புறா பாண்டி
புறா பாண்டி
##~## |
''பால் பண்ணை வைத்திருக்கிறோம். பாலுக்குச் சரியான விலை கிடைப்பதில்லை என்பதால், 'சீஸ்’ தயாரித்து விற்கலாம் என்று எண்ணுகிறோம். தயாரிக்கும் முறை, விற்பனை வாய்ப்புகள் பற்றி சொல்ல முடியுமா?'
எம். சகுந்தலா, கோவை.
சீஸ் தயாரிப்பில் அனுபவம் வாய்ந்த கொடைக்கானல் 'கேர் செல்லீ’ பால்பண்ணையாளர், பாட்ரிஷியா பதில் சொல்கிறார்.

''சீஸ் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் பாலாடைக் கட்டி தயாரிப்பு, இன்னும் இந்தியாவில் அவ்வளவாகப் பரவவில்லை. புளிப்புச் சுவையுடன் இருக்கும் சீஸ், பலவிதமான சத்துக்கள் நிரம்பியப் பொருள்.
இதற்கு, நட்சத்திர விடுதிகள், துரித உணவகங்கள்... போன்றவற்றில் அதிக தேவை இருக்கிறது. இப்போது, இந்தியாவில் தேவையான அளவு சீஸ் கிடைப்பதில்லை. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் நிலைதான் உள்ளது.
ஒரு கிலோ சீஸ், 600 ரூபாய் முதல் 1,200 ரூபாய் வரை விற்பனையாகிறது. 10 லிட்டர் பசும்பாலில் ஒரு கிலோ சீஸ் கிடைக்கும்.
பால் பண்ணை நடத்துபவர்கள் சீஸ் தயாரிப்பில் இறங்கினால், நல்ல லாபம் கிடைக்கும். இதை என்னுடைய அனுபவத்தில் சொல்கிறேன். ஆனால், தயாரிப்பில் இறங்கும் முன்பு, சீஸ் தயாரித்து வரும் பண்ணைகளுக்குச் சென்று பார்வையிட்டு, உங்கள் பகுதியில் உள்ள விற்பனை வாய்ப்பையும் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.
சீஸ் தயாரிக்கும் முறை பற்றி இங்கே பார்ப்போம். கறந்தப் பாலை 4 டிகிரி சென்டிகிரேட் வெப்பநிலைக்குக் குளிர வைத்து... அதில், ரென்னட் பவுடர் (ஒருவிதமான நுண்ணுயிர்), லாக்டிக் அமிலம் சேர்த்து... 27 முதல் 28 டிகிரி செல்சியஸ் வரை சூடேற்றி, உடனடியாகக் குளிர வைக்க வேண்டும்.
இந்த சமயத்தில்தான் பால் திரியும். அதில் உள்ள கட்டிகளை வடிகட்டி எடுத்து அலசினால்... அதுதான் சீஸ். இதைத் தேவையான வடிவில் உள்ள அச்சுகளில் வைத்து மரக்கட்டை மூலம் அழுத்தினால், அதில் எஞ்சியுள்ள திரவம் வெளியேறிவிடும். பிறகு, குளிர்பதனப்பெட்டியில் ஒரு மாதம் வரை வைத்திருந்து, அதன்பிறகே எடுத்துப் பயன்படுத்த வேண்டும்.
இப்படி தயாரித்த சீஸை, எவ்வளவு நாட்கள் வேண்டுமானாலும், குளிர்நிலையில் வைத்திருந்து பயன்படுத்தலாம். 'ஒயின்’ போல நாள்பட நாள்படத்தான் இதன் தரமும் மதிப்பும் கூடும்.
பொதுவாக பால் பொருட்களை உடனடியாகப் பயன்படுத்திவிட வேண்டும். இல்லாவிடில் கெட்டுப்போய் விடும். ஆனால், சீஸ் மட்டும் விதிவிலக்கு. சீஸை வடிகட்டும்போது கிடைக்கும் திரவத்துக்கு, 'ஊநீர்' என்று பெயர். இதில் பலவித சத்துக்கள் நிரம்பியுள்ளன. இதை அப்படியே குடிக்கலாம். மாடுகளுக்கும் குடிக்கக் கொடுக்கலாம்.''
தொடர்புக்கு: தொலைபேசி: 04542-230245, செல்போன்: 92453-96316.
''சின்ன வெங்காயத்தை சேமித்து வைக்க பாரம்பரியத் தொழில்நுட்பங்கள் உள்ளனவா?''
உ. காஜாமைதீன், எட்டையபுரம்.
திண்டுக்கல் மாவட்டம், காவேரியம்மாபட்டியில் வெங்காய சாகுபடி செய்து வரும் செல்வராஜ் பதில் சொல்கிறார்.
''எங்கள் பகுதியில் பாரம்பரியமாக, வெங்காயத்தைச் சேமித்து வைக்க 'பட்டறை’ போடும் நுட்பத்தைப் பயன்படுத்தி வருகிறோம். அதாவது, வெங்காயத்தின் விலை குறைவாக உள்ளபோது, பட்டறையில் வெங்காயத்தைச் சேமித்து வைப்போம். நல்ல விலை கிடைக்கும்போது, விற்பனை செய்துவிடுவோம். கிட்டத்தட்ட 90 நாட்கள் வரை, இதில் வெங்காயம் கெட்டுப் போகாமல் இருக்கும்.
நாற்று விட்டு நடவு செய்வது, நேரடியாக விதைப்பது என்று இரண்டு வகையான நடவு முறைகள் உள்ளன. இதில், நாற்று விட்டு நடவு செய்யும் வெங்காயத்தை பட்டறை மூலம் சேமித்து வைக்க முடியாது. காரணம், இதில், நீர்ச்சத்து வேகமாக வெளியேறும். ஆகையால், அதை உடனடியாக விற்பனை செய்து விட வேண்டும். நேரடி விதைப்பு செய்த வெங்காயம்தான், பட்டறைக்கு ஏற்றது.

