மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நீங்கள் கேட்டவை - மல்பெரியை வரப்பு ஓரத்தில் வளர்க்க முடியுமா ?

புறா பாண்டி, படங்கள்: தி. விஜய். எல். ராஜேந்திரன், க. ரமேஷ்

##~##

''மல்பெரியை வரப்புப் பயிராக சாகுபடி செய்ய முடியுமா? ஒரு மல்பெரி செடியிலிருந்து கிடைக்கும் இலைகளை வைத்து, எவ்வளவு பட்டுக்கூடு உற்பத்தி செய்ய முடியும்?''

எஸ். கருணா, காளிங்கராயன்பாளையம்.

கிருஷ்ணகிரியில் செயல்பட்டுவரும் பட்டு வளர்ச்சித்துறையின் விரிவாக்கப் பிரிவு அலுவலர் எம். ராமன் பதில் சொல்கிறார்.

''விவசாயத்தோடு சேர்த்து உபதொழிலாக பட்டு வளர்ப்பில் ஈடுபட்டால், கூடுதல் லாபம் பெற முடியும். பட்டுப்புழு வளர்ப்புக்கு முக்கிய மூலப்பொருளான மல்பெரி செடிகளை வரப்பு ஓரங்களில் சாகுபடி செய்ய முடியும்.

மத்திய பட்டு வாரியமும், தமிழக அரசின் பட்டு வளர்ச்சித்துறையும் மல்பெரி நடவு செய்வதற்கும், பட்டு வளர்ப்புக்கும் பல்வேறு  மானியங்களை வழங்கி வருகின்றன. நிலத்தைச் சுற்றி மல்பெரி செடி வளர்ப்பதற்குகூட மானியங்கள் வழங்க மத்திய, மாநில அரசுகள் முன்வந்துள்ளன. வாய்க்கால், வரப்பு, வேலி ஓரங்கள் மற்றும் குடியிருப்புகளைச் சுற்றிலும்கூட எட்டு முதல் பத்து அடி இடைவெளியில் மல்பெரி செடிகளை நடவு செய்து பயன் பெறலாம்.

நீங்கள் கேட்டவை - மல்பெரியை வரப்பு ஓரத்தில் வளர்க்க முடியுமா ?

நன்கு வளர்ந்த ஒரு மல்பெரி செடியின் இலைகளைக் கொண்டு, ஓராண்டுக்கு... மூன்று முதல் நான்கு முட்டைத் தொகுதி அளவுக்கு பட்டுப்புழு வளர்ப்பை மேற்கொள்ளலாம். ஒரு முட்டைத் தொகுதி மூலமாக அரை கிலோ அளவுக்கு பட்டுக்கூடு உற்பத்தி செய்ய முடியும். ஒரு ஏக்கர் அளவிலான தோட்டத்தைச் சுற்றி 125 முதல் 133 மல்பெரி மரங்கள் வரை வளர்க்க முடியும். அவற்றின் மூலம், ஆண்டுக்கு 180 முதல் 200 கிலோ அளவுக்கு பட்டுக்கூடுகள் உற்பத்தி செய்யமுடியும். இதன் மூலம், 30 ஆயிரம் ரூபாய் வரை வருமானம் ஈட்டலாம்.இந்த வருமானம், தோட்டத்திலிருக்கும் வரப்பு மற்றும் வேலிகளில் மட்டுமே பயிரிடுவதன் மூலமாகக் கிடைப்பது.

தற்சமயம் 'கிரியா ஊக்கி’ என்ற திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன்படி ஒரு விவசாயி தனது நிலத்தில், 5 அடி உயரம் வரை மல்பெரி செடியை வளர்த்தால், செடிக்கு 8 ரூபாய் வீதம் மானியம் வழங்கப்படுகிறது. வரப்பு ஓரங்களில் சாகுபடி செய்திருந்தால், அதிகபட்சம் 200 செடிகளுக்கு மானியம் வழங்கப்படும்.

தனிப்பயிராக சாகுபடி செய்தால், ஏக்கருக்கு 6 ஆயிரத்து 750 ரூபாய் என்றஅளவிலும், அதிகபட்சமாக இரண்டரை ஏக்கர் நிலத்துக்கு 16 ஆயிரத்து 875 ரூபாயும் மானியமாக வழங்கப்படுகிறது. இதுதவிர, பாசனக் கருவிகள், பட்டுக்கூடு தளவாடங்கள்.... போன்றவற்றுக்கும்கூட மானியம் உண்டு. மானியங்களைப் பெற விரும்பினால், அருகில் உள்ள பட்டு வளர்ச்சித்துறை அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளவும்.''

தொடர்புக்கு, தொலைபேசி: 04343- 235070.

''மடல் வாழை என்று தனி ரகம் உண்டா? இதைப் பணப்பயிராக சாகுபடி செய்ய முடியுமா?''

மு. நடேசன், தச்சூர்.

