மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மரத்தடி மாநாடு !

சண்டைச் சேவலுக்கு சரியான மவுசு..! படம்: தேனீ ஈஸ்வர் ஓவியம்: ஹரன்

##~##

'வாத்தியார்’ வெள்ளைச்சாமி வரப்பில் அமர்ந்து செய்தித்தாள் வாசித்துக் கொண்டிருந்தார்... 'என்னங்கய்யா இன்னிக்கு முக்கியமான சேதி?’ என்று கேட்டுக்கொண்டே வந்த 'காய்கறி’ கண்ணம்மா, கூடையை இறக்கி வைத்தார். கழனிக்காட்டில் நின்றிருந்த 'ஏரோட்டி' ஏகாம்பரமும், துண்டால் முகத்தைத் துடைத்தபடியே வந்து நிற்க... மாநாடு ஆரம்பமானது!

''விவசாயக் கடன் தள்ளுபடியில நடந்த மோசடிதான் இப்போ சிரிப்பா சிரிக்குது.

நம்ம நாட்டோட தலைமைக் கணக்குத் தணிக்கை துறை, 'விவசாயக் கடன் தள்ளுபடி விஷயத்துல, 20 கோடியே

50 லட்ச ரூபாய்   முறைகேடா செலவழிக்கப்பட்டுருக்கு’னு நாடாளுமன்றத்தில அறிக்கை தாக்கல் செஞ்சுருக்கு. ஏற்கெனவே, செல்போன் ('2ஜி’ ஸ்பெக்ட்ரம்) முறைகேடு, காமன்வெல்த் விளையாட்டு முறைகேடு, நிலக்கரி முறைகேடுனு எல்லாத்தையும் அம்பலப்படுத்தினாங்க இல்லையா, அவங்களேதான் இதையும் சொல்லியிருக்காங்க.

உத்தரபிரதேசம், சண்டிகர், பீகார், மேற்கு வங்காளம் உள்ளிட்ட சில மாநிலங்கள்ல 'விவசாயக் கடன்'ங்கிற பேர்ல, வேற வேற விஷயங்களுக்கும் கொடுத்துருக்காங்க. அதாவது, வீடு கட்ட, டூர் போக, காரு வாங்கனு அள்ளி அள்ளி கொடுத்துட்டாங்க போல. அந்தக் கடன்களையும் நெல்லு வெச்சது, கோதுமை வெச்சதுனு சொல்லி தள்ளுபடி பண்ணியிருக்காங்களாம்'' என்று வாத்தியார் சொல்லும்போதே...

''அட, 'பழி ஒரண்ட... பாவம் ஒரண்ட'ங்கற கதையால்ல இருக்கு. இந்த அநியாயத்தை எங்க போய் சொல்றது..?'' என்று ஆவேசமாகிவிட்டார் காய்கறி!

தொடர்ந்த வாத்தியார், ''மத்திய நிதியமைச்சகத்தோட கட்டுப்பாட்ல இருக்குற நிதி, சேவைத்துறைதான் இந்த ஊழலுக்குப் பொறுப்பேற்கணும்னு கணக்குத் தணிக்கை துறை சொல்லியிருக்கு.

இந்த விஷயத்தைக் கையில எடுத்துருக்குற எதிர்க்கட்சிங்க... நாடாளுமன்றத்துல பட்டையைக் கிளப்பியிருக்காங்க காங்கிரஸ் கெவர்மென்ட்டுக்கு எதிரா'' என்றார், தன் கதர்த்துண்டை சரிசெய்தபடி!

மரத்தடி மாநாடு !

''ம்... என்னைய மாதிரி ஆளுங்கல்லாம் 5 ஆயிரம், 10 ஆயிரம் கடன் கேட்டாலே, பேங்க்ல ஆயிரத்தெட்டு நொட்ட நொடை சொல்றாங்க. ஆனா, இப்படி கேப்பாரே இல்லாம ஆயிரக்கணக்கான கோடிகள்ல அள்ளிவிட்டுருக்காய்ங்க... இந்த நம்பரைஎல்லாம் கேக்கறப்பவே தலை சுத்துது'' என்று ஆவேசம் அடங்காதவராகவே சொன்னார் காய்கறி!

''இப்பல்லாம் அரசியலுக்கு வர்றதே... பணம் சம்பாதிக்கிறதுக்குதான்னு ஆகிப்போச்சு. அதனால கொள்ளை, ஊழல் எல்லாம் சகஜமாகிடுச்சு. இதைப் பாத்தெல்லாம் நீ மலைச்சு நின்னினா... நீ இந்தியாவுல வாழ தகுதியில்லாத ஆளாயிடுவே. நாளைக்கு, 'நான் இந்தியாவை விட்டே வெளியேறுறேன்'னு 'விஸ்வரூபம்' கமல்ஹாசன் கணக்கா நீயும் சொல்ல வேண்டி வந்துடும்... பார்த்து சூதனமா இருக்க பழகிக்கோ'' என்று நக்கலாகச் சொன்ன ஏரோட்டி, ஒரு செய்தியைச் சொல்ல ஆரம்பித்தார்.

''இந்த வருஷம் மழையும் சரியா இல்ல. காவிரியில தண்ணியும் வரல. பம்ப்செட்டை வெச்சு தண்ணி பாய்ச்சலாம்னா... அதுக்கும் கரன்ட் இல்லை. இப்படி பல பிரச்னைகள் இருந்ததால, தமிழக அரசு சார்பா டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு சூரிய சக்தியில இயங்குற பம்ப்செட் கொடுக்கப் போறாங்களாம். முதல் கட்டமா 530 பம்ப்கள் கொடுக்கப்படும்னு அறிவிச்சுருக்காங்க'' என்றார்.

