பயறு சாகுபடிக்கு ரூ.19 கோடி...
##~## |
மக்காச்சோள வயலில் களை எடுக்கும் பணி தீவிரமாக நடந்து கொண்டிருக்க... வரப்பில் நின்றபடி பார்வையிட்டுக் கொண்டிருந்தார், 'ஏரோட்டி’ ஏகாம்பரம். சற்று நேரத்தில் அங்கு வந்து சேர்ந்த 'வாத்தியார்’ வெள்ளைச்சாமி, வரப்பில் வாகாகத் தொங்கிக் கொண்டிருந்த மரக்கிளையில் தாவி அமர்ந்தபடி பேச ஆரம்பித்தவர்,
'என்னமோ, கேபிள் டி.வி. கனெக்ஷன் எவ்வளவு இருக்குனு கணக்கு எடுத்துட்டு இருக்காங்களாம். அதுக்கான ஃபாரத்தை ரேஷன் கடையில போய் எழுதிக் கொடுக்கணுமாம்ல... அதுக்காகத்தான் போயிருந்தேன். ரெண்டு மூணு மாசமா சாமான் எதுவும் வாங்காம இருக்கறதால, அப்படியே ஜீனியும் வாங்கிட்டு வந்தேன்'' தன்னிலை விளக்கம் சொன்னார்!
'நானெல்லாம் நேத்தே போய் கொடுத்துட்டு வந்துட்டேன்'' என்ற ஏரோட்டி,
''நல்லா வளர்ந்து வந்துருக்கு... என்னதான் தண்ணி பாய்ச்சுனாலும்... மேல் மழை பேய்ஞ்சாத்தனே பயிர் செழிம்பா வரும். அதுக்கான அறிகுறியே இல்லையே. மெட்ராஸ் பக்கமெல்லாம் மழை பிய்ச்சு ஊத்துதுனு சொன்னாங்க. இங்கிட்டுப் பெய்யக் காணோம்'' என்று மக்காச்சோள வயலைக் காட்டி வருத்தப்பட்டார்.
'கடலோர மாவட்டங்கள்ல பெய்றது பருவ மழை கிடையாது. அது கடல்ல காற்றழுத்தம் குறையுறதால பெய்யுற மழை. இந்த வருஷம் பருவ மழை நல்லா பெய்யும்னு எல்லாரும் எதிர்பார்த்தாங்க. ஆனா, சரிவர கிடைக்கல. கார்த்திகை மாசத்துல எப்படியாவது, மழை பெய்ஞ்சுடும். ஆனா, இந்த வருஷம் தூத்தலோட நின்னுபோச்சு. இந்த மாசம் முடிஞ்சதுனா, அதுக்கப்பறம் மழை கிடைக்க வாய்ப்பேஇல்லை. கிட்டத்தட்ட இருபத்தஞ்சு வருஷத்துக்கு முன்னதான் தேனி மாவட்டத்துல ஒரு தடவை கார்த்திகை மாசத்துல மழை கிடைக்காம இருந்துச்சாம். அதேமாதிரி இந்த வருஷமும் ஆயிடுச்சுனு அந்த மாவட்ட விவசாயிங்கள்ல்லாம் புலம்புறாங்க. அதோட தென்மேற்குப் பருவ மழை சரியா கிடைக்கலைனா, வடகிழக்குப் பருவ மழையும் கிடைக்காதுனும் அனுபவசாலிகள் சொல்றாங்க' என்றார், வாத்தியார்.

அந்த நேரத்தில் 'காய்கறி’ கண்ணம்மா வந்து சேர்ந்துகொள்ள... சூடு பிடிக்க ஆரம்பித்தது, மாநாடு.
