மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மரத்தடி மாநாடு !

கொஞ்சம் கொஞ்சமாக உயரும் கொப்பரை !

 ஓவியம்: ஹரன்

##~##

கண்மாயில் கொஞ்சம்போல கிடந்த தண்ணீரில் மாடுகளைக் குளிப்பாட்டிக் கொண்டிருந்தார், 'ஏரோட்டி’ ஏகாம்பரம். சற்று நேரத்தில் 'வாத்தியார்’ வெள்ளைச்சாமி, 'காய்கறி’ கண்ணம்மா ஆகியோரின் தலைகள் கரையில் தென்பட... ''என்னய்யா இத்தனை லேட்டு?'' என்றபடியே மாடுகளுடன் கரையேறி வந்தார்!

''பேங்க்ல கொஞ்சம் வேலை இருந்துச்சு. முடிச்சுட்டு வெளிய வந்தா... இந்தப் புள்ளையும் வந்துக்கிட்டுருந்துச்சு. அப்படியே பேசிக்கிட்டே வந்துட்டோம்'' என்று வாத்தியார் தன்னிலை விளக்கம் தர... மூவரும் வரப்பில் அமர்ந்தனர். பலாப்பழம் பற்றிய இனிப்பான செய்தியுடன்  அன்றைய மாநாட்டை ஆரம்பித்தார், வாத்தியார்.

''ரெண்டு வருஷத்துக்கு முன்ன... கடலூர் மாவட்டத்துல தானே புயல் அடிச்சதுல, பண்ருட்டி பகுதியில பலா மரங்கள்லாம் சாய்ஞ்சு போச்சு. அதுல நிறைய மரங்கள விவசாயிகள் வேரோடு தூக்கி நிறுத்தி காப்பாத்தினாங்க. அந்த மரங்கள்ல எல்லாம் இந்த வருஷம் ஓரளவுக்குக் காய்ச்சுருக்காம். பண்ருட்டி பலாப்பழம் நல்ல சுவையா இருக்கறதால அதுக்கு எப்பவுமே கிராக்கி இருக்கும். மார்ச் மாசமே சீசன் ஆரம்பிச்சுடும். இந்த வருஷம் இப்போதான் ஆரம்பிச்சுருக்கு. வரத்து கம்மியா இருக்கறதால நல்ல விலை கிடைக்குதாம். கிலோ முப்பது ரூபாய் அளவுக்கு விக்கிறாங்களாம். ஆந்திரா, மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரள மாநில வியாபாரிகள்தான் மொத்தமா வாங்கிட்டு போறாங்களாம்'' என்றார். வாத்தியார்.

கூடையில் இருந்து ஆளுக்கு இரண்டு நுங்குகளை எடுத்துக் கொடுத்த காய்கறி, ''இதுவும் விலை ஏறிப் போச்சுய்யா. எனக்கு வெவரம் தெரிஞ்சு ரூபாய்க்கு அஞ்சு நொங்கு வாங்கித் தின்னுருக்கேன். இப்போ மூணு நொங்கு பத்து ரூபாய்ங்கறாங்க. அதுவும் இளம்நொங்கே கிடைக்கறதில்லை. சின்ன சைஸ் நொங்கே முத்திப்போய் கல் கணக்காத்தான் இருக்கு'' என்று  வருத்தமானக் குரலில் சொன்னார்.

மரத்தடி மாநாடு !

நுங்கை சுவைத்துக் கொண்டே... ''கடுமையான வறட்சியால போன கார்த்திகைப் பட்டத்துல நிறையபேர் சின்னவெங்காயத்தை விதைக்கல. அதனால இப்போ சின்னவெங்காயத்துக்குக் கடுமையான தட்டுப்பாடாம். வரத்து குறைஞ்சுக்கிட்டே இருக்கறதால விலை ஏறிக்கிட்டே இருக்குதாம். மார்க்கெட்ல பிப்ரவரி மாசம், கிலோ இருபத்தோரு ரூபாய்க்கு வித்த வெங்காயம்... இப்போ, கிலோ அறுபது ரூபாய் வரைக்கும் விக்குதாம். ஆனா, விவசாயிககிட்ட கொள்முதல் பண்ற விலையில பெரிய அளவுல ஏற்றம் இல்லையாம். அதனால விவசாயிகளுக்கு பெரிய அளவுல பிரயோஜனம் இல்லையாம். அங்கங்க வெங்காயம் போட்டிருந்த விவசாயிகள்லாம் அறுவடை பண்ணி, விக்காம இருப்பு வைக்க ஆரம்பிச்சுட்டாங்களாம்''னு சொன்ன ஏரோட்டி, அடுத்தச் செய்திக்குத் தாவினார்.

