மரத்தடி மாநாடு
மறுபடியும் பொங்கும் பால்!
''என்ன வாத்தியாரய்யா... கழனியில இருப்பீங்கனு பார்த்தா, இங்க உக்கார்ந்திருக்கீங்க''-'காய்கறி' கண்ணம்மாவின் கணீர் குரல் கேட்டுத் திரும்பினார், திண்ணையில் செய்தித்தாள் வாசித்துக் கொண்டிருந்த 'வாத்தியார்’ வெள்ளைச்சாமி.
''நம்மாளு... ஆட்டுக்குத் தடுப்பூசி போட போயிருக்கார். வந்த பிறகு, புறப்படலாம்னு இங்கனயே உக்காந்துருக்கேன்’' என்று சொன்ன வாத்தியார், காய்கறியிடம் குசலம் விசாரித்துக் கொண்டிருக்கும்போது ஆட்டைப் பிடித்தபடியே வந்து சேர்ந்தார் 'ஏரோட்டி’ ஏகாம்பரம். ஆட்டோடு பொடிநடையாக மூவரும் வயலை நோக்கிப் புறப்பட... கலகலவென ஆரம்பமானது அன்றைய மாநாடு.
''திண்டிவனம், விழுப்புரம் பக்கமெல்லாம் தர்பூசணிப் பழத்தை அறுவடை பண்ண ஆரம்பிச்சுட்டாங்க. அப்படியே பக்கத்து ஊர்கள்ல விற்பனையும் ஆரம்பிச்சுடுச்சாம். திருச்சி வரைக்கும் இப்போ விற்பனைக்கு வந்துடுச்சு. வரத்து குறைவா இருக்கறதால நல்ல விலை கிடைக்குதாம். கிலோ இருபது ரூபாய்க்கு வித்துக்கிட்டிருக்கு. ஆனா, விவசாயிககிட்ட வழக்கம் போல கிலோ பத்து ரூபாய்க்குள்ளதான் கொள்முதல் பண்றாங்களாம். இதுல, சீசன் ஆரம்பிச்சுடுச்சுனா... இன்னும் விலை குறைஞ்சுடுமாம்'' என்றார் கவலையுடன் வாத்தியார்.

##~## |
''அது தெரிஞ்ச விஷயம்தானே... சந்தையில எவ்வளவு தேவை இருக்குங்கறத கணக்குப் போட்டா விலையைக் குறைக்கறாங்க. அதிகமா விளைஞ்சுருக்குனு தெரிஞ்சாலே வியாபாரிகளா சேர்ந்துகிட்டு விலையை இறக்கி விட்டுடுவாங்களே'' என்று அலுத்துக் கொண்ட ஏரோட்டி,
''நாக்பூர் ஆரஞ்சுப் பழம் தமிழ்நாட்டுக்கு வர ஆரம்பிச்சுடுச்சு தெரியுமா?'’ என்று இருவரையும் பார்த்து கேட்டார்.
''ம். தெரியாமலா...! கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வந்துருக்கறதைத்தானே சொல்றே?'’ என்ற வாத்தியார்,
''நாக்பூர் பகுதியில வழக்கமா ரெண்டு பருவத்துல ஆரஞ்சுப் பழம் விளையும். அக்டோபர் மாசத்துல இருந்து டிசம்பர் வரைக்கும் ஒண்ணு, பிப்ரவரி மாசத்துல இருந்து ஏப்ரல் வரைக்கும் இன்ணொண்ணு. வழக்கமா பிப்ரவரி மாச மையத்துலதான் சீசன் ஆரம்பிக்கும். இந்த வருஷம் மாசம் பொறந்ததுமே ஆரம்பிச்சுடுச்சு. குறிப்பா, கோயம்பேடு மார்க்கெட்டுக்கு அதிகளவுல பழங்கள் வந்துக்கிட்டிருக்கு. இங்க இருக்குற வியாபாரிகள் நாக்பூர் பக்கம் இருக்குற தோட்டங்களுக்குப் போய், விவசாயிககிட்ட ஒப்பந்தம் போட ஆரம்பிச்சாட்டங்களாம். ஒரு நாளைக்கு 70 டன் வரைக்கும் பழங்கள் வந்துக்கிட்டிருக்காம். கிலோ முப்பது ரூபா வரைக்கும் விற்பனையாகிட்டிருக்காம்'’ என்று சொல்லி முடிப்பதற்குள் மூவரும் வயலுக்கு வந்து சேர்ந்திருந்தனர். களைப்பு தீர வரப்பிலேயே அனைவரும் அமர, ஆட்டைத் தடவிக் கொடுத்துக் கொண்டே ஒரு செய்தியை ஆரம்பித்தார் ஏரோட்டி.
