மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மரத்தடி மாநாடு !

வான்கோழிக் குஞ்சுக்கு... ஏறுது கிராக்கி..!

##~##

வேலை செய்து களைத்துப் போனவராக மரத்தடி கல் திட்டில் 'அக்கடா' என்று உட்கார்ந்திருந்தார், 'ஏரோட்டி’ ஏகாம்பரம். சற்று நேரத்தில், 'வாத்தியார்’ வெள்ளைச்சாமியும் 'காய்கறி’ கண்ணம்மாவும் ஒரே நேரத்தில் வந்து சேர்ந்தனர்.

''கேஸ் கம்பெனி லாரி வரும்னு காலி சிலிண்டரோட காலையில்இருந்து நின்னுகிட்டிருந்தேன். 'பாதி வழியில டயர் பஞ்சராகிப் போச்சு'னு லேட்டாதான் வந்து சேர்ந்துச்சு லாரி. சிலிண்டரை எடுத்து வீட்டுல போட்டுட்டு வர்றதுக்குள்ள... போதும் போதும்னு ஆயிடுச்சு. வெயில் வேற மண்டையப் பிளக்க ஆரம்பிச்சுடுச்சே... அப்பாடா!'' என்றபடியே அமர்ந்தார் வாத்தியார்.

''ம், இன்னும் அக்னி நட்சத்திரம் சமயத்துல எம்பொழப்பெல்லாம் எப்படித்தான் ஓடப்போகுதோ?'' என்று தன் எதிர்கால வியாபாரத்தை நினைத்துப் புலம்பினார் காய்கறி.

''உன் பொழைப்பு மட்டுமில்ல... வெயிலும் வறட்சியும் ஏகப்பட்ட பேர் பொழைப்பைப் பாழாக்கிடுச்சு. பனை மரத்தைக்கூட விட்டு வைக்கலையாம். இந்த வருஷம் பதனீ, நுங்கு எங்கயுமே சரிவர வரத்து இல்லை. மதுரைப் பக்கத்துல இருந்து கேரளாவுக்கு பச்சை வெல்லம் தயாரிச்சு அனுப்புவாங்க. இதுக்காகவே ஸ்பெஷலா பச்சை சாயம் சேர்த்து தயாரிப்பாங்க. வருஷம் முழுக்க இந்தத் தொழில் நடக்கும். தண்ணி இல்லாம கரும்பு சாகுபடி குறைஞ்சதால, வெல்ல உற்பத்தியும் பாதிச்சுடுச்சாம்'' என்றார், வாத்தியார்.

''பாடா படுத்தற இந்த வெயிலுக்காக தண்ணியைக் குடிச்ச 29 ஆடுக செத்துப்போன கதை தெரியுமோ...'' என்று அதிர்ச்சிக் கூட்டிய ஏரோட்டி,

''மேலூர், புலிமலைப்பட்டியில செம்மறி ஆடுங்க வளர்ப்பு ஜாஸ்தி. ராஜபாண்டி, சங்கர், தர்மராஜ்னு மூணு பேர் தங்களோட ஆட்டை மேய்ச்சுக்கிட்டு இருந்தப்போ, குட்டையில தேங்கிக் கிடந்த தண்ணியை ஆடுக குடிச்சுருக்குக. கொஞ்ச நேரத்துலேயே ஒவ்வொரு ஆடா, மயங்கி விழுந்து செத்துப்போக ஆரம்பிச்சிருச்சாம்.

மரத்தடி மாநாடு !

கால்நடைத்துறை அதிகாரிக வந்து பார்த்துட்டு, 'சூடான தண்ணியைக் குடிச்சதுதான் காரணம்'னு சொல்லிஇருக்காங்க. 'தண்ணி சூடா இருந்தா... ஆடுக எப்படி குடிக்கும்? அதனால வேற ஏதாச்சும்தான் காரணமா இருக்கும். நல்லா பரிசோதனை பண்ணிப் பார்த்து சொல்லுங்க'னு விவசாயிங்க கேட்டுட்டிருக்காங்க. பாவம்... ஒவ்வொரு ஆடும் ஐயாயிரம் ரூபாய்க்கு மேல விலை போகுமாம்'' என்று 'உச்' கொட்டினார்!

