செம்மறி ஆடுகள் வளர்த்தால்...விற்பனை வாய்ப்பு எப்படி ?புறா பாண்டி, படங்கள்: ஏ. முத்துக்குமார்
##~## |
''பாரம்பரிய நெல் மற்றும் காய்கறி விதைகள் எங்கு கிடைக்கும்?''
ஆர். கணபதி, திருச்சி.
திருவாரூர் மாவட்டம், 'கிரியேட்’ அமைப்பைச் சேர்ந்த ஜெயராமன் பதில் சொல்கிறார்.
''ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நம் முன்னோர் சேகரித்து வைத்த சொத்துதான், பாரம்பரிய விதைகள். வெளிநாட்டுக்காரர்கள் ஆச்சர்யப்படும் அளவுக்கு நம்மிடம் விதம்விதமான விதைகள் உள்ளன. தமிழ்நாட்டில், சில முன்னோடி இயற்கை விவசாயிகள், தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் என சிலர் பாரம்பரிய விதைகளைப் பாதுகாப்பதற்காக, அர்ப்பணிப்போடு பணியாற்றி வருகிறார்கள்.
60 நாள் முதல் 180 நாள் வயது வரை கொண்ட பல நெல் ரகங்கள் எங்கள் கைவசம் உள்ளன. வறட்சியைத் தாங்கி வளரும் ரகம், உப்பு மண்ணில் விளையும் ரகம், தண்ணீர் தேங்கி நிற்கும் பகுதியில் வளர்பவை... என்று நெல்லில் சுமார் 63 பாரம்பரிய ரகங்கள் உள்ளன. பெரும்பாலும், பாரம்பரிய ரக விதைகளை விலைக்குக் கொடுப்பதில்லை. 'இரண்டு கிலோ விதைநெல் வாங்கினால், அடுத்த ஆண்டு நான்கு கிலோ விதைநெல் திருப்பிக் கொடுக்க வேண்டும்’ என்கிற ஒப்பந்த அடிப்படையில்தான் கொடுத்து வருகிறோம். இன்னும் சொல்லப்போனால், பாரம்பரிய

ரகங்களின் மகத்துவம் புரிந்து, அதை மக்களிடம் பரப்பும் நோக்கம் உடையவர்களுக்குத்தான் கொடுக்கிறோம்.
பாரம்பரிய காய்கறி விதைகளை, முசிறியில் உள்ள முன்னோடி இயற்கை விவசாயி யோகநாதன் சேகரித்து வைத்துள்ளார். பொதுவாக, நாம் பச்சை நிறத்தில்தான் வெண்டை பார்த்திருப்போம். நீல வண்ணத்தில் உள்ள வெண்டை ரகம் உள்ளது. கத்திரியில் மட்டும் 16 பாரம்பரிய ரகங்கள் உள்ளன.
பொன்னி கத்திரிக்காய், அதிக விளைச்சல் கொடுக்கக்கூடியது. அதேபோல அதிகளவில் காய்க்கும் குண்டு சுரைக்காய் ரகமும் உள்ளது. தவிர, பீர்க்கன், புடலை, அவரை.... என்று காய்கறிகளில் நல்ல காய்ப்புத் தன்மை கொண்ட ரகங்கள்; பல மாதங்கள் வரை மகசூல் கொடுக்கும் கீரை ரகங்கள்... என நிறைய பாரம்பரிய ரகங்கள் உள்ளன. இந்தக் காய்கறிகளை ஒரு முறை சாப்பிட்டால், மீண்டும் மீண்டும் சாப்பிடத் தூண்டும் அளவுக்கு சுவை கொண்டவை.
பாரம்பரிய ரகங்கள் ஒவ்வொன்றும், சிறிய அளவில் மட்டுமே பயிர் செய்யப்பட்டு வந்தன. இவற்றை முறையாக சேகரித்து விவசாயிகளுக்குக் கொடுக்க ஆரம்பித்த பிறகு, நிறைய விவசாயிகள் பயிர் செய்து வருகிறார்கள். இந்த ரகங்கள், 99% அளவுக்கு இயற்கை விவசாய முறையில்தான் சாகுபடி செய்யப்படுகின்றன. எனவே, இயற்கை விவசாயம் வளர வளர... பாரம்பரிய ரகங்களும் பெருகி வருகின்றன.''
தொடர்புக்கு, ஜெயராமன், செல்போன்: 94433-20954. யோகநாதன், செல்போன்: 94428-16863.
''கொத்தவரை விதைக்கு நல்ல விற்பனை வாய்ப்பு உள்ளது என்கிறார்கள். அது எதற்குப் பயன்படுகிறது? விதைக்கென்று தனி ரகம் உண்டா?
கே. வேல்முருகன், லிங்கநாயக்கனூர்.
