படங்கள்: தேனீ ஈஸ்வர், க. தனசேகரன்
புறா பாண்டி
''இயற்கை விளைபொருள் அங்காடி தொடங்க விரும்புகிறேன். வெற்றிகரமாக நடத்த ஆலோசனை சொல்ல முடியுமா?''
போ. பூமிநாதன், செக்கானூரணி.
சென்னையில் இயற்கை அங்காடி நடத்தி வரும், 'ரீ ஸ்டோர்’ அனந்து பதில் சொல்கிறார்.
''மற்ற கடைகளைப் போல இயற்கை அங்காடியில் லாபம் மட்டுமே குறிக்கோளாக இருக்கக்கூடாது. அடிப்படையில் இயற்கை விவசாயம், நஞ்சில்லா உணவு, சிறுதானியங்கள்.... குறித்த விழிப்பு உணர்வு வேண்டும். முதலில், அருகில் உள்ள இயற்கை விவசாயிகளிடம் இருந்து பொருட்களை வாங்குங்கள். விவசாயிகள் அனுபவ ரீதியாக எத்தனை ஆண்டுகள் இயற்கை விவசாயம் செய்கிறார் என்று பார்த்து, அதன் அடிப்படையில் பொருட்களை வாங்க வேண்டும். ஒவ்வொரு பொருட்களுக்கு அடியிலும், விவசாயியின் பெயர், முகவரியை எழுதி வைக்க வேண்டும். இது நம்பகத்தன்மையை வலுப்படுத்தும்.

இயற்கை அங்காடி, ஆட்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் பகுதிகளில்தான் இருக்க வேண்டும் என்கிற கட்டாயம் கிடையாது. சற்று ஒதுக்குப்புறமாகவும்கூட இருக்கலாம். ஏனென்றால், இயற்கை விளைபொருட்களை விவரம் தெரிந்தவர்கள் மட்டுமே, தேடி வந்து வாங்குவார்கள். அதனால், பரபரப்பான பகுதிகளில் அங்காடி அமைத்து, வாடகைக்கு அதிக பணம் செலவழிக்க வேண்டாம். இயற்கை விவசாயம், இயற்கை உணவு, சிறுதானியங்கள்... போன்றவை பற்றி அவ்வப்போது கலந்துரையாடல் நடத்தலாம். இதன் மூலம் இயற்கை அங்காடியின் பெயர் பரவுவதோடு, நுகர்வோருக்கு உங்கள் மீது நற்பெயர் உருவாகும். விற்பனை செய்யும் பொருட்கள் மீது அதிகபட்சம் 25 சதவிகிதத்துக்கு மேல் லாபம் வைக்க வேண்டாம். வாங்கும் விலை, விற்கும் விலை போன்றவற்றை நுகர்வோரிடம் வெளிப்படையாகப் பகிர்ந்து கொண்டால், உங்கள் மீது நன்மதிப்பு உருவாகும். அதுவே விற்பனையைக் கூட்டும்!''
தொடர்புக்கு, செல்போன்: 94441-66779.
''சண்டைக்கோழி வளர்க்க விரும்புகிறேன். எந்த ரகம் ஏற்றது..?''
எஸ். சுந்தரம், தஞ்சாவூர்.
கடலூர் மாவட்டம் பெண்ணாடம் பகுதியில் சண்டைக்கோழி வளர்த்து வரும் து. தெய்வமணி பதில் சொல்கிறார்.
''தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுக்களில் சண்டைக்கோழி விளையாட்டும் ஒன்று. செங்கறுப்பு, மயில், கீரி, பேடு, வல்லூறு... என இருபது சண்டைக்கோழி ரகங்கள் உள்ளன. என்னுடைய அனுபவத்தின் மூலம் மயில் ரகக் கோழிகளுக்கு நல்ல வாய்ப்பு இருப்பதைத் தெரிந்து கொண்டேன். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நாமக்கல் பகுதியில் இருந்து, இந்த ரக கோழிகளை வாங்கி வந்தேன். பெட்டைக்கோழி அதிகபட்சம் மூன்று கிலோ வரை வரும். சேவல், 7 கிலோ வரை வளரும். சண்டைக்கோழிகளை 6 மாதங்கள் வளர்த்து மூன்று கிலோ எடை வந்தவுடன் ஒரு கோழி ஆயிரம் ரூபாய் என விற்று விடுகிறோம். 'கோழி விற்பனைக்கு உள்ளது’ என்று தெரிந்தால், வியாபாரிகள் நேரடியாக வந்து வாங்கிக் கொள்கிறார்கள்.

