மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மரத்தடி மாநாடு

ஒப்பந்த முறை ஆடு வளர்ப்பு... உஷார்..!

##~##

காய்கறி’ கண்ணம்மாவும், 'வாத்தியார்’ வெள்ளைச்சாமியும் சாலையோரத்து மரத்தடியில் தயாராக நின்றிருக்க... 'ஏரோட்டி’ ஏகாம்பரம், வேகவேகமாக சைக்கிளை மிதித்தபடி வந்து இறங்கினார். அங்கேயே ஆரம்பமானது, அன்றைய மாநாடு.

''வருத்தமான விஷயம்'' என்று எடுத்ததுமே ஆரம்பித்த வாத்தியார்,

''இயற்கையை நேசிச்ச டாக்டர். தெய்வநாயகம் திடீர்னு இறந்துட்டார். ரொம்ப நல்ல மனுஷன். அணு உலை, மரபணு மாற்று கத்திரிக்காய்னு மக்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் தீமை தரக்கூடிய விஷயங்களை எதிர்த்து நிறையக் கூட்டங்கள் நடத்தியிருக்கார். இங்கிலீஷ் வைத்தியம் பார்க்கற டாக்டரா இருந்தாலும், நம்ம பாரம்பரியமான சித்த மருத்துவத்து மேல அவருக்கு அசைக்க முடியாத நம்பிக்கை. இதனாலயே சித்த மருத்துவக் கூட்டமைப்பு ஆராய்ச்சிக் கழகத்துலயும் தலைவரா இருந்தார். ஆரம்பக் காலத்துல எய்ட்ஸ் நோயால இறந்தவங்கள பிரேத பரிசோதனை பண்றதுக்கு டாக்டர்கள் பலரும் தயங்கின சமயத்துல, வலியப்போய் பிரேத பரிசோதனை பண்ணி, பலருக்கும் முன்னுதாரணமா இருந்தவர். 'எய்ட்ஸ் நோயையும் சித்த மருத்துவத்துல குணப்படுத்த முடியும்’னு உலக அளவுல பிரகடனம் செஞ்சவர். எப்பவும், வேட்டிதான் கட்டியிருப்பார். 'தமிழ் எனது அடையாளம்’ங்கிற புத்தகத்தையும் எழுதியிருக்கார்'' என்று சொல்லச் சொல்ல...

மரத்தடி மாநாடு

உன்னிப்பாகக் கேட்டுக் கொண்டிருந்த... காய்கறியும், ஏரோட்டியும், ''இப்படி நல்ல மனுஷங்களோட எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைஞ்சுட்டே வர்றதாலதான், மழையும் குறைஞ்சுட்டே இருக்கு போல...'' என்று ஒரே குரலில் தங்களின் அஞ்சலியை செலுத்தினார்கள்.

பிறகு, ''இந்தாங்கய்யா, ஒரு டம்ளர் கேப்பைக்கூழ் குடிங்க. 'ஜில்’லுனு இருக்கும்...'' என்று சொல்லி அந்த இடத்தில் நிலவிய இறுக்கத்தைக் கலைத்தார், காய்கறி.

அதைக் குடித்துக் கொண்டே,

''ராத்திரியெல்லாம் தூக்கமே போயிடுது.கொசுத் தொல்லை அதிகமாயிட்டே இருக்கே'' என்று ஏரோட்டி புலம்ப...

''யோவ்... பாத்து சூதானமா இருய்யா... டெங்கு காய்ச்சல் வந்துடப் போகுது. ஒரு அமைச்சருக்குகூட டெங்கு வந்துருச்சாம்'' என்று காய்கறி எச்சரிக்க, அதைக் கேட்டு விழுந்து விழுந்து சிரித்தார் வாத்தியார்!

''உனக்கென்னய்யா... இன்வெர்ட்டர் போட்டு வெச்சுருக்கிறே. 24 மணி நேரமும் காத்தாடி சுத்தும். அதுதான் தெனாவெட்டா சிரிக்கறே'' என்று கடுப்பானார், ஏரோட்டி.

''நீ வேற... இன்வெர்ட்டர் போட்டா மட்டும் போதுமாய்யா. அதுல சார்ஜ் ஏறுறதுக்கு கரன்ட் வேணாமா? எனக்கும் அதே கதைதான். ராத்திரியெல்லாம் ஒரு மணி நேரத்துக்கு ஒரு தடவை கரன்ட் போயிடுது. உன் வீட்டை விட கொஞ்ச நேரம் கூடுதலா எனக்கு கரன்ட் கிடைக்கும். அவ்வளவுதான். ரொம்ப ஆத்திரப்பட்டுக்காதே'' என்று தானும் சோக கீதம் பாடினார் வாத்தியார்.

