மரத்தடி மாநாடு - ஒரு டன் பனங்கொட்டை ரூ. 1,800
##~## |
ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு விட்டுக் கொண்டிருந்த 'ஏரோட்டி’ ஏகாம்பரம், வரப்பில் வந்து கொண்டிருந்த 'வாத்தியார்’ வெள்ளைச்சாமியிடம், ''என்னய்யா... பொங்கல் முடிஞ்சதுமே ஆள காணல?'' என்று சத்தமாகக் குரல் கொடுக்க... மரத்தடியில் அமர்ந்து லேசாக கண்ணயர்ந்த 'காய்கறி’ கண்ணம்மா 'திடுக்’கிட்டு விழித்தார்.
''அமெரிக்காவுல இருக்குற மகன், ஒரு மீட்டிங்குக்காக சென்னைக்கு வந்திருந்தான். அப்படியே வேலை முடிஞ்சதும் ஊருக்கு வர்றதா சொல்லியிருந்தான். ஆனா, திடீர்னு போன் போட்டு, 'புரோக்ராம் மாறிடுச்சு, ஊருக்கு வர முடியாது’னுட்டான். பையனைப் பாத்து வருஷக் கணக்காச்சு. அதான், 'ஒரு எட்டு போய் பாத்துட்டு வந்துடலாம்’னு நானும் வீட்டுக்காரம்மாவும் போய் பாத்துட்டு வந்தோம்'' என்று சொந்த கதை சொன்ன வாத்தியார்...
''சரிசரி நாட்டுக்கதையைப் பேசுவோம்'' என்றபடியே..
''தமிழ்நாட்டுல தரமான உரத்தையும் பூச்சிக்கொல்லியையும்தான் விக்கிறாங்களானு சோதனை செய்றதுக்காக... வேளாண்மைத் துறை ஆணையர் தலைமையில அஞ்சு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைக் கொண்ட குழுவை அமைச்சுருக்காங்க. இவங்கதான், வேளாண்மைத்துறையில நிர்வாகரீதியாக ஏற்பட்டிருக்குற பிரச்னைகளை சரி பண்ணி, மாநிலத்துல விவசாயத்துக்கான சீரமைப்பு நடவடிக்கைகளை எடுக்கப் போறாங்களாம்'' என்று செய்தி சொன்னார்

''நிர்வாக பிரச்னை சரி... விவசாயத்துக்கான சீரமைப்புகளை இந்த அஞ்சு அதிகாரிக எப்படிய்யா சரி பண்ண முடியும்? அவங்கள்லாம் ஏ.சி. ரூமுக்குள்ள உக்காந்துக்கிட்டு, கீழ வேலை பாக்குற அதிகாரிகள் சொல்ற தகவல்களை வெச்சு எதையாவது பண்ணினா சரியாகிடுமா? ஒவ்வொரு தடவையும் புயல், வெள்ளம்னு பாதிப்பு வர்றப்போ கீழ இருக்குற அதிகாரிக, அவங்களா ஒரு கணக்கைத் தயார் பண்ணி கொடுத்துடுவாங்க. கடைசியில பாத்தா... விவசாயிகளுக்குக் கிடைக்கிற பணம், டீ செலவுக்குக்கூட பத்தாது. அதேமாதிரி, நெல் போட்டுருக்குற வயலை அரசாங்க ரெக்கார்டுல கரும்புனு பதிஞ்சு வெச்சுருப்பாங்க. ஆத்துப்பாசனத்துல விளையுற வயலை புஞ்செய்னு போட்டு வெச்சிருப்பாங்க. அதனால, விவசாயப் பிரதிநிதிகளையும் இந்தக் குழுவுல சேர்த்தாத்தான்... நிஜமான நிலவரம் தெரிய வரும்'' என்றார் ஏரோட்டி.
''இந்தாளு சொல்றதும் சரிதானே!'' என்று காய்கறி வக்காலத்து வாங்க...
''உனக்கும் எனக்கும் தெரியுது. இதெல்லாம் முதலமைச்சர், அமைச்சர்னு நம்மகிட்ட ஓட்டு வாங்கி ஜெயிச்சு, கோட்டையில குந்தியிருக்கறவங்களுக்குள்ள தெரியணும். எல்லாரும் கைகட்டி, வாய் பொத்திக்கிட்டுல்ல அந்தம்மா முன்ன நிக்கறாங்க. 'யெஸ் மேடம்’, 'சாரி மேடம்’னு ரெண்டே ரெண்டு வார்த்தையைச் சொல்லிக்கிட்டுத்தான அமைச்சருங்க... அதிகாரிங்க பொழப்பு ஓட்டிக்கிட்டுருக்காங்க'' என்று சிரித்தார் வாத்தியார்.
