மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நீங்கள் கேட்டவை

சொட்டுநீர் குழாயில் உப்பு... சரி செய்வது எப்படி?புறா பாண்டி படம்: வீ. சிவக்குமார்

##~##

''சர்க்கரை வள்ளிக்கிழங்கு பற்றிய விவரங்களைச் சொல்ல முடியுமா?''

கே. சுந்தரி, சேலம்.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின், காய்கறிப் பயிர்கள் துறை விஞ்ஞானி முனைவர். புகழேந்தி பதில் சொல்கிறார்.

''சர்க்கரை வள்ளிக்கிழங்கு அற்புதமான உணவுப் பயிர். பல சத்துக்களைக் கொண்டிருக்கும் இனிப்பான இக்கிழங்கு, ஒரு காலத்தில் அனைவராலும் விரும்பி உண்ணப்பட்டு வந்தது. மாறிவரும் உணவுப் பழக்கத்தால், இக்கிழங்கையும் ஒதுக்கி விட்டோம். அதனால், சரியான விற்பனை வாய்ப்பு இல்லாததால், சாகுபடிப் பரப்பு குறைந்து விட்டது. இதன் அருமை பற்றித் தெரிந்த விவசாயிகள், வீட்டுத் தேவைக்காக மட்டும்தான் சாகுபடி செய்து வருகிறார்கள். இதன் இலைகளும்கூட சுவையாக இருக்கும். இலைகளை, பொரியல், சாலட்... என்று தயாரித்து சாப்பிடலாம். புதுச்சேரி அருகேயுள்ள 'ஆரோவில்’ பகுதியில் தங்கியிருக்கும் வெளிநாட்டுக்காரர்கள், இக்கிழங்கை அதிகளவில் பயிர் செய்வதோடு... பொரியல், மசியல் என விதவிதமாக சமையல் செய்து அன்றாட உணவிலும் சேர்த்துக் கொள்கிறார்கள்.

நீங்கள் கேட்டவை

நடவு செய்த 100-ம் நாளில் இது அறுவடைக்கு வந்து விடும். ஏக்கருக்கு 25 டன் விளைச்சல் கிடைக்கும். ஜூன்-ஜூலை மற்றும் செப்டம்பர்-அக்டோபர் மாதங்கள் பயிர் செய்ய ஏற்றவை. தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில், கோ-1, கோ-2, கோ-3 என மூன்று ரகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. தவிர, சர்க்கரை நோய் உள்ளவர்களும் சாப்பிடும்படியாக, குறைவான இனிப்புச் சுவையுடன், வைட்டமின்-ஏ சத்தோடு கூடிய புதிய ரகங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. விரைவில் இந்த ரகம், விவசாயிகளுக்கு அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இக்கிழங்கில் 'ஸ்டார்ச்’ தயாரிப்பது பற்றி மேற்கொண்ட ஆய்வில், மரவள்ளிக் கிழங்கைவிட, இதில் அதிகளவு ஸ்டார்ச் இருப்பது தெரிய வந்திருக்கிறது. இதன் மூலம், ஸ்டார்ச் தயாரிக்கத் தொடங்கினால், சர்க்கரை வள்ளி சாகுபடிக்கு பரவலாக வாய்ப்புகள் ஏற்படும்.''

தொடர்புக்கு, செல்போன்: 94434-98469

''சொட்டுநீர்ப் பாசனக் குழாயில் உப்பு அடைத்துக் கொள்கிறது. அதை நீக்க 'ஹைட்ரோ-குளோரிக்’ அமிலத்தைப் பயன்படுத்தலாமா?''

ம. சிவராமன், வலையப்பட்டி.

காங்கேயத்தை சேர்ந்த சொட்டுநீர்ப் பாசன ஆலோசகர், எஸ். ராஜாமணி பதில் சொல்கிறார்.

