மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நீங்கள் கேட்டவை

பயிர் காப்பீடு எப்படி செய்வது ?புறா பாண்டி

 ''பயிர்களுக்குக் காப்பீடு செய்வது எப்படி? இதற்கு யாரை அணுக வேண்டும்?''

க. கண்ணன், திருச்சி.

 ##~##

இந்திய விவசாயக் காப்பீட்டு நிறுவனத்தின் மண்டல மேலாளர், பாரதி வஜ்ரவேலு பதில் சொல்கிறார்.

''புயல், வெள்ளம், வறட்சி... போன்ற இயற்கைச் சீற்றங்களினால் விவசாயிகளுக்கு ஏற்படும் இழப்பை ஈடுகட்டும் வகையில்தான் காப்பீடு வசதியை வழங்கி வருகிறது, அரசாங்கம். தற்போது, தேசிய வேளாண் காப்பீட்டுத் திட்டம்; மேம்பட்ட தேசிய வேளாண் காப்பீட்டுத் திட்டம்; காபி மழைக் காப்பீட்டுத் திட்டம்; வானிலை பயிர் காப்பீட்டுத் திட்டம்; தென்னை மர காப்பீட்டுத் திட்டம்; காலநிலை குறியீடு பயிர் காப்பீட்டுத் திட்டம்;  வர்ஷி அபிமான் காப்பீட்டுத் திட்டம் என பல திட்டங்கள் நடைமுறையில் உள்ளன.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, பயிர் மண்டலங்களை அடிப்படையாகக் கொண்டு காப்பீட்டுத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. உதாரணமாக, வர்ஷி அபிமான் காப்பீட்டுத் திட்டம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் மட்டும்தான் செயல்படுத்தப்படுகிறது. காபி மழைக் காப்பீட்டுத் திட்டம், காபி விளையும் மலைப்பகுதிகளுக்கு மட்டும்தான் பொருந்தும். ஆனால், சில திட்டங்கள் அனைத்து மாவட்டங்களுக்கும் பொருந்தும்படியும் உள்ளன.

நீங்கள் கேட்டவை

உதாரணமாக, தேசிய வேளாண் காப்பீட்டுத் திட்டம் எல்லா மாவட்டங்களுக்குமே பொருந்தும். இதில், நெல், கரும்பு, சோளம், கேழ்வரகு, உளுந்து, பச்சைப்பயறு, துவரை, நிலக்கடலை, எள், பருத்தி, மிளகாய், வெங்காயம், இஞ்சி, மஞ்சள், மரவள்ளிக்கிழங்கு, வாழை... என 23 வகையான பயிர்களைக் காப்பீடு செய்யலாம். அதேப்போல, தென்னை மரக் காப்பீட்டுத் திட்டமும் அனைத்து மாவட்டங்களுக்கும் பொருந்தும். ஒவ்வொரு மாவட்டத்திலும் எங்கள் முகவர்கள் உள்ளனர். இவர்களைத் தொடர்பு கொண்டால், காப்பீட்டுத் திட்டங்கள் குறித்து விளக்குவார்கள்.

நாட்டுமையாக்கப்பட்ட வங்கிகளில், பயிர் காப்பீடு செய்யும் வசதி உள்ளது. வழக்கமாக, வங்கிகளில் பயிர்க் கடன் பெறும் விவசாயிகளுக்குக் கட்டாயம் காப்பீடு செய்து விடுவார்கள். கடன் பெறாத விவசாயிகள், விருப்பத்தின் அடிப்படையில் காப்பீடு செய்து கொள்ளலாம். பயிர் காப்பீடு செய்ய விரும்பும் விவசாயிகள், உரிய தொகையை வங்கி வரைவோலையாக மட்டுமே வழங்க வேண்டும். யாரிடமும் பணமாக வழங்க வேண்டாம்.

தொடர்புக்கு: இந்திய விவசாயக் காப்பீட்டு நிறுவனம், 323, தம்பு செட்டித் தெரு, முதல் தளம், சென்னை-600 001. தொலைபேசி: 044-43403400.

''நாட்டுக் கோழி வளர்ப்பு போல, நாட்டு வாத்து வளர்ப்பு லாபம் தருமா?''

எஸ். வளர்மதி, பரமக்குடி.

