மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மரத்தடி மாநாடு

போலி மாட்டு டாக்டர் உஷார்..உஷார் !

 ஓவியம்: ஹரன்

##~##

மிதிவண்டியில் வந்து கொணடிருந்த 'ஏரோட்டி’ ஏகாம்பரம், வழியில் 'காய்கறி’ கண்ணம்மாவையும், 'வாத்தியார்’ வெள்ளைச்சாமியையும் பார்த்தவுடன்... 'சர்'ரென்று ஒரு வட்டமடித்து நின்றார்.

''என்னய்யா ஏரோட்டி... ரொம்ப இளவட்டம்னு நினைப்போ! வட்டமெல்லாம் அடிக்கிறே... சுண்டுவிரல்ல காயம்பட்டாலும், குறைஞ்சது ஒரு வாரத்துக்கு வூட்டுலயே உக்கார்ந்துட வேண்டியதாயிடும். வயசுக்குத் தகுந்த மாதிரி நடந்துக்கோய்யா...'' என்று அக்கறையோடு எச்சரிக்கைக் கொடுத்தார் காய்கறி!

''அட, உங்கள பார்த்த வேகத்துல... சரேல்னு பிரேக் அடிச்சு ஒரு வட்டத்தையும் போட்டுட்டேன். வேற ஒண்ணும் இல்ல. மத்தபடி நாம எப்பவுமே ரொம்ப உஷார்தான்...!'' என்று தெம்பாக சொன்னபடி மிதிவண்டியை ஓரம் வைத்துவிட்டு வர... அருகில் இருந்த கல்திட்டில் அமர்ந்து கொண்ட வாத்தியார், ஒரு செய்தியைச் சொல்லி, அன்றைய மாநாட்டைத் துவக்கி வைத்தார்.

''தமிழ்நாடு முழுக்க ஏகப்பட்ட காசை செலவழிச்சு படு ஜரூரா 'உழவர் பெருவிழா' கொண்டாடிட்டுருக்காங்க. இதுல நிறைய விவசாயிகளுக்கு வருத்தமாம். 'மாநிலமே வறட்சியில தவிக்கிறப்போ அதுக்கான நிவாரண வேலைகளை செய்யுறதை விட்டுட்டு, விழா நடத்துறதுதான் முக்கியமா?னு கேக்கறாங்க. உதாரணமா... சிவகங்கை மாவட்டத்துக்கு அரசாங்கம் ஒதுக்குன வறட்சி நிவாரண பணம் வந்து சேர்ந்தும், இதுவரைக்கும் யாருக்குமே கொடுக்கலையாம். நிறைய மாவட்டத்துல இதே நிலைமைதானாம். அதனால பல மாவட்டங்கள்ல உண்மையான விவசாயிகள், உழவர் பெருவிழாவுல கலந்துக்காம புறக்கணிக்கறாங்களாம். இதேபோல பல பகுதிகள்ல... ரொம்ப காலமா தீர்க்கப்படாம இருக்கற விவசாய பிரச்னைகளை முன்வெச்சு... உழவர் விழாவை புறக்கணிச்சுட்டிருக்காங்க விவசாயிங்க. ஆனா, இதையெல்லாம் கண்டுக்காம, விழாவுல கலந்துக்குற நம்ம அமைச்சருங்க, முதலமைச்சரம்மாவை குஷிபடுத்தறதுக்காக... 'தமிழ்நாட்டு விவசாயிகளோட நிலைமை, இன்றைக்கு இமயமலை அளவுக்கு ஓங்கி உயர்ந்திருக்கிறது... அம்மாவின் ஆட்சியில்'னு மைக்ல முழங்கிட்டிருக்காங்களாம்'' என்று சொன்னார் வாத்தியார்!

''ம்... ஒய்யாரக் கொண்டையாம், தாழம்பூவாம்... உள்ள இருக்குமாம் ஈறும், பேனும்’ங்கிற கதையாவுல்ல கிடக்கு...'' என்று நீட்டி முழக்கினார் காய்கறி.

'சரியா சொன்ன போ'' என்ற ஏரோட்டி, ஒரு செய்தியைச் சொல்ல ஆரம்பித்தார்.'