சண்டைக்கோழிகளுக்கு கம்பு, சோளம், ஆட்டு ஈரல் போன்றவற்றை தீவனமாகக் கொடுக்க வேண்டும். மூச்சுப்பயிற்சிக்காக தினமும் தண்ணீரில் நீந்த விட வேண்டும். இப்படி சண்டைக்கோழிகளைப் பழக்குவது தனிக்கலை. நன்கு பழக்கப்பட்ட கோழி, திறமையைப் பொறுத்து 5 ஆயிரம் ரூபாயிலிருந்து 30 ஆயிரம் ரூபாய் வரை கூட விலை போகும்.
சண்டைக்கோழிகள், விளையாட்டுக்கு மட்டும் பயன்படும் என்று நினைக்காதீர்கள். தோட்டத்தில் 5 கோழிகள் இருந்தால் போதும். அவை, நிலத்தில் வாழை, தென்னை... என எந்தப் பயிராக இருந்தாலும், சிறிய களைகளைக் கூட விட்டு வைக்காமல் மேய்ந்து விடும். இவற்றின் கால்கள் மிகவும் கூர்மையாக இருப்பதால், கால்களாலேயே களைகளைக் கிளறி விடும். 5 ஆட்கள் வைத்து களையெடுக்கும் வேலையை, 5 சண்டைக்கோழிகள் செய்து விடும். களைகளை வேர் வரை பறித்து உண்டு விடுவதால், மீண்டும் முளைப்பதில்லை.''
தொடர்புக்கு, செல்போன்: 76672-83290.
''நிலக்கடலையை நெல் போல, முளைக்க வைத்து விதைக்கலாம் என்கிறார்கள் சிலர். இதனால் என்ன நன்மை?''
கே. கவிதா, வானூர்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் எண்ணெய் வித்துக்கள் ஆராய்ச்சி நிலையத்தின் விதை நுட்பவியல் விஞ்ஞானி முனைவர். கே. நடராஜன் பதில் சொல்கிறார்.
''நிலக்கடலையில் உள்ள பெரிய பிரச்னை, செடிகளின் எண்ணிக்கைதான். நாம் விதை நன்றாகத்தான் இருக்கிறது என்று விதைப்போம். ஆனால், விதைகள் சரியாக முளைக்காது. இதனால், பயிர் எண்ணிக்கை போதுமான அளவுக்கு இருக்காது. இறுதியில் நாம் எதிர்பார்த்த விளைச்சலும் கிடைக்காது. இதைத் தவிர்க்கத்தான், விதைகளை முளைக்க வைத்து விதைக்கும் தொழில்நுட்பத்தைச் சொல்லி வருகிறோம்.
ஏக்கருக்கு 55 கிலோ விதைப் பருப்பு தேவைப்படும். இதனுடன் அரை கிலோ சூடோமோனஸையும் கலந்து, 28 லிட்டர் தண்ணீரில் விதைகளைக் கொட்டி 6 மணி நேரம் ஊற வைக்கவும். பின்பு நனைக்கப்பட்ட கோணிப்பையில் கொட்டி, 12 மணி நேரம் மூடி வைத்து... அவற்றில் முளைவிட்ட விதைகளை மட்டும் எடுத்து விதைக்கலாம்.

தேவைப்பட்டால், உயிர் உர நேர்த்தியும் செய்து விதைக்கலாம். அதாவது, இரண்டு பாக்கெட் ரைசோபியம், இரண்டு பாக்கெட் பாஸ்போ-பாக்டீரியா ஆகியவற்றை ஆறிய அரிசிக் கஞ்சியில் கலந்து கொள்ளவும். இதில் முளை கட்டிய விதைகதளைக் கலந்து, நிழலில் உலர்த்தி விதைத்தால், நல்ல பலன் கிடைக்கும்.
இப்படி முளைவிட்ட விதைகளை விதைக்கும்போது நல்ல விளைச்சல் கிடைக்கும். விதைநேர்த்திக்குப் பயன்படுத்தும் சூடோமோனஸ்... நிலக்கடலைச் செடியை நோய், நொடி தாக்காமல் பார்த்துக் கொள்ளும். ரைசோபியம், பாஸ்போ-பாக்டீயா ஆகியவை பயிர் வளர்ச்சிக்கு பக்க பலமாக இருக்கும்.''
தொடர்புக்கு, செல்போன்: 99943-15004.
''முருங்கையில் எத்தனை ரகங்கள் உள்ளன. ஆண்டு முழுவதும் காய்க்கும் முருங்கை ரகம் உள்ளதா?''
எம். சுந்தரம், திருவண்ணாமலை.
மரம் வளர்ப்பில் அனுபவம் உள்ள 'மரம்’ கருணாநிதி பதில் சொல்கிறார்.