மதுரையில் உள்ள, கால்நடைப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் பேராசிரியர் மற்றும் தலைவர். முனைவர். 'பண்ணை’ முருகானந்தம் பதில் சொல்கிறார்.

''நாட்டுக் கோழி வளர்ப்பு என்பது, நம் நாட்டில் காலங்காலமாக இருப்பதோடு, ஒரு கலாசாரமாகவும் பின்பற்றப்பட்டு வருகிறது. விருந்தாளிகள், வீட்டுக்கு வந்தால், நாட்டுக் கோழி அடித்து, சமைத்து விருந்து கொடுக்கும் பழக்கம், இன்றும் பல கிராமங்களில் நடைமுறையில் உள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் வாத்து இறைச்சியை உண்ணும் பழக்கம் பரவலாக இல்லை. குறிப்பிட்ட சிலர்  மட்டுமே வாத்து முட்டையையும், வாத்து இறைச்சியையும் உண்டு வருகின்றனர். பெரும்பாலானவர்கள், வாத்து இறைச்சி சாப்பிடுவதை கௌரவக் குறைச்சலாக நினைப்பதும் இருக்கிறது. ஆனால், கேரள மக்கள் இவற்றை விரும்பி உண்பதால், அந்த மாநிலத்தில்தான் அதிக விற்பனை வாய்ப்புகள் உள்ளன. தற்போது, தமிழ்நாட்டில் நீர்நிலைகள் அதிகம் உள்ள பகுதிகளில் வாத்து வளர்ப்பு நடந்து வருகிறது. அதன் மூலம் கிடைக்கும் வாத்து முட்டைகள், கேரளாவுக்குத்தான் அனுப்பி வைக்கப்படுகின்றன. அதனால், தமிழ்நாட்டு மக்களை நம்பி, வாத்துப் பண்ணை அமைத்தால், கண்டிப்பாக விற்பனையில் சிக்கல் ஏற்படும். கேரள மாநிலத்தில், விற்பனை வாய்ப்பை உறுதி செய்துகொண்டு, வாத்து வளர்ப்பில் இறங்கலாம்.

நீங்கள் கேட்டவை

மீன் பண்ணை வைத்திருப்பவர்கள், குறைந்த எண்ணிக்கையில் வாத்துகளை வளர்த்தால், அவை மீன் வளர்ப்புக்கும் உதவியாக இருக்கும். இவை, குளத்தில் நீந்திக்கொண்டே புழு பூச்சிகளைப் பிடித்து சாப்பிட்டு விடுவதால், தண்ணீரில் காற்றோட்டம் இருப்பதோடு, தண்ணீரும் சுத்தமாக இருக்கும். இது மீன்களின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும். இயற்கை விவசாயம் செய்பவர்கள், நெல் வயலில் பூச்சிக் கட்டுப்பாட்டுக்காக வாத்துகளை வளர்த்து வருகிறார்கள். இதுபோன்ற பணிகளுக்காக வாத்துகளை வளர்த்தால் பிரச்னை இருக்காது.''

தொடர்புக்கு, தொலைபேசி: 0452-2483903.

''கறி பலா பற்றி கேள்விப்பட்டேன். அதை எங்கள் தோட்டத்தில் வளர்க்க முடியுமா?''

எம். குணசேகரன், திருவண்ணாமலை.

திருநெல்வேலி மாவட்டம், கோவில்பட்டியில் பணியாற்றும் தோட்டக்கலை உதவி இயக்குநர் ஓய். ராஜகுமார் பதில் சொல்கிறார்.

''கறி பலா, அற்புதமான மரம். இதை 'கறிசக்க' என்றபெயரில் கேரளா மற்றும் கன்னியாகுமரி பகுதிகளில் அழைக்கிறார்கள். ஆண்டுமுழுக்க காய்த்துக்கொண்டே இருக்கும். ஆனால், அதற்குக் குளிர்ச்சியான சூழ்நிலை, செழிப்பான தண்ணீர் வசதி போன்றவை இருக்க வேண்டும். வணிக ரீதியாக தனிப்பயிராக இதை யாரும் சாகுபடி செய்வதில்லை. கேரள மாநிலம் முழுவதும் பரவலாகவும், தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டத்திலும் கறி பலாவை வீட்டுத்தோட்டம், வயல்களின் வேலி ஓரங்கள் மற்றும் வரப்போரங்களில் அதிகஅளவில் சாகுபடி செய்கிறார்கள்.

