மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மரத்தடி மாநாடு - சேனைக்கிழங்குக்கு... செம கிராக்கி...!

ஓவியம்: ஹரன்

##~##

தோட்டத்துக்குச் செல்லும் பாதையில், மிதிவண்டியை 'வாத்தியார்’ வெள்ளைச்சாமி தள்ளிக்கொண்டு வர, பின்னால் தட்டுக் கூடையுடன் வந்து கொண்டிருந்தார், 'ஏரோட்டி’ ஏகாம்பரம். குறுக்கு வழியில் வந்துசேர்ந்த 'காய்கறி’ கண்ணம்மாவும் இணைந்துகொண்டார்...

 ''ஏதாவது முக்கிய சேதி இருக்குங்களாய்யா...?'' என்று கேட்டு காய்கறியே மாநாட்டைத் துவக்கி வைக்க...

''சட்டசபை கூடியிருக்கு. வழக்கம்போல எதிர்க்கட்சிக்காரங்க வெளிநடப்பு பண்ண ஆரம்பிச்சுட்டாங்க...'' என்று வாத்தியார் சொல்லிமுடிக்கும் முன்னரே,

''வெளிநடப்பு செய்றதுக்கு... வராமலே வீட்டுல இருந்துடலாம்ல..?'' என்று உண்மையாகவே சந்தேகம் கேட்டார் காய்கறி.

மரத்தடி மாநாடு - சேனைக்கிழங்குக்கு... செம கிராக்கி...!

'க்ளுக்'கென்று சிரித்த ஏரோட்டி... ''ம்... சட்டசபைக்கு வராம இருந்துட்டா ஆப்சென்ட் போட்டு 'சிட்டிங் ஃபீஸ்’ கொடுக்காம விட்டுடுவாங்க. வந்து கையெழுத்து போட்டுட்டு வெளிநடப்பு செஞ்சா... ஃபீஸ் தப்பாம கிடைச்சுடும். போட்டோவும் பிடிச்சு பேப்பர்லயெல்லாம் போடுவாங்களே...'' என்று சொல்லி, இருவரையும் பார்த்தார்!

''அட நீ வேற... சர்க்கஸ் கோமாளி கணக்கா எதையாச்சும் பேசிக்கிட்டு'' என்று சிடுசிடுத்த வாத்தியார்,

''அதிகாரம் இருக்கற ஆளுங்கட்சிக்காரங்களே, மக்களுக்காக சபையில பேசுறதில்லை. இதுல எதிர்கட்சிக்காரங்க என்னத்த பேசிக் கிழிக்கப் போறாங்க. அப்படியே பேச வாயைத் தொறந்தாலும்... ஒண்ணு மேஜையை தட்டியே வாயை மூட வெச்சுடறாங்க ஆளுங்கட்சிக்காரங்க. இல்லைனா... வெளிநடப்பு செய்ய வெச்சுடறாங்க.

டெல்டா பகுதியில விவசாயிகள் தற்கொலை செய்துகிட்டது பத்தின விவாதத்துல, வருவாய்துறை அமைச்சர் வெங்கடாசலம், 'விவசாயிங்க இறந்திருக்கறது பத்தி மாவட்ட கலெக்டர்கள் அறிக்கை கொடுத்தா... முதல்வர் நிவாரணம் கொடுப்பார்’னு சொல்றார். நிதியமைச்சர் பன்னீர்செல்வமோ... 'வறட்சி காரணமா விவசாயிங்க தற்கொலை செஞ்சுக்கல. ஒவ்வொருத்தர் இறந்ததுக்கும் ஒவ்வொரு காரணம் இருக்கு’னு விவசாயிகள கேவலப்படுத்தியிருக்கார். பிறகெப்படி... 'விவசாயி தற்கொலைதான் செஞ்சுக்கிட்டார்’னு கலெக்டருங்க அறிக்கை கொடுப்பாங்க?'' என்று ஆதங்கம் பொங்கச் சொன்னார்.

அப்போது, தோட்டம் வந்து சேர்ந்துவிட... மரத்தடியில் இடம்பிடித்தனர் மூவரும். உடனே, தானொரு செய்தியைச் சொல்ல ஆரம்பித்தார் ஏரோட்டி!

