புறா பாண்டி, படங்கள்: தி. விஜய், வீ. சிவக்குமார்
##~## |
''இரண்டு ஏக்கர் நிலத்தில் சவுக்கு சாகுபடி செய்ய விரும்புகிறேன். ஆனால், 'அது, மண்ணில் உள்ள சத்துக்களை உறிஞ்சி எடுத்துவிடும். மண்ணின் வளம் குறைந்துவிடும்’ என்கிறார்களே... இது உண்மையா?''
சி. அருண்பிரசாத், பொள்ளாச்சி.
தமிழக வனத்துறையின் முன்னாள், உதவி வனப்பாதுகாவலர் இரா. ராஜசேகரன் பதில் சொல்கிறார்.
''சவுக்கு மரத்தின் இயல்பே... இலைகளைத் தொடர்ந்து உதிர்ப்பதுதான். இதனால், அந்த இலைகள் மட்கி, மண்ணை வளம் கொழிக்க வைக்கும். அதனால் வளம் குறைந்த நிலத்தில் சவுக்கு சாகுபடி செய்தாலும், அது வளமான நிலமாக மாறிவிடும். எனவே, சவுக்குப் பயிரிட்டால், மண்ணின் வளம் குன்றிவிடும் என்று பயப்பட வேண்டாம்.
மர வகைகளில், குறுகிய காலத்தில் பலன் தரக்கூடியது சவுக்கு மட்டும்தான். சாகுபடி செய்த நான்காம் ஆண்டு அறுவடைக்கு வந்துவிடும். 'ஜுங்குலியானா’ என்கிற வீரிய ரகம், வறட்சியைத் தாங்கி வளரும் தன்மை கொண்டது. ஏக்கருக்கு 4 ஆயிரம் கன்றுகளை நடவு செய்யலாம். நான்கு ஆண்டுகள் கழித்து, ஒரு மரம் குறைந்தபட்சம் 100 ரூபாய்க்கு விற்பனையாகும். அதன்படி பார்த்தால், 4 லட்ச ரூபாய் வருமானம் கிடைக்கும். செலவு ஒரு லட்சம் போனாலும், கையில் 3 லட்சம் நிற்கும்.

காகிதத் தயாரிப்பு, கட்டட வேலைகள், பந்தல்கள், கிராமப்புறக் கூரைவீடுகள் என்று சவுக்கு மரத்துக்குத் தொடர்ந்து தேவை இருக்கத்தான் செய்கிறது. விவசாய வேலைக்கு ஆட்கள் கிடைக்காத இடங்களில், சவுக்கு சாகுபடிதான் கைகொடுக்கிறது. பூச்சி-நோய்கூட தாக்காது. ஆரம்பத்தில், இரண்டு முறை களையெடுத்தால் போதும், திரும்ப களையெடுக்க வேண்டிய அவசியமில்லை.
கன்றுகளை நடவு செய்யும்போது, தொழுவுரம், அசோஸ்பைரில்லம், பாஸ்போ-பாக்டீரியா, வேம்... கலவை ஆகியவற்றைக் கலந்து, கன்றுக்கு ஒரு கிலோ வீதம் நடவு செய்ய வேண்டும். இந்த உரங்கள்தான் அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு மரத்துக்கான உரம். இப்படி இயற்கை உரம் வைக்கும்போதுதான், சவுக்கு மரமானது உருண்டு, திரண்டு வரும்''
தொடர்புக்கு, செல்போன்: 94421-05981.
''கிர்னி பழம் சாகுபடி செய்ய விரும்புகிறேன். தர்பூசணிக்கும் இதற்கும் என்ன வேறுபாடு?''
ஆர். கந்தசாமி, திருவண்ணாமலை.
விழுப்பும் மாவட்டம், திண்டிவனத்தைச் சேர்ந்த முன்னோடி விவசாயி பாண்டியன் பதில் சொல்கிறார்.
''கிர்னி, தர்பூசணி இரண்டுமே ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவை. ஆனால், தர்பூசணியை விட நல்ல லாபம் தரக்கூடியது கிர்னி. பொதுவாக, தர்பூசணி சாகுபடி செய்தால், ஏக்கருக்கு 50 ஆயிரம் ரூபாய் வரை லாபம் கிடைக்கும். கிர்னியில் 2 லட்ச ரூபாய் வரைகூட லாபம் கிடைக்கும். கிர்னி, செம்மண் நிலத்தில் நன்றாக வளரும்.
