ஓவியம்: ஹரன் ஈமு மோசடி... மோகன் கொலையும்...
##~## |
'மணப்பாறை மாடு கட்டி... மாயவரம் ஏரு பூட்டி...'
-வெயில் சாயும் மாலைவேளையில், கொடைக்கானல் பண்பலை ரேடியோ இப்படி சத்தமாக அலறிக் கொண்டிருக்க..., முதுகை மரத்துக்கு முட்டுக் கொடுத்து அதைக் கேட்டுக் கொண்டிருந்தார் 'வாத்தியார்’ வெள்ளைச்சாமி. வயலுக்கு தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்த ஏகாம்பரம், அதை முடித்து, கரையேறி வர... சரியாக வந்து சேர்ந்தார் 'காய்கறி’ கண்ணம்மா.
''அப்பப்பா... என்னமா பனி அடிக்குது? பனியைக்கூட தாங்கிடலாம். கூடவே ஆடி மாசம் அடிக்கற மாதிரி காத்தும் சேர்ந்துல்ல அடிக்குது! ராவெல்லாம் குளிர் தாங்க முடியல. ஊசி மாதிரி குத்துது. பொழுது சாய்ஞ்சாலோ, வெளியில நடமாட முடியல. காலையில எட்டு மணி வரைக்கும்கூட குளிரடிக்குது'' என்று நடுங்கியபடியே காய்கறி சொல்ல... ஆரம்பமானது அன்றைய மாநாடு!

''பூமி சூடாகுது, ஓசோன்ல ஓட்டை விழுகுதுனு எல்லாரும் சொல்றாங்கள்ல... அதோட விளைவுதான் இதெல்லாம். பருவம் தப்பி மழை பெய்யுறது... காத்தடிக்கிறது, மாதிரியான காலநிலை மாற்றத்துக்கு அதுதான் காரணம். கொடைக்கானல், ஊட்டி மாதிரியான மலைப்பிரதேசங்கள்லகூட சராசரி வெயில் அளவு கூடிக்கிட்டே இருக்குதாம். அதனாலதான் விஞ்ஞானிகள், இயற்கை ஆர்வலர்கள் எல்லாம் மரம் வளருங்க... பூமியை பசுமையாக்குங்கனு அலறிக்கிட்டு இருக்காங்க. ஆனா, யாரு இதையெல்லாம் சரியா புரிஞ்சுக்கறாங்க ம்... அரசாங்கமே புரிஞ்சுக்காம, கண்மூடித்தனமா மரங்களை வெட்டி சாய்ச்சுட்டிருக்கறப்ப... மக்களைப் பத்தி சொல்றதுக்கு என்ன இருக்கு?'' என்று கவலையோடு சொன்னார் வாத்தியார்.
''ம்ம்... உலகமே ஒட்டுமொத்தமா அழிஞ்ச பிறகு, புதுசா திட்டம் போட்டு யோசிப்பாய்ங்க போல...'' என்று நீட்டி முழக்கிய காய்கறி,
''சரி, இன்னிக்கு என்னய்யா முக்கியமான சேதி?'' என்று கேட்டார்.
''ஈமு பண்ணை நடத்தி, பத்து கோடி ரூபாய் வரைக்கும் மோசடி பண்ணின ஒருத்தரை, கொலை பண்ணிட்டாங்க. இதுதான் இப்போதைக்கு பரபரப்பான சேதி!'' என்று ஏரோட்டி சொல்ல...
''அட, ஏமாந்தவங்களோட கோபம்... கொலை வரைக்கும் போயிடுச்சே...!'' என்று அதிர்ச்சிக் காட்டினார் காய்கறி!