'நடப்புப் பருவத்துல, தமிழ்நாட்டுல 16 லட்சம் டன் நெல் கொள்முதல் பண்ணணும்னு அரசாங்கம் இலக்கு நிர்ணயிச்சுருக்கு. அதனால மாநிலம் முழுக்க நேரடி கொள்முதல் நிலையங்களை ஆரம்பிச்சுருக்காங்க. டெல்டா மாவட்டங்கள்ல மட்டும் 1,300 மையங்களை ஆரம்பிச்சுருக்காங்க. மத்த மாவட்டங்கள்ல
106 மையங்கள் செயல்பட ஆரம்பிச்சுருக்கு. முன்ன 17% ஈரப்பதம் இருந்தாதான் கொள்முதல் பண்ணுவாங்க. இப்போ 20% இருந்தாகூட எடுத்துக்குறாங்க. இதுவரைக்கும் நாலரை லட்சம் டன் நெல் கொள்முதல் பண்ணிட்டாங்களாம்’' என்று புள்ளிவிவரப் புலியாக தகவல் தந்தார் ஏரோட்டி!
''என்ன ஆரம்பிச்சு... என்ன பண்ண? எப்படியும் இந்த மையங்கள்ல இருக்கற அதிகாரிகள்ல கொள்ளை பேரு, போன வருஷம் செஞ்சது மாதிரி கொள்ளை அடிக்கத்தான் போறாய்ங்க... அவனுங்கள்லாம் கொள்ளையிலதான் போய்ச் சேருவானுங்க'’ என்றபடியே கோபம் பொங்க கைகளில் நெட்டி முறித்தார் காய்கறி.
''இந்த வருஷம் அப்படி எதுவும் ஊழல் நடந்துடக்கூடாதுனுதானே கண்காணிப்புக் குழுவையெல்லாம் அமைச்சுருக்காங்க. தேர்தல் வேற நெருங்கிக்கிட்டிருக்கறதால, மேலதிகாரிகளும் கொஞ்சம் அக்கறையோடதான் இருப்பாங்க. அதேசமயம், குழுவுல இருக்கற சம்சாரிங்களும் விழிப்பா இருந்து, தப்பு செய்றவங்கள தட்டிக் கேக்கணும். அப்போதானே அந்த ஜென்மங்க திருந்தும்'’ என்ற வாத்தியார், அடுத்தச் செய்திக்குத் தாவினார்.
''மழை வெள்ளத்தால பாதிக்கப்பட்ட விவசாயிகளெல்லாம் கடனைத் தள்ளுபடி பண்ணு... வட்டியைத் தள்ளுபடி பண்ணுனு கோரிக்கை வெச்சுக்கிட்டிருக்காங்க. ஆனா, திருவாரூர் மாவட்டம், செம்மங்குடி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுச் சங்கத்துல பயிர்க்கடன் வாங்கியிருந்த 417 பேர்ல 217 பேர் மொத்தக் கடனையும் தவணை தப்பாம சரியா திரும்பக் கட்டிட்டாங்களாம். அதனால அவங்களுக்கு மொத்தமா ஒரு லட்சத்து அறுபத்தாறாயிரம் ரூபாய் வட்டியை தள்ளுபடி பண்ணியிருக்காங்களாம்’' என்று சொன்னார்.
''சரி... சரி... அது இருக்கட்டும்'' என்று சொன்ன ஏரோட்டி,
''தமிழ்நாடு முழுக்க பால் கொள்முதல் விலையை உயர்த்திக் கொடுக்கச் சொல்லி பிப்ரவரி 7-ம் தேதியில இருந்து, உற்பத்தி நிறுத்தப் போராட்டம் நடக்குது. அதனால, ஆவின் ஒன்றியங்களுக்கு 60 சதவிகிதம் பால் வரத்து வெகுவாகக் குறைஞ்சு போயிடுச்சாம். பேச்சுவார்த்தை நடத்த அரசாங்கத்துகிட்ட இருந்து இன்னும் அழைப்பு வரலையாம். பால் விலையை உயர்த்திக் கொடுக்கும் வரை போராட்டம் தொடரும்ன்னு பால் உற்பத்தியாளர் சங்கம் அறிவிச்சிருக்கு. லிட்டர் கணக்கான பாலை என்ன செய்யறதுன்னு தெரியாம சில விவசாயிங்க முழுச்சிகிட்டு இருக்காங்க.
