மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நீங்கள் கேட்டவை : ''நீரோட்டம் பார்ப்பது எப்படி?''

புறா பாண்டி படங்கள்: எஸ். சாய்தர்மராஜ், எஸ். சிவபாலன்

##~##

''எங்களிடம் உள்ள 50 மேய்ச்சல் மாடுகள் மூலம் தினமும் 500 கிலோ சாணம் கிடைக்கிறது. இதில் இருந்து விபூதி தயாரிக்க முடியுமா?''

தா. சுகுமூர்த்தி, பஞ்சப்பள்ளி.

சேலம் மாவட்டம் 'சுரபி கோசாலை’யைச் சேர்ந்த சுவாமி. ஆத்மானந்தா பதில் சொல்கிறார்.

நீங்கள் கேட்டவை : ''நீரோட்டம் பார்ப்பது எப்படி?''

''சாணத்திலிருந்து விபூதி மட்டுமல்ல... பசுக்களிடம் இருந்து கிடைக்கும் பொருட்களான, சிறுநீர், பால், நெய்... ஆகியவற்றின் மூலம், சோப்பு, ஷாம்பு என கிட்டதட்ட இருபதுக்கும் மேற்பட்ட பொருட்களைத் தயாரிக்க முடியும். இதில் ஒரே கட்டுப்பாடு என்னவென்றால், நம்மிடம் இருக்கும் மாடுகள் நாட்டு மாடுகளாக இருக்க வேண்டும்.

விபூதி தயாரிக்கும் விதத்தை இங்கு பார்ப்போம். பசுஞ்சாணத்தை சிறிய உருண்டைகளாகப் பிடித்து காய வைக்க வேண்டும். அவை நன்கு காய்ந்த பிறகு நெல் கருக்காவில் இந்த உருண்டைகளை வைத்து எரிக்க வேண்டும். அது உண்மையான நாட்டு மாட்டுச் சாணம் என்றால், உருண்டை உடையாமல் எரிந்து விபூதியாக மாறியிருக்கும்.

எட்டு கிலோ சாணத்தில் இருந்து, ஒரு கிலோ விபூதி கிடைக்கும். தரம் மற்றும் தேவையைப் பொறுத்து ஒரு கிலோ விபூதி 180 ரூபாய் முதல் 250 ரூபாய் வரையிலும் விற்பனையாகிறது.

நீங்கள் கேட்டவை : ''நீரோட்டம் பார்ப்பது எப்படி?''

இப்போது, சுத்தமான விபூதி கிடைப்பது அரிதாக உள்ளது. அதனால், நம்மிடம் இருப்பது சுத்தமான விபூதியாக இருக்கும்பட்சத்தில், தேடி வந்து வாங்கிச் செல்லும் அளவுக்கு விற்பனை வாய்ப்புகள் உருவாகும். ஆரம்பத்தில், அருகில் உள்ள கோயில்கள், ஆன்மிக அமைப்புகளிடம் உங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு விற்கலாம். விபூதி உட்பட மற்ற பொருட்கள் தயாரிப்பதற்கான முறையான பயிற்சி எடுத்துக் கொண்டு தொழிலில் இறங்கினால், விரயங்களைத் தவிர்க்க முடியும்''

தொடர்புக்கு, செல்போன்: 94432-29061.

''முந்திரி சாகுபடியில், நல்ல விளைச்சல் கிடைப்பதற்கான வழி முறையைச் சொல்ல முடியுமா?''

ச.அ. அலெக்சாண்டர், வரதராஜன்பேட்டை.

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னோடி விவசாயி மோட்சநாதன் பதில் சொல்கிறார்.

''முந்திரி மரங்களுக்கு ஜீவாமிர்தம், பஞ்சகவ்யா... போன்றவற்றை இலை வழித் தெளிப்பாகவும் பாசனம் மூலமாகவும் தொடர்ந்து கொடுத்து வந்தால், மண்ணில் அதிக நுண்ணுயிரிகள் பெருகுவதோடு, மரங்களும் செழிப்பாக வளரும். அதனால், அதிக மகசூல் எடுக்க முடியும். இவற்றைப் பயன்படுத்தித்தான் நான் நல்ல விளைச்சல் எடுத்து வருகிறேன்.'

தொடர்புக்கு, செல்போன்: 86430-24794.

''அசோலா வளர்க்க பல முறை முயற்சி செய்தேன். ஆனால், சரி வர வளரவில்லை. சரியாக வளர்த்தெடுக்க எத்தகைய முறைகளைக் கையாள வேண்டும்?''