நீங்கள் கேட்டவை

''சொட்டுநீர்க் குழாய்களைப் பராமரிப்பதில் உள்ள கவனக்குறைவால்தான் உப்பு அடைத்துக் கொள்ளும் பிரச்னை வருகிறது. அறுவடை முடிந்த பிறகு, சொட்டுநீர்க் குழாய்களை சுருட்டி வைக்கும்போது உள்ளே தேங்கும் நீர் ஆவியாவதால், குழாய்களில் உப்பு படிந்து விடுகிறது. அதனால், நீரை வடித்து சுத்தம் செய்த பிறகுதான் சுருட்டி வைக்கவேண்டும். 'ஹைட்ரோ-குளோரிக்’ அமிலம், கடுமையான பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய ரசாயனப் பொருள். இது, முறையாகப் பயன்படுத்தப் படாவிட்டால்... மனிதர்களுக்கும், பயிர்களுக்கும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. அதனால், இதைத் தவிர்ப்பது நல்லது. 'இ.எம்.’ என்று சொல்லப்படுகிற இயற்கைப் பயிர் வளர்ச்சி ஊக்கியை பாசன நீருடன் கலந்து, சொட்டுநீர்க் குழாய் மூலம் பாசனம் செய்தால்... உப்பு அடைப்புப் பிரச்னை வராது. ஜீவாமிர்தம், பஞ்சகவ்யா... போன்ற பயிர் வளர்ச்சி ஊக்கிகளைப் பயன்படுத்துபவர்களுக்கும் இப்பிரச்னை வருவதில்லை. பயிர் வளர்ச்சி ஊக்கிகளில் உள்ள நுண்ணுயிரிகள், சொட்டுநீர்க் குழாயில் உள்ள உப்புகளைத் தின்று விடுவதால், உப்பு பிரச்னையின்றி தண்ணீர் தடையின்றி சொட்டுகிறது.''

தொடர்புக்கு, செல்போன்: 94433-57180.

''எங்கள் பண்ணையில் உள்ள கறவை மாட்டின் காம்புகள் கடினமாக உள்ளன. அதை எப்படி சரி செய்வது? ஆகாயத்தாமரை, வெங்காயத்தாமரை இலைகளை மாடுகள் சாப்பிட்டால் பாதிப்பு ஏற்படுமா?''

ஆர். செந்தில்குமார், பவானிசாகர்.

மதுரையைச் சேர்ந்த பாரம்பரிய கால்நடை மருத்துவர். ராஜமாணிக்கம் பதில் சொல்கிறார்.

''பால் கறக்கும்போது, நம் கைகள் சுத்தமாக இருக்க வேண்டும். நகங்கள் அதிகமாக இருந்தால், காம்புகளில் கீறல் ஏற்பட்டு கல் போன்ற வடுக்கள் வந்துவிட வாய்ப்புகள் உள்ளன. சில சமயங்களில் இயற்கையாகவே மாட்டின் காம்பானது... கல் போல இருப்பதுண்டு. சோற்றுக்கற்றாழை, வேப்பிலை, பேய் பீர்க்கன் இலைகளில், தலா ஒரு கைப்பிடி வீதம் எடுத்துக் கொண்டு அவற்றை நன்றாக அரைத்து காம்புகளில் ஒரு வாரத்துக்குத்  தடவி வந்தால்... சரியாகி விடும்.

நீங்கள் கேட்டவை

மடி முதல் காம்பு வரை அனைத்துமே இறுகிப்போகும் நோயும் சமயத்தில் வருவதுண்டு. இதனால், பால் குறைந்து விடும். அரை கிலோ உருளைக்கிழங்கை வேக வைத்து, இரண்டு எலுமிச்சம்பழங்களைப் பிழிந்து, பிசைந்து வைத்துக் கொள்ள வேண்டும். இதை இரண்டாகப் பிரித்து காலை, மாலை என இருவேளைகளுக்குக் கொடுக்க வேண்டும். இதுபோல மூன்று நாட்கள் கொடுத்து வந்தால், கல் போன்ற மடி பஞ்சு போல இளகிவிடும். பாலும் கூடுதலாகக் கிடைக்கும்.

வெங்காயத்தாமரை, ஆகாயத்தாமரை இலைகள் அற்புதமான கால்நடைத் தீவனங்கள். என்னுடைய அனுபவத்தில்... மாடுகளுக்கு தினமும் 20 கிலோ வரை கொடுத்துள்ளேன். இவற்றை சாப்பிட்ட மாடுகள் மற்ற மாடுகளைவிட கூடுதலாக பால் கறந்தன. பரிசோதனைக்காக, மாடுகளுக்கு கொஞ்சம், கொஞ்சமாகக் கொடுத்துப் பாருங்கள். சில மாதங்களில் நிச்சயம் நல்ல மாற்றம் தெரியும்.''

தொடர்புக்கு, செல்போன்: 99432-65061.

''தமிழ்நாட்டில் சாம்பிராணி மரம் வளர்க்க முடியுமா?''

எஸ். கீர்த்திவர்மன், திருக்கழுக்குன்றம்.