தயிரு, மோரு, பால்கோவா... போல மதிப்புக்கூட்டியும் வித்துக்கிட்டு இருக்காங்க. ஆனா போராட்டம் தொடர்ந்து நடந்தால் விவசாயிகளுக்கும் பாதிப்பு, பொதுமக்களும் போதுமான பால் கிடைக்காம தவிச்சிப் போயிடுவாங்க. அரசாங்கம் என்ன செய்ய போகுதோன்னு'' பொருமித் தள்ளிய ஏரோட்டி, துண்டை உதறிக் கொண்டே கிளம்ப... மாநாடு முடிவுக்கு வந்தது.
வாத்தியார் சொன்ன கொசுறு: ''தோட்டக்கலைத்துறை மற்றும் மலைப் பயிர்கள் துறை அதிகாரிகள் தென்னை விவசாயிகளை, தமிழ்நாடு தென்னை நல வாரியத்துல உறுப்பினரா சேர்த்துக்கிட்டிருக்காங்க. குறைஞ்சது எழுபது தென்னை மரம் வெச்சுருந்தா... உறுப்பினரா சேர முடியும். இதுக்கான விண்ணப்பம் உதவி தோட்டக்கலை அலுவலர்கள்கிட்ட கிடைக்கும். உறுப்பினராகறதுக்கு 70 மரத்துல இருந்து 500 மரம் வரை வெச்சுருக்கவங்க 100 ரூபாய் கட்டணம் செலுத்தினா போதும். 501 மரத்துல இருந்து 1,000 மரங்கள் வரைக்கும் 200 ரூபாயும், அதுக்கு மேல இருந்தா 500 ரூபாயும் கட்டணமா செலுத்தணும். விண்ணப்பத்தைப் பூர்த்தி செஞ்சு அதோட 2 பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, சிட்டா அடங்கல், ரேஷன் கார்டு நகல் எல்லாத்தையும் சேர்த்துக் கொடுக்கணுமாம்." கால்நடைகளுக்கான பாரம்பர்ய மருத்துவ பயிற்சி முகாம்!
|

கால்நடைகளுக்காக பாரம்பர்ய மருத்துவர்கள் கையாளும் சிகிச்சை முறை... செலவே இல்லாத, பின்விளைவுகளற்ற அற்புதமான முறை. கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக பட்டித்தொட்டிகளில் அலைந்து, திரிந்து பாரம்பரிய கால்நடை மூலிகை மருத்துவத்தைத் தொகுத்து வைத்திருக்கும் மதுரை, சேவா நிறுவனம், அவற்றை நேரடி செயல்விளக்கம் மூலம் உங்களுக்குக் கற்றுத் தரப்போகிறது! குடற்புழு நீக்கம், கால்காணை, வாய்காணை... என கால்நடைகளைத் தாக்கும் பல்வேறு நோய்களுக்குமான சிகிச்சை முறைகள்; மூலிகைச் செடிகள் அடையாளம் காணுதல் உள்ளிட்டவை கற்றுத் தரப்படும். நாட்கள்: பிப்ரவரி 26-27 (சனி மற்றும் ஞாயிறு). கட்டணம்: ரூ.250 (உணவு மற்றும் தங்குமிட வசதிக்காக) மணியாடர் மூலம் அனுப்ப வேண்டும். இடம்: பிச்சாண்டி குளம் மூலிகைப் பண்ணை, நடுக்குப்பம், திண்டிவனம் தாலூகா, விழுப்புரம் மாவட்டம். அலைபேசி (செல்போன்): 94437-97573, 99947-02433. |

(திண்டிவனம் - பாண்டிச்சேரி செல்லும் பஸ் மூலம் மரக்காணத்தில் இறங்க வேண்டும். அங்கிருந்து மினி பஸ், ஷேர் ஆட்டோவில் வரலாம். பஸ் நிறுத்தம் : நடுக்குப்பம் உயர்நிலைப்பள்ளி.) முன்பதிவு மற்றும் மணியாடர் அனுப்ப: |