மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நீங்கள் கேட்டவை

நீங்கள் கேட்டவை

 புறா பாண்டி

##~##

''மூங்கில் தோட்டத்துக்குள் காளான் வளர்க்க முடியுமா?''

ராஜகுணசேகர், ஆண்டிப்பட்டி.

தஞ்சாவூர் மாவட்ட முன்னோடி விவசாயி 'மூங்கில்’ பாலசுப்பிரமணியம், பதில் சொல்கிறார்.

''இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், பரிசோதனை முயற்சியாக மூங்கில் தோட்டத்தில் காளான் வளர்த்து,

நீங்கள் கேட்டவை

பார்த்தபோது, எதிர்பார்த்ததைவிட சிறப்பாக வளர்ந்தது. அதில், சில நுட்பங்களையும் தெரிந்து கொண்டேன். வழக்கமாக, காளான் வளர்க்க கொட்டகை அமைப்போம். ஆனால், மூங்கில் தோட்டத்தினுள் இயற்கையாகவே குறைவான வெப்பநிலை இருப்பதால், கொட்டகைச் செலவு மிச்சம். காளான் பைகளில் உள்ள சோளத்தை அணில் போன்ற விலங்குகளிடம் காப்பாற்ற... கம்பிவலை மட்டும் அமைத்தால், போதுமானது. ஒருவேளை, மூங்கில் மரங்களின் அடர்த்திக் குறைவாக இருந்து, வெப்ப நிலை அதிகமாக இருந்தால்... இந்த வலைகளில் கோணிப் பைகளைக் கட்டித் தொங்கவிட்டு, தண்ணீர் தெளித்து வந்தால்... வெப்பம் தணிந்துவிடும். தரையில் ஆற்று மணலைக் கொட்டி வைத்தால், எவ்வளவு மழை பெய்தாலும், தண்ணீர் தேங்காது. இதனால், பூஞ்சணத் தாக்குதலைத் தவிர்க்கலாம்.

கோடைக் காலத்தில், மூங்கில் தோட்டத்தினுள் அதிக வெப்பம் இருப்பதால், காளான் உற்பத்தி சற்று குறையும். மழைக் காலங்களில் காளான் பைகளில் தண்ணீர் பட்டால்... அதிகளவில் உற்பத்தி பாதிக்கும். அதனால், மழைக் காலங்களில் காளான் வளர்ப்பை நிறுத்தி வைக்க வேண்டும். மூங்கில் தோட்டத்தில் வளர்க்க, 'சிப்பிக் காளான்’ ரகம் ஏற்றது. ஆரம்பத்தில், ஒரு சென்ட் நிலத்தில் மட்டும் தொடங்கி, படிப்படியாக பரப்பை அதிகப்படுத்தலாம். ஒரு சென்ட் நிலத்திலேயே மாதம் 15 ஆயிரம் ரூபாய் வரை லாபம் கிடைக்கும்.''

தொடர்புக்கு, செல்போன்: 94864-08384.

''ஆந்திர மாநிலத்தில் இருந்து ஷப்பான் நாட்டுக்கு வேப்பிலை ஏற்றுமதி செய்யப்படுவதாகக் கேள்விப்பட்டேன். இது உண்மையா? உள்நாட்டில் வேப்பிலைக்கு விற்பனை வாய்ப்பு உள்ளதா?''

பெ. ராமநாதன், கோப்பநாயக்கன்பட்டி.

ஆந்திர மாநிலம், ஹைதராபாத் நகரைச் சேர்ந்த, 'பயோ-இந்தியா பயோலாஜிக்கல் கார்ப்பரேஷன்’ என்ற தனியார் நிறுவனத்தின் அதிகாரி ஸ்ரீராம், பதில் சொல்கிறார்.