உடனே, ''சூரிய ஒளியில இருந்து கரன்ட் எடுக்குறாங்கள்ல... அதைப் போட்டுட வேண்டியதுதானே?'' என்று கேட்டார், ஏரோட்டி.

மரத்தடி மாநாடு

''அதெல்லாம் நமக்கு கட்டுபடியாகாதுய்யா... விலை ரொம்ப அதிகம். அதுக்கான சாமான்களை பெரும்பாலும் இறக்குமதிதான் செய்ய வேண்டியிருக்காம். அதனால அந்த வரி, இந்த வரினு போட்டு, பத்து ரூபாய்க்கு விக்க வேண்டியதை நூறு ரூபாய்க்கு விக்கிறாங்க. இதுலயும் நிறைய டுபாக்கூர் கம்பெனிகள் வேற இருக்குதாம். எவ்வளவோ செய்ற அரசாங்கம்... இதை எளிய விலையில எல்லாருக்கும் கிடைக்கறதுக்கு ஒரு வழி செய்ய மாட்டேங்குது'' என்றார், வாத்தியார்.

''அதையெல்லாம் இங்கயே உற்பத்தி செய்ய முடியாதா?'' என்று கேட்டார், காய்கறி.

''அரசாங்கம் மனசு வெக்கணுமே. சோலார் பேனல்ல முக்கியமான மூலப்பொருள் சிலிக்கான். ஆத்து மண்ணுல இருந்துதான் இதைப் பிரிச்சு எடுக்கறாங்க. குறிப்பா, எல்லா அணைக்கட்டுகள்லயும் தேங்கிக்கிடக்கற மண்ணுல சிலிக்கான் அதிகளவுல இருக்குதாம். நம்ம வைகை டேம்ல கூட அதிகளவுல இருக்குதாம். அதையெல்லாம் சுரண்டிக்கிட்டுப் போகத்தான்... ஜப்பான் அரசாங்கம் 'வைகை டேமை சுத்தப்படுத்த பணம் தர்றோம்’ங்கற பேருல நூலு விட்டுருக்குனு சொல்றாங்க. ஆனா, நம்பாளுங்களுக்கு இந்த விஷயத்துலஎல்லாம் கவனம் செலுத்த ஏது நேரம்?'' என்றார், வாத்தியார் ஆதங்கத்துடன்.

''ஈமு வளர்க்கிறோம், நாட்டுக் கோழி வளர்க்குறோம்னு கோடியா கோடியா சிலர் சுருட்டின ஈரம் இன்னும் காயல... அதுக்குள்ள 'பட்டி போட்டு ஆடு வளக்கப் போறோம்... உங்க பணம் குட்டிபோட்டு வளரும்’னு சொல்லிக்கிட்டு ஒரு கும்பல் பணத்தை அள்ளுறதுக்கு கிளம்பியிருக்காம். குறிப்பா, தர்மபுரி மாவட்டத்துல இது சூடு பறக்குதாம்.

அந்த மாவட்ட கால்நடைத்துறை அதிகாரிகள், 'ஆடு வளர்த்து சம்பாதிக்க நினைக்கிறவங்க, குறைஞ்ச அளவுல வளத்தாலும்... சொந்தமா பட்டி போட்டு வளர்க்கணும். நாட்டு ஆடுகளை வளத்தாலே நல்லா சம்பாதிக்க முடியும். கொள்ளைக் கும்பலை நம்பி ஏமாற வேணாம்’னு எச்சரிச்சுருக்காங்க'' என்று ஏரோட்டி சொல்ல...

''ஈமு கோழி பத்தி கூட ஆரம்பத்துல இருந்தே நிறைய பேர் எச்சரிக்கை விடுக்கத்தான் செய்தாங்க. யாரு கேட்டா?... சொந்தக் காசுல சூன்யம் வெச்சுக்கணும்னு அலையறவங்கள யாராலயும் தடுக்க முடியாது'' என்று கோபமாகச் சொன்ன காய்கறி,

''சரி, நேரமாகுது... இன்னும் நாலு வீட்டுக்கு காய் கொடுக்கணும், கிளம்பறேன்'' என்று கூடையைத் தூக்க, முடிவுக்கு வந்தது, மாநாடு.

அலங்கார மீன் வளர்ப்பு!

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் இருக்கும், மீன் வளத் தொழில்நுட்பம் மையம், அலங்கார மீன் வளர்ப்புத் தொழில்நுட்பம் பற்றிய மூன்று மாத சான்றிதழ் பயிற்சிகளை வழங்கி வருகிறது. டிசம்பர் முதல் வாரத்தில், தொடங்க இருக்கும் இப்பயிற்சியில் தமிழ் எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் பங்கேற்கலாம். மேலதிக விவரங்களுக்கு... 044-27991566 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளவும்!