மரத்தடி மாநாடு

''தென்பெண்ணையாறு... கர்நாடகா மாநிலத்துல ஆரம்பிச்சு தமிழ்நாட்டுக்கு வந்து சேருது. இந்த ஆத்துல தண்ணி வரத்து அதிகமா இருக்கறதால, கெலவரப்பள்ளி அணையில தண்ணி திறந்து விட்டிருக்காங்களாம். சுத்துப்பட்டுல மொத்தமும் வறட்சியா இருக்க... ஆயில் மோட்டார் மூலமா தண்ணியை எடுத்து பாசனம் பண்ண ஆரம்பிச்சுருக்காங்களாம் அந்தப் பகுதி விவசாயிங்க. தனியார் வாட்டர் சர்வீஸ் கம்பெனிகளும் தண்ணியை மோட்டார் வெச்சு எடுத்து, டிராக்டர், லாரிகள்ல நிரப்பி விக்க ஆரம்பிச்சுட்டாங்களாம். 24 மணி நேரமும் இப்படி தண்ணி திருட்டு நடக்குதாம். ஆனா, அதிகாரிகள் கண்டுக்க மாட்டேங்குறாங்களாம்'' என்றார் ஏரோட்டி!

''அடப்பாவிகளா... '' என்று சாபம்விட்ட காய்கறி, தன் பங்குக்கு ஒரு செய்தியைச் சொன்னார்.

''நாமக்கல், கால்நடை மருத்துவக் கல்லூரியில பேராசிரியரா இருக்கற ரமேஷ் சரவணக்குமார், மாட்டுசிறுநீர்ல இருந்து கரன்ட் தயாரிக்கிற முறையை கண்டுபிடிச்சுருக்காராம். இப்படித் தயாரிக்கிற கரன்ட்டை வெச்சு கடிகாரத்தை ஓட வைக்க முடியுமாம். சின்ன பல்பைகூட எரிய வைக்க முடியுமாம்'' என்று சொல்லிவிட்டு, இருவரையும் பிரகாசமாக பார்த்தார்!

''ம்... கண்ணம்மா, பட்டைய கிளப்புறியே... இந்த செய்தியெல்லாம்கூட உன் காதுக்கு வர ஆரம்பிச்சுடுச்சா...?'' என்று நக்கலாகச் சொன்ன ஏரோட்டி,

''வழக்கம்போல ஏகப்பட்ட கட்டுப்பாடுகளைப் போட்டு விவசாயிகளை விரட்டியடிக்கறதால... இந்த வருஷமும் காஞ்சிபுரம் மாவட்டத்துல அரசு கொள்முதல் மையங்கள்ல நெல்லை கொடுக்காம, வெளி வியாபாரிகளுக்கு விற்பனை பண்ண ஆரம்பிச்சுட்டாங்களாம் விவசாயிங்க. 'கருக்காயை தூத்தி, சுத்தமாக்கிக் கொடுக்கணும். ஈரப்பதமில்லாம காய வெச்சும் கொடுக்கணும்'னு ஏகப்பட்ட நிபந்தனைகளைப் போடுறாங்க நேரடி நெல் கொள்முதல் நிலையத்துல. ஆனா, எந்த நிபந்தனையும் போடாம அப்படியே எடுத்துகுறாங்களாம் வெளி வியாபாரிங்க. அதனால பெரும்பாலான விவசாயிகள், வியாபாரிங்களுக்குத்தான் கொடுக்குறாங்க'' என்று சொன்னார்.