அடுத்த செய்தியை ஆரம்பித்த வாத்தியார், ''வான்கோழிக்கான சீசன் ஆரம்பிச்சுருக்கு. எப்பவும் தீபாவளி, கிறிஸ்துமஸ் சமயங்கள்ல அதிகத் தேவை இருக்கும். ஏப்ரல், மே மாசத்துல குஞ்சுகளா வாங்கி வளர்க்க ஆரம்பிச்சா, தீபாவளி சமயத்துல விற்பனைக்குத் தயாராயிடும்கிறதால... நிறைய இடங்கள்ல குஞ்சுகளுக்கு ஆர்டர் பெருகிட்டு இருக்குதாம். போன வருஷத்தைவிட இந்த வருஷம் விலையும் ஏறியிருக்குதாம்.

தர்மபுரி மாவட்டம், பென்னாகரத்துக்குப் பக்கத்துல மாமரத்து பள்ளம்ங்கற ஊர்ல... ஒவ்வொரு வீட்டுலயும், வான்கோழி, கின்னிகோழி, நாட்டுக்கோழினு குடிசைத்தொழில் கணக்கா வளர்க்கறாங்க. இதை தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகானு ஊர் ஊரா கொண்டு போய் வித்துட்டு வருவாங்களாம். நாப்பது நாள் வயசுள்ள ஒரு வான்கோழிக் குஞ்சு ஜோடி, இந்த சீஸன்ல நானூறு ரூபாய்னு விலைபோகுதாம்'' என்று சொன்னவர்... 'கபகப'வென்று சத்தம்போட்டுச் சிரித்தார்!

''என்னாச்சு வாத்தியரய்யா... வான்கோழி கிச்சுகிச்சு மூட்டிடுச்சோ...'' என்று கேட்டார் காய்கறி!

''நான், வானளாவிய அதிகாரம் படைச்சவங்கள நினைச்சு சிரிச்சேன். 'வறட்சி நிலவரத்தைப் பார்வையிடப் போறோம்'னு ஆறு அமைச்சர்கள் கொண்ட குழு தமிழ்நாடு முழுக்க சுத்தினாங்க. அப்படி சிவகங்கை மாவட்டத்துக்கு வந்தவங்க... ரோட்டோரம் கொஞ்சம் ஓய்வெடுத்துட்டு, மதிய சாப்பாட்டையும் சாப்பிட்டுட்டு 'வறட்சி'யை ஆராய்ச்சி பண்ணிப் பார்த்துட்டு போயிட்டாங்க.

இப்படி வந்தவங்களுக்கு ஒருவேளை சாப்பாட்டுக்கு மட்டுமே 87 ஆயிரத்து

20 ரூபாய் செலவாயிருக்கு. 'மாவட்டத்துல இருக்குற 12 ஊராட்சி ஒன்றியங்கள்,

12 பேரூராட்சிகள், 3 நகராட்சிகள் இதெல்லாம் சேர்ந்து இந்தத் தொகையைக் கொடுக்கணும்'னு மேலதிகாரிங்ககிட்ட இருந்து, இப்ப லெட்டர் வரவே... 'எந்தக் கணக்குல எழுதுறது?'னு அதிகாரிகள் மண்டையைக் குடாய... விஷயம் வெளியில வந்து சந்தி சிரிக்குது!'' என்று ஆதங்கப்பட்டார், வாத்தியார்.

'சரிசரி, அந்தக் கண்றாவி கிடக்கட்டும். 'உடைச்சுப் பாத்தா முத்தா இருக்கும். ஆனா... விலை போகாது. அது என்ன?’னு போன தடவை கேட்டேனே விடை தெரிஞ்சுதா...?'' என்றார் காய்கறி!

''ம்க்கும்... இதை கண்டுபிடிக்க முடியாதா... வெண்டைக்காய்!'' என்று சொன்னார் வாத்தியார்.

''போன தடவை நான் கேட்டப்பவே சொல்லியிருந்தா பாராட்டலாம். வீட்டுல போய் கேட்டுட்டு வந்துட்டு... இந்த பந்தாவா?!'' என்று சடாய்த்த காய்கறி,

''சரி, 'சிவப்புப் பட்டுப்பை நிறைய பவுன் காசு... அது என்ன?’ இப்ப சட்டுனு சொல்லுங்க பார்க்கலாம்'' என்று சொல்லி தெம்பாகப் பார்வையை ஓட்ட... 'மலங்க மலங்க' விழித்தனர் வாத்தியாரும்... ஏரோட்டியும்.

''கண்டுபிடிச்சுட்டே இருங்க...'' என்றபடியே கூடையைத் தூக்கி தலையில் வைக்க... முடிவுக்கு வந்தது, அன்றைய மாநாடு.