''அரியலூர் மாவட்டத்துல 'காரைக்குறிச்சி’னு ஒரு கிராமம். இங்க மத்திய நில நீர் வாரிய அதிகாரிகள், நிலத்தடி நீர், பெட்ரோலியப் படிமங்கள் பத்துன ஆராய்ச்சிக்காக 1,300 அடி ஆழத்துக்கு நாலு இடத்துல 'போர்’ போட்டிருக்காங்க. அந்த நாலு 'போர் வெல்’ல இருந்தும் மோட்டார் இல்லாமலே, தண்ணி வெளிய கொட்டிக்கிட்டிருக்காம். இயற்கையாவே ஊத்து இருக்குறதால, ஒரு போர்ல இருந்து நிமிஷத்துக்கு 200 லிட்டர் தண்ணி வருதாம். மத்த போர்கள்ல நிமிஷத்துக்கு 100 லிட்டர் தண்ணி வந்துக்கிட்டிருக்காம். ஒருநாளைக்கு 7 லட்சத்து 20 ஆயிரம் லிட்டர் தண்ணி தானா வெளியேறிக்கிட்டுருக்காம். மோட்டார் போட்டு இறைச்சா ஒரு மணி நேரத்துக்கு 60 ஆயிரம் லிட்டர் தண்ணீர் இறைக்க முடியுமாம். சுத்துப்பட்டுல இருந்து எல்லாரும் ஆச்சரியமா வந்து பாத்துட்டு இருக்காங்களாம். குடிக்க, துவைக்க, மாடுகளைக் குளிப்பாட்டனு இந்தத் தண்ணியைத்தான் பயன்படுத்துறாங்களாம் அந்தப் பகுதியில...'' என்று ஏரோட்டி சொல்லிக் கொண்டிருக்கும்போதே...
''ஆனாலும், 24 மணி நேரமுமா... பயன்படுத்தப் போறாங்க. மீதி தண்ணியெல்லாம் வீணாத்தானே போயிட்டிருக்கும்?'' என்று புலம்பித் தீர்த்தார் காய்கறி.
''அதேதான்... இப்படி வீணாகுற தண்ணியை விவசாயத்துக்குப் பயன்படுத்துறதுக்கு ஏற்பாடு செய்யணும்னு சுத்துப்பட்டு விவசாயிகள் கோரிக்கை வெச்சுருக்காங்க. உடனே கிராமத்துக்கு வந்து பார்த்த அரியலூர் கலெக்டர் செந்தில்குமார், அதுக்கான நடவடிக்கைகளை எடுக்க சொல்லியிருக்காராம்'' என்று அந்தச் செய்தியை முடித்தார் ஏரோட்டி.
'ம்... அந்த ஊருல மோட்டாரே இல்லாம தண்ணி வருது. ஆனா, எங்க ஊர்லயெல்லாம் குடிதண்ணிக்காக பஞ்சாயத்துகாரங்க, நீரோட்டம் பாக்குற ஆளுங்களையெல்லாம் வரவெச்சு பாத்துதான் மூணு இடத்துல போர் போட்டாங்க. ஒண்ணுலயும் தண்ணி இல்லை. அப்பறம் கம்மாக்கரையோரம் ஒரு போர் போட்டு அதுலதான் தண்ணி எடுத்துட்டுருக்கோம்'' என்று மீண்டும் புலம்பினார் காய்கறி.
'முன்னாடி, நிலத்தடி நீர் நல்ல வளமா இருக்குறப்போ இப்படித்தான் தானாவே தண்ணி கொட்டும். பூமிக்கடியில இருக்குற நீரோட்டம் பாத்து ஊத்துக்கு நேரா ஒரு துளை போட்டு, வளைஞ்ச குழாயை அதுல பதிச்சு வெச்சுருப்பாங்க. அதுக்கு 'ஆர்ட்டீசியன் கிணறு’னு பேரு. பூமிக்கடியில இருக்குற தண்ணியோட வேகத்துலயே இந்தக் குழாய்ல தானாவே தண்ணி கொட்டும். இதுக்கு மோட்டார்லாம் தேவையில்லை. ஆனா, இப்போலாம் அப்படியா இருக்கு. ஆயிரம் அடி போர் போட்டு... மோட்டார் வெச்சு இழுத்தாலும், தண்ணி வர்றதில்லை' என்ற வாத்தியார், தொடர்ந்து ஒரு செய்தியைச் சொல்ல ஆரம்பித்தார்.
