மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மரத்தடி மாநாடு

கால்நடைகளுக்கு தக்காளி... கவனம், கவனம் ! படம்: வீ. சிவகுமார்,ஒவியம்: ஹரன்

##~##

ஊரில் மாரியம்மன் கோயில் திருவிழாவுக்காக சாமி சாட்டியதால், 'ஏரோட்டி’ ஏகாம்பரமும், 'வாத்தியார்’ வெள்ளைச்சாமியும் கோயிலுக்கு ஒரு நடை சென்றுவிட்டு, தோட்டத்துக்குள் நுழைந்தனர். வந்த வேகத்தில் ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு அவிழ்த்துவிட்ட ஏரோட்டி, வரப்பில் அமர... வாத்தியாரும் அமர்ந்தார். அப்போது... வரப்பில் வந்து கொண்டிருந்தார் 'காய்கறி’ கண்ணம்மா.

''ஏம்மா, போன தடவை மாநாட்டை முடிச்சுட்டு, போற போக்குல, 'மாரியில்ல மழையுமில்ல பச்சையாகுது. பூவும் இல்ல, காயும் இல்ல. பழம் பழுக்குது’னு விடுகதையைப் போட்டுட்டு போயிட்டே... அதைத் தெரிஞ்சுக்காம எனக்கு தலையே வெடிச்சுடும்போல ஆயிடுச்சு... அது என்னானு முதல்ல சொல்லுத் தாயீ...'' என்று சத்தம் போட்டுக் கேட்டார் ஏரோட்டி.

''அதுவா..., 'கிளி’தான்..'' என்று பெருமையாகச் சொன்னபடியே தலைச்சுமையை இறக்கி வைத்து, வரப்பில் அமர்ந்த காய்கறி, கையோடு அவித்துக் கொண்டு வந்திருந்த நிலக்கடலையை ஆளுக்குக் கொஞ்சமாக எடுத்துக் கொடுத்தார், கூடவே ஒரு செய்தியைச் சொல்லி மாநாட்டையும் துவக்கியபடி...

''இப்போ, நிலக்கடலைக்கு ரெண்டாவது சீசன் ஆரம்பிச்சுருக்கு. அதனால கடலை நிறைய வரத்து இருக்கு. அக்டோபர்- நவம்பர் சீசன்ல கிடைச்ச மாதிரியே இந்த சீசன்லயும் நல்ல விலை கிடைச்சுட்டுருக்குதாம். குறிப்பா, சேலம் மாவட்டத்துல அதிகளவு வரத்து இருந்தும், நல்ல விலையும் கிடைக்குதாம். 60 கிலோ மூட்டை, 1,822 ரூபாய் வரைக்கும் விலை தீந்துருக்காம். இன்னும் ஒரு மாசத்துக்கு கடலை வரத்து இருக்குமாம். மிட்டாய் கம்பெனிக்காரங்க போட்டி போட்டு வாங்கறதாலதான் இப்படி விலை ஏறியிருக்குதாம்'' என்றார், காய்கறி.

மரத்தடி மாநாடு

''ம்... இன்னும் கொஞ்சம் உப்பு போட்டு வேக வெச்சுருந்தா, நல்லா இருந்துருக்கும்'' என்று ஏரோட்டி சொல்ல, தன் பங்குக்கு ஒரு செய்தியைச் சொல்ல ஆரம்பித்தார் வாத்தியார்.

''கார்த்திகைக்கு அப்பறம் மழை பெய்யாதும்பாங்க ஆனா, மாசியில ஒரு போடு போட்டிருக்கு. கண்ட கண்ட நேரத்துல பெய்ஞ்சு வெச்சு, பொழப்பையும் கெடுக்குது.  இதனால காவிரி டெல்டா பகுதிகள்ல ஏக பாதிப்பாம். ஏற்கெனவே, காவிரி தண்ணி கிடைக்காம நெல் சாகுபடி குறைஞ்சு, அரிசி வெலையெல்லாம் ஏற ஆரம்பிச்சுடுச்சு. தப்பிப் பொழைச்ச பயிருங்க... அறுவடைக்குத் தயாரா இருந்த நிலையிலதான் மழை கொட்டியிருக்கு. நெல் பயிரெல்லாம் சாய்ஞ்சுடுச்சாம். அதோட மாம்பூ, பிஞ்சுனு எல்லாம் கொட்டிப்போக... 'மா’ விவசாயத்துலயும் பெரிய பாதிப்பாம்'' என்றார்.