''ஆனா, இந்தக் கொலையை செய்தது... ஏமாந்தவங்களா, இல்ல பங்கு தகராறானு பலப்பல கதைகள் வந்துட்டே இருக்கு. திண்டுக்கல் மாவட்டம் சத்திரப்பட்டியை சேர்ந்த மோகன், திருப்பூர் பக்கமிருக்கற பொல்லிக்காளிப்பாளையத்துல 'ஜோதிவேல் ஈமு ஃபார்ம்ஸ்’ அப்படிங்கற பேர்ல பண்ணையை ஆரம்பிச்சி நடத்திட்டிருந்தார். இவர் மேல பல கோடி ரூபாய் அளவுக்கு மோசடி புகார் இருக்கு. இப்படிப்பட்ட புகார்ல ஈமு பண்ணைக்காரங்க பலரையும் அரெஸ்ட் பண்ணின போலீஸ், இந்த மோகனை மட்டும் கண்டுக்கவே இல்ல.
இந்த சூழ்நிலையில, டிசம்பர் பத்தாம் தேதியன்னிக்கு, கார்ல போய்க்கிட்டிருந்தார் மோகன். வழி மறிச்சு வண்டியில ஏறின ஒரு கும்பல், மோகனைக் கடத்திட்டு போய், மைசூர் பக்கத்துல ஒரு காட்டுல வெச்சு கொலை பண்ணி புதைச்சுட்டாங்கங்கறதுதான் போலீஸ் தரப்பு சேதி!'' என்று வாத்தியார் இடைவெளிவிட,
''அப்ப உங்க தரப்பு சேதி?'' என்று நக்கலாகக் கேட்டார் ஏரோட்டி!
''ம்... உனக்கு ஏரோட்டி ஏகாம்பரம்னு பேரு வெச்சதுக்கு பதிலா, ஏடாகூட ஏகாம்பரம்னு பேரு வெச்சுருக்கலாம்'' என நறுக்கென்று கடித்த வாத்தியார்,
''இதுதொடர்பா, பத்து பேர் சிக்கியிருக்காங்க. முதலீட்டாளர்கள் சிலர் சேர்ந்து கோவத்துல இப்படி செய்துட்டதா ஆரம்பத்துல ஒரு தகவல் வந்துச்சு. பிறகு, 'மோகனுக்கு ரகசியமா ஃபைனான்ஸ் பண்ணியிருக்காங்க சிலர். ஆனா, அவங்களுக்கு பங்கு தராம மோகன் ஏமாத்திட்டார். அதனால கூலிப்படை வெச்சு கொன்னுட்டாங்க'னு இன்னொரு தகவல். இதுல, இப்போ புதுசா வந்துருக்கற ஒரு தகவல்தான்... செம ரகளையான தகவல்'' என்று சொல்லி சிரிக்க...
''அதென்ன ரகளையான தகவல்?'' என்று அநியாயத்துக்கும் ஆர்வமானார்கள்... காய்கறி மற்றும் ஏரோட்டி இருவரும் !
''ம்க்கும்'' என்று தொண்டையைக் கனைத்துக் கொண்ட வாத்தியார்,
''அதாவது, கொல்லப்பட்டது மோகனே இல்ல. வேற யாரையோ கொலை பண்ணி, அந்த உடலோட முகத்தை சிதைச்சுப் போட்டுட்டு, மோகன்னு கதை கட்டிட்டாங்க. இப்ப மோசடி பண்ண பணத்தோட மோகன் வேற எங்கயோ தலைமறைவா இருக்கார். கூட்டணி போட்டு பிஸினஸ் பண்ணின எல்லாருமா சேர்ந்துதான் இப்படி பிளான் பண்ணியிருக்காங்க. டி.என்.ஏ. டெஸ்ட் மாதிரி ஏதாச்சும் டெஸ்ட் எடுத்தாதான் உண்மையைக் கண்டுபிடிக்க முடியும்'னு கோயம்புத்தூர், திருப்பூர், தாராபுரம், திண்டுக்கல் பக்கமெல்லாம் ஒரே பேச்சா இருக்கு'' என்று சொன்னார் வாத்தியார்.
''அடப்பாவிங்களா... இப்படியும்கூட பண்ணுவாங்களா... என்னமோ 'மங்காத்தா' சினிமா கணக்கால்ல கதை சொல்றீங்க?'' என்று காய்கறி சாபம் விட.
