மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மரத்தடி மாநாடு

கொப்பரை விலை... கொஞ்சம் கொஞ்சமா ஏறுது !

##~##

தோட்டத்தில் பழுத்துத் தொங்கிக் கொண்டிருந்த தக்காளிகளைப் பறித்துக் கொண்டிருந்தார், 'காய்கறி’ கண்ணம்மா. வரப்பில் நின்றபடி காய்கறியிடம் கதைத்துக் கொண்டிருந்தார், 'ஏரோட்டி’ ஏகாம்பரம். சற்று நேரத்தில் 'வாத்தியார்’ வெள்ளைச்சாமியும் வந்து சேர்ந்துவிட... ''என்னங்கய்யா... காலையிலயே ரொம்ப வேலையாகிப் போச்சுதோ. இவ்வளவு நேரம் கழிச்சு வர்றீங்க?'' என்று நக்கலாகக் கேட்டுக் கொண்டே வரப்பு ஏறி வந்தார், காய்கறி. மூவரும் வரப்பிலேயே அமர, ஆரம்பித்தது அன்றைய மாநாடு.

''தென்னந்தோப்புல மரம் கழிக்க வேண்டியிருந்துச்சு. ஆளுங்களுக்குச் சொல்லி வெச்சுருந்தேன். நாலஞ்சு நாளா மழை இருந்ததால... யாரும் வரல. இன்னிக்கு காலையிலேயே வந்துட்டாங்க. அதான்...'' என்று விளக்கம் கொடுத்தார், வாத்தியார்.

''ம்... வேலையில இருந்தப்ப, ஸ்கூல்ல எத்தனை பேரை, 'ஏண்டா லேட்டு?'னு பெஞ்சு மேல நிக்க வெச்சு மிரட்டியிருப்பார் வாத்தியார். அவரை... இப்ப நீ அதட்டுற அளவுக்குக் காலம் மாறிப்போச்சு'' என்று கலாய்த்தார் ஏரோட்டி!

''யோவ்... அதெல்லாம் ஒரு காலம். இப்பல்லாம், பசங்கள மிரட்டினாலோ, கைநீட்டினாலோ... மூணு வருஷம் வரைக்கும்கூட வாத்தியார புடிச்சு உள்ள போடறதுக்கு சட்டம் வரப்போகுதாம்! அப்பல்லாம் மிரட்டினதுலயும் ஒரு அர்த்தம் இருந்துச்சு... பசங்க பயப்பட்டதுலயும் ஒரு பயன் இருந்துச்சு. இப்பல்லாம் காலம் மலையேறிப்போய்க் கிடக்கு. வாத்தியார் வர்க்கத்துலயும் பலர், அர்ப்பணிப்போட இல்ல... அதேபோல பசங்க, பெற்றோர் மத்தியிலயும் ஒரு பணிவு இல்ல. எல்லாம் காலத்தோட கோலம்... யாரைச் சொல்லி என்ன ஆகப்போகுது!'' என்று ரொம்பவே நொந்துகொண்ட வாத்தியார்,

''சரி, சரி அது கிடக்கட்டும் விட்டுத்தள்ளு... கொப்பரைக்கு விலை கிடைக்கலைனு விக்காம வெச்சுருந்தில்லப்பா... இப்போ விலை ஏறிக்கிட்டு இருக்கு. கொண்டு போய் விக்கிறதுக்கான வழியை முதல்ல பாரு. பொள்ளாச்சி பக்கமிருக்கற 'நெகமம்’ ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்துல வாரா வாரம் கொப்பரை ஏலம் நடக்கும். பருவமழை ஆரம்பிச்சிட்டதால கொப்பரை வரத்து குறைஞ்சுருக்குதாம். அதனால, விலை ஏறிக்கிட்டிருக்குதாம். போன மாசத்துல கிலோ 36 ரூபாவா இருந்தது... இப்ப 40 ரூபாய் வரைக்கும் போகுதாம்.