''சில ஆண்டுகளுக்கு முன்பு ஜப்பான் நாட்டில் இருந்து, எங்கள் நிறுவனத்துக்கு டன் கணக்கில் வேப்பிலை கேட்டு, வியாபார வாய்ப்பு வந்தது. அதைப் பற்றி விசாரித்தபோது, சில தகவல்களைத் தெரிந்து கொண்டோம். ஜப்பானியர்கள், கேரள மக்களைப் போல மூலிகை கலந்த தண்ணீரை அருந்தும் பழக்கம் கொண்டவர்கள். அதனால், வேப்பிலையைப் பயன்படுத்தி மூலிகை குடிநீரை உற்பத்தி செய்யத் திட்டமிட்ட ஒரு நிறுவனம்தான் எங்களைத் தொடர்பு கொண்டது. ஒப்பந்த அடிப்படையில் இரண்டு கிராமங்களில் இருந்து கிலோ 100 ரூபாய் வரை விலை கொடுத்து வாங்கி, பதப்படுத்தி ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்து வந்தோம்.

நீங்கள் கேட்டவை

தற்சமயம், இது மாதிரியான பாரம்பரிய மூலிகைகளை ஏற்றுமதி செய்வதற்கு 'தேசிய பல்லுயிர்ப் பெருக்க ஆணையம்’ தடை விதித்திருப்பதால், ஏற்றுமதி செய்வதில்லை. தடை விலகிய பிறகு மீண்டும் தொடங்குவோம். இந்தியாவிலும் வேப்பிலைக்கு ஏராளமான விற்பனை வாய்ப்புகள் உள்ளன. சோப்பு, ஷாம்பு, மருந்துகள் போன்றவற்றை தயாரிக்கும் நிறுவனங்கள் வேப்பிலையை வாங்கி வருகின்றன. ஹிமலயா, டாபர்... போன்ற பல நிறுவனங்கள் வேப்பிலையை வாங்கிக் கொள்கின்றன. விலையானது, நிறுவனத்துக்கு நிறுவனம் மாறுபடும். அந்தந்த சந்தர்ப்பங்களில் சந்தை நிலவரத்தை தெரிந்து கொண்டு விற்பனையில் ஈடுபடலாம்.''

தொடர்புக்கு, செல்போன்: 093924-85187.

''மலைப்பகுதிகளில் மீன் வளர்க்க முடியுமா?''

ந. ரஞ்சித்குமார், பண்ணைக்காடு.

பொன்னேரி, மீன் வளத் தொழில்நுட்ப நிலையத்தின் விஞ்ஞானி, முனைவர். த. மணிகண்டவேலு பதில் சொல்கிறார்.

''அலங்கார மீன் மற்றும் உணவு மீன்களில், சில குறிப்பிட்ட ரகங்கள் மலைப்பகுதிகளில் நன்றாக வளரும் தன்மை கொண்டவை.

நீங்கள் கேட்டவை

குறிப்பாக, அலங்கார மீன் வகைகளில் 'கோல்டு பிஷ்’ ரகம் மலைப்பகுதியில்தான் கண்களைக் கவரும் நிறத்துடன் வளர்கிறது. உணவு மீன் வகைகளில், கட்லா, விரால், அயிரை, கெளுத்தி... போன்றவை மலைப்பகுதிகளுக்கு ஏற்றவை. சில இடங்களில் ஜிலோபியா கெண்டை கூட சிறப்பாக வளர்கிறது. மலைப்பகுதியில், குளுமை இருப்பதால், நோய்த் தொற்று எளிதில் ஏற்படும். எனவே, நீரை அடிக்கடி

நீங்கள் கேட்டவை

மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும். குளத்தில் சுண்ணாம்பு கலப்பதன் மூலம் நோய்த் தொற்றை ஓரளவு தவிர்க்க முடியும். சமவெளிப் பிரதேசங்களில் உள்ள குளங்களில் சூரிய ஒளி அதிகம் கிடைப்பதால், மீன்களின் உணவான பாசி இயற்கையாகவே அதிகளவில் உருவாகும். இந்த வாய்ப்பு மலைப்பகுதியில் குறைவு. அதனால், தீவனச் செலவு அதிகமாகும். என்றாலும், மலைப்பகுதிகளைப் பொறுத்தவரை, பெரும்பாலும் சமவெளிப் பகுதிகளில் இருந்து, கொண்டு வரப்படும் மீன்களே விற்கப்படுகின்றன. தூரத்தின் காரணமாக ஏற்படும் நேர விரயத்தால், இந்த மீன்கள் பழைய மீன்களாகிவிடுவதைத் தவிர்க்க முடியாது. அதனால், ருசி குறைவாகவே இருக்கும். இந்தச் சூழலில், மலையிலேயே உற்பத்தி செய்து, புதுப்புது மீன்களாக விற்பனை செய்தால், நிச்சயமாக நல்ல வரவேற்பு இருக்கும். அதிக விலைக்கு விற்று, கூடுதல் லாபம் பார்க்க முடியும். மீன் வளர்ப்பு பற்றிய தொழில்நுட்ப ஆலோசனை மற்றும் பயிற்சிக்கு எங்கள் மையத்தைத் தொடர்பு கொள்ளலாம்.''