நீங்கள் கேட்டவை

இது நான்கு ஆண்டுகளில் பலன் கொடுக்கத் தொடங்கும். பத்து வயதான ஒரு மரத்தில், 1,000 காய்கள் வரை கூட காய்க்கும். கறி பலா விளையும் பகுதிகளில், குருமா, அவியல், பொரியல் போன்ற பதார்த்தங்களில் உருளைக் கிழங்குக்கு மாற்றாக, இதைப் பயன்படுத்துகிறார்கள். இது மிகுந்த ருசியாக இருப்பதோடு, உடலுக்கும் நல்ல வலுவைத் தருகிறது. ஒரு காய், ஒரு கிலோ எடை அளவுக்கு இருக்கும். இதைக் காயாகத்தான் பயன்படுத்த முடியும். பழுத்த பிறகு சாப்பிட முடியாது. அதனால், காய் பதத்தில் கவனமாக அறுவடை செய்ய வேண்டும். மரத்தில் இருந்து பறித்த பிறகு, விரைவில் அழுகி விடும் என்பதால், மூன்று நாட்களுக்குள் சமைத்துவிட வேண்டும். தனியார் நர்சரிகளில் கறி பலா கன்று விற்பனை செய்யப்படுகிறது.''

தொடர்புக்கு, செல்போன்: 94432-65003.

''நேரடி நெல் விதைப்பின் பயன்கள் என்ன? இதற்கான கருவி எங்கு கிடைக்கும்?''

பி. மனோஜ்குமார், திருத்தணி.

சென்னை, கொடுவள்ளி, உணவு மற்றும் பால் வளக்கல்லூரியின் உதவிப் பேராசிரியர் வி. பேராசிரியன் பதில் சொல்கிறார்.

''ஒரு ஏக்கர் நெல் நடவு செய்ய, குறைந்தபட்சம் 30 நபர்கள் தேவை. ஆனால், நேரடி நெல் விதைக்கும் கருவி மூலம் ஒரு ஆளே ஒரு ஏக்கரில் விதைத்துவிட முடியும். சிறுவர், பெண்கள், முதியோர் என அனைவரும் இதை சுலபமாக இயக்க முடியும். இதன் மூலம், ஆள்செலவு, பணச்செலவு மிச்சமாகிறது. 25% வரை மகசூலும் அதிகரிக்கும்.

நீங்கள் கேட்டவை

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் பகுதியில் 100% நேரடி நெல் விதைப்பு செய்யும் கிராமங்கள் உள்ளன. இக்கருவியின் விலை, 4 ஆயிரத்து 800 ரூபாய். காட்டுப்பாக்கம், வேளாண் அறிவியல் நிலையத்தில் விற்பனை செய்கிறார்கள். இதற்கு மானியமும் உண்டு.''

தொடர்புக்கு: இணைப்பேராசிரியர் மற்றும் தலைவர், வேளாண் அறிவியல் மையம், காட்டுப்பாக்கம், (எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் அருகில்), காஞ்சிபுரம்-603203.

தொலைபேசி: 044-27452371.

''பசுவில் இருந்து கிடைக்கும் பொருட்களைப் பயன்படுத்தி 'அர்க்’ தயாரிக்க எங்கு பயிற்சி கொடுக்கிறார்கள்?''

என். பரமகுரு, கொரத்தி.

''சேலம் அருகில் உள்ள, நாமமலை அடிவாரத்தில் சுரபி கோசாலை செயல்பட்டு வருகிறது. இங்கு, அர்க் உள்ளிட்ட பலவித மருந்துகள் தயாரிக்க பயிற்சிகள் கொடுக்கிறார்கள்.''

தொடர்புக்கு, சுவாமி ஆத்மானந்தா,
செல்போன்: 94432-29061.

படங்கள்: வி.செந்தில்குமார், தி.விஜய், பா. காளிமுத்து,
 ரா. ராம்குமார், ஜெ. வேங்கடராஜ்

நீங்கள் கேட்டவை