நடவுக்கு முன்பு, ஏக்கருக்கு 5 டன் தொழுவுரம் இடுவது நல்லது. தர்பூசணி அறுவடை செய்த பின்பு... 30 நாட்கள் வரை தாக்குப் பிடிக்கும். ஆனால், கிர்னி பழம் 5 நாட்கள் வரைதான் தாங்கும். பிறகு, அழுகத் தொடங்கிவிடும். இதை கருத்தில் கொண்டு சாகுபடி செய்வது நல்லது.

அதேபோல... நீண்ட தூர பயணத்துக்கு கிர்னி ஏற்றதல்ல. தோல் மெல்லியதாக இருப்பதால், சீக்கிரமே உடைந்துவிடும். எனவே, தங்களுடைய நிலத்துக்கு அருகில் இருக்கும் நகரங்கள் மற்றும் பெருநகரங்களில் இருக்கும் சந்தை வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில், கிர்னி சாகுபடி செய்வதுதான் பொருத்தமாக இருக்கும்.
புயல், மழைக் காலங்களில் தர்பூசணி, கிர்னி ஆகிவற்றுக்கான சந்தை, இறங்குமுகமாக இருக்கும். பிப்ரவரி-மார்ச் மாதங்களில் சாகுபடி செய்தால்... ஜூன், ஜூலை மாதங்களில் அறுவடைக்கு வந்துவிடும். அதாவது, நடவு செய்த சுமார் 80 நாட்களிலேயே இவையிரண்டும், அறுவடைக்கு வந்துவிடும். இதை மனதில் வைத்து சாகுபடி செய்ய வேண்டும்.''
தொடர்புக்கு, செல்போன்: 94432-43075.
''மாடுகளுக்கு ஊட்டச்சத்துக் கொடுப்பதற்காக ரசாயன மருந்துகள் சந்தையில் ஏராளமாகக் கிடைக்கின்றன. நான், இயற்கை முறையிலான ஊட்டச்சத்துக்களைக் கொடுக்க விரும்புகிறேன். அவற்றையெல்லாம் வீட்டிலேயே தயாரிக்கும் நுட்பம் இருந்தால், சொல்லுங்கள்?''
எஸ். கண்ணன், செங்கல்பட்டு.
ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த முன்னோடி விவசாயி இந்திரா ராமநாதன் பதில் சொல்கிறார்.
''இயற்கை விவசாய நுட்பங்கள், சிறப்பாக வளர்ந்து கொண்டிக்கும் காலமிது. ஆனால், அந்த வேகத்துக்கு இணையாக கால்நடைகளுக்கான பாரம்பரிய நுட்பங்கள் வளர்ச்சி பெறவில்லை. விவசாயத்துக்குப் பயன்படுத்தும், 'பழக்காடி' என்கிற கரைசலை, சிற்சில மாற்றத்துடன் தயாரித்து, எங்கள் பண்ணையில் உள்ள 25 மாடுகளுக்குக் கொடுத்து வருகிறேன். இந்தப் பழக்காடிதான் எனக்கு கண் கண்ட மருந்து.
பழக்காடி 50 மில்லி, பஞ்சகவ்யா 50 மில்லி என்று மாற்றி மாற்றி தினமும் ஒருவேளை கொடுத்து வரலாம். அல்லது பழக்காடி மட்டுமே கூட தினமும் கொடுக்கலாம். இதன் மூலம், மாடுகள் குறித்த நேரத்தில் பருவத்துக்கு வந்துவிடும். நோய், நொடியும் அண்டாது. பாலும் கூடுதலாகக் கறக்கும்.