''காஞ்சிபுரம் மாவட்டத்துல, அதிகமான தண்ணீர் பற்றாக்குறை. அதை சரி பண்றதுக்கு நிறைய முயற்சிகள் எடுத்துக்கிட்டு இருக்காங்களாம். அதுக்காக 'சொட்டுநீர்ப் பாசனம்’ பத்தி விளக்கம் கொடுக்கறதுக்காக சிறப்பு முகாம்கள் நடத்தியிருக்காங்க. சொட்டுநீர்ப் பாசனம் அமைக்க மானியம் கேட்டு

495 பேர் மனு கொடுக்க... உடனடியா கொடுக்கச் சொல்லி உத்தரவு போட்டுட்டாராம் கலெக்டர். தோட்டக்கலை, விவசாயத்துறை அதிகாரிகளும் கொடுக்கறதுக்கு தயாரா இருக்காங்க. ஆனா... இந்த பட்டா, சிட்டா, அடங்கல் எல்லாத்தையும் தாலூகா ஆபீஸ்ல வாங்குறதுக்குள்ள விவசாயிகளுக்கு தாவு தீந்துடுதாம்.

கலெக்டர் சொல்லியும், வருவாய்துறை அதிகாரிகள் இதைக் கண்டுக்கவே இல்லையாம். விவசாயிகள்லாம் புலம்பிக்கிட்டு இருக்காங்க'' என்றார்.

வீட்டிலிருந்து தான் சமைத்துக் கொண்டு வந்திருந்த சேனைக்கிழங்கு வறுவலை எடுத்து, ஆளுக்குக் கொஞ்சம் கொடுத்த காய்கறி, ''இப்போலாம் நாமக்கல் மாவட்டத்துல பல பகுதிகள்ல தண்ணி பத்தாக்குறையால, நிறைய சம்சாரிங்க சேனைக்கிழங்கு சாகுபடி பண்ண ஆரம்பிச்சுட்டாங்க. குறிப்பா, பள்ளிப்பாளையத்த சுத்தி இருக்குற ஊர்கள்ல நெல், கரும்பு போட்ட வயல்கள்ல எல்லாம், இப்போ சேனைக்கிழங்குதான். இதுக்குக் கொஞ்சமா தண்ணி இருந்தா போதுமாம்.

வடமாநிலங்கள்ல இந்தக் கிழங்குக்கு நல்ல கிராக்கி இருக்கறதால ஓரளவுக்கு கட்டுப்படியான விலையும் கிடைக்குதாம். ஒரு ஏக்கர்ல 10 டன் வரைக்கும் கிழங்கு கிடைக்குமாம். இப்போதைக்கு ஒரு டன் 24 ஆயிரம் ரூபாய்க்கு விலை போயிட்டிருக்கு'’ என்ற அருமையான தகவல் தந்தார்!

கிழங்கைச் சாப்பிட்டுக் கொண்டே... ''வழக்கமா, தேங்காய்களை உடைச்சு மொத்தமா களத்துல காய வெச்சுதான் கொப்பரைகளை விப்பாங்க. அதுல தூசு, மண் எல்லாம் படியும். அதிகப்பனி இருந்தா தேங்காய் பருப்பு கருப்பாயிடும். இப்படி இருந்தா பூஞ்சணம் தாக்கி, விலையும் குறைஞ்சுடும். அதையெல்லாம் தவிர்த்து, கொப்பரைத் தேங்காயைத் தரம் குறையாம சீக்கிரம் காய வெக்கிறதுக்காக, வேளாண்மைத்துறை சார்புல ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்காங்க. தேவையான அளவுக்கு சிமெண்ட் தளம் போட்டு பசுமைக்குடில் மாதிரி ஒரு அமைப்பைச் செஞ்சுக்கணும். இதுக்குள்ளாற, காற்றை வெளியேத்துற கருவி, வெப்பத்தைப் பராமரிக்கிற கருவியெல்லாம் இருக்கும். இந்தக் குடிலுக்குள்ள மூணே நாள்ல தேங்காயை கொப்பரையா மாத்திடலாமாம். இதை அமைக்கிறதுக்கு 50 ஆயிரம் ரூபாய் வரை மானியமும் இருக்குதாம்'' என்று சொன்னார்.