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் செயல்பட்டு வரும், உள்நாட்டு மற்றும் ஏற்றுமதிச் சந்தைத் தகவல் மையத்தின் தேசிய ஆலோசகர் முனைவர். ரவீந்திரன் பதில் சொல்கிறார்.
''எண்ணெய் கிணறுகளைத் துளையிடும் துளைப்பான்களில் உராய்வைத் தடுக்கும் பொருளாக கொத்தவரை விதையிலிருந்து எடுக்கப்படும் எண்ணெயைப் பயன்படுத்துகிறார்கள். இதனால், வெளிநாடுகளில் கொத்தவரை விதைக்குத் தேவை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, வடமாநிலங்களில், விதைகள் அதிகம் உள்ள கொத்தவரை ரகத்தை, அதிக அளவில் சாகுபடி செய்கிறார்கள். தற்போது, கரூர் பகுதியில் இந்த ரகத்தை சாகுபடி செய்து வருகிறார்கள். வழக்கமாக நாம் காய்கறிக்குப் பயன்படுத்தும் ரகத்திலும் விதை இருக்கும் என்றாலும், இந்த ரகம் கூடுதல் விதைகளோடு, மகசூலும் கொடுக்கக்கூடியது. ஏக்கருக்கு 30 டன் வரை விளைச்சல் கிடைக்கும். நமது காய்கறி ரகத்தில் 15 டன் வரைதான் கிடைக்கும்.

தமிழ்நாட்டில் விருதுநகர் மாவட்டம், சாத்தூர் பகுதியில் உள்ள மண்டியில், கொத்தவரை விதைகளைக் கொள்முதல் செய்து, ராஜஸ்தான், ஹரியானா போன்ற மாநிலங்களுக்கு அனுப்புகிறார்கள். அந்த மாநிலங்களிலிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன. கடந்த ஆண்டை விட தற்போது சாகுபடிப் பரப்பு அதிகரித்து விட்டதால்... விலையும் இறங்கி விட்டது. கடந்த ஆண்டு, ஒரு குவிண்டால் 15 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்டது. தற்போது,
6 ஆயிரம் ரூபாய் அளவில்தான் விற்பனையாகிறது. இன்னும்கூட விலை இறங்க வாய்ப்புகள் உள்ளன. எனவே, எச்சரிக்கையுடன் பயிர் செய்யவும்.''
தொடர்புக்கு: உள்நாட்டு மற்றும் ஏற்றுமதிச் சந்தைத் தகவல் மையம், தொலைபேசி: 0422-2431405.
'செம்மறி ஆட்டுப்பண்ணை அமைக்க விரும்புகிறேன். அதற்கு விற்பனை வாய்ப்பு எப்படி உள்ளது?''
எஸ். சுந்தரம், நாமக்கல்.
அரக்கோணத்தைச் சேர்ந்த, முன்னாள் ராணுவ வீரரும், ஆடு வளர்ப்பில் அனுபவம் வாய்ந்தவருமான டி. ஜெகதீசன் பதில் சொல்கிறார்.
''பிரியாணி செய்ய செம்மறி ஆட்டு இறைச்சி ஏற்றதாக இருப்பதால், சென்னையில் அதிகளவு இந்த ஆடுகளுக்கு விற்பனை வாய்ப்பு உள்ளது. சேலம், ஈரோடு, கோயம்புத்தூர்... போன்ற மாவட்டங்களில்தான் வெள்ளாடு வளர்ப்பு அதிகம். வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர்... போன்ற மாவட்டங்களில் செம்மறி ஆடுகள்தான் விரும்பி வளர்க்கப்படுகின்றன. காரணம், ஒரு ஆளே 50 செம்மறி ஆடுகளை மேய்த்துவிட முடியும் என்பதுதான். ஆனால், வெள்ளாடுகளை அவ்வளவு எளிதாக மேய்த்துவிட முடியாது.
தவிர, ஒரு பண்ணையில் உள்ள அனைத்து செம்மறி ஆடுகளும் கிட்டத்தட்ட ஒரே சமயத்தில் பருவத்துக்கு வருவதால், ஒரே சமயத்தில் குட்டிகளும் கிடைக்கும். அதாவது, பருவ வயது வந்த ஐம்பது ஆடுகளுக்கு இரண்டு கிடாய் வீதம் இருந்தால்... அந்த பட்டியில் உள்ள, ஆடுகள் ஒரே சமயத்தில் சினைப்பருவத்துக்கு வந்து, பத்து நாட்கள் இடைவெளியில் குட்டி போடும்.

