மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நீங்கள் கேட்டவை

புறா பாண்டி படங்கள்: தி.விஜய்

##~##

''எங்கள் பகுதியில் பலத்தக் காற்று வீசுகிறது. காற்றில் வாழை மரங்கள் சாயாமல் காப்பாற்றுவது எப்படி?''

 க. குணசேகரன், செங்கம்.

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த அனுபவ விவசாயி மூர்த்தி பதில் சொல்கிறார்.

''எங்கள் பகுதியிலும் காற்று வேகமாக வீசுவதால், வாழை சாகுபடி செய்யவே பயப்படுவார்கள். ஆனால், எளிமையான சில விஷயங்களை செயல்படுத்தி, நான் காற்றிலிருந்து மரங்களைக் காப்பாற்றி வாழை சாகுபடி செய்து வருகிறேன். வாழைக்குக் குழி எடுக்கும்போது, வழக்கமான அளவில் எடுக்காமல், பக்கத்துக்குப் பக்கம், வரிசைக்கு வரிசை 7 அடி இடைவெளியில், 3 அடி அகலம், 3 அடி ஆழத்துக்குக் குழி எடுக்க வேண்டும். குழிக்குள், ஒரு அடிக்கு மண்ணை நிரப்பி, மையத்தில் வாழைக்கன்றை நடவு செய்ய வேண்டும். குழியில் இருந்து கன்று வளர, வளர கொஞ்சம் கொஞ்சமாக மண்ணைத் தள்ளிக் கொண்டே வர வேண்டும். இப்படிச் செய்தால்... வளர்ந்த பிறகு, சுமார் இரண்டடி அளவுக்கு மரம் மண்ணுக்குள் புதைந்து விடும். இதனால், காற்று அடிக்கும் போது மரம் சாய்வதில்லை. தவிர குழிக்குள் நடவு செய்து மண்ணை நிரப்பிக் கொண்டே வருவதால், மரத்தின் தூரில் முளைக்கும் களைகளும் மண்ணுக்குள் புதைந்து மட்கி விடும்.

நீங்கள் கேட்டவை

மரம் குழிக்குள் இருப்பதால், பக்கக் கன்றுகளுக்கு பாதிப்பு வருமோ என்று பயப்படத் தேவையில்லை. பக்கக் கன்றுகளுக்கு பாதிப்பு எதுவும் வராது. வழக்கமாக வரும் பக்கக் கன்றுகளைவிட, தரமான பக்கக் கன்றுகள் குழி முறையில் உருவாகின்றன.

இப்படி நடவு செய்யும்போது ஒரு ஏக்கர் நிலத்தில் சுமார் 700 கன்றுகள் வரை நடவு செய்யலாம். இந்த முறையில் நான்கு தழைவுகளுக்கு பக்கக் கன்றுகளை விட முடியும். அனைத்து வாழை ரகங்களையும் இம்முறையில் சாகுபடி செய்ய முடியும். இடைவெளி அதிகமாக இருப்பதால், பூச்சி மற்றும் நோய்கள் தாக்குவதில்லை.''

தொடர்புக்கு, செல்போன்: 99942-42946.

''தேத்தாங்கொட்டையைப் பயன்படுத்தி தண்ணீரைச் சுத்திகரிக்க முடியும் என்கிறார்கள். இது உண்மையா? இச்செடி எங்கு கிடைக்கும்?''

எம். சுந்தரவடிவேல், தஞ்சாவூர்.

நீங்கள் கேட்டவை

விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் பகுதியில் உள்ள பிச்சாண்டிக்குளம் மூலிகை-வனப் பாதுகாப்பு மையத்தைச் சேர்ந்த பார்வதி நாகராஜன் பதில் சொல்கிறார்.

''தமிழ்நாட்டில் பல காலமாக இருந்து வரும் மரப்பயிர்களில் தேற்றான்கொட்டை மரமும் ஒன்று. பேச்சு வழக்கில் 'தேத்தாங்கொட்டை’ என்று அழைக்கப்படுகிறது. தேற்றான்கொட்டை உடலைத் தேற்றும் குணம் கொண்டதாலும், நீரைத் தெளிய வைப்பதாலும் 'தேற்றான்’ என்று சொல்லப்படுகிறது. ஏரி, குளம்... போன்ற நீர்நிலைகளின் ஓரத்தில் இம்மரங்களை வளர்த்தால், அதில் இருந்து குளத்துக்குள் விழும் கொட்டைகளால் நீர் சுத்திகரிக்கப்பட்டு விடும். அதனால்தான், முற்காலத்திலிருந்தே தமிழ்நாட்டில் இம்மரத்தை நீர்நிலைகளுக்கு அருகில் நடவு செய்து வந்தார்கள்.

