மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நீங்கள் கேட்டவை

வீட்டுத் தோட்டம் அமைக்க...வங்கிக் கடன் கிடைக்குமா ? !படங்கள்: வீ. ராஜேஷ், தி. விஜய்ஜே. வேங்கடராஜ்

 புறா பாண்டி

##~##

''எங்கள் வீட்டு மொட்டை மாடியில் உள்ள காலி இடத்தில் தோட்டம் அமைக்க விரும்புகிறேன்... ஆலோசனை தாருங்களேன்?''

ஆர். பிரபாகரன், கோயம்புத்தூர்.

கோயம்புத்தூர், வீட்டுத் தோட்ட ஆலோசகர் சித்ரா துரைராஜ் பதில் சொல்கிறார்.

''மாடியில் மட்டுமல்ல, வீட்டில் எந்தெந்தப் பகுதிகளில் சூரிய ஒளி கிடைக்கிறதோ... அங்கெல்லாம் காய்கறிச் செடிகளை வளர்க்க முடியும். வீட்டுத் தோட்டத்தை இரண்டு முறைகளில் அமைக்கலாம். நிழல் வலை (Shade Net) குடில் அமைத்து தோட்டம் போடுவது ஒரு முறை. வழக்கமான முறையில் திறந்த வெளியில் அமைப்பது மற்றொரு முறை. நிழல் வலைக்குள் செடிகளை வளர்க்கும்போது... தண்ணீர் எளிதில் ஆவியாவதில்லை. அதோடு, பூச்சிகளும் தாக்க முடியாது.

பொதுவாக, திறந்த வெளியில் வளர்ப்பதைத்தான் பலரும் விரும்புகிறார்கள். சாதாரண 'பாலிதீன்’ பைகளில் செடிகள் வளர்க்கும்போது நாளடைவில் அவை வெப்பத்தால் இளகி, வளைந்து நீர்க்கசிவை ஏற்படுத்தும். ஆனால், 'யூவி பாலிதீன்’ என்ற பிரத்யேக பைகள், மூன்றாண்டுகள் வரை தாக்குப் பிடிக்கக் கூடியவை என்பதால், அவற்றைப் பயன்படுத்தலாம். கோயம்புத்தூர், சேலம்... போன்ற பகுதிகளில் இந்தப் பைகள் கிடைக்கின்றன. நீல்கிரீஸ் சூப்பர் மார்க்கெட்களில் இந்தப் பைகளும் தேவையான விதைகளும் விற்கப்படுகின்றன.

நீங்கள் கேட்டவை

வெங்காயம், உருளைக்கிழங்கு ஆகியவற்றைத் தவிர, மற்ற அனைத்து காய்கறிகளையும் வீட்டுத் தோட்டத்திலேயே சாகுபடி செய்ய முடியும். இதற்கு அதிகளவில் இடமும் தேவையில்லை. 200 சதுரடி பரப்பளவுள்ள இடம் இருந்தாலே போதுமானது. வீட்டுத் தோட்டம் அமைக்க, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 50 ஆயிரம் ரூபாய் வரை கடனும் கிடைக்கிறது. சொந்தமாக வீடு மற்றும் அதையட்டிய இடம், மொட்டை மாடி இருக்கவேண்டும் என்பது, இதற்கு முக்கியமான விதிமுறையாகும்!

வீட்டுத் தோட்டத்தில், மறந்தும்கூட ரசாயன உரங்களையும், பூச்சிக்கொல்லிகளையும் பயன்படுத்தக் கூடாது. அப்படி பயன்படுத்தினால்... வீட்டுத் தோட்டம் என்பதன் அடிநாதமே அடிபட்டு போய்விடும். பூச்சிவிரட்டி, பயிர் வளர்ச்சி ஊக்கிகள் என்று அனைத்தையுமே இயற்கையான முறையில் நீங்களே தயாரிக்கலாம். அல்லது, தரமான கடைகளில் வாங்கியும் பயன்படுத்தலாம். சொட்டுநீர் அமைப்பதை விடுத்து, நாமே தினமும்

தண்ணீர் விடும்போது... நமக்கும் செடிகளுக்குமான உறவு பலப்படும். கூடவே மனதுக்கு உற்சாகம், நிம்மதி கிடைப்பதோடு உடற்பயிற்சியாகவும் அமைந்து உடலுக்கு வலு சேர்க்கும். இவையெல்லாம் ஆராய்ச்சிப்பூர்வமாக நிரூபணமான உண்மைகள். நீங்களும் முயற்சித்துப் பாருங்களேன்!''