''தமிழ்நாட்டில் ஏராளமான முருங்கை ரகங்கள் இருந்ததாகச் சொல்கிறார்கள். ஆனால், இப்போது ஐந்து ரகங்களுக்கு மேல் புழக்கத்தில் இல்லை. விழுப்புரம் மாவட்டம், மூங்கில்துறைப்பட்டு பகுதியில் சடை சடையாகக் காய்க்கும் ரகம் உள்ளது. சாத்தனூர் பகுதியில் காட்டு முருங்கை என்ற ரகம் உள்ளது. இது கசப்புத்தன்மை கொண்டது. இதன் இலைகளையும், காய்களையும் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும். இலங்கையில் இருந்து 'சிலோன் முருங்கை’ என்ற ரகம் வந்திருக்கிறது. இதை கரூர், வேலூர்... பகுதிகளில் பயிர் செய்கிறார்கள். பெரியகுளம் தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பி.கே.எம். ரக செடிமுருங்கைகளும் பரவலாக சாகுபடி செய்யப்படுகின்றன. இந்த ரகங்கள் அனைத்தும், வெயில் காலத்தில் மட்டுமே நன்றாகக் காய்க்கக் கூடியவை.

சில ஆண்டுகளுக்கு முன்பு திண்டுக்கல் மாவட்டம், பள்ளபட்டி கிராமத்தில் உள்ள அழகர்சாமி என்பவர், காட்டுமுருங்கையில் ஒட்டுக்கட்டி, ஒரு ரகத்தை உருவாக்கினார். இந்த ரகம்தான், ஆண்டு முழுவதும் காய்த்துக் கொண்டுள்ளது. ஓர் ஆண்டில் ஒரு மரம்,
3 ஆயிரம் ரூபாய் வரை வருமானம் தருகிறது. மணற்பாங்கான பகுதிகளிலும், கடற்கரை ஓரங்களிலும் முருங்கை நன்றாக வளராது. ஏக்கர் கணக்கில் சாகுபடி செய்ய விரும்பினால், முதலில் நான்கு முருங்கைச் செடிகளை நடவு செய்து ஒர் ஆண்டுக்குள் அவை நன்றாக வளர்ந்தால் மட்டுமே, அங்கு முருங்கை சாகுபடி செய்ய வேண்டும்.''
தொடர்புக்கு, செல்போன்: 93661-09510.
''வேம் எனப்படும் நுண்ணுயிரியின் தாய் வித்துகள் எங்கு கிடைக்கும்?''
எம். சுந்தரவடிவேல், நெடுங்குளம்.
''கோயம்புத்தூர், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் செயல்பட்டு வரும், நுண்ணுயிர் துறையில் கிடைக்கும்.''
தொடர்புக்கு, தொலைபேசி: 0422-6611294.
விவசாயம், கால்நடை, மீன்வளம் மற்றும் சுற்றுச்சூழல் என்று பல துறைகள் பற்றி வாசகர்களின் சந்தேகங்களுக்கான பதில்களை உரிய நிபுணர்களிடம் பெற்றுத் தருவதற்காகவே 'புறா பாண்டி' சும்மா 'பறபற'த்துக் கொண்டிருக்கிறார். உங்கள் கேள்விகளை
'நீங்கள் கேட்டவை',
பசுமை விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-2.
என்ற முகவரிக்கு தபால் மூலமும் pasumai@vikatan.comஎன்ற முகவரிக்கு இ-மெயில் மூலமும் PVQA (space) உங்கள் கேள்வி (space) உங்கள் பெயர் டைப் செய்து 562636 என்ற எண்ணுக்கு செல்போன் மூலமும் அனுப்பலாம்.