''இவங்கள்ல்லாம் இப்படி இருக்கறதாலதான் தமிழ்நாட்டுல விவசாயிகள் தற்கொலை செஞ்சுக்கிட்டும், மாரடைப்பு ஏற்பட்டும் அடுத்தடுத்து செத்துக்கிட்டிருக்காங்க. இப்போகூட பாரு, திருத்துறைப்பூண்டிக்குப் பக்கத்துல இருக்குற ஆலத்தூர்ல சாம்பசிவம்ன்ற விவசாயி, தண்ணியில்லாம பயிர் காய்ஞ்சு கிடக்குறதைப் பாத்ததும் வயகாட்டுலயே மாரடைப்பு வந்து செத்துப் போயிட்டாராம். நாப்பத்தஞ்சு வயசுதான் ஆகுதாம். ரெண்டு பொண்ணுங்க வேற இருக்குதுங்களாம், பாவம்'' என்று ஏகத்துக்கும் வருத்தப்பட்டார் ஏரோட்டி.
''ஆம்பளைப் புள்ளைங்க இருந்தாலே, இந்தக் காலத்துல கரையேத்துறது கஷ்டம். இதுல ரெண்டு பொட்டப் புள்ளைங்கள வெச்சுக்கிட்டு, அந்தக் குடும்பம் என்ன பாடுபடுமோ...?'' என்று கண் கலங்கினார் காய்கறி.
''அடுத்தடுத்து விவசாயிங்க செத்துக்கிட்டிருக்காங்க. அவங்களுக்கெல்லாம் நிவாரண நிதிங்கறத பத்தி இந்த அரசாங்கம் வாயையே தொறக்க மாட்டேங்குது. அட, ஒரு இரங்கல் செய்தியைக் கூட சொல்ல மாட்டேங்குறாங்க இந்தம்மா. ஒருவேளை செத்துப்போனதெல்லாம் தி.மு.க. விவசாயினு யாராவது அந்தம்மாகிட்ட சொல்லிட்டாங்களோ... என்ன இழவோ'' என்று கோபப்பட்ட வாத்தியார்,
''இந்தக் கொடுமை ஒரு பக்கம்னா... இந்த மாதிரி விஷயத்தை எப்படியாவது மூடி மறைக்கணும்னு இறந்தவங்க குடும்பத்து ஆளுங்களை போலீஸை வெச்செல்லாம் மிரட்டுறாங்களாம். லோக்கல் பத்திரிகை நிருபர்கள் சிலரும்கூட இதுமாதிரி விஷயங்களுக்கு உடந்தையா இருக்கறாங்களாம். இதுக்கு நடுவுல, 'யானை' ராஜேந்திரன்கிற வக்கீல்தான் ஆறுதலா இருக்காரு. தற்கொலை செய்துகிட்ட விவசாயிங்க குடும்பத்துக்கு நிவாரணம் தரணும்னு உயர் நீதிமன்றத்துல அவர் போட்ட கேஸு சூடு பிடிச்சுருக்கு. 'நிவாரணம் தர்றது தொடர்பான கணக்கெடுப்பு நடக்குது'னு போன வாய்தாவுல சொன்ன அரசுத் தரப்பு வக்கீல், இந்தத் தடவை, 'தமிழ்நாட்டுல விவசாய தற்கொலைகளே கிடையாது. அவனவன் குடும்பப் பிரச்னையிலதான் செத்துருக்கான்'னு விவசாயிங்கள நீதிமன்றத்துல கேவலப் படுத்தியிருக்காரு. கொதிச்சுப் போன ராஜேந்திரன், 'எல்லாமே விவசாய தற்கொலைகள்தான். இதுக்கு ஆதாரம் இருக்கு. வழக்கை சி.பி.ஐ-கிட்ட ஒப்படைங்க உண்மை தெரிஞ்சுடும் சொல்ல... தமிழக அரசுக்கிட்ட இதுபத்தி விளக்கம் கேட்டிருக்காங்க நீதிபதிங்க'' என்று சொன்னார்.