திருப்பூர் மாவட்ட முன்னோடி விவசாயி 'ஓஷோ’ பழனிசாமி பதில் சொல்கிறார்.

நீங்கள் கேட்டவை - மல்பெரியை வரப்பு ஓரத்தில் வளர்க்க முடியுமா ?

''இலை வாழையைத்தான் சில பகுதிகளில் 'மடல் வாழை' என்கிறார்கள். இலை அறுவடைக்கு பூவன் ரகம்தான் சிறந்தது. மொந்தன், ரஸ்தாளி.... போன்ற ரகங்களின் இலை பெரியதாக இருந்தாலும், அவை பட்டென்று உடையும்.

இலை உடைந்தாலும், கிழிந்தாலும் அதன் மவுசு போய் விடும். செவ்வாழை ரக இலை, அகலமாக இருந்தாலும் அறுவடை செய்யும்போதே, கிழிந்து விடும். பூவன் ரகத்தில், நடவு செய்த ஐந்தாம் மாதம்

நீங்கள் கேட்டவை - மல்பெரியை வரப்பு ஓரத்தில் வளர்க்க முடியுமா ?

முதல் இலை அறுவடை செய்யலாம்.

இதை முழுக்க, முழுக்க இயற்கை முறையிலேயே சாகுபடி செய்ய முடியும். ஏக்கருக்கு 2 ஆயிரம் கன்றுகள் வரை நடவு செய்து, சராசரியாக தினமும் 500 இலைகளை அறுவடை செய்யலாம். அதன் மூலமாக மாதம் 7 ஆயிரம் ரூபாய் வரை வருமானம் ஈட்ட முடியும்.

இலை வாழையை கண்ட நேரத்தில் அறுவடை செய்யக்கூடாது. காலை நேரம்தான் அறுவடைக்கு ஏற்றது. தவறி, மதிய நேரத்தில் இலையை அறுத்தால், இலைகள், சுருங்கியும், கிழிந்தும் போய் விடும். பக்கக் கன்றுகள் வளர்ப்பதன் மூலம், வாழையடி, வாழையாக வளர்த்து இலை மூலம் வருமானம் எடுக்க முடியும்.''

தொடர்புக்கு, செல்போன்: 98657-07172.

''தஞ்சாவூர் மாவட்டத்தில் விரால் மீன் வளர்க்க முடியுமா?''

எம். சுந்தரவடிவேல், நெடுங்குளம்.

பொன்னேரி, மீன் வளத் தொழில்நுட்ப நிலையத்தின் விஞ்ஞானி முனைவர். ராவணேஸ்வரன் பதில் சொல்கிறார்.

''விரால் மீன்களுக்கு நல்ல விலை கிடைப்பதுதான் அவற்றை வளர்க்கும் ஆர்வத்தைத் தூண்டுகிறது. விரால் மீன்களை தஞ்சாவூரில் தாராளமாக வளர்க்கலாம். இந்த வகை மீன்களுக்கு நீரில் நீந்திச் செல்ல அதிக இடவசதி தேவை. அதனால், செயற்கைக் குளங்களில் விரால் மீன்களின் வளர்ச்சி குறைவாகத்தான் இருக்கும். ஆனால், ஏரி, குளங்களில் வளர்க்கும்போது கூடுதல் எடை கிடைக்கும்.

விரால் மீன்கள் உயிருள்ள மீன்கள், புழுக்கள் ஆகியவற்றையே தீவனமாக சாப்பிடும் குணம் கொண்டவை. இயற்கை நீர் நிலைகளில், சிறிய ரக மீன்கள், தலைப்பிரட்டை, பூச்சி, புழுக்கள் அதிகமாக இருக்கும். அதனால், வாய்ப்புக் கிடைத்தால், இயற்கை நீர் நிலைகளில் விரால் மீன்களை வளர்த்தால், நல்ல லாபம் எடுக்க முடியும்.

நீங்கள் கேட்டவை - மல்பெரியை வரப்பு ஓரத்தில் வளர்க்க முடியுமா ?
நீங்கள் கேட்டவை - மல்பெரியை வரப்பு ஓரத்தில் வளர்க்க முடியுமா ?

'செயற்கைக் குளத்தில்தான் வளர்க்க முடியும்’ என்றால், சில தொழில்நுட்பங்களைக் கடைபிடிக்க வேண்டியிருக்கும். குளத்தில் ஜிலேபியா இன மீன் குஞ்சுகளை விட்டு, இரண்டு மாதங்கள் வளர்த்தபிறகு விரால் மீன் குஞ்சுகளை விட வேண்டும்.

தன்னை விட, சிறிய அளவில் உள்ள மீன்களைத்தான் விரால் உண்ணும். ஜிலேபியா மீன்கள் குஞ்சு பொரிக்க, பொரிக்க அது விரால்களுக்கு நல்ல தீவனமாக அமையும். தவிர, குளத்தில் நான்கு பக்கங்களிலும் தண்ணீர் மட்டத்துக்கு, ஒரு அடி உயரதுக்கு மேல், 100 வாட்ஸ் மின்சார பல்புகளை இரவில் எரிய விட வேண்டும்.