தீபாவளி சமயங்கறதாலயும் கொப்பரைக்குத் தேவை கூடியிருக்குதாம். இன்னும் விலை ஏறும்னு எதிர்பாக்கறாங்க. கிருஷ்ணகிரி மாவட்டம், அரசம்பட்டி சந்தையிலயும் ஒரு கிலோவுக்கு 40 ரூபாய் வரை கொடுத்து வியாபாரிகள் கொள்முதல் செஞ்சுட்டுருக்காங்களாம்'' என்று ஏரோட்டியின் ஆவலைத் தூண்டிவிட்டார்.

''ம்ம்... முன்னயெல்லாம், 50 ரூபாய் வரைக்கும் வித்துக்கிட்டுருந்துச்சு. வியாபாரிகள்தான் சிண்டிகேட் போட்டு விலையை இறக்கி விட்டாங்க. இப்போ 40 ரூபாய்க்கு விக்கிறதையே பெருமையா நினைச்சுக்க வேண்டியிருக்கு'' என்று கவலைப்பட்ட ஏரோட்டி, தொடர்ந்தார்.

''தேங்காயை நினைச்சா... அதைவிட வயித்தெரிச்சல். இருபது வருஷத்துக்கு முன்ன வித்த விலைக்குதான் இன்னிக்கும் வித்துக்கிட்டிருக்கு. ஒரு தேங்காய்க்கு நாலு ரூபாய்க்கு மேல கிடைக்கிறதில்லை. அதனாலதான், 'கொப்பரையை கொள்முதல் செய்ற மாதிரி, தேங்காயையும் அரசாங்கமே கொள்முதல் செய்யணும்'னு விவசாயிகள் ரொம்ப நாளா கேட்டுக்கிட்டுஇருக்காங்க. இப்பகூட, பி.ஏ.பி. மற்றும் பாலாறு படுகைத் திட்டக்குழுத் தலைவர் பரமசிவம், 'ஒரு தேங்காய்க்கு,  பத்து ரூபாயாவது ஆதார விலைனு நிர்ணயம் செய்து, அரசாங்கமே கொள்முதல் செய்யணும். ஒரு கிலோ கொப்பரைக்கு 75 ரூபாய் கொடுக்கணும்’னு கேட்டு மத்திய வேளாண் துறை அமைச்சர் சரத் பவாருக்கு கோரிக்கை மனு அனுப்பியிருக்கார்'' என்றார்.

மரத்தடி மாநாடு

''ம்க்கும்... உடனே நடவடிக்கை எடுத்துட்டுதான் அவர் அடுத்த வேலையைப் பார்ப்பார். முதலமைச்சர் லெட்டர் அனுப்பினாலே கண்டுக்க மாட்டேங்குறாங்க. சம்சாரி அனுப்புன லெட்டருக்கெல்லாமா நடவடிக்கை எடுக்கப் போறாய்ங்க. மத்திய அமைச்சர்களுக்கெல்லாம், 'அடுத்த எலக்ஷன்ல நாம ஜெயிப்போமா... மந்திரி ஆவோமா’னு கவலை. நம்ம தமிழ்நாட்டு அமைச்சர்களுக்கெல்லாம், 'நாளைக்கு நாம அமைச்சரா இருப்போமா’னு பயம். இப்பக்கூட பாரு... புயல் பாதிப்பைப் பாக்கறதுக்காக வேலூர் மாவட்டத்துக்குப் போன வருவாய்த் துறை அமைச்சர் வெங்கடாச்சலம், வேலூர் கோட்டையில இருக்குற ஜலகண்டேஸ்வரர் கோவில் அணையா விளக்கைக் கும்பிட்டுக்கிட்டே 18 தடவை சுத்தியிருக்காராம். 'இப்படி விளக்கை சுத்தி வந்தா... அரசாங்கப் பதவி நிலைக்கும்’னு நம்பிக்கையாம்'' என்று சொல்லி புன்னகையை இழையோட விட்டார் வாத்தியார்.