நீலகிரி மாவட்ட தோட்டக்கலை அலுவலர், ராம்சுந்தர் பதில் சொல்கிறார்.

''ஒரு வகை குங்கிலிய மரத்தின் பட்டையில் இருந்து கிடைக்கும் கோந்துதான் சாம்பிராணி. இதை 'டாமர்’ என்பார்கள். சீமைக் குங்கிலியம், கருங்குங்கிலியம், வெள்ளைக் குங்கிலியம், பூனைக்கண் குங்கிலியம் எனப் பல வகைகள் உண்டு. கர்நாடகா, கேரளா மற்றும் தமிழகம் ஆகிய மாநிலங்களில் நீண்டிருக்கும் மேற்குத் தொடர்ச்சி மலைக்காடுகளில் வெள்ளைக் குங்கிலியம் அதிகளவில் உள்ளது. இது அதிக மருத்துவப் பயன்களைக் கொண்டது. இதை நாட்டுக் குங்கிலியம் என்றும் சொல்வார்கள். இதன் தாவர இயல் பெயர் 'வெட்டேரியா இண்டிகா’ (க்ஷிணீtமீக்ஷீவீணீ வீஸீபீவீநீணீ). 100 அடி உயரம் வரை வளரக் கூடிய பசுமை மாறாத மர இனம் இது. கடல் மட்டத்தில் இருந்து 1,200 மீட்டர் உயரம் கொண்ட இடத்தில் மட்டும்தான் வளரும்.

நீலகிரிப் பகுதியில் ஏராளமான குங்கிலிய மரங்கள் இருந்தாலும், இவற்றிலிருந்து சாம்பிராணி எடுக்க முடியாது. மரப்பட்டைகளில் வாசனை மட்டும்தான் வரும். இலை, மரப்பட்டைகளில் இருந்து, மருந்தும்; விதைகளில் இருந்து எடுக்கப்படும் எண்ணெயைப் பயன்படுத்தி சோப், மெழுகுவர்த்தி போன்றவையும்தான் உற்பத்தி செய்யப்படுகின்றன. வடகிழக்கு மாநிலங்களில்தான், சாம்பிராணி தயாரிக்கப் பயன்படும் மரங்கள் உள்ளன. தமிழ்நாட்டில், இந்த ரகங்களை யாரும் சாகுபடி செய்தது போலத் தெரியவில்லை. நடவு செய்த 15 ஆண்டுகள் கழித்துத்தான், இது பலன் கொடுக்கத் தொடங்கும். தவிர, 'அந்த மாநிலங்களில் கிடைப்பது போல வாசனையான சாம்பிராணி கிடைக்குமா?’ என்பதும் சந்தேகம்தான். ஆகையால், சோதனை முயற்சியாக ஒரு சில மரங்களை மட்டும் வளர்த்து பார்ப்பது நல்லது.''

''தேனீ வளர்க்க விரும்புகிறேன். தேனீப் பெட்டிகள் எங்கு கிடைக்கும்?''

ரகு சங்கரன், மன்னார்குடி.

''கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில், பூச்சியியல் துறை உள்ளது. இங்கு ஒவ்வொரு மாதமும் 6-ம் தேதி தேனீ வளர்ப்புப் பயிற்சி நடைபெற்று வருகிறது. பயிற்சியின்போது, நேரடி செயல் விளக்கம், பெட்டி மற்றும் உபகரணங்கள் வாங்கவும் வழி காட்டுகிறார்கள்.''

தொடர்புக்கு, தொலைபேசி: 0422-6611214.

விவசாயம், கால்நடை, மீன்வளம் மற்றும் சுற்றுச்சூழல் என்று பல துறைகள் பற்றி வாசகர்களின் சந்தேகங்களுக்கான பதில்களை உரிய நிபுணர்களிடம் பெற்றுத் தருவதற்காகவே 'புறா பாண்டி' சும்மா 'பறபற'த்துக் கொண்டிருக்கிறார். உங்கள் கேள்விகளை

'நீங்கள் கேட்டவை', பசுமை விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-2. என்ற முகவரிக்கு தபால் மூலமும் pasumai@vikatan.com என்ற முகவரிக்கு இ-மெயில் மூலமும்   PVQA (space)- உங்கள் கேள்வி (space) உங்கள் பெயர் டைப் செய்து 562636 என்ற எண்ணுக்கு செல்போன் மூலமும் அனுப்பலாம்.