தோட்டத்தில் சுற்றித்திரியும் பூச்சிகள், மின்சார விளக்கு மூலம் கவர்ந்து இழுக்கப்பட்டு பல்பு மீது மோதி, தண்ணீரில் விழும். இவற்றையும் விரால் மீன்கள் உண்டு வாழும்.''

தொடர்புக்கு, தொலைபேசி: 044-27991566.
செல்போன்: 94446-94845.

''என்னுடைய தோட்டத்தில் ஏழு ஆண்டுகள் வயது கொண்ட பதிமுகம் மரங்கள் உள்ளன. இதை எப்படி விற்பனை செய்வது?''

வி. சண்முகநாதன், குண்டமரைக்காடு.

கோயம்புத்தூர் மாவட்ட மூலிகை மற்றும் மரம் வளர்ப்போர் சங்கத்தின் கொள்கைப் பரப்புச் செயலாளர், நாராயணசாமி பதில் சொல்கிறார்.

''கேரள மாநிலத்தில் தோட்டங்கள் தோறும் பதிமுகம் மரங்கள் உள்ளன. அங்கு வேலிப்பயிராகவும், தனிப்பயிராகவும் இதை சாகுபடி செய்கிறார்கள். வீடுகளிலும், உணவகங்களிலும் குடிநீரை சுத்திகரிக்க பதிமுக மரக்கட்டையைத்தான் பயன்படுத்துகிறார்கள். ஆயுர்வேத மருந்துக்கும் பயன்படுகிறது. உணவுப் பொருட்கள் மற்றும் கைவினைப் பொருட்களுக்கான இயற்கைச் சாயமாகவும் இது பயன்படுத்தப்படுகிறது.

நீங்கள் கேட்டவை - மல்பெரியை வரப்பு ஓரத்தில் வளர்க்க முடியுமா ?

கேரள வனத்துறை, இம்மரங்களை சாகுபடி செய்ய விவசாயிகளை ஊக்குவித்து வருகிறது. ஆனால், நமது மாநில வனத்துறை, தனியார் நிலங்களில் தேக்கு, சந்தனம், மலைவேம்பு உள்ளிட்ட சில வகை மரங்களை வளர்க்க மட்டுமே அனுமதி அளித்துள்ளது. அந்தப் பட்டியலில் பதிமுகம் இல்லை.

நீங்கள் கேட்டவை - மல்பெரியை வரப்பு ஓரத்தில் வளர்க்க முடியுமா ?

உங்கள் பகுதியில் உள்ள கிராம நிர்வாக அலுவலரிடம், உங்களது நிலத்தில் பதிமுகம் மரங்கள் உள்ளதைப் பதிவு செய்து சிட்டா, அடங்கல் தருமாறு விண்ணப்பித்தால்... அவர் தோட்டத்தைப் பார்த்துவிட்டு, சிட்டா, அடங்கல் கொடுப்பார். அதை வைத்து, மாவட்ட வனப்பாதுகாவலரிடம், 'என்னுடைய நிலத்தில் பதிமுகம் மரங்கள் உள்ளன. அவற்றைப் பார்வையிட்டு, அறுவடை செய்ய ஆவன செய்யவும்' என விண்ணப்பித்தால், ஆய்வு செய்து மரத்தை வெட்ட தடையில்லா சான்றிதழ் வழங்குவார்கள்.

பிறகுதான், வியாபாரிகளை அழைத்து வந்து மரத்தைக் காட்ட வேண்டும். மரத்தின் பட்டை மற்றும் சேகுவின் தரத்தை வைத்துத்தான் விலை மதிப்பீடு செய்யப்படும். அதனால், வியாபாரிகள் விலை நிர்ணயித்த பிறகுதான் மரங்களை வெட்ட வேண்டும். நாமாக வெட்டி வைத்துவிட்டு, வியாபாரிகளை அழைத்தால், குறைந்த விலையே கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.''

தொடர்புக்கு, செல்போன்: 99432-84746.

''கடலூர் மாவட்டத்தில், தேனீ, காளான் வளர்ப்பு போன்றவை பற்றி எங்கு பயிற்சி கொடுக்கிறார்கள்?''

என். நிஜாமுதீன், பரங்கிப்பேட்டை.

கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் வேளாண் அறிவியல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு தேனீ, காளான் போன்றவற்றை வளர்ப்பது பற்றியும், கடலூர் மாவட்டத்தில் விளையக்கூடிய பயிர்களை சாகுபடி செய்வது பற்றியும், தொடர்ந்து பயிற்சி கொடுத்து வருகிறார்கள்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04143-238353.

நீங்கள் கேட்டவை - மல்பெரியை வரப்பு ஓரத்தில் வளர்க்க முடியுமா ?