''எதெது... எப்பெப்போ நடக்கும்னே தெரிய மாட்டேங்குதுய்யா... போன மாசம் தக்காளிக்கு நல்ல விலை கிடைச்சுது. இந்த மாசம் சடார்னு இறங்கிப்போச்சு. அறுவடைக்குகூட கட்டாததால... ஆடு, மாடுகளை தக்காளி வயல்ல மேய விட்டுட்டுருக்காங்களாம்'' என்று 'உச்' கொட்டினார் ஏரோட்டி.

''விலை கிடைக்காம போனா போகட்டும்... அதுக்காக தக்காளியை அதிகமா ஆடு, மாடுகளுக்குக் கொடுத்து கூடுதலா ஒரு வினையத் தேடிக்காதீங்கனு, தமிழக கால்நடை நோய் நுண்ணறிவுப் பிரிவு டாக்டர்கள் சொல்லியிருக்காங்க. 'கால்நடைகள் அதிக அளவுல தக்காளியை சாப்பிட்டா வயித்துல நுண்கிருமிகள் பெருகி, வயித்துக்குள்ள புண் வந்து, அமில நோய் வந்துடும். அதனால, மாடுகள் இறந்துகூட போயிடலாம்’னு சொல்லிருக்காங்க'' என்று எச்சரிக்கை தகவல் தந்தார் வாத்தியார்.

''அட இந்த சங்கதி தெரியாம, நானும் அப்பப்ப இந்தத் தப்பைப் பண்ணிட்டேனே. நல்லவேளையா, இதுவரைக்கும் நம்ம ஆடு, மாடுங்களுக்கு எந்தப் பிரச்னையும் வரல. இனிமே உஷாராயிடுவேன்ல'' என்ற ஏரோட்டி,

''போன தடவையே சொல்லணும்னு நினைச்சேன். ஆனா, மறந்துட்டேன். நம்ம கோடிவீட்டு ராமசாமி, தைப்பூசத்துக்கு பழநி பாத யாத்திரை போனான்ல. அப்போ ஒட்டன்சத்திரத்துக்குப் பக்கத்துல 'பசுமை விகடன்’காரங்க பன்னு... முருகன் படம் போட்ட காலண்டர் பேப்பர்னு பாதயாத்திரை வந்தவங்களுக்குக் கொடுத்திருக்காங்க. நிறைய பேர் பாராட்டிட்டுப் போனாங்களாம்'' என்றார்.

''ம், இந்த விவசாயிங்களுக்கு நல்ல விஷயங்களைக் கொண்டு சேர்க்கறதுக்காக, பசுமை விகடன்காரங்க எப்படியெல்லாம் முயற்சி எடுக்கறாங்க... நடக்கட்டும், நடக்கட்டும்... நல்லது நடக்கட்டும்'' என்று வாயார வாழ்த்தினார் வாத்தியார்!

''அள்ளும்போது சலசலக்கும்... கிள்ளும்போது கண்கலங்கும். அது என்ன?' என்று ஒரு விடுகதையைப் போட்ட காய்கறி,

''இதையாவது அடுத்தத் தடவை வர்றப்போ கண்டுபிடிச்சு வைங்க...'' என்று சொல்லிக்கொண்டே கூடையைத் தூக்க, முடிவுக்கு வந்தது, அன்றைய மாநாடு.

 ''

மரத்தடி மாநாடு

6,000 அல்ல

மரத்தடி மாநாடு

4,000!''

மரத்தடி மாநாடு

பசுமை விகடன் 10.12.2012 இதழில் 'எதிர்கட்சினா

மரத்தடி மாநாடு

2500, ஆளுங்கட்சினா

மரத்தடி மாநாடு

2350’ என்ற தலைப்பில் கட்டுரை வெளியாகியிருந்தது. அதில், 'ஒரு டன் கரும்பிலிருந்து சுமார் 6 ஆயிரம் ரூபாய் வரை ஆலைக்காரர்கள் வருமானம் ஈட்டுகின்றனர்' என்று நான் சொன்னதாக  வெளியாகியிருந்தது. ஆனால், '3,500 முதல் 4,000 ரூபாய் வரை வருமானம் எடுக்கிறார்கள்' என்றுதான்  நான் குறிப்பிட்டிருந்தேன்.

கே. கோதண்டராமன், நெல்லிக்குப்பம்.