''மோகன் கதை எப்படியோ... ஆனா, இந்தக் கதையைக் கேட்ட பிறகு, 'அட, இப்படியும் ஒரு ஐடியா இருக்கா?'னு சொல்லிக்கிட்டு, இனிமே, மோசடி பண்றவனுங்கள்ல்லாம் இப்படி ஒரு கதையைக் கட்டிட்டு பணத்தோட வெளிநாட்டுல செட்டில் ஆக ஆரம்பிச்சுடுவானுங்களே...'' என்று வருத்தத்தை வெளிப்படுத்தினார் ஏரோட்டி!
அடுத்த செய்திக்குத் தாவிய வாத்தியார், ''கோயம்புத்தூர் வேளாண்மை பல்கலைக்கழகத்துல வருஷா வருஷம் நடக்குற மலர் கண்காட்சியில முறைகேடுனு புகார் கிளம்புச்சுல்ல. இதைப் பத்தி 'பசுமை விகடன்'லகூட எழுதியிருந்தாங்க. 'சமச்சீர் வளர்ச்சிக்கான கூட்டமைப்பு’தான் இந்த விஷயத்தை வெளியில கொண்டு வந்தது. இந்த அமைப்பு, தகவல் அறியும் உரிமை சட்டத்துல சில கேள்விகளைக் கேட்டதுலதான் முறைகேடுகள் வெளிய வந்துச்சு. அது சம்பந்தமா முதலமைச்சர், கலெக்டர்னு எல்லாத்துக்கும் புகார் அனுப்பியிருக்காங்க. முதலமைச்சர் தனிப்பிரிவுக்கும், கலெக்டருக்கும் பல்கலைக்கழகம் சார்பா விளக்கம் கொடுத்து இருக்காங்களாம். ஆனா... தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் கேட்ட கேள்விகளுக்குச் சொல்லப்பட்ட பதிலும், அரசாங்கத்துக்கு இப்ப கொடுத்திருக்குற விளக்கமும் ரொம்ப முரண்படுதாம். அதனால, இதை வெச்சே மேற்கொண்டும் பல்கலைக்கழகத்துக்கு குடைச்சல் கொடுக்க தீர்மானிச்சு இருக்காங்களாம் அந்த அமைப்பைச் சேர்ந்தவங்க...'' என்று சொல்லிவிட்டு,
''இனிமே தமிழ்நாடு அரசுடன் சேர்ந்து, வேளாண் பல்கலைக்கழகமே மலர் கண்காட்சியை நடத்தும்னு சொல்லிருக்காங்க. வழக்கமா ஜனவரி மாசம்தான் கண்காட்சி நடக்கும். ஆனா, இதுவரைக்கும் இதைப் பத்தி எந்த அறிவுப்பும் வராததால... 'கண்காட்சி நடக்குமா... நடக்காதா?'னு எதிர்பார்த்துட்டு இருக்காங்களாம் விவசாயிங்க'' என்று சொன்னார்.

''என்கிட்ட ஒரு சேதி இருக்கே...''
-வேகவேகமாக சொன்ன காய்கறி,
''மதுரை மாவட்டம், மேலூருக்குப் பக்கத்துல செம்மினிபட்டின்ற ஊர் இருக்கு. இங்க கம்மாய்க்குப் பக்கத்துல ஆண்டி பாலகர், செவிட்டு அய்யனார் சாமிகளுக்கு கோவில் இருக்கு. சாமி கும்பிட வர்றவங்க நேத்திக்கடனா இந்த கம்மாய்ல மீன் குஞ்சை வாங்கி விடுவாங்களாம். வருஷத்துக்கு ஒரு தடவை ஊர்ல தண்டோரா போட்டு ஊர்க்காரங்க எல்லாரையும் வரவழைச்சு 'மீன்பிடி திருவிழா’ நடத்துவாங்களாம். இப்படி நடத்துனா நல்லா மழை பெய்யும்னு அவங்களுக்கு நம்பிக்கை. போன வருஷம் இந்தத் திருவிழாவை நடத்தலை. 'அதனாலதான் இந்த வருஷம் மழை பெய்யலை’னு சொல்லி... இப்போ அந்த திருவிழாவை நடத்தியிருக்காங்க. மீன்களைப் பிடிச்சு யாரும் விக்க மாட்டாங்களாம். அங்கேயே சமைச்சு சாமிக்கு படையல் போட்டு சாப்பிடுவாங்களாம். போன வருஷம் இப்படி மீன் பிடிக்காததால... இந்த வருஷம் மீன்லாம் நல்லா பெருத்துப் போய், ஒவ்வொரு மீனும் மூணு கிலோ வரைக்கும் கூட இருந்துச்சாம்'' என்று கண்களை விரித்தபடி சொன்னார்.