'கபகப'வென சிரித்துத் தீர்த்த ஏரோட்டி... ''மேட்டூர் அணையில தண்ணி திறக்காததால... குறுவைப் பருவம் முடிஞ்சு, சம்பா சாகுபடிக்கு காத்திருந்த சமயத்துலதான், செப்டம்பர் 17-ம் தேதி அன்னிக்கு கொஞ்சமா தண்ணி திறந்தாங்க. அதனால, 'ஒரு போக சாகுபடியா சம்பாவுல நேரடி நெல் விதைப்பு செய்ங்க’னு விவசாய அதிகாரிகள் விவசாயிகளுக்கு ஆலோசனை சொல்லியிருந்தாங்க. பி.பி.டி., ஏ.டி.டி-38னு குறுகிய காலத்துல வர்ற ரகங்களையா நேரடி விதைப்பு மூலமா விவசாயிகளும் விதைச்சாங்க. சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பக்கமெல்லாம் கிட்டத்தட்ட 70 ஆயிரம் ஏக்கர்ல இந்தமாதிரி விதைச்சுருக்காங்களாம். தண்ணி பத்தாக்குறையால களை எடுத்து உரம் வெக்க முடியாம போயிடுச்சாம். இப்போ பருவ மழை ஆரம்பிச்சிருக்குற சமயத்துல களைகள்லாம் ரெண்டு அடி உயரத்துக்கு வளர்ந்து மண்டிக்கிடக்குதாம். களையெடுக்குறதுக்கு ஆளுங்களும் கிடைக்க மாட்டேங்குறாங்களாம். விவசாயிகளெல்லாம் ரொம்ப கவலையில இருக்கறாங்க. இவங்களுக்கு நேரடி நெல் விதைப்பு பத்தி சரியா பயிற்சி கொடுக்காததுதான் பிரச்னையாம். அதிகாரிங்களும் உரிய நேரத்துல வந்து பாத்துட்டு, ஆலோசனைகளைச் சொல்லியிருந்தா ஆரம்பத்துலயே சரி பண்ணியிருக்க முடியும்னு விவசாயிகள் புலம்புறாங்களாம்'' என்றார்.

''ஐயோ, பாவம், அதிகாரிங்க சொல்றதையெல்லாம் அப்படி அப்படியே கேட்டுட்டு களத்துல இறங்கறதவிட, அக்கம்பக்கம் அனுபவ விவசாயிங்க இருந்தா, அவங்ககிட்டயும் நாலு வார்த்தை கேட்டிருக்கலாம்ல... இந்தக் காலத்துல அனுபவசாலி சொல்றதையெல்லாம் யாரு கேக்கறா... கோட்-சூட் மாட்டிக்கிட்டு, 'இதுதான் என் ஆராய்ச்சி முடிவு'னு சொன்னா.. கேட்கறாங்க. புடலங்காயைக்கூட பாம்புனு அடிச்சு சொல்றதுக்குதான் ஊர்ல ஆளு நிறைய இருக்குது'' என்று காய்கறி சொல்ல...

''ம்... கண்ணம்மா, ரொம்பத்தான் தேறிட்டே. உதாரணத்தையெல்லாம் பொளந்துகட்டறியே'' என்று திருஷ்டி சுற்றிப்போடுவது போல பாவ்லா காட்ட... அநியாயத்துக்கு வெட்கப்பட்ட காய்கறி,

''அட, அத விட்டுத்தள்ளுய்யா... நம்ம முதலமைச்சர் அம்மா, இளநீர், பருத்தி, சீயக்காய் பத்தியெல்லாம் மக்களுக்கு எடுத்துச் சொல்றதுக்காக பத்து கோடி ரூபாய் ஒதுக்கியிருக்காங்களாமே... நல்ல விஷயம்தானே?'' என்று கேட்டார்!