பட்டறையில் சேமிப்பது என்று முடிவு செய்துவிட்டால், சில அடிப்படையான யுக்திகளைக் கையாள வேண்டும். வெங்காயத்தை அறுவடை செய்யும்போது, ஓர் அங்குலம் அளவுக்கு தாள் இருக்கும்படி விட்டு, அறுக்க வேண்டும்.

இப்படிச் செய்வதால், தாள்கள் காய்ந்த பிறகுதான், வெங்காயத்தில் உள்ள நீர் ஆவியாகும். தாளை ஒட்ட அறுத்துவிட்டால், வெங்காயம் சீக்கிரமாகக் காய்ந்துவிடும். இரண்டு நாட்கள் நிழலில் காய வைத்து, வெங்காயத்தில் உள்ள மண் முழுவதும் உதிர்ந்த பிறகுதான் பட்டறையில் வைக்க வேண்டும்.
பட்டறையை மேடானப் பகுதியில், 2 அடி அகலம், 5 அடி நீளம், 5 அடி உயரத்தில் அமைக்க வேண்டும் (இது ஒரு டன் அளவுக்கு வெங்காயத்தை சேமிக்க போதுமானது). தரையில் இருந்து ஓரடி உயரத்துக்கு கற்கள், மரக்கட்டை, குச்சிகளை வைத்து மேடை அமைக்க வேண்டும். நான்கு பக்கமும், மூங்கில் படல் வைத்து, கட்ட வேண்டும். மேல்புறத்தில் பனை ஓலையால் கூரை வேய்ந்து கொள்ள வேண்டும். மழை நீர் பட்டறைக்குள் செல்லாத அளவுக்கு இருக்க வேண்டும். இப்படிப் பாதுகாக்கப்படும் வெங்காயத்தில் கொஞ்சம் கூட சேதம் இருக்காது.''
தொடர்புக்கு, செல்போன்: 93459-41301.
''நபார்டு உழவர் மன்றம் தொடங்க யாரைத் தொடர்பு கொள்ள வேண்டும்?'
ஆர்.துரைராஜ், கரியாம்பட்டி. நபார்டு வங்கின் மேலாளர், புவனேஸ்வரி பதில் சொல்கிறார்.
''தனிமனிதனாக செயல்படுவதைவிட, குழுவாகச் செயல்பட்டால் சாதனை செய்ய முடியும். இதை மையமாக வைத்தே உழவர் மன்றங்கள் செயல்பட்டு வருகின்றன.