''ரொம்ப லேட் கண்ணம்மா நீ... இதை முன்னாடியே நீ சொல்லியிருந்தா.... நானும் போய் ஒரு பிடிபிடி பிடிச்சுட்டு வந்துருப்பேன்ல மீன் குழம்பு சாப்பாட்டை'' என்றார் ஏரோட்டி வருத்தமாக.
''சரிசரி... வருத்தப்படாதே. அதுக்குப் பதிலா இதைச் சாப்பிடு'' என்று கூடையிலிருந்து 'கொடை ஆரஞ்சு’ பழங்களை இருவருக்கும் எடுத்துக் கொடுத்தார், காய்கறி.
அதைச் சாப்பிட்டுக் கொண்டே பேச ஆரம்பித்த வாத்தியார், ''கொடைக்கானல் மலையில மன்னவனூர், கவுஞ்சி, பூம்பாறை, கூக்கால், தாண்டிக்குடி, பண்ணைக்காடு மாதிரி கிராமங்கள்ல நிறைய கொய்மலர்கள் சாகுபடி பண்றாங்க. இந்தப் பூக்களுக்கு உலகளவுல நல்லா விற்பனை வாய்ப்பு இருக்குதாம். மதுரை, தியாகராஜர் கல்லூரி ஆய்வகத்துல ஒரு 'கம்ப்யூட்டர் சாஃப்ட்வேர்’ தயார் பண்ணி, புவிசார்ந்த தகவல் முறை மூலமா இந்தப் பூக்களை விக்கிறதுக்காக வழி பண்ணியிருக்காங்க. இன்டர்நெட் மூலமா இதைப் பார்த்து, பூக்கள் தேவைப்படுறவங்க நேரடியா சம்பந்தப்பட்ட விவசாயிகள்ட்டயே பேசி வாங்கிக்க முடியுமாம். பாரு... உலகம் எங்கயோ போய்க்கிட்டிருக்கு'' என்று புதுத்தகவல் ஒன்றைத் தர...
திடீரென்று எழுந்த ஏரோட்டி, 'கொழுப்பைப் பாரு, காட்டுல மேய விட்டா, மக்காச்சோள வயலுக்குள்ள போறதை...'' என்று மாட்டைத் திட்டிக்கொண்டே எழுந்து ஓட, முடிவுக்கு வந்தது அன்றைய மாநாடு !
தற்கொலையை வெல்வோம் !
திருநெல்வேலி மாவட்டம், இட்டாமொழி பகுதியைச் சேர்ந்தவர் நெல்சன். பிறவியிலே நடக்க முடியாத இவர், சமூக சிந்தனையோடு, சிவகாசியில் இருந்து சென்னை வரை விழிப்பு உணர்வுப் பிரசாரம் மேற்கொண்டிருக்கிறார். ''மழை வேண்டி இறைவனிடம் பிரார்த்தனை செய்யும் முன்பு, மரக்கன்றுகளை நடுவீர், மழை பெறுவீர். தற்கொலையை வெல்வீர்'' என்று பிரசாரம் செய்யும் நெல்சன், இதற்காக தினமும் 15 முதல் 20 கிலோ மீட்டர் தூரம் மூன்று சக்கர வண்டியில் பயணிக்கிறார்.