''ஒரு முக்கியமான விஷயம்'' என்று ஆரம்பித்த வாத்தியார்,

''வறட்சி காரணமா ஆடு, மாடுங்களுக்கு அதிக நோய் வர்றதால... நிறைய கிராமங்கள்ல 'மாட்டு டாக்டர்'ங்கற பேருல போலிகளோட நடமாட்டமும் அதிகமாயிருக்குதாம். இந்த போலிகள், விவசாயிகளோட வீடு தேடிப்போய் நின்னு ரொம்பவே அக்கறையோட பேசறதால.... நிறையபேர் ஏமாந்து போறாங்களாம். கொஞ்ச மருந்துகளோட பேரைத் தெரிஞ்சு வெச்சுக்கிட்டு, குத்து மதிப்பா வைத்தியம் பாக்குறாங்களாம் இந்த போலிகள். மதுரை மாவட்டம், அழகர்கோவில் பகுதியில ஒரு மாட்டு டாக்டர் இருந்திருக்கார். அவர் இறந்த பிறகு, தன்னை 'டாக்டர்’னு சொல்லிக்கிட்டு மக்களை ஏமாத்திக்கிட்டு இருக்காராம் அவரோட மகன். கம்பம் பகுதியில, செயற்கை கருவூட்டல் செய்ய வர்றவங்க... 'டாக்டர்'ங்கற பேருல ஏமாத்திக்கிட்டு இருக்காங்களாம். அதனால, வீடு தேடி வந்து 'வைத்தியம் பாக்குறேன்’னு சொல்றவங்ககிட்ட உஷாரா இருக்கணும்யா'' என்றார் வாத்தியார்.

''சரி, வெயில் ஏறுறதுக்குள்ள நான் வீட்டுக்குக் கிளம்பறேன்'' என்று சொல்லிக்கொண்டே எழுந்தார், காய்கறி.

உடனே... ''ஏம்மா... போன தடவை நீ சொன்ன விடுகதைக்கு பதிலைச் சொல்லிட்டுப் போ. பசங்ககிட்டயெல்லாம் கேட்டுப் பார்த்துட்டேன்... ஒருத்தருக்கும் தெரியல'' என்று படபடத்தார் ஏரோட்டி.

'தொப்புனு விழும்... தானா தொப்பியைக் கழட்டிக்கும்... இதுகூட தெரியலையா உனக்கு... 'பனம்பழம்’யா... இதைக் கண்டுபிடிக்க முடியல... வாய் எட்டூருக்கு நீளுது'' என்று எகிறிய காய்கறி,

''சரி... இதையாவது உன்னால கண்டுபிடிக்க முடியுதானு பாப்போம், 'கிண்ணம் நிறைய தண்ணி இருக்கு... ஆனா, குருவி குடிக்க வழி இல்லை...' அது என்ன?'' என்றபடியே கிளம்ப... அத்தோடு முடிந்தது, அன்றைய மாநாடு!

இயற்கை சீற்றங்களைத் தாங்கி வளரும் சிகப்பி!

சிதம்பரம், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில், உழவியல் துறை மற்றும் சர்வதேச நெல் ஆராய்ச்சி மையம் சார்பில் சர்வதேச வேளாண் பயிற்சி துவக்க விழா சமீபத்தில் நடந்தது. பல்கலைக்கழக வேளாண் புல முதல்வர் கதிரேசன், சர்வதேச நெல் ஆராய்ச்சி மைய தெற்கு ஆசியா ஒருங்கிணைப்பாளர் யு.எஸ்.சிங், சர்வதேச நெல் ஆராய்ச்சி மைய மேலாளர் லாபிட்டான், தெற்கு ஆசியா மானாவாரி உழவியல் வல்லுனர் சுதன்சு சிங் ஆகியோர் பங்கேற்றனர்.

மரத்தடி மாநாடு

சர்வதேச அளவிலான வேளாண்மை, புதிய நெல் ரகங்கள், வேளாண்மை தொழில்நுட்பங்கள் பற்றி நிகழ்வில் பேசப்பட்டது. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சர்வதேச நெல் ஆராய்ச்சி மைய பங்களிப்புடன், உழவியல் துறை வல்லுனர்களால், கண்டுபிடிக்கப்பட்ட 'சிகப்பி’ என்கிற புதிய நெல் ரகம் அறிமுகப்படுத்தப்பட்டது.

''இந்த ரகம் நடைமுறையில் உள்ள சி.ஆர்-1009 நெல் ரகத்தின் தன்மைகளோடு, இயற்கை சீற்றங்களைத் தாங்கி கூடுதல் மகசூல் கொடுக்கக்கூடிய ரகம்'' என்று சொன்ன உழவியல் துறையினர், விழாவில் பங்கேற்ற கடலூர் மாவட்ட முன்னோடி விவசாயிகளுக்கு இந்த ரக விதை நெல்லை இலவசமாக வழங்கினர்.