''யானைப்பசிக்கு சோளப்பொறி போட்ட கணக்காவுல இருக்கு...'' என்ற வாத்தியார்,

''ஈரோடு மாவட்டத்துல அதிக வெயில் அடிக்கிறதால நாட்டுக் கோழிகளுக்கெல்லாம் வெள்ளைக் கழிச்சல் நோய் வேகமா பரவிட்டு இருக்குதாம். ஆனா, கால்நடைத்துறை அதிகாரிகள் கண்டுக்க மாட்டேங்குறாங்களாம். கொத்துக்கொத்தா கோழிகள் செத்துக்கிட்டிருக்காம். அதனால மக்கள் விரக்தியில இருக்குறாங்க. வளராத கோழிகளைக்கூட வந்த விலைக்கு வித்துக்கிட்டு இருக்காங்களாம்'' என்று சொல்ல...

''வெயில் காலம்னாலே... வழக்கமா வர்ற வியாதிதான் இது. டாக்டருங்களுக்கு மட்டுமில்ல, விவசாயிங்களுக்கும் தெரிஞ்ச விஷயம்தானே! ஏன் கொஞ்சம் எச்சரிக்கையா இருந்திருக்கக் கூடாதா...?'' என்ற கேட்டார் ஏரோட்டி.

''வாஸ்தவம்தான் தடுப்பூசி போட்டிருந்தா, காப்பாத்தியிருக்கலாம். ஆனா, அதுதானே மறந்து போயிடுது. இப்ப, 'ஒவ்வொரு சனிக்கிழமையும் கால்நடைத்துறை மருத்துவமனையில இலவசமா கோழிகளுக்கு தடுப்பூசி போடுறாங்க. அதைப் பயன்படுத்திக்கிட்டா கோழிகளை நோய் தாக்காம காப்பாத்திட முடியும்'னு ஈரோடு மாவட்டத்துல இருக்குற கோழிநோய் ஆராய்ச்சிக்கூட உதவி இயக்குநர் ராமலிங்கம் சொல்லியிருக்கார்' என்றார் வாத்தியார்.

''கோழினதும் ஞாபகத்துக்கு வருது...'' என்று நாக்கைக் கடித்த ஏரோட்டி,

மரத்தடி மாநாடு !

''தமிழ்நாட்டுல, நாமக்கல், உடுமலைப்பேட்டை, பல்லடம் பகுதிகள்ல வளர்க்கற சண்டைச் சேவல்களுக்கு... இப்போ ஆந்திராவில் மவுசு கூடியிருக்குதாம். சண்டைச் சேவல்களை வாங்கறதுக்காக ஏகப்பட்ட வியாபாரிங்க வர்றாங்களாம்.

அதனால, விலையும் கூடிட்டே இருக்குதாம். குறிப்பா, கடப்பா, ராஜமுந்திரி பகுதிகளைச் சேர்ந்தவங்க... சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்கள்ல வந்து தங்கியிருந்து, சேவல்களை வாங்கிட்டு போறாங்க. 300 கிராம் எடை இருக்குற சண்டைச் சேவல் குஞ்சு ஒண்ணு 600 ரூபாய் வரைக்கும் விலைபோகுதாம். ஒரு கிலோ எடையுள்ள சேவல், 6 ஆயிரம் ரூபாய்க்கு விலை போகுதாம். நல்லா வளர்ந்த சேவல்னா... 12 ஆயிரம் ரூபாய் வரைக்கும் கேக்கறாங்களாம்'' என்று குஷிபொங்கச் சொன்னார்.

''பேசாம, பத்து சேவலை வாங்கி வளர்த்தா நல்லா காசு பாத்துடலாம்போல இருக்குதே...'' என்று ஆமோதித்த காய்கறி, தன் பங்குக்கு ஒரு செய்தியைச் சொன்னார்.

''கல்வராயன்மலை பகுதிகள்ல முன்னயெல்லாம் நெல், கரும்பு, காய்கறி, கீரைனு சாகுபடி பண்ணுவாங்க. இப்போ வறட்சி காரணமா வேற பயிர்களுக்கு மாற ஆரம்பிச்சுருக்காங்களாம். நிறைய பேர் 'பெர்ரி' ரக பேரீட்சையில ஆர்வம் காட்டுறாங்களாம். இது, ஒரு வருஷத்துக்கு மழையில்லாம போனாகூட தாங்கிடுமாம்'' என்று காய்கறி சொல்லிக் கொண்டிருக்கும்போதே... சடசடவென அடிக்க ஆரம்பித்தது மழை!

''அடடா... நம்ம ரமணன் சொன்னது சரியாத்தான் போச்சு, அடிச்சு ஊத்த ஆரம்பிச்சுட்டுதே மழை'' என்று வாத்தியார் சிரித்துக் கொள்ள...

''சரி சரி... போன தடவை ஒரு விடுகதை போட்டேனே... விடையைக் கண்டு பிடிச்சீங்களா?'' என்றார் காய்கறி.

''அள்ளும்போது சலசலக்கும்... கிள்ளும்போது கண் கலங்கும்னு சொன்னியே... அதானே! விடை, வெங்காயம்'' எனச் சொன்னார் ஏரோட்டி.

''பரவாயில்லையே... 'மரத்துக்கு மேல பழம்... பழத்துக்கு மேல மரம்... அது என்னா?’ கண்டுபிடிச்சு வை'' என்றபடியே கூடையை காய்கறி தூக்க, முடிவுக்கு வந்தது, அன்றைய மாநாடு.