மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மரத்தடி மாநாடு

சக்கைப் போடு போடும் சிறுகிழங்கு!

 ##~##

காலையிலேயே 'ஏரோட்டி’ ஏகாம்பரத்தின் தோப்பு, களைகட்டி இருந்தது. உள்ளூர் தொலைக்காட்சிக்காரர்கள் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சியை ஒளிப்பதிவு செய்வதற்காக ஏரோட்டியின் தோப்பைத் தேர்வு செய்திருந்ததுதான் காரணம்! பட்டுச் சட்டை, வேட்டியில் மிடுக்காக 'வாத்தியார்’ வெள்ளைச்சாமியும் ஆஜராகியிருந்தார்.

''எம்புட்டு நேரம் காத்துட்டு இருக்குறது? வெரசா வாம்மா... டி.வி காரங்கள்லாம் கேமராவோட உக்காந்துட்டு இருக்காங்க'' வந்ததும் வராததுமாக 'காய்கறி’ கண்ணம்மாவை செல்லமாகக் கடிந்து கொண்டார், ஏரோட்டி.

தயாராக இருந்த சாமான்களை வைத்து, பரபரவென பொங்கல் வைக்க ஆரம்பித்தார், காய்கறி. பொங்கி வரும் சமயத்தில், குலவையிட்டுக் கொண்டே 'பொங்கலோ பொங்கல்’ என்று அனைவரும் உற்சாகமாகச் சொல்ல... ஜரூராக ஒளிப்பதிவு நடந்து முடிந்தது.

வந்த வேலை முடிந்து படப்பிடிக்குழுவினர் கிளம்ப, மழை ஓய்ந்தது போல இருந்தது அந்த இடம். மூன்று பேரும் வரப்பில் அமர்ந்து, பொங்கலைச் சாப்பிட ஆரம்பிக்க...

''இந்தாங்க சிறுகிழங்கு வறுத்துட்டு வந்திருக்கேன், சேர்த்துச் சாப்பிடுங்க'’ என்று பாத்திரத்தை எடுத்து நடுவில் வைத்த காய்கறி, ஒரு சந்தோஷ செய்தியைச் சொல்லி, அன்றைய மாநாட்டையும் துவக்கி வைத்தார்...  

''திருநெல்வேலி மாவட்டம், ஆழ்வார்குறிச்சி சுத்து வட்டாரத்துல இருக்கற பாப்பான்குளம், கடையம், வெள்ளிக்குளம், சம்பன்குளம், ரவணசமுத்திரம், வீராசமுத்திரம், கீழாம்பூர், காக்கநல்லூர் கிராமங்கள்ல இந்த வருஷம் சிறுகிழங்கு (கூர்க்கன் கிழங்கு) நல்லா விளைஞ்சுருக்காம். வழக்கமா ஆடி மாசத்துல நட்டு, மார்கழி மாசத்துல அறுவடை பண்ணுவாங்க. பொங்கல் சமயத்துல நிறைய பேர் வாங்குவாங்க. இந்த வருஷம் விளைச்சல் அதிகரிச்சு இருந்தாலும்... போன வருஷத்தைவிட விலை ஏறியிருக்குதாம். கிலோ 25 ரூபாய் வரைக்கும் விக்குதாம். சென்னை, ஐதராபாத், மும்பை, கேரளானு நிறைய ஊர்களுக்கு கிழங்கு மூட்டை போகுதாம். அதனால, சம்சாரிகளுக்கு சந்தோஷமாம்'' என்றார்!

மரத்தடி மாநாடு

''எங்கிட்டோ பண்டிகை கொண்டாடுறதுக்கு சம்சாரிகளுக்கு நாலு காசு கிடைச்சா சரிதான்'' என்று சந்தோஷ குரலில் சொன்ன ஏரோட்டி,

''சிவகங்கை மாவட்டம், சிறாவயல்  கிராமத்துல மஞ்சு விரட்டு, ரொம்ப பிரபலம்ல. கிட்டத்தட்ட நூறு வருஷத்துக்கு மேல அங்க மஞ்சு விரட்டு நடந்துக்கிட்டு இருக்கு. இடையில கோர்ட் பஞ்சாயத்தால நின்னு போச்சு. சுப்ரீம் கோர்ட், மஞ்சு விரட்டு நடத்த அனுமதிச்சுருக்குற ஊர்கள்ல சிறாவயலும் ஒண்ணு. அதனால, இந்த வருஷம் சிவகங்கை மாவட்டத்துல மஞ்சு விரட்டுக்காக காளைகளைத் தயார் பண்ணிட்டு இருக்காங்களாம்'' என்று ஒரு தகவல் தந்தார்.