''ஓ... அதுவா...'' என்று பதில் சொல்வதற்கு முன்வந்த வாத்தியார்,

''பாரம்பரியப் பொருட்களோட முக்கியத்துவம் பற்றி விழிப்பு உணர்வு ஏற்படுத்தத்தான் பணம் ஒதுக்கியிருக்காங்க. ஆனா, இவங்க ஒதுக்கியிருக்கறதே... பத்து கோடி ரூபாய்தான். அதிகாரிங்களும் அரசியல்வாதிகளும் பங்கு போட்டுக்கறதுக்கே இது காணாது. இதுல எங்க விழிப்பு உணர்வு ஊட்டுறது. மிஞ்சிப்போனா... இருக்கற 32 மாவட்டத்துலயும் நோட்டீஸ் அடிச்சு கொடுத்து, ஸ்கூல்ல படிக்கற பசங்களை வெச்சு ஊர்வலம் நடத்துவாங்க. ஆகக்கூடி, எங்க வீட்டுக்காரரும் கச்சேரிக்கு போனாருங்கற கதையா... விளம்பரப்படுத்திக்கத்தான் இது உதவும். பொதுமக்களுக்கோ விவசாயிகளுக்கோ உருப்படியான பிரயோஜனம் எதுவும் இருக்கப் போறதில்ல. இப்படித்தானே ஏகப்பட்ட திட்டங்கள பலனில்லாம போட்டு வெச்சுருக்காங்க'' என்று அலுத்துக் கொண்டார்.

''அப்படீனா... இதையெல்லாம் யாருதான் முதல்வரம்மாவுக்கு எடுத்துச் சொல்றது?'' என்று அக்கறையாகக் கேட்டார், காய்கறி.

''வேற யாரு.... நாம மூணு பேரும்தான்!'' என்று சொல்லி, குபீரென ஏரோட்டி சிரிக்க...

''சிரிக்காதய்யா... சிந்தி...'' என்று கடுகடுத்த வாத்தியார்,

''அதிகாரிகளுக்கெல்லாம் நல்ல எண்ணம் இருந்து, அவங்க எடுத்துச் சொன்னா நல்லது நடக்கும். ஆனா, அப்படிப்பட்டவங்களத்தான் தேட வேண்டியிருக்கே! அரசியல்வாதிங்களுக்கு ஜால்ரா அடிச்சுக்கிட்டு சொந்த ஊர்லயே வருஷக் கணக்கா வேலை பாக்கறவங்க; ஃபைனான்ஸ், பிசினஸ்னு ஆரம்பிச்சு செட்டில் ஆனவங்க; விவசாயிகளோட இருக்குற பழக்க வழக்கத்தைப் பயன்படுத்திக்கிட்டு விதைக்கடை, நர்சரினு பினாமி பேர்ல நடத்துற வேளாண்மை அதிகாரிங்க; மானியத் திட்டங்களையெல்லாம் சொந்தக்காரங்க, வேண்டியவங்களுக்கு மட்டும் ஒதுக்கிக் கொடுத்து, தானும் ஒதுக்கிக்கிற அதிகாரிங்கனு... 'ரொம்ப நல்லவனுங்க'தானே இப்ப அதிகமா இருக்காங்க. எல்லாத்துறைகள்லயும் இந்த மாதிரி பல விஷயங்கள் நடந்துக்கிட்டுதான் இருக்கு. இதையெல்லாம் அரசியல்வாதிங்க கண்டுக்கறதே இல்ல. அதனால, அப்பப்போ இப்படி உருப்படியில்லா திட்டங்களைப் போட்டு, சம்பாத்தியத்துக்கு வழி செஞ்சுக்கறாங்க. எங்க போய் முட்டிக்கறதுனுதான் தெரியல'' என்ற வாத்தியார்,

''சரி, நம்ம பொழப்ப பார்ப்போம். தென்னந்தோப்புல வேலை முடிஞ்சுருக்கும். கணக்கு பாத்து காசு கொடுக்கணும்'' என்றபடியே எழுந்துகொள்ள... மாநாடும் முடிவுக்கு வந்தது.