பச்சமுத்து, செல்லியம்பாளையம்.

நீங்கள் கேட்டவை : ''நீரோட்டம் பார்ப்பது எப்படி?''

அசோலா வளர்ப்பு நிபுணரும், கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திராவின் தொழில்நுட்ப வல்லுநருமான முனைவர். பி. கமலாசனன் பிள்ளை பதில் சொல்கிறார்.

''அசோலா என்பது நுண்ணியப் பெரணி வகை உயிரி. இதை உற்பத்தி செய்யும்போது, சிறு தவறு நடந்தாலும், சரியாக வளராது. பாலிதீன் ஷீட் மற்றும் செங்கற்களைப் பயன்படுத்தி தரையிலேயே தொட்டியை உருவாக்கிக் கொள்ளலாம். 5 அடி நீளம், 3 அடி அகலம் என்ற வகையில் தொட்டியில் அளவு இருக்க வேண்டும். சூரிய ஒளி படும் இடத்தில் இந்தத் தொட்டி இருக்க வேண்டும். தொட்டியில் 7 செ.மீ முதல் 10 செ.மீ உயரம் வரை தண்ணீரை நிரப்பி, ஒரு கிலோ சாணம், ஒரு கைப்பிடி பாறைத்தூள், ஒரு கைப்பிடி அசோலா விதை ஆகியவற்றைப் போட்டுக் கலக்கிவிட வேண்டும்.

இந்த பாறைத்துளிதான், அசோலா வளர்வதற்கு தேவையான பாஸ்பரஸ், இரும்பு, துத்தநாகச் சத்துக்கள்... போன்றவை உள்ளன. அதனால்தான், கட்டாயம் பாறைத்தூள் போட வேண்டும் என்று சொல்கிறோம். சில பகுதிகளில், பாறைகள் இருக்காது. அங்கு ஆழ்குழாய்க் கிணறு எடுக்கும் போது, வெளியில் வந்த மண்ணைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

நீங்கள் கேட்டவை : ''நீரோட்டம் பார்ப்பது எப்படி?''

எல்லாவற்றையும் முறையாகச் செய்தால், அடுத்த ஒரே வாரத்தில் பத்து மடங்கு அளவுக்கு அசோலா பெருகியிருக்கும். தொடர்ந்து சாணம் மற்றும் பாறைத்தூளை தொட்டியில் போட்டு வந்தாலே, பல்கிப் பெருகி விடும். உங்கள் பகுதியில் உள்ள பாறைகளில் இருந்து கிடைக்கும் தூள்தான் பாறைத் தூள். ஒருவேளை உங்கள் பகுதியில் கிடைக்கும் பாறைத் தூளில் இரும்பு, மக்னீசியம்.... போன்ற சத்துக்கள் குறைவாக இருந்தாலும், அசோலா பெருகுவதற்கு நாட்கள் பிடிக்கும். இந்தக் குறையைப் போக்க, கடைகளில் விற்கப்படும் ராக்பாஸ்பேட் தூளை ஒரு கைப்பிடி அளவுக்குப் போடலாம். பாறைத் தூள் கிடைக்காத பகுதியில் உள்ளவர்களும், இந்த ராக்பாஸ்பேட் தூளைப் பயன்படுத்தலாம். இது இயற்கையானப் பொருள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

நீங்கள் கேட்டவை : ''நீரோட்டம் பார்ப்பது எப்படி?''

தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல்சத்து என முக்கியமான சத்துக்கள் ஒருங்கே அடங்கிய அதிசய தாவரம்தான் இந்த அசோலா. நெல் வயலில் இரண்டாம் களை எடுக்கும்போது அசோலாவை வயலில் வைத்து மிதித்து விட்டால், கூடுதல் மகசூல் கிடைக்கும். பால் மாடுகளுக்குத் தீவனமாகக் கொடுத்தால், அதிகபட்சம் 2 லிட்டர் வரை கூடுதல் பால் கிடைக்கும். 25% அளவுக்கு தீவனச்செலவு குறையும். கோழிகளுக்குக் கொடுத்தால் அதிக முட்டையிடும். மீன்களுக்குப் போட்டால் விரைவாக வளரும். புரதச்சத்து மிகுந்த இந்தப் பாசியில் வடை, போண்டா செய்து நாமும் சாப்பிடலாம். ஆகையால், ஒவ்வொரு விவசாயியும் கட்டாயம் அசோலா வளர்த்தால், வீட்டில் உள்ளவர்களோடு சேர்ந்து பயிர்கள், கால்நடைகள் என அனைத்தும் ஆரோக்கியமாக இருக்கும்.''

