புறா பாண்டி படங்கள்: கே. குணசீலன், வீ. சிவக்குமார்
##~## |
''வாழையில் தண்டுத் துளைப்பான் தாக்கியிருப்பதை எப்படிக் கண்டுபிடிப்பது? அதைக் கட்டுப்படுத்த வழி உள்ளதா?'
வெங்கடேசப்பெருமாள், படப்பை.
திருச்சியில் உள்ள தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர், முனைவர். எம்.எம். முஸ்தபா பதில் சொல்கிறார்.
''தண்டுத் துளைக்கும் வேலையைச் செய்யும் வண்டுகளுக்கு கூன் வண்டுகள் என்று பெயர். சில குறிப்பிட்ட வாழை ரகங்களில் (நேந்திரன், கற்பூரவல்லி, விருப்பாட்சி, மொந்தன்) மட்டும்தான் அதிகமாக தண்டுத் துளைப்பான் தாக்குதல் தென்படுகிறது. ஐந்து மாத வயதுக்கு மேல் உள்ள மரங்கள்தான் அதிகமாக தாக்குதலுக்கு உள்ளாகின்றன. வாழை மரப் பட்டையின் உள்ளே புழுக்கள் குடைந்து செல்வதால், தண்டில் துவாரம் ஏற்பட்டு பிசின் போன்ற திரவம் வெளிவரும். இதனால், மரத்துக்கு நீர் மற்றும் சத்துக்கள் செல்வதில் தடை ஏற்படுவதால், இலைகளில் கொஞ்சம் கொஞ்சமாகப் பசுமை குன்றி, மஞ்சள் நிறம் வந்துவிடும். பார்ப்பதற்கு வாடல் நோய் தாக்கிய மரம் போல தோற்றமளிக்கும். கூன் வண்டுகளால் ஏற்படுத்தப்பட்ட துவாரங்களும், அதில் வழியும் வெள்ளை நிற பிசினும்தான் மரம் தாக்கப்பட்டதற்கான அடையாளம்.
வாழையின் பருவத்தைப் பொருத்து சேதத்தின் அளவு மாறுபடும். இளம்பருவ நிலையில் கூன் வண்டுகள் தாக்கினால், 100% மகசூல் இழப்பு ஏற்படும். வாழைப் பூ வெளிவந்த பிறகு சேதம் ஏற்பட்டால், காய்கள் சிறுத்து விடும். காய் பிடிக்கும் தருணத்தில் தாக்குதல் ஏற்பட்டால், காய்கள் முதிர்ச்சி அடையாது. மரத்தில் உள்ள காய்ந்த இலைகளையும், சருகுகளையும் அவ்வப்போது அகற்றி வந்தால், கூன் வண்டுகள் தாக்காது. பொதுவாக, தாய் மரத்திலிருந்து பக்கக் கன்றுகளுக்கு சத்துக்கள் போவதால், அறுவடை முடிந்த தாய் மரத்தை அடியோடு வெட்டுவதில்லை. ஆனால், கூன் வண்டுகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், மரத்தை அடியோடு வெட்டி, தூர எறிந்துவிட வேண்டும்.

ஒரு அடி நீளமுள்ள வாழை மரத்தை இரண்டாகப் பிளந்து, பிளந்த பகுதி மண்ணில் இருக்குமாறு வைத்து, அதில், 'பவேரியா பேசியானா’ என்கிற திரவ வடிவ பூஞ்சணத்தை 10 மில்லி அளவில் தடவி வைத்தால், கூன் வண்டுகள் கவரப்பட்டு அழிந்துவிடும். 'ஹெடிரோரேப்-டைட்டிஸ் இண்டிகா’ என்கிற நூற்புழுவைத் தோட்டத்தில் விடுவதன் மூலமாகவும் கூன் வண்டுகளைக் கட்டுப்படுத்த முடியும். கூடுதல் தகவல்களுக்கு எங்கள் ஆராய்ச்சி மையத்தைத் தொடர்பு கொள்ளலாம்.''
தொடர்புக்கு: இயக்குநர், தேசிய வாழை ஆராய்ச்சி மையம், தோகைமலை ரோடு, தாயனூர் அஞ்சல், திருச்சிராப்பள்ளி-620 102, தொலைபேசி: 0431-2618106/2618104.
''ஆப்பிள் மரம் தமிழ்நாட்டில் வளருமா?''
எஸ். மாரிமுத்து, ஈரோடு.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் உள்ள தோட்டக்கலை ஆராய்ச்சி மையத்தின் இணைப்பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர். ஜே. ராஜாங்கம் பதில் சொல்கிறார்.
''ஆப்பிள் மரம் கடல் மட்டத்தில் இருந்து, 2,000 மீட்டர் உயரம் உள்ள இடத்தில்தான் வளரும். ஆப்பிள் மரத்துக்கு ஆண்டுக்கு 75 மணி நேரம் உறைபனி வேண்டும். இதை ஆங்கிலத்தில் 'சில்லிங் ஹவர்ஸ்’ என்று சொல்கிறோம். தமிழ்நாட்டில் உள்ள மலைப்பிரேதசங்களில், விளையும் வகையில் எங்கள் ஆராய்ச்சி நிலையத்தின் மூலமாக 'கே.கே.எல்-1’ என்ற ஆப்பிள் ரகத்தை வெளியிட்டுள்ளோம். மே-ஜூன் மாதங்களில் இந்த ரகம் விளைச்சலுக்கு வரும்.