விரைவாக எடை வரும் செம்மறி ரகங்களும் உள்ளன. உதாரணமாக, ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த நெல்லூர் ரக செம்மறி ஆடுகள், ஐந்து மாதத்தில் 14 கிலோ அளவு எடைக்கு வந்துவிடும். வெள்ளாடுகளை கொட்டில் முறையில் வளர்ப்பது போல, இவற்றையும் வளர்க்கலாம். ஆனால், தமிழ்நாட்டில், மேய்ச்சல் முறையில் மட்டுமே செம்மறி ஆடுகள் வளர்க்கப்படுகின்றன. கர்நாடகா, ஆந்திரா... போன்ற மாநிலங்களில் நிறைய செம்மறி ஆட்டுப்பண்ணைகள் உள்ளன. ஒவ்வொரு பண்ணையிலும் கொட்டில் முறையில் 500 முதல் 1,000 வரை ஆடுகள் வளர்க்கப்படுகின்றன.
கொட்டில் முறையில் வளர்க்கும்போது, சரியான அளவில் தீவனங்களைக் கொடுக்க வேண்டும். ஆப்பிரிக்கன் நெட்டை, லொசீரின்... போன்ற தீவனப்பயிர்களை சாகுபடி செய்ய வேண்டும். இதில் லொசீரினை வட இந்திய விவசாயிகள்தான் அதிக அளவுக்குப் பயன்படுத்துகிறார்கள். இது, பனிகாலத்தில்தான் வேகமாக வளரும். இந்த விதை, வேளாண்மை அறிவியல் மையங்களில் கிடைக்கிறது. இதைச் சாப்பிடும் ஆடுகள் விரைவாக வளர்கின்றன. கறவை மாடுகளுக்கும் கொடுக்கலாம். இதனால், அந்த மாடுகள் கூடுதலாக பால் கறக்கும்.
நெல்லூர், கூடூர் பகுதிகளில் கூடும் சந்தைகளில் கிடைக்கும் நாட்டு ரக செம்மறி ஆடுகள், வேகமாக வளர்ச்சி அடையக் கூடியவை. அவற்றுக்கு பெரிய அளவுக்கு நோய் தாக்குதலும் ஏற்படாது. எங்கள் பகுதியில் செம்மறி ஆடு வளர்த்தே லட்சாதிபதியான குடும்பங்கள் நிறைய உள்ளன.''
தொடர்புக்கு, செல்போன்: 90430-61897.
''நாட்டு ரக எலுமிச்சை, நல்ல மகசூல் தருமா?''
தே. யமுனா, காஞ்சிபுரம்.
வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னோடி எலுமிச்சை விவசாயி அங்கமுத்து பதில் சொல்கிறார்.
''என்னுடைய அனுபவத்தில், நாட்டு ரகம் மட்டுமே சாகுபடிக்கு ஏற்றதாக உள்ளது. நாட்டுரகப் பழத்தில் அதிகமாக சாறு இருக்கும். வீரிய ரகத்தில் தோல் பெரியதாக இருக்குமே தவிர, சாறு குறைவாகத்தான் கிடைக்கும். அதனால், வீரிய ரகத்தை ஊறுகாய் தயாரிக்க மட்டும்தான் வாங்குகிறார்கள். ஜூஸ் தயாரிக்க, ஊறுகாய் தயாரிக்க, சோப் தயாரிக்க... என பல உபயோகங்களுக்கு நாட்டு ரகத்தைத்தான் பயன்படுத்துகிறார்கள்.

நாட்டு ரகம், நடவு செய்த 3-ம் ஆண்டு முதல் விளைச்சல் கொடுக்கத் தொடங்கும். 10 ஆண்டுகள் வயது கொண்ட மரத்தில், சராசரியாக ஆயிரம் காய்கள் வரை காய்க்கும். 30 ஆண்டுகள் வரை காய்க்கக் கூடிய ரகங்கள்கூட உண்டு. ஆண்டு முழுவதும் மரத்தில் காய்ப்பு இருந்தாலும், ஆடிப் பட்டம் மற்றும் தைப் பட்டத்தில்தான் உச்சக்கட்ட விளைச்சல் இருக்கும்.
எலுமிச்சை மரங்களுக்கு ரசாயனப் பூச்சிக்கொல்லி, உரம் போன்றவை தேவையேஇல்லை. ஆட்டு எரு, செம்மண் கலந்து வைத்தாலே போதுமானது. பெரிய அளவில் நோய்களும் தாக்காது. ஏதாவது நோய் வந்தாலும்... வேம்பு, புகையிலைக் கரைசல் தெளித்தாலே சரியாகிவிடும். ஒவ்வொரு விவசாயியும், நிலத்தில் 10 எலுமிச்சை மரங்களை வளர்த்தால்... கைச் செலவுக்கு வருமானம் கிடைத்து விடும்.''
தொடர்புக்கு: செல்போன்: 97515-89280.