தொடர்புக்கு, செல்போன்: 93872-12005.

''ஆழ்குழாய்க் கிணறு அமைக்க ஏற்ற இடத்தை தேர்வு செய்வது எப்படி?''

ஜி.என். தேவராஜன், ஆலாம்பாளையம்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நீரோட்டம் பார்ப்பதில் அனுபவம் வாய்ந்த எஸ்.சண்முகசுந்தரம் பதில் சொல்கிறார்.

நீங்கள் கேட்டவை : ''நீரோட்டம் பார்ப்பது எப்படி?''

''தென்னை மரத்தில் இடி விழுந்து விட்டால், நாம் மனம் ஒடிந்து விடுவோம். ஆனால், அதில் ஒரு சூட்சமம் அடங்கியுள்ளது. அதாவது, 'இடி விழுந்த மரம் இருக்கும் பகுதியில் அதிக நீரோட்டம் இருக்கும். அந்தப் பகுதியில் கிணறு தோண்டினால், வற்றாத நீரூற்று கிடைக்கும்' என்கிற உண்மையைப் பெரியவர்கள் கண்டுபிடித்து வைத்துள்ளனர். ஆனால், நாம் 'மரத்தில் இடி விழுந்து விட்டால் குடும்பத்துக்கு ஆகாது’ என்று அஞ்சுகிறோம். என்னுடைய அனுபவத்தில், இந்த அறிகுறியை வைத்து நீரோட்டம் பார்த்து வெற்றி கிடைத்திருக்கிறது.

நீரோட்டம் பார்க்கும் கலையை எல்லோரும் தெரிந்து கொள்ள முடியும். ஆனால், இயற்கையாகவே உடலில் காந்த சக்தி உள்ளவர்களால் மட்டுமே செயல்படுத்த முடியும். சில பகுதிகளில், எவ்வளவு அனுபவம் வாய்ந்தவர்கள் நீருற்று பார்த்தாலும், தண்ணீர் கிடைக்காது. நீருற்று பார்க்கும் கருவிகளும், சரியான இடத்தைக் காட்டாது. இந்த இடங்களில், நீருற்று பார்க்கும் நபர், அருகில் ஆழ்குழாய்க் கிணறு தோண்டிய மண்ணை, கை, கால்களில் பூசிக் கொண்டு நீருற்று பார்த்தால் சரியான இடத்தை காட்டும். நீருற்று உள்ளதைத் துல்லியமாக அறிய... உடலில் ஏதேனும் ஒரு பகுதியில் செம்பு உலோகப்பொருள் தொட்டுக் கொண்டிருக்க வேண்டும். பொதுவாக நீருற்று பார்க்க, பச்சைக் குச்சி, தேங்காய்... போன்றவை பயன்படுத்தப் படுகின்றன. இவற்றை வைத்து, எத்தனை அடி ஆழத்தில் நீருற்று உள்ளது என்றும்கூட கண்டறிய முடியும்''

தொடர்புக்கு, செல்போன்: 93444-33076.

  ''கழிவு நீரில், காய்கறிச் செடிகளை வளர்க்க முடியுமா?''

த. பார்த்திபன், அகரம்.

''சென்னை அருகே உள்ள பம்மலில், இந்திரகுமார் என்பவர் வீட்டுத்தோட்டம் வைத்துள்ளார். கழிவு நீரைச் சுத்திகரித்து, செடிகளுக்குப் பாய்ச்சி வருகிறார். இவரைத் தொடர்பு கொண்டால், அதற்கான தொழில்நுட்பங்களைச் சொல்வார்.''

தொடர்புக்கு, செல்போன்: 99410-07057.

விவசாயம், கால்நடை, மீன்வளம் மற்றும் சுற்றுச்சூழல் என்று பல துறைகள் பற்றி வாசகர்களின் சந்தேகங்களுக்கான பதில்களை உரிய நிபுணர்களிடம் பெற்றுத் தருவதற்காகவே 'புறா பாண்டி' சும்மா 'பறபற'த்துக் கொண்டிருக்கிறார். உங்கள் கேள்விகளை

'நீங்கள் கேட்டவை', பசுமை விகடன்,
757, அண்ணா சாலை,
சென்னை-2.

என்ற முகவரிக்கு தபால் மூலமும் pasumai@vikatan.com என்ற முகவரிக்கு இ-மெயில் மூலமும் PVQA (space)- உங்கள் கேள்வி (space) உங்கள் பெயர் டைப் செய்து 562636 என்ற எண்ணுக்கு செல்போன் மூலமும் அனுப்பலாம்.