தொடர்புக்கு, இயக்குநர், மீன்வளத் தொழில் நுட்ப நிலையம், எல்.என்.ஜி. கல்லூரி வளாகம், பொன்னேரி, திருவள்ளூர்-601 204.  தொலைபேசி: 044-27991566, செல்போன்: 94445-23962.

''சிறுதானியங்களில் அவல் தயாரிக்க முடியுமா? வரகு, சாமை... போன்ற தானியங்களில் தோல் பிரிக்கும் இயந்திரம் எங்கு கிடைக்கும்?''

கே. வெங்கடேசன், கிணத்துக்கடவு.

மதுரை மனையியல் கல்லூரியில் விரிவாக்கத் துறை பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர். பார்வதி பதில் சொல்கிறார்.

நீங்கள் கேட்டவை

''சோளத்தில் இருந்து, அவல் தயாரிக்கலாம். இதற்கென்று தனியாக அவல் தயாரிக்கும் இயந்திரம் கிடையாது. அரிசிக்குப் பயன்படுத்தும் இயந்திரத்தை சிறிது மாற்றி அமைத்துக் கொண்டால் போதும். சிறுதானியங்களில் இரண்டு வகைகள் உள்ளன. முதலாவது வகையில், கம்பு சோளம், கேழ்வரகு

நீங்கள் கேட்டவை

ஆகியவை அடங்கும். இதை ஆங்கிலத்தில் 'மேஜர் மில்லட்’ என்பார்கள். 'மைனர் மில்லட்’ என்று சொல்லப்படும் வரகு, சாமை, குதிரைவாலி... போன்றவை இரண்டாவது வகை. மேஜர் மில்லட்டில் உள்ள தானியங்களின் தோலை நீக்க இயந்திரம் தேவைப்படாது. ஆனால், மைனர் மில்லட் தானியங்களுக்கு இயந்திரம் தேவை. அந்தக் காலத்தில் கல் இயந்திரங்களைப் பயன்படுத்தினார்கள். இப்போது, சிறிய அளவில் இரும்பு இயந்திரங்கள் உள்ளன. தேவைப்படும் விவசாயிகள் எங்கள் துறையைத் தொடர்பு கொள்ளலாம்.''

தொடர்புக்கு, பேராசிரியர் மற்றும் தலைவர், விரிவாக்கத்துறை, மனையியல் கல்லூரி, மதுரை-625104. தொலைபேசி: 0452-2424922.

''பி.கே.எம்.1, பி.கே.எம்.2 ரக செடிமுருங்கை விதைகள் எங்கு கிடைக்கும்?''

ஆர். விஜய், கோயம்புத்தூர்.

பெரியகுளம், தோட்டக்கலைக் கல்லூரியில் இருந்து வெளியிடப்பட்டதால் 'பி.கே.எம்.’ என்ற அடைமொழியுடன் இந்த செடிமுருங்கை ரகங்கள் அழைக்கப்படுகின்றன. பி.கே.எம்.-1 என்ற ரகத்தை விட பி.கே.எம்.-2 நல்ல மகசூல் கொடுக்கும் திறன் கொண்டது. இதன் காய் நீளமும் குறைவு. இதனால், சந்தைக்கு எடுத்துச் செல்லும்போது சேதம் ஏற்படாது. செடிமுருங்கை விதை பெரியகுளம் தோட்டக்கலைக் கல்லூரியில் கிடைக்கும்.''

தொடர்புக்கு, தொலைபேசி: 04546 -234661, 231319.

நீங்கள் கேட்டவை