'பள்ளிப்பட்டு, அரக்கோணம், கனகம்மாசத்திரம், திருத்தணி, ஆர்.கே.பேட்டை பகுதியில இருக்கற கரும்பு விவசாயிகள் நிறைய பேர், திருவாலங்காடு பகுதியில உள்ள 'திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை’யில பதிஞ்சு வெச்சு, கரும்பு கொடுத்துட்டு இருக்காங்க. ஆனா, அந்தப் பகுதியில கரும்பு வெட்டுறதுக்கு ஆட்கள் இல்லாததால, கர்நாடக மாநிலத்துல இருந்து ஏஜெண்ட் மூலமா ஆட்களை வரவழைச்சு கரும்பு வெட்டுறாங்களாம். இவங்களுக்கு ஒரு டன் கரும்பு வெட்டுறதுக்கு 460 ரூபாய் கூலியாம். ஆலையில இருந்து உத்தரவு வாங்கி, வெட்டி ஒரு வாரத்துக்கு மேல ஆகிடுச்சாம். ஆனாலும், கரும்பை எடுத்துட்டுப் போறதுக்கு ஆலையில இருந்து லாரி அனுப்பலையாம். அதனால கிட்டத்தட்ட ஆயிரம் டன் கரும்புக்கு மேல ரோட்டுலயே காய்ஞ்சுட்டுக் கிடக்குதாம். இப்படி காய்ஞ்சா... கரும்புல எடை குறைஞ்சுடுமாம். இதை எடுத்துட்டுப் போய் எடைபோட்டுத்தான் கூலியாளுக்கும் சம்பளம் கணக்கு பண்ணனுமாம். எடை குறைஞ்சதுனா கூலியாளுங்களுக்கு சம்பளமும் குறைஞ்சுடுமாம். அதனால, கர்நாடகாவுல இருந்து வந்த கூலியாளுங்களும் பிரச்னை பண்றாங்களாம். விவசாயிகளெல்லாம் புலம்பிட்டு இருக்காங்க பாவம்'' என்றார்.
''ம்... கட்டுப்படியான விலையும் கொடுக்கறதில்லை. வெட்டுன கரும்பை சீக்கிரம் எடுத்துட்டும் போறதில்லை. ஏன்தான் விவசாயிகளை இந்தப்பாடு படுத்துறாங்களோ, தெரியல'' என்று வருத்தப்பட்ட காய்கறி, கூடையிலிருந்து ஆளுக்கு இரண்டு சப்போட்டா பழங்களை எடுத்துக் கொடுத்தார்.
அதை சாப்பிட்டுக் கொண்டே ஒரு செய்தியைச் சொல்ல ஆரம்பித்தார், ஏரோட்டி. ''துவரை, உளுந்து, பாசிப்பயறு, தட்டைப்பயறு... மாதிரியான பயறுகளுக்கு, இந்தியாவுல அதிக தேவை இருக்கறதால தட்டுப்பாடா இருக்குதாம். அதனால, பயறு உற்பத்தியை அதிகப்படுத்துறதுக்காக 'பயறு வகை இயக்கம்'னு ஒரு திட்டத்தைக் கொண்டு வந்திருக்கு.
இந்தத் திட்டத்துக்காக தமிழ்நாட்டுக்கு
19 கோடி ரூபாய் ஒதுக்கியிருக்காங்க. இந்தத் திட்டத்துல நீர்ப் பாய்ச்சும் குழாய், நகரும் நீர்த் தெளிப்பான், மழைத் தூவான்... மாதிரியான கருவிகளுக்கு 50 சதவிகித மானியம் கிடைக்கும். பயறுகளை காய வைக்க தார்பாய் வாங்குறதுக்கு
4 ஆயிரம் ரூபாய் மானியம் உண்டாம். அதேபோல, பயறு உடைக்கும் கருவிக்கும் மானியம் உண்டாம்'' என்று 'கடகட’ வென வாய்ப்பாடு போல ஒப்பித்துவிட்டு,
''வேலையாளுங்களுக்கு டீ, வடை வாங்கிக் கொடுக்கணும்... போயிட்டு வந்துடுறேன்'' என்று ஏரோட்டி கிளம்ப, மாநாடும் முடிவுக்கு வந்தது.