உடனே, பழைய நினைவுகளில் மூழ்கிய வாத்தியார், ''அடேங்கப்பா... எத்தனை விதமா மாடுக வரும் தெரியுமா? முன்னயெல்லாம் அந்தப் பக்கம் வீட்டுக்கு வீடு ஒரு காளை மாடு விரைச்சுக்கிட்டு நிக்கும். மஞ்சு விரட்டு நடக்கறப்போ எங்கிட்டு விரட்டி விட்டாலும், நேரா வீட்டுக்கு வந்து சேர்ந்துடும். அந்த ஊர்ல, மஞ்சுவிரட்டுக் காளை வளர்க்கறவங்க, பொங்கல் சமயத்துல, சொந்தக்காரங்களைஎல்லாம் வீட்டுக்கு வர வெச்சு தடபுடலா விருந்து போடுவாங்க. தை மாசம் சிறாவயல்ல முதல்ல மஞ்சு விரட்டு ஆரம்பிச்சா... அதைத் தொடர்ந்து கிட்டத்தட்ட அறுபது ஊர்கள்ல மஞ்சு விரட்டு நடக்கும். பாகனேரியில ஆனி மாசத்துல கடைசி மஞ்சுவிரட்டு முடியும். ஆனா, இப்ப எல்லாமே மாறிப்போச்சு. பழைய அளவுக்கெல்லாம் மஞ்சு விரட்டுக்கு முக்கியத்துவம் இல்லாம போயிடுச்சு' என்றார் ஏக்கமாக!

''சரி,  மஞ்சு விரட்டு இருக்கட்டும். நீ, உன் ஆடு, மாடுகள சூதனமாக பார்த்துக்கோயா...'' என்று பூடகமாக ஆரம்பித்த வாத்தியார்,

''காஞ்சிபுரம் மாவட்டம், திருக்கழுக்குன்றம் பக்கத்துல நென்மேலியில கோமாரி நோய் வந்து ஒரு பசுமாடு இறந்து போச்சாம். அதனால அந்தப்பகுதியில மாடுகளுக்கு தடுப்பூசி போட்டுக்கிட்டிருக்காங்களாம். வாயில கம்பி மாதிரி எச்சில் ஒழுகறது, ஈறுகள்ல புண் வர்றது, மூச்சிரைக்கிறது, மடிக்காம்புகளோட நுனியில புண் வர்றது... இதெல்லாம் கோமாரி நோய்க்கான அறிகுறிகளாம். ஆரம்பத்துலயே கண்டுபிடிச்சாதான்... நோயைக் குணப்படுத்த முடியுமாம். இல்லாட்டி மாடுகள காப்பாத்தறதே கஷ்டமாயிடுமாம்'' என்று சொல்ல...

''பொங்கல் நேரம், நானு நாலு சுத்து வந்தாத்தான் நம்ம கையில நாலு காசு நிக்கும். நான் கிளம்பறேன்'' என்ற காய்கறி, கூடையைத் தூக்கி தலையில் வைக்க... அன்றைய மாநாடும் முடிவுக்கு வந்தது. 

 தீவனப் பயிர் தயார்!

'நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில், தீவனப் பயிர் விற்பனைக்குத் தயாராக உள்ளது’ என அந்நிலையத்தின் ஒருங்கிணைப்பாளர் மோகன் தெரிவித்துள்ளார்.

தீவனப் பயிர் தேவைப்படும விவசாயிகள், நாமக்கல் மோகனூர் சாலையில் அமைந்துள்ள வேளாண் அறிவியல் நிலையத்துக்கு நேரில் வந்து, உரிய தொகையைச் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். மேலும், விவரம் தேவைப்பட்டால், 04286-266345, 266244, 266650 என்ற எண்களைத் தொடர்பு கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பயிர்கள் கருகியதால் விவசாயி மரணம் !

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் அருகிலுள்ள வளத்தக்காடு, காவிரியின் கடைமடைப்பகுதிகளில் ஒன்று. கல்லணைக் கால்வாய் மூலமாக பாசனம் நடக்கும் ஊர். இங்கே, கருப்பையா என்கிற 62 வயது விவசாயி, இரண்டு ஏக்கரில் நெல் பயிரிட்டிருந்தார். காவிரி தண்ணீர் மற்றும் மழை இரண்டுமே கிடைக்காததால் இந்தப் பகுதி முழுக்கவே பயிர்கள் கருகிக் கொண்டிருக்கின்றன. தினமும் சோகமாக வயலைப் பார்த்துவிட்டு வீட்டுக்கு வந்துகொண்டிருந்த கருப்பையா... கடந்த சிலதினங்களுக்கு முன் மாரடைப்பால் இறந்து போயிருக்கிறார்!