பழக்காடி செய்முறை: பப்பாளி, வாழைப் பழம் (தோலோடு), பரங்கிக் காய், நாட்டுச் சர்க்கரை ஆகிய நான்கையும் தலா 5 கிலோ வீதத்தில் எடுத்துக் கொள்ளவும். இத்துடன், பத்து முட்டை, ஒரு கிலோ பயறு வகை மாவு ஆகியவற்றைக் கலந்து கொள்ள வேண்டும். இவற்றை பெரிய பிளாஸ்டிக் டிரம்மில் போட்டு, 35 லிட்டர் தண்ணீர் ஊற்றி கரைத்துக் கொள்ளவும். இந்தக் கரைசலை, காற்றுப் புகாமல் மூடி நிழலில் வைக்கவும். ஏழாம் நாள் ஒருமுறை கலவையைத் திறக்கவும். அப்போது வாயு வெளியேறும். அதன் பிறகு, 45 நாட்களுக்கு இந்தக் கரைசலை, மூடிவைக்கவும்.
46-ம் நாள், கரைசல், நன்றாக நொதித்து இருக்கும். ஏறத்தாழ பீர் வாசனை அடிக்கும். இதை எடுத்து மாடுகளுக்கு 50 மில்லி வீதம் கொடுக்கலாம். பழக்காடி கால்நடைகளுக்கு மட்டுமல்ல, பயிர்களுக்கும் ஊட்டச்சத்து மிக்க பானம். 10 லிட்டர் தண்ணீரில், 200 மில்லி பழக்காடியைக் கலந்து பயிர்களில் தெளிக்கலாம். இந்தப் பழக்காடியை அதிகபட்சம் 6 மாதங்கள் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.
தொடர்புக்கு, செல்போன்: 93459-81081
''ஏலக்காய் ரகத்தில் எந்த ரகம் சிறந்தது? இயற்கை முறையில் சாகுபடி செய்ய எந்த ரகம் ஏற்றது?''
சுவாமிநாதன், போடி.
மயிலாடும்பாறையில் உள்ள இந்திய ஏலக்காய் ஆராய்ச்சி நிலையத்தின் விஞ்ஞானி முனைவர். எஸ். வரதராஜன் பதில் சொல்கிறார்.

''ஏலக்காய் ரகத்தைப் பொறுத்தவரை, நெல்லானி, வெச்சுருட்டு, ஐ.சி.ஆர்.ஐ.-5 ஆகிய ரகங்கள் பரவலாக சாகுபடி செய்யப்படுகின்றன. இதில் நெல்லானி, வெச்சுருட்டு ரகங்கள் இயற்கையாகவே விளைந்த ரகங்கள். இவை, விவசாயிகளால் பாதுகாக்கப்பட்டு, வழி வழியாக வந்து கொண்டிருக்கின்றன. ஐ.சி.ஆர்.ஐ.-5 ரகம், எங்கள் ஆராய்ச்சி நிலையத்தால் கண்டுபிடிக்கப்பட்டது. ஐ.சி.ஆர்.ஐ.-5, வெச்சுருட்டு ரகங்கள்தான் பெரும்பாலும் விரும்பி சாகுபடி செய்யப்படுகின்றன. இந்த ரகங்கள் பூச்சி எதிர்ப்புத் தன்மையும் கொண்டுள்ளதால், இயற்கை முறையில் சாகுபடி செய்ய மிகவும் ஏற்றவை. அதனால் விவசாயிகள் பலரும் இந்த ரகங்களை விரும்பி சாகுபடி செய்து வருகிறார்கள். ஏற்றுமதியிலும், இந்த ரகங்கள் முதலிடம் வகித்து வருகின்றன. பூச்சிக்கொல்லி விஷம் தெளிக்காமல், சாகுபடி செய்யும் நறுமணப் பொருட்களை அதிக விலை கொடுத்து வாங்க வெளிநாடுகள் தயாராக உள்ளன. என்பதை மனதில் கொள்ளவும்.''
தொடர்புக்கு, செல்போன்: 094461-37237.
''வேளாண் பொறியியல் துறையின் தலைமை அலுவலகம் எங்கு உள்ளது?''
க. தம்பிரான், சின்னசேலம்.
''சென்னை, நந்தனத்தில் வேளாண் பொறியியல் துறையின் தலைமை அலுவலகம் உள்ளது. இங்கு சொட்டுநீர்ப் பாசனம், வேளாண் இயந்திரங்களுக்கான மானியங்கள் உள்ளிட்ட விவரங்கள் கிடைக்கும்.
தொடர்புக்கு, வேளாண் பொறியியல்துறை,
487, அண்ணா சாலை, நந்தனம், சென்னை-600035. தொலைபேசி: 044-24352686, 24352622, 24351492.