தொடர்புக்கு, செல்போன்: 97897-74662.

''கறிவேப்பிலைப் பயிரில் இலைப் புள்ளித் தாக்குதலை எப்படி கட்டுப்படுத்துவது?''

பி.ஆர். ரங்கசாமி, தீராம்பாளையம்.

கோயம்புத்தூர் மாவட்ட முன்னோடி கறிவேப்பிலை விவசாயி, சுப்பையன் பதில் சொல்கிறார்.

''கறிவேப்பிலை செடியாக இருந்தாலும் சரி... வேறு எந்தச் செடியாக இருந்தாலும் சரி, அது எதிர்ப்பு சக்தியைக் கொண்டிருந்தால்தான் நோய்களும் பூச்சிகளும் தாக்காமல் இருக்கும். மாதம் ஒரு முறை... 300 மில்லி பஞ்சகவ்யாவுக்கு 10 லிட்டர் தண்ணீர் என்ற விகிதத்தில் கலந்து, கறிவேப்பிலைச் செடிகளின் மீது இலைவழித் தெளிப்பாகத் தெளித்து வந்தால், செடிகள் நல்ல ஊட்டத்தோடு செழித்து வளர்வதோடு, எதிர்ப்பு சக்தியும் பெருகும். நோய்கள், பூச்சிகள் தாக்காமல் இருக்கும்.

நீங்கள் கேட்டவை

இயற்கை முறையில் விளைவிக்கப்படும் கறிவேப்பிலைக்கு, கூடுதல் மணம் கிடைப்பதோடு அதிக நேரம் வாடாமல் இருக்கும் தன்மையும் இருக்கும். ரசாயன விவசாயத்தில்தான் கறிவேப்பிலையில் இலைப்புள்ளி நோய் அதிகமாகத் தாக்குகிறது. இதனால், விற்பனையும் பாதிக்கும். பத்து லிட்டர் தண்ணீரில் 100 மில்லி சூடோமோனஸ் கலந்து ஒரு வார இடைவெளியில் இரண்டு முறை தெளித்தால், இலைப்புள்ளி சரியாகி விடும்.''

தொடர்புக்கு, செல்போன்: 93632-28039.

''மனித சக்தி மூலம் இயங்கும் 'பால் கறவை இயந்திரம்’ எங்கு கிடைக்கும்?''

கிளமண்ட்ராஜ், தேனி.

நாமக்கல்லைச் சேர்ந்த பால் கறவை இயந்திர வடிவமைப்பாளர், முத்துசாமி பதில் சொல்கிறார்.

நீங்கள் கேட்டவை

''நான் லாரி டிரைவராக வேலை செய்தபோது, வடஇந்தியாவில் பல பகுதிகளுக்குச் சென்றிருக்கிறேன். அப்படி ஒரு முறை குஜராத் சென்றபோது, எளிய முறையில் பால் கறக்கும் இயந்திரத்தைப் பார்த்தேன். அதன் தொழில்நுட்பத்தைத் தெரிந்து கொண்டு, அதில் சில மாற்றங்களைச் செய்து... மனிதர்களே இயக்கும் வகையிலான இயந்திரங்களை நான் தயாரிக்க ஆரம்பித்தேன். நான்கு மாடுகள் கொண்ட சிறிய பண்ணைக்கு இந்த இயந்திரம் போதுமானது. இதன் விலை 5 ஆயிரத்து 500 ரூபாய். இதை வடிவமைத்ததற்காக, மத்திய அரசு எனக்கு விருது கொடுத்து கௌரவித்துள்ளது. இதுவரை சுமார், 200 இயந்திரங்களை விற்பனை செய்துள்ளேன். ஆனால், அந்த இயந்திரத்தில் சிலகுறைபாடுகள் இருந்ததால்... உற்பத்தி செய்வதை நிறுத்திவிட்டேன்.

