட மழை பேய்ஞ்சதுல... அறுவடைக்குத் தயாரா இருந்த அஞ்சு லட்சம் வாழை மரங்கள் சாய்ஞ்சு போச்சாம். கிட்டத்தட்ட அஞ்சு கோடி ரூபாய் அளவுக்கு நஷ்டம். ஆடுகள், புளிய மரம், பனை மரம்...னு நிறைய இழப்பு ஏற்பட்டிருக்கறதால, விவசாயிக புலம்பிக்கிட்டுருக்காக'' என்று தன் பங்குக்கும் சில தகவல்களைத் தட்டிவிட்டார்!

''சும்மாவா சொல்லியிருக்காங்க... 'மழை, பேய்ஞ்சும் கெடுக்கும்... காய்ஞ்சும் கெடுக்கும்’னு'' என்று காய்கறி ஒரு சொலவடையைத் தொட்டுக்காட்ட...
''நாமதான் எச்சரிக்கையா இருக்கணும். தோட்டத்து வரப்புல காற்றுத்தடுப்பு வேலியா மரங்களை வளர்க்கறது... பயிர்களுக்கு, கால்நடைகளுக்கு இன்ஷூரன்ஸ் போடுறதுனு கவனமா இருந்தா... இழப்புகளை சமாளிக்க முடியும்ல'' என்று சொன்ன ஏரோட்டி,
''மழையால, காய்ஞ்சு கருகிப் போய்க் கிடந்த மேய்ச்சல் நிலத்துல எல்லாம் புல் முளைக்க ஆரம்பிச்சுடுச்சு. இப்போதான் ஆடு, மாடு வளர்க்கறவங்களும் கொஞ்சம் நிம்மதி ஆகியிருக்காங்க'' என்று சொல்ல...
''அய்யய்யோ...'' என்று பதறிய வாத்தியார்,
''மழை பேய்ஞ்சதும் முளைக்கிற புதுப்புல்லை... ஆடு, மாடுகள் சாப்பிடறது நல்லதில்ல. அதுல இருக்குற சில நுண்ணுயிர்களால நோய் வர்றதுக்கு வாய்ப்பிருக்கு. கொஞ்ச நாள் முளைச்சு வந்த பிறகுதான் மேய விடணும் பாத்துக்கோ...'' என்று எச்சரிக்கை தந்துவிட்டு,
''ஒரு திருத்தத் தகவல்'' என்றபடியே தொடர்ந்தார்.
'போன முறை நாம பேசுனப்போ... 'தேனி மாவட்டத்து விவசாயிகளை சுற்றுலா கூட்டிட்டுப் போகாம, அதுக்கான பணத்தை அதிகாரிகள் அரசாங்கத்துக்கே திருப்பி அனுப்பிட்டதா விவசாயிகள் புலம்புறாங்க’னு நீ சொல்லியிருந்தே இல்லையா... அதுபத்தி தேனி மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குநர் முருகன், ஒரு லெட்டர் போட்டிருக்கார். அதுல, 'அது தவறான தகவல். விவசாயிகள் தெரியாம சொல்றாங்க. விவசாயிகளுக்குப் பயிற்சி கொடுக்கிறதுக்கோ, சுற்றுலா அழைச்சுட்டுப் போறதுக்கோ... மூணு வருஷமா தேனி மாவட்டத்துக்கு தேசியத் தோட்டக்கலை இயக்கம் சார்பா பணம் ஒதுக்கப்படவே இல்லை. கலெக்டர் தனிப்பட்ட முறையில சொன்னதால, ஓடைப்பட்டி கிராமத்துல மட்டும் 104 திராட்சை விவசாயிகளுக்குப் பயிற்சி கொடுத்தோம். 30 லட்ச ரூபாயைத் திருப்பி அனுப்பினதா சொல்றதும் தவறான தகவல்’னு முருகன் எழுதியிருக்கார்'' என்றார், வாத்தியார்.
''அப்படியா... நான் சொன்ன தகவல் தப்பா..?'' என்று யோசித்த ஏரோட்டி... ''என்கிட்ட தப்பான தகவலை ஏன் விவசாயிக பரப்பணும். இதைப் பத்தி மேற்கொண்டு விசாரிச்சு தெரிஞ்சுக்கிறேன். இனி, தவறான தகவல் ஏதும் இடம் பிடிச்சுடாம பார்த்துக்கிறேன்'' என்று... சொல்லிக் கொண்டிருக்கும்போதே... மறுபடியும் வானம் பொத்துக் கொண்டு ஊற்ற ஆரம்பிக்க, ஆளாளுக்கு எழுந்து ஓட... முடிவுக்கு வந்தது, அன்றைய மாநாடு.
வாத்தியார் சொன்ன கொசுறு
'பெரும்பாலான விவசாயிக, கரும்பு வெட்டுனதும் தோகையைத் தோட்டத்துல போட்டு, தீ வெச்சுடறதுதான் வழக்கமா வெச்சுருக்காங்க. இயற்கை விவசாயிகள்தான், தோகைகளைத் தோட்டத்துலயே பரப்பி மட்க வெச்சு உரமாக்கிடுவாங்க. இது ரொம்ப ரொம்ப நல்லவிஷயம்கிறதால... கோபிச்செட்டிபாளையம் பகுதி வேளாண்மை உதவி இயக்குநர் ஆசைத்தம்பி, விவசாயிகள்கிட்ட இதை வலியுறுத்திக்கிட்டிருக்கார். 'தோகைகள மண்ணுல போடும்போது, அது மட்கி நிறைய நுண்ணுயிரிகள் பெருகி, மண்ணோட அடர்த்தி குறைஞ்சு அங்ககத் தன்மை அதிகரிக்கும். ஈரப்பதமும் அப்படியே இருக்கும். களையும் முளைக்காது. இதனால, டன் கணக்குல உரம் கிடைக்கிறதோட இளங்குருத்துப் புழுவோட தாக்குதலும் குறையும். தீ வெச்சு எரிச்சா... நன்மை செய்யுற நுண்ணுயிரிகளும், பூச்சிகளும் அழிஞ்சுடும். மண்ணுல இருக்குற சத்தும் போயி, வயல் சூடாகி மறுதழைவுக் கரும்போட முளைப்புத் திறனும் குறைஞ்சுடும்’னு சொல்லியிருக்கார் ஆசைத்தம்பி!'