உங்கள் பகுதியில் உள்ள பத்து விவசாயிகள் ஒன்று சேர்ந்தால்... உழவர் மன்றத்தைத் தொடங்கி விட முடியும். அருகில் உள்ள நாட்டுடமையாக்கப்பட்ட வங்கிகளை அணுகினால், அந்த மாவட்டத்தில் உள்ள நபார்டு வங்கியின் வளர்ச்சி மேலாளரின் விவரங்களைக் கொடுப்பார்கள். அவரிடம், உழவர் மன்றம் தொடங்குவது பற்றி விண்ணப்பம் கொடுக்க வேண்டும்.
நபார்டு வங்கியின் அலுவலர்கள் உங்கள் கிராமத்துக்கு வந்து பார்வையிட்டு... உழவர் மன்றம் தொடங்க அனுமதி கொடுப்பார்கள்.
மன்றம் தொடங்கியதில் இருந்து, மூன்று ஆண்டுகளுக்கு நபார்டு வங்கியின் அலுவலர்கள் தொடர்ந்து வழிகாட்டுவார்கள். சாகுபடி, விற்பனை, வங்கிக் கடன் பெறும் வழிமுறைகள்... போன்ற தகவல்களைத் தகுந்த வல்லுநர்களைக் கொண்டு சொல்லித் தருவார்கள்.
விவசாயத்தில் சாதனை செய்து வரும் பண்ணைகளுக்குச் சுற்றுலா செல்லவும் வாய்ப்புகள் உண்டு. உழவர் மன்றத்தை நிர்வகிக்க, ஆண்டுக்கு 12 ஆயிரம் ரூபாய் என்ற விதத்தில் மூன்று ஆண்டுகளுக்கு நிதியுதவியும் வழங்கப்படுகிறது.
சிறப்பாக செயல்படும் உழவர் மன்றங்களுக்கு, மாநில அளவிலும், தேசிய அளவிலும் விருதுகள் வழங்கப்படும். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகும்கூட, தேவைப்பட்டால் நபார்டு வங்கியின் உதவிகள் கிடைக்கும்.''
தொடர்புக்கு, தொலைபேசி: 044-28222536.
''காகித ஆலைகளுக்குத் தேவையான மரங்கள் பற்றியும் அவற்றை விற்பனை செய்யும் முறைகள் பற்றியும் சொல்ல முடியுமா?'
ஜி. புண்ணியவான், ஸ்ரீமுஷ்ணம்.

கரூர் மாவட்டம் புகளூரில் உள்ள தமிழ்நாடு காகித ஆலை நிறுவனத்தின், வனத்தோட்டத்துறை உதவிமேலாளர் முனைவர். செழியன் பதில் சொல்கிறார்.
''காகிதம் தயாரிக்க மரங்கள் அதிகம் தேவைப்படுகின்றன. நாங்கள், எங்கள் நிறுவனத்துக்காக தனியார் நிலங்களில் ஒப்பந்த அடிப்படையில் மரங்களை வளர்த்து தேவையைப் பூர்த்தி செய்து கொள்கிறோம்.
காகிதம் தயாரிக்க... தைல மரம், சவுக்கு, சவுண்டல் (சூபாபுல்) ஆகிய மரங்களை மட்டுமே பயன்படுத்தி வருகிறோம். போதுமான தண்ணீர் வசதியுடன், ஒரு ஏக்கர் அளவு நிலம் வைத்திருந்தால்கூட போதும்.
மானிய விலையில் மரக்கன்றுகள், தொழில்நுட்ப ஆலோசனைகள்... என அனைத்தையும் நாங்கள் கொடுத்து விடுவோம்.
சவுக்கு, சவண்டல் சாகுபடி செய்தால், மூன்று ஆண்டுகளில் அறுவடை செய்யலாம். தைல மரம் அறுவடைக்கு வர, ஐந்து ஆண்டுகள் பிடிக்கும். தற்போது, ஒரு டன் சவுக்கு மரத்துக்கு குறைந்தபட்ச விலையாக,
2 ஆயிரத்து 700 ரூபாய் கொடுக்கிறோம். ஒரு டன் தைல மரத்துக்கு 2 ஆயிரத்து 300 ரூபாய் விலை கொடுக்கிறோம். அறுவடை, போகுவரத்துச் செலவுகளையும் நாங்களே ஏற்றுக்கொள்கிறோம்.''
தொடர்புக்கு, செல்போன்: 94425-91412.