''ம்... நீதிபதிங்களா பார்த்து கேள்வி கேட்டாத்தான் உறைக்கும் போல'' என்று சீறித்தள்ளிய காய்கறி, கூடையில் இருந்த தர்பூசணியை எடுத்து அரிவாளால் வேகமாக சீவி, ஆளுக்கொரு கீற்றாக கொடுத்துவிட்டு,
''வருஷா வருஷம் பொங்கலை ஒட்டி பனங்கிழங்கு கனஜோரா விக்குமுல்ல. அதுல கிடைக்கிற பனங்கொட்டையை செங்கல் சூளை, சுண்ணாம்பு காளவாய்னு எரிக்க வாங்கிட்டுப் போவாங்களாம். இது நல்லா நின்னு எரியுங்கிறதால செம கிராக்கியாம். இந்த வருஷம் ஒரு டன் பனங்கொட்டை 1,800 ரூபாய்க்கு விலை போயிட்டிருக்காம். பனங்கிழங்குக்கும் பதனிக்கும்கூட இந்த விலை கிடைக்காது போலிருக்கு'' என்றபடியே கூடையைத் தூக்க... அன்றைய மாநாடு முடிவுக்கு வந்தது.
கூட்டு முயற்சியே !
''பசுமை விகடன்' 25.01.13 தேதியிட்ட இதழில், 'வருகிறது, வறட்சி... வாருங்கள், சமாளிப்போம்....’ என்ற தலைப்பில், விழுப்புரம் மாவட்டம், நடுக்குப்பம் கிராமத்தை, ஆரோவில்லின் பிச்சாண்டிக்குளம் காடு மற்றும் பேர் ஃபூட் அகாடமி ஆகிய அமைப்புகள் தத்தெடுத்திருப்பதாக எழுதப்பட்டுள்ளது. ஆனால், 'தொலைநோக்குப் பார்வையில் நடுக்குப்பம்’ என்கிற பயிற்சிப் பட்டறையை, நடுக்குப்பம் ஊராட்சி, ஆரோவில்லின் பிச்சாண்டிக்குளம் காடு மற்றும் பேர்ஃபூட் அகாடமி ஆகிய அமைப்புகள் கூட்டாக ஏற்பாடு செய்திருக்கின்றன என்பதுதான் சரி.
கிராம மேம்பாட்டுக்கான செயல்பாடுகளை முன்னெடுப்பதில், நடுக்குப்பம் ஊராட்சி மன்றமும் அதைச் சார்ந்த நடுக்குப்பம், தேவிகுளம், கோட்டிக்குப்பம் மற்றும் வண்டிப்பாளையம் ஆகிய கிராம மேம்பாட்டுக் குழுக்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.''
-வாசுகி மோகனசுந்தரம், தலைவர், நடுக்குப்பம் ஊராட்சி, மரக்காணம் ஒன்றியம், விழுப்புரம் மாவட்டம்.
'மக்கள் சக்தி இயக்க' தலைவர் எம்.எஸ் உதயமூர்த்தி (85), ஜனவரி 21அன்று சென்னையில் இயற்கை எய்தினார். மயிலாடுதுறை பகுதியைச் சேர்ந்த இவர், வெளிநாடுகளில் பணியாற்றிஉள்ளார். அங்குள்ள முன்னேற்றத்தைப் பார்த்து, தன்னம்பிக்கை, சுயமுன்னேற்ற நூல்களை நிறைய எழுதியுள்ளர். வறட்சியைத் தடுக்க இந்தியாவில் உள்ள நதிகளை இணைக்க தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார். இதற்காக நான்கு முறை, நடைபயணம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நதிநீர் நாயகன் !

'மக்கள் சக்தி இயக்க' தலைவர் எம்.எஸ் உதயமூர்த்தி (85), ஜனவரி 21அன்று சென்னையில் இயற்கை எய்தினார். மயிலாடுதுறை பகுதியைச் சேர்ந்த இவர், வெளிநாடுகளில் பணியாற்றிஉள்ளார். அங்குள்ள முன்னேற்றத்தைப் பார்த்து, தன்னம்பிக்கை, சுயமுன்னேற்ற நூல்களை நிறைய எழுதியுள்ளர். வறட்சியைத் தடுக்க இந்தியாவில் உள்ள நதிகளை இணைக்க தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார். இதற்காக நான்கு முறை, நடைபயணம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.