மின்சாரம் மூலம் இயங்கும் பால் கறவை இயந்திரம் நல்ல பலன் தருவதாக இருந்தாலும், அதன் விலையும் அதிகம் என்பதோடு, தற்போதைய மின்பற்றாக்குறை சூழலில் அதை தொடர்ந்து பயன்படுத்த முடியாத நிலையே நிலவுகிறது. எனவே, மனித சக்தியால் இயங்கும் இயந்திரம்தான் பால் விவசாயிகளுக்குக் கைகொடுக்கும் வகையில் இருக்கும். அதனால், ஏற்கெனவே நான் தயாரித்த இயந்திரத்தில் உள்ள குறைபாடுகளை நீக்கி, முழுக்க மனித சக்தியால் இயங்கும் பால்கறவை இயந்திரத்தை உருவாக்கும் முயற்சியை மீண்டும் கையில் எடுத்துள்ளேன்.

இந்த ஆய்வுக்கு, இயந்திரத் தொழில்நுட்பம் தெரிந்தவர்களிடமிருந்து, தொழில்நுட்ப உதவியை எதிர்ப்பார்க்கிறேன். அது கிடைத்துவிட்டால், இயந்திர உற்பத்தியை தொடங்கி விடுவேன்.''

தொடர்புக்கு, செல்போன்: 90037-81177.

''விவசாய விளைபொருட்களை ஏற்றுமதி செய்வதற்கான வழிகாட்டுதல்கள் எங்கு கிடைக்கும்?''

எம். சங்கரநாராயணன், சென்னை.

இந்திய ஏற்றுமதி அமைப்புகள் சம்மேளனத்தின் தென்மண்டல இயக்குநர், உன்னிகிருஷ்ணன் பதில் சொல்கிறார்.

''ஏற்றுமதி செய்வதற்கு அடிப்படைத் தேவையான 'பான் நம்பர்’ என்று சொல்லப்படும் நிரந்த வருமான வரி கணக்கு எண் பெறுவது தொடங்கி, ஏற்றுமதி-இறக்குமதி குறியீட்டு எண் பெறும் முறைகள், எந்த நாட்டுக்கு எந்தப் பொருள் தேவை... என்பது உள்ளிட்ட அனைத்துத் தகவல்களையும் தந்து எங்கள் அமைப்பு வழிகாட்டி வருகிறது. விளைபொருட்கள் ஏற்றுமதி பற்றிய பயிலரங்கு, கருத்தரங்குகளையும் நடத்தி வருகிறோம். இந்த சேவை தேவைப்படுபவர்கள், எங்கள் அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம்.'’

நீங்கள் கேட்டவை

தொடர்புக்கு: இந்திய ஏற்றுமதி அமைப்புகளின் சம்மேளனம் (Fieo), எண்: 706, 7-வது மாடி, ஸ்பென்ஸர் பிளாசா, 769, அண்ணா சாலை, சென்னை-600002.

தொலைபேசி: 044-28497744/ 55/ 66.

''வாழை சாகுபடி செய்து வருகிறேன். சாகுபடி மற்றும் மதிப்புக் கூட்டும் தொழில்நுட்பங்கள் பற்றிய விவரங்கள் எங்கு கிடைக்கும்?''

கே. சின்னசாமி, திருவண்ணாமலை.

''தேசிய வாழை ஆராய்ச்சி நிலையம், திருச்சியில் செயல்பட்டு வருகிறது. இங்கு வாழை சாகுபடி மற்றும் மதிப்புக் கூட்டும் தொழில்நுட்பங்கள் பற்றிய தகவல்கள்  கிடைக்கும்.''

தொடர்புக்கு: தேசிய வாழை ஆராய்ச்சி நிலையம், தோகைமலை ரோடு, தாயனூர் அஞ்சல், திருச்சி- 620102.

தொலைபேசி: 0431-2618104, 2618106.

விவசாயம், கால்நடை, மீன்வளம் மற்றும் சுற்றுச்சூழல் என்று பல துறைகள் பற்றி வாசகர்களின் சந்தேகங்களுக்கான பதில்களை உரிய நிபுணர்களிடம் பெற்றுத் தருவதற்காகவே 'புறா பாண்டி' சும்மா 'பறபற'த்துக் கொண்டிருக்கிறார். உங்கள் கேள்விகளை

'நீங்கள் கேட்டவை', பசுமை விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-2.

என்ற முகவரிக்கு தபால் மூலமும்

pasumai@vikatan.com என்ற முகவரிக்கு இ-மெயில் மூலமும்  PVQA (space) - உங்கள் கேள்வி (space) உங்கள் பெயர் டைப் செய்து 562636 என்ற எண்ணுக்கு செல்போன் மூலமும் அனுப்பலாம்.