மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மரத்தடி மாநாடு !

கடலை விலையை சரித்த வியாபாரிகளின் சிண்டிகேட்!

 ஓவியம்: ஹரன்

##~##

காலையிலேயே 'ஏரோட்டி' ஏகாம்பரம் வரப்பில் அமர்ந்தபடி ஏதோ வேலைகளைப் பார்த்துக் கொண்டிருக்க... ''என்னய்யா, வரப்புல பட்டறைய போட்டுட்டாப் போல இருக்கு...'' என்றபடியே வந்து சேர்ந்தார் 'வாத்தியார்’ வெள்ளைச்சாமி. அவரைத் தொடர்ந்து, தலைக் கூடையுடன் தென்பட்ட 'காய்கறி' கண்ணம்மா, சுற்றும் முற்றும் பார்த்தபடியே தானும் வந்து சேர்ந்தார்.

வந்த வேகத்திலேயே... ''வெயில் போட்டுத் தாக்குது... இதைச் சாப்பிடுங்க'' என்று சொல்லி, தர்பூசணிக் கீற்றுகளைக் கொடுத்த காய்கறி, ''முக்கியமான சேதி ஏதாச்சும் இருந்தா சொல்லுங்க வாத்தியாரய்யா'' என்று கேட்டார்.

''கவிஞர் வைரமுத்து இருக்கார்ல. அவர் தண்ணீர், விவசாயம், சுற்றுப்புறச்சூழல் எல்லாத்தையும் மையமா வெச்சு 'மூன்றாம் உலகப் போர்’னு 'ஆனந்த விகடன்’ புத்தகத்துல ஒரு தொடர் எழுதினார். அது புத்தகமா வெளிவந்திருக்கு. 'இலக்கியச் சிந்தனை அமைப்பு’ 2012-ம் வருஷத்தோட சிறந்த நாவல் விருதுக்கு அதை தேர்வு செஞ்சுருக்கு. மார்ச் 9-ம் தேதி இதுக்காக ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு பண்ணி, அதுல இதை தெரிவிச்சாங்க. அப்ப பேசின வைரமுத்து, 'மூன்றாம் உலகப் போர்’ நாவல் மூலமா கிடைச்ச பணத்துல 11 லட்ச ரூபாயை காவிரி டெல்டா மாவட்டத்துல வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயக் குடும்பங்களுக்குக் கொடுக்கப் போறதா அறிவிச்சுருக்கார்'' என்றார், வாத்தியார்.

''பரவாயில்லையே... எவ்வளவு சம்பாதிச்சாலும் கொடுக்குறதுக்குனு ஒரு மனசு இருக்கணும்யா...'' என்று நெகிழ்ந்தார் காய்கறி.

''கவிஞரும் நம்ம கள்ளிக்காட்டு மனுஷன்தானே... விவசாய சாதியோட சோகம் தெரியாம, புரியாம இருக்குமா...!'' என்று சொன்ன ஏரோட்டி, அடுத்து ஒரு செய்திக்குத் தாவினார்.

மரத்தடி மாநாடு !

''கடலூர் மாவட்டத்துல அதிகமா நிலக்கடலை வரத்து இருக்குதாம். அதேநேரத்துல மார்க்கெட்ல நல்ல விலையும் கிடைச்சுட்டு இருந்துருக்கு. ஒழுங்கு முறை விற்பனைக் கூடங்கள்லயே பிப்ரவரி மாச ஆரம்பத்துல 1 மூட்டை (80 கிலோ) 7 ஆயிரத்து 600 ரூபாய்க்கு வித்துருக்கு. வரத்து அதிகம் இருந்தும் விலை இறங்காததால சம்சாரிக சந்தோஷமா இருந்துருக்காங்க. இது பொறுக்காத வியாபாரிங்க ஒண்ணு சேர்ந்து, சிண்டிகேட் போட்டுக்கிட்டு விலையைக் குறைக்க ஆரம்பிச்சுட்டாங்களாம்.

இப்போ ஒரு மூட்டைக்கு 4 ஆயிரத்து 500 ரூபாய்க்குத்தான் விலை வைக்கிறாங்களாம். ஏற்கெனவே நெல்லு மட்டுமே போட்டுட்டு இருந்த விவசாயிகள், தண்ணி இல்லாமத்தான் நிலக்கடலைக்கு மாறியிருக்காங்க. நல்ல விலை கிடைக்குங்கிற நம்பிக்கையில கடன உடன வாங்கி, ஜெனரேட்டர் வெச்செல்லாம் தண்ணி பாய்ச்சி பயிரைக் காப்பாத்தியிருக்காங்க. இப்ப தொபுக்கடீர்னு விலை குறைஞ்சு போனதால... ரொம்பவே நொந்து போயிருக்காங்க'' என்றார்.

''சரி, போன தடவை நாம சந்திச்சப்போ ஒரு அழிப்பாங்கதை போட்டேனே ஞாபகம் இருக்கா? யாரு அதைக் கண்டு பிடிச்சுருக்கீங்க'' என்று கேட்டார் காய்கறி.

''மரத்துக்கு மேல பழம்... பழத்துக்கு மேல மரம்... அதுதானே? வேற என்ன அன்னாசிப்பழம். செடியோட தலையிலதான் பழம் வரும். அந்தப் பழத்தோட தலையிலதான் திரும்பவும் செடி முளைக்கும்...'' என்று விளக்கத்தோடு பதில் தந்தார் வாத்தியார்.

''ரொம்ப ரொம்ப சரி...'' என்ற காய்கறி, ''உடைச்சுப் பார்த்தா முத்தா இருக்கும். ஆனா, விலை போகாது. அது என்ன? பதிலைக் கண்டுபிடிச்சு வைங்க'' என்றபடியே கிளம்ப எத்தனிக்க...

''என்ன, இன்னிக்கு சட்டுபுட்டுனு மாநாட்டை முடிவுக்கு கொண்டு வந்துட்டே...'' என்று கேட்டார் ஏரோட்டி.

''பசங்களுக்கு பரீட்சை நடக்குது. அவங்களும் நாளைக்கு என்ன மாதிரியே காய்கறிக் கூடைய தலையில வெச்சுக்கிட்டு அலையவா முடியும். அதான் வீட்டுக்குப் போய் கூடமாட இருந்து படிக்க வைக்கணும்'' என்றபடியே காய்கறி கிளம்ப... முடிவுக்கு வந்தது, அன்றைய மாநாடு.