மரத்தடி மாநாடு - சேனைக்கிழங்குக்கு... செம கிராக்கி...!

''ஏன்யா நீ வேற... கொப்பரைத் தேங்காய்க்கு எல்லாம் இப்ப விலையே கிடைக்கிறதில்லை. பத்து வருஷத்துக்கு முன்ன ஒண்ணரை ரூபாய்க்கு வித்த டீ, இப்ப ஏழு ரூபாய். ஆனா, அப்பவும் விவசாயிகிட்ட தேங்காய் ரெண்டு ரூபாதான். இப்பவும் ரெண்டு ரூபாய்தான். வயித்தெரிச்சலா இருக்கு. இப்போ, கொஞ்ச நாளா கொப்பரை விலையும் சரிஞ்சுக்கிட்டே இருக்கு.

போன வருஷம் ஒரு கிலோ கொப்பரைக்கு 50 ரூபாய்க்கு மேல விலை கிடைச்சது. இப்போ ஒரு கிலோ 35 ரூபாய்க்குத்தான் விலை போகுது. இருக்கற நிலைமையைப் பாத்தா... இனிமே தென்னை விவசாயம்கூட செய்ய முடியாது போல இருக்கு'' என்று வருத்தமாகச் சொன்ன ஏரோட்டி,

''மாடுகளுக்குத் தீவனம் அறுத்துட்டு வந்துடறேன்'' என்று எழுந்து நிக்க...

''ஒரு நிமிஷம்...'' என்று கூடையோடு எழுந்த காய்கறி, 'மாரியில்ல, மழையுமில்ல பச்சையாகுது. பூவும் இல்ல, காயும் இல்ல பழம் பழுக்குது' இது என்னனு தெரியுமா?'' என்று என்று கேட்டார்.

வாத்தியாரும், ஏரோட்டியும் தலையைச் சொறிய... ''அடுத்த தடவை விடையோட வாங்க...'' என்றபடியே காய்கறி நடையைக் கட்ட...  மாநாடும் முடிவுக்கு வந்தது!

டிஜிட்டல் போர்டில் விலை விவரம்...

 தமிழகத்தில் இருக்கும் அனைத்து ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களிலும், விளைபொருட்களை விற்பனை செய்ய வரும் விவசாயிகள், விளைபொருட்களின் விலையை பிற மாவட்ட, மாநிலங்களின் விலைகளுடன் ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ள வசதியாக 'டிஜிட்டல் போர்டு’ நிறுவப்பட்டு வருகிறது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளின் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களின் முக்கிய 12 பொருட்களின் நடப்பு விலை விவரம், மூன்று மாதங்களுக்குப் பிறகு கிடைக்க வாய்ப்புள்ள தோராய விலை விவரம் போன்றவை இதில் இடம் பிடிக்கும்.

பசுமைக் குழுக்களுக்கு

மரத்தடி மாநாடு - சேனைக்கிழங்குக்கு... செம கிராக்கி...!

1.35 கோடி...

தமிழகத்தில், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் விதமாக, 1998-ம் ஆண்டில் 170 பள்ளிகளில் பசுமைக்குழுக்கள் அமைக்கப்பட்டு பள்ளிப் பாடங்களுடன், சுற்றுச்சூழல் கல்வியையும் சேர்த்து கற்றுக்கொடுத்து வருகிறார்கள். அது கொஞ்சம் கொஞ்சமாக விரிவுபடுத்தப்பட்டு, தற்போது 1,869 குழுக்கள் அமைக்கப்பட்டு 50 ஆயிரம் மாணவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். தற்போது மாநிலம் முழுவதும்

3 ஆயிரத்து 200 பள்ளிகளில் இத்திட்டத்தை செயல்படுத்த உத்தரவிட்டிருக்கிறார், முதலமைச்சர் ஜெயலலிதா. குழுக்கள் அமைப்பது, மண், காற்று, நீர் ஆய்வுக்கான, உபகரணங்கள் வாங்குவது போன்ற செலவினங்களுக்காக 1.35 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருக்கிறது.