காஷ்மீர் ஆப்பிள் ரகம் மற்றும் தமிழ்நாட்டில் விளையும் ரகம் இரண்டிலும், நிறம், மணம் சுவை... போன்றவை வேறுபடுகின்றன. அடிப்படையில் ஆப்பிள் மரம், பனி பொழியும் பகுதிகளில் மட்டுமே வளரும் தன்மை கொண்டது. கொடைக்கானல் மலையின் மேல் பகுதியிலும், ஊட்டியிலும் மட்டுமே ஆப்பிள் விளையும் அளவுக்கு பனிப்பொழிவு உண்டு. ஏலகிரி, ஏற்காடு... போன்ற உயரம் குறைந்த பகுதிகளில், ஆப்பிள் மரங்கள் வளர்ந்தாலும், காய்ப்புத்திறனும், சுவையும் வித்தியாசப்படும்.''
தொடர்புக்கு, தொலைபேசி: 04542-240931.
''தென்னை, ரப்பர் மரங்களுக்கு இடையில் மலர் சாகுபடி செய்ய முடியுமா?''
எஸ். வசந்தி, நாகர்கோவில்.
கன்னியாகுமரி மாவட்டம், பேச்சிப்பாறையில் உள்ள வேளாண் அறிவியல் மையத்தின் இணைப் பேராசிரியரும், மலரியல் விஞ்ஞானியுமான முனைவர். சொர்ணப்பிரியா பதில் சொல்கிறார்.
''கிராமப் பகுதிகளில், 'பூப்போல பார்த்துக்கோங்க...' என்று அடிக்க பேச்சுவாக்கில் சொல்வதுண்டு. அதாவது, அந்த விஷயத்தை மிகமிக கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான்... பூவை அங்கே சேர்த்துச் சொல்கிறார்கள். ஆம்... மலர் சாகுபடியே அப்படித்தான். பார்த்துப் பார்த்து மிக கவனமாகச் செய்ய வேண்டும். காரணம்... ஒரு நாள் பறிக்காமல் விட்டாலும்கூட அவை உதிர்ந்து போய், லாபத்துக்கு வேட்டு வைத்துவிடும். இப்படி வேலை அதிகம் வைத்தாலும்... வருமானத்தில் என்றுமே குறை வைப்பதில்லை மலர்கள்.

தென்னந்தோப்பில் 7 முதல் 12 வயதுள்ள மரங்களுக்கு இடையில் ஊடுபயிராக 'ஹெலிக்கோனியா’ என்ற கொய்மலரை சாகுபடி செய்யலாம். அதற்குப்பிறகு தோப்பில் நிழல் அடைத்துக் கொள்ளும் என்பதால், அந்த சூழ்நிலையில் வளரக்கூடிய 'அந்தூரியம்’ என்ற கொய்மலரை சாகுபடி செய்யலாம். கேரள மாநிலத்தில் பரவலாக இது தென்னைக்கு ஊடுபயிராக சாகுபடி செய்யப்படுகிறது. ஆண்டு முழுவதும் இம்மலருக்குத் தேவை உள்ளது. சென்னை, பெங்களூரு, திருவனந்தபுரம்... போன்ற மாநில