''வெயிலோட உக்கிரம் தாங்க முடியல. மதுரை, சேலம், திருநெல்வேலி மாதிரியான மாவட்டங்கள்ல வெள்ளாடுகளை வெக்கை நோய் தாக்கிக்கிட்டு இருக்கு. மதுரைக்குப் பக்கத்துல இருக்குற திருப்புவனம் சுத்து வட்டாரத்துல அதிகமா பாதிப்பு இருக்கு. இந்த நோய் தாக்குச்சுனா திடீர்னு ஆடுக செத்துப் போயிடும். உரிய மருந்துகள கொடுத்தா சரி பண்ணக்கூடிய நோய்தான். அதனால அந்தந்தப் பகுதிகள்ல இருக்கற கால்நடை மருத்துவமனைகளுக்கு ஆடுகள ஓட்டிட்டுப் போய் மருந்துகள கொடுக்கச் சொல்லி அதிகாரிங்க சொல்லிட்டிருக்காங்களாம்'' என்றார், ஏரோட்டி.

''சரிப்பா, நம்மகிட்ட இன்னொரு சங்கதி இருக்கு. அதையும் சொல்லிப்புடறேன்'' என்று தொண்டையைச் செருமிய வாத்தியார்,

''கொஞ்ச நாளா தேங்காய் எண்ணெய் விலை ஏற ஆரம்பிச்சுருக்கு. இதன் காரணமா வெளி மாநிலங்கள்ல கொப்பரைக்கு நல்ல விலை கிடைக்குது. வெளிமார்க்கெட்ல கொப்பரைக்கு அதிக தேவை இருக்கறதால, ஒழுங்கு முறை விற்பனைக்கூடங்கள்லயும் கொஞ்சம் கொஞ்சமா விலை ஏற ஆரம்பிச்சுருக்காம். பொள்ளாச்சி, நெகமம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்துல அதிகபட்சமா ஒரு கிலோ, 42 ரூபாய் 75 காசு வரை ஏலம் போச்சாம். இப்போ இருப்பு வெச்சுருந்த விவசாயிகள்லாம் கொப்பரையை விக்க ஆரம்பிச்சுருக்காங்களாம். இன்னமும் விலை கூடுறதுக்கு வாய்ப்பு இருக்குதாம்'' என்று சந்தோஷ சங்கதியாகச் சொன்னார்.

''ஏதோ சமசாரிகளுக்கு நாலு காசு கூடுதலா கிடைச்சா சரிதான்'' என்ற காய்கறி,

''சரி சரி, வெயில் ஏறுறதுக்குள்ள நான் கிளம்பணும். போன தடவை, 'பட்டுப்பை நிறைய பவுன் காசா இருக்குமாம்... அது என்ன?’னு கேட்டிருந்தேனே... பதில காணோமே'' என்று கேட்டார்.

''கண்டுபிடிச்சாச்சு... கண்டுபிடிச்சாச்சு. மிளகாய் வத்தல்தானே!'' என்று பதில் தந்தார் ஏரோட்டி.

''பரவாயில்லையே...'' என்று பாராட்டுத் தெரிவித்த காய்கறி,

''சரி, இதைக் கண்டுபிடிங்க பாப்போம். தொப்புனு விழும்... தானா தொப்பியைக் கழட்டிக்கும் அது என்னா?'' என்றபடியே கூடையைத் தூக்க... முடிவுக்கு வந்தது, அன்றைய மாநாடு!