'தேற்றான்கொட்டையால் நீர் தெளிவது போல்’ என்கிற உவமை, 'அகநானூறு' பாடலில் கூட வருகிறது. உலக சுகாதார நிறுவன ஆராய்ச்சி அறிக்கையில், 'இந்தியா போன்ற ஆசிய நாடுகளில் காலங்காலமாக பயன்படுத்தப்பட்டு வரும், 'தேற்றான்கொட்டை மூலம் தண்ணீரைச் சுத்தப்படுத்தும் முறை சுகாதாரமானதுதான்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

நீங்கள் கேட்டவை

இது நீரைச் சுத்திகரிப்பதோடு, மருந்தாகவும் பயன்படுகிறது. இதிலிருந்து தயாரிக்கப்படும் லேகியம் பசியைத் தூண்டி உணவின் மீது ஆர்வத்தை அதிகரிக்கிறது. இதன் பழச்சதை, சீதபேதியைக் கட்டுப்படுத்துகிறது. இதன் விதையை ஊறவைத்து, பசைபோல அரைத்துத் தடவினால், வீக்கம் குறையும். விதைப்பொடியை காலை, மாலை இருவேளைகள் தண்ணீரில் கலந்து குடித்து வர, மார்புச்சளி இளகும். தேற்றான் கொட்டை லேகியத்தைச் சாப்பிட்டால், இளைத்தவர்கள் தேறி விடுவார்கள். மோரில் கலந்து சாப்பிட்டால், நாள்பட்ட பேதி நிற்கும். வெள்ளைப்படுதல், மதுமேகம், சிறுநீர்க்கடுப்பு, எரிச்சல், மூல நோய் போன்றவற்றுக்கும் மருந்தாகப் பயன்படுகிறது. பத்து லிட்டர் தண்ணீரில், இரண்டு தேற்றான் கொட்டைகளைப் போட்டு வைத்தால், இரண்டு மணி நேரத்தில் நீர் சுத்தமானதாகி விடும். இதன் கன்றுகள் எங்கள் ஆராய்ச்சி மையத்தில் கிடைக்கின்றன.''

தொடர்புக்கு, செல்போன்: 94437-97573. (காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை)

''தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வரும் நான், 100 மாடுகளை வாங்கி, பால்பண்ணை அமைக்க விரும்புகிறேன். அதற்கான ஆலோசனை கிடைக்குமா?'

எச். சத்யா, கும்பகோணம்.

கோயம்புத்தூர் கால்நடை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் இணைப்பேராசிரியர் மற்றும் தலைவர் டாக்டர். சிவகுமார் பதில் சொல்கிறார்.

நீங்கள் கேட்டவை

''பால்பண்ணையை வெற்றிகரமாக நடத்திச் செல்ல, சில அடிப்படை விஷயங்களைக் கடைபிடிக்க வேண்டும். ஐந்து மாடுகளுக்கு 1 ஏக்கர் என்ற கணக்கில் தீவனப் பயிர்களை சாகுபடி செய்ய வேண்டும். 100 மாடுகளுக்கு 20 ஏக்கர் அளவுக்கு நிலம் தேவைப்படும். தீவன சாகுபடி நிலமும், பால் பண்ணையும் அருகில் இருக்க வேண்டியது அவசியம். நிலத்தில் அரை பங்கு கம்பி நேப்பியர் ஒட்டுப்புல், கால் பங்கு கோ.எப்.எஸ்-29 தீவனச் சோளத்தையும், கால் பங்கு வேலி மசால் தீவனத்தையும் சாகுபடி செய்ய வேண்டும். இதுபோக, வரப்புகளில் சவண்டல், கிளரிசீடியா... போன்ற மரவகைத் தீவனங்களும் இருக்கவேண்டும்.

நீங்கள் கேட்டவை

மாடுகளுக்கான கொட்டகை, கிழக்கு-மேற்காக அமைக்கப்பட வேண்டும். அப்போதுதான் போதுமான அளவுக்கு காற்றும், சூரிய வெளிச்சமும் கிடைக்கும். அதிக வெப்பம் பால் உற்பத்தியையும், மாடுகளின் உடல் நலத்தையும் பாதிக்கும். அதனால், கோடைக் காலத்தில் மாட்டுக்கொட்டைகையின் வெளிப்புறம், உட்புறங்களில் சிறிய ஸ்பிரிங்க்ளர் மூலம், நீர் தெளித்து வெப்பத்தைக் குறைக்க வேண்டும். பால்பண்ணைக்கு அருகிலேயே உரிமையாளரின் வீடும் இருப்பது நல்லது. அப்போதுதான் நேரடி கண்காணிப்பில், லாபகரமாக நிர்வாகம் செய்ய முடியும். பாலை நேரடியாக விற்பதன் மூலம், கூடுதல் லாபம் கிடைக்கும்.

தொலைபேசியில் அழைத்தால், அவசர உதவிக்கு கால்நடை மருத்துவர் வரும் வகையில் ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும். இத் தொழிலை ஊக்கப்படுத்த, நபார்டு வங்கி மானியம் வழங்கி வருகிறது. தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர்களுக்கு 33% மானியமும், பிற வகுப்புகளுக்கு 25% மானியமும் கிடைக்கிறது. உங்கள் கிராமத்துக்கு சேவை வழங்கும் நாட்டுடமைஆக்கப்பட்ட வங்கியை அணுகினால், கடன், மானியம் போன்ற விவரங்கள் கிடைக்கும். கால்நடைப் பல்கலைக்கழகத்தின் பயிற்சி மற்றும் ஆராய்சி மையங்களில் நடத்தப்படும் பால்பண்ணை குறித்த பயிற்சியிலும், திறன் மேம்பாட்டு பயிற்சியிலும் கலந்து கொள்வதும் அவசியம்.''

தொடர்புக்கு: பேராசிரியர் மற்றும் தலைவர்,  கால்நடைப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், காளப்பட்டி பிரிவு, சரவணம்பட்டி, கோயம்புத்தூர்- 641035. தொலைபேசி: 0422-2669965.