தலைநகரங்களில் இதற்கான சந்தை வாய்ப்புகள் உள்ளன. மேலும், தென்னந்தோப்புக்குள் சாகுபடி செய்யும்போது, நிழல் வலை அமைக்க வேண்டிய செலவு மிச்சமாகிவிடும்.
ஹெலிக்கோனியா மலருக்கு அக்டோபர்-மார்ச் மாதங்களில் விற்பனை வாய்ப்பு நன்றாக இருக்கும். இது, மணமேடைகளை அலங்கரிக்கவும், பூங்கொத்து உருவாக்கவும் மட்டும்தான் பயன்படுகிறது. ஆனால், தமிழ்நாட்டில் ஹெலிக்கோனியா மலரை விற்பனை செய்ய சந்தைகள் கிடையாது. பெங்களூரு, டெல்லி... போன்ற நகரங்களில் மட்டும்தான் இதற்கான சந்தைகள் உள்ளன. ஆகையால், விற்பனைத் தொடர்புகளை நாம்தான் தேடி உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
வெளிநாடுகளில், சில இடங்களில் ரப்பர் தோட்டத்தில் மலர் சாகுபடி செய்யும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளார்கள். ஆனால், தமிழ்நாட்டில் ரப்பர் தோட்டங்களில் மலர் சாகுபடி செய்வது பற்றி ஆய்வு நடைபெறவில்லை. எனவே, ரப்பர் தோட்டங்களில் மலர் சாகுபடி செய்ய வேண்டாம்.''
தொடர்புக்கு, தொலைபேசி: 04651-281759.
''மீன் பண்ணை அமைத்துள்ளோம். மீன் குளத்தைச் சுற்றிலும், அலையாத்தி மரங்களை வளர்க்கலாமா?''
எஸ். பாலசுப்ரமணியன், திருவில்லிப்புத்தூர்.
எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த விஞ்ஞானி முனைவர். செல்வம் பதில் சொல்கிறார்.

''கடல் அலைகளின் வேகத்தைக் கட்டுப்படுத்துவதால், 'அலையாற்றி’ என்று இந்த மரங்களுக்குப் பெயர் வந்தது. பேச்சுவழக்கில் இதை, 'அலையாத்தி' என்கிறார்கள். மீன் பண்ணை அமைக்கும் போது,

அலையாற்றி மரங்களை குளத்தின் கரைகளில் கண்டிப்பாக நடவு செய்ய வேண்டும். இதன் மூலம் பலவித நன்மைகள் உண்டு. கரையைச் சுற்றி அலையாற்றி மரங்கள் இருந்தால், கரைகள் சரியாமல் பலமாக இருக்கும். மரங்களின் நிழல், குளத்தில் படர்வதால், நீர் குளுமையாகி, மீன்கள் ஆரோக்கியமாக வளர்வதற்கேற்ற தட்ப வெப்பநிலை இயற்கையாக உருவாகும். இந்த மரங்களின் காய்ந்த இலைகள், மீன்களுக்குச் சிறந்த உணவு.
அலையாற்றி மரங்கள் நடவு செய்து, ஐந்து ஆண்டுகள் வளர்ந்த பிறகு, அந்தக் குளத்தில் நண்டுகளையும் வளர்க்க முடியும். வழக்கமாக குளத்தில் நண்டு வளர்ப்பது சிரமமான விஷயம். பாதுகாப்பு இல்லாவிட்டால், நண்டுகள் ஓடி விடும். ஆனால், அலையாற்றி மரங்களின் வேர்கள் குளத்தில் ஊடுருவி விடுவதால், அவற்றில், நண்டுகள் பாதுகாப்பாக அடைந்து கொள்கின்றன. தமிழ்நாட்டில் பிச்சாவரம், வேதராண்யம் பகுதிகளில் மாதிரிப் பண்ணைகள் அமைத்து அவற்றில் மீன் குளங்களில் இந்த மரங்களை வளர்த்துள்ளோம். குறிப்பிட்ட சில மாவட்டங்களில், மீன் குளத்தில் அலையாற்றி மரங்களை வளர்க்க நிதி உதவியும் உண்டு.''
தொடர்புக்கு, செல்போன்: 94422-27680
''மானாவாரியாக விளையும் நெல் ரகம் எங்கு கிடைக்கும்?''
ஆர். சுதா, திருக்கழுக்குன்றம்.
திருவள்ளுர் மாவட்டம், திரூர் குப்பத்தில் நெல் ஆராய்ச்சி நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு மோட்டா ரகங்கள் மற்றும் மானாவாரியாக விளையும் நெல் ரகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
தொடர்புக்கு, தொலைபேசி: 044-27620233.
விவசாயம், கால்நடை, மீன்வளம் மற்றும் சுற்றுச்சூழல் என்று பல துறைகள் பற்றி வாசகர்களின் சந்தேகங்களுக்கான பதில்களை உரிய நிபுணர்களிடம் பெற்றுத் தருவதற்காகவே 'புறா பாண்டி' சும்மா 'பறபற'த்துக் கொண்டிருக்கிறார். உங்கள் கேள்விகளை
'நீங்கள் கேட்டவை', பசுமை விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-2. என்ற முகவரிக்கு தபால் மூலமும் pasumai@vikatan.com என்ற முகவரிக்கு இ-மெயில் மூலமும் PVQA (space)- உங்கள் கேள்வி (space) உங்கள் பெயர் டைப் செய்து 562636 என்ற எண்ணுக்கு செல்போன் மூலமும் அனுப்பலாம்.