புறா பாண்டி, படம்: க.ரமேஷ்

''குதிரை, கழுதைகளை விவசாயப் பணிகளுக்குப் பயன்படுத்த முடியுமா?''
ரவிசெம்மேனி, சென்னை-81.
ஈரோடு மாவட்டம், சின்னியம்பாளையத்தில் விவசாயப் பணிகளுக்கு குதிரைகளைப் பயன்படுத்தி வரும் முன்னோடி 'ஜீரோ பட்ஜெட்’ விவசாயி எம். லோகநாதன் பதில் சொல்கிறார்.
''ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம், அந்தியூரில் நடைபெறும் குருநாத சுவாமி கோயில் திருவிழாவுக்குச் செல்வேன். அங்கு வெளிமாநிலங்களில் இருந்து குதிரைகள், கழுதைகள் போன்றவை விற்பனைக்கு வரும். சில ஆண்டுகளுக்கு முன் எனக்கு குதிரை வாங்கி
##~## |
இப்போது... குதிரை செய்யும் வேலைகளைப் பார்த்துவிட்டு அனைவரும் ஆச்சர்யப்படுகிறார்கள்.
ஜீரோ பட்ஜெட் முறையில் நான் விவசாயம் செய்து வருகிறேன். ஜீவாமிர்தம், நீம் அஸ்திரா... போன்றவற்றைத் தயார் செய்து வயலுக்குள் எடுத்து செல்ல வேண்டும். அதற்கு குதிரையைத்தான் பயன்படுத்துகிறேன். வரப்பிலேயே குதிரை நடந்துவிடும். தவிர, காலையில் வீட்டில் இருந்து சாப்பாடு எடுத்து வருவது, மாலையில் விளைபொருட்களை வீட்டுக்குக் கொண்டு செல்வது... என அனைத்து வேலைகளையும் குதிரை செய்கிறது. இங்கிலாந்து, ஜெர்மனி... போன்ற நாடுகளில் குதிரைகளை உழவு செய்யவும் பயன்படுத்துவதாக கேள்விப்பட்டுள்ளேன். ஆனால், அதற்கான முயற்சியை இன்னும் நான் எடுக்கவில்லை.
குதிரைகள் இருப்பதால், களை பிரச்னை ஒழிந்து விட்டது. சாகுபடி செய்துள்ள நிலத்தில்கூட குதிரையை மேய்ச்சலுக்கு விடலாம். தவறிக்கூட பயிரைக் கடிக்காது. அருகம்புல், கோரைப்புற்களைத்தான் அது சாப்பிடுகிறது. இவற்றை மட்டுமே உண்டு அவை ஆரோக்கியமாக உள்ளன. தனியாக எந்தத்தீவனமும் கொடுப்பதில்லை. ஆக, குதிரை வளர்ப்பும் எனக்கு ஜீரோ பட்ஜெட்தான்.
குதிரைகளின் சாணத்தை செப்டிக் டேங்கில் போட்டு விட்டால்... மனிதக் கழிவுகளில், உள்ள நுண்ணுயிரிகளை சிதைத்துவிடும். இதனால், செப்டிங் டேங்க் சுத்தம் செய்யும் செலவு மிச்சம். எனவே, குதிரையின் கழிவுக்கு ஏக கிராக்கி உள்ளது.

தமிழ்நாட்டில், இதுவரை கழுதையை விவசாய வேலைக்கு பயன்படுத்தியது பற்றி தகவல்கள் இல்லை. நீண்டகாலமாக கழுதை வாங்கி வளர்க்க வேண்டும் என்று திட்டமிட்டு வருகிறேன். விரைவில் வாங்கி விடுவேன். குதிரை செய்யும் அத்தனை வேலைகளையும் கழுதையும் செய்யும். ஆனால், கழுதைகள் கொஞ்சம் மந்த குணம் உள்ளவை என்பதுதான் பிரச்னை.''
தொடர்புக்கு, செல்போன்: 98655-90883.
''மலர் சாகுபடி செய்து வருகிறோம். எருக்கன் இலைகளை ஐந்து நாட்கள் தண்ணீரில் ஊற வைத்து, அதன் சாற்றை செடிகளுக்குப் பாய்ச்சினோம். உடனே செடிகள் வெளுத்துவிட்டன. என்ன காரணம்?''
எஸ். சூசைமாணிக்கம், புறத்தாக்குடி.
திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னோடி மலர் விவசாயி மருதமுத்து பதில் சொல்கிறார்.

''பயிர்களில் ஏற்படும் போரான் சத்துப்பற்றாக்குறையைப் போக்கும் தன்மை, எருக்கன் இலைகளுக்கு உள்ளது. தவிர, இது சிறந்தப் பூச்சிவிரட்டியாகவும் செயல்படுகிறது. ஆனால், இதைப் பயன்படுத்தும்போது கவனம் தேவை. கசப்புத்தன்மை கொண்ட இலைகளான எருக்கு, ஊமத்தை... போன்றவற்றை பூச்சிவிரட்டியாகப் பயன்படுத்தும் போது தனியாகப் பயன்படுத்தக் கூடாது. இவற்றுக்கு வீரியம் அதிகம். வேறு நான்கு வகை இலைகளோடுதான் இவற்றைச் சேர்த்துப் பயன்படுத்த வேண்டும். நீங்கள், எருக்கன் இலைகளை மட்டும் ஊற வைத்து பயன்படுத்தியதால், செடிகளின் இலைகள் வெளுத்திருக்கும். இதனால், செடிகளுக்கு பிரச்னை எதுவும் வராது. பயப்படத்தேவையில்லை. ஜீவாமிர்தக் கலவையை பாசன நீரில் கலந்துவிட்டால், செடிகள் மீண்டும் பசுமை கட்டி விடும்.
பொதுவாக மலர் சாகுபடி செய்யும் நிலத்தில் வேர்ப்புழுக்கள், நூற்புழுக்களின் தாக்குதல் அதிகமாக இருக்கும். இவற்றுக்கு எருக்கன் இலைதான் சரியான தீர்வு. என்னுடைய சம்பங்கி வயலில் இவற்றின் தாக்குதல் இருந்த போது, மலர் செடியின் வேர் பகுதியில், இரண்டு எருக்கு இலைகளை வைத்து மண் போட்டு மூடி விட்டேன். அடுத்த ஒரு மாதத்தில் புழுக்கள் பிரச்னை ஒழிந்து விட்டது.''
தொடர்புக்கு, செல்போன்: 97876-42613.
''மாடுகளை சிமென்ட் தரையில் கட்டி வருகிறோம். இதன் காரணமாக சில மாடுகளின் குளம்புகள் வளைந்து விட்டன. இதை சரி செய்ய முடியுமா?''
எஸ். ராமனுஜதாசன், துறையூர்.
மாடு வளர்ப்பில் அனுபவம் வாய்ந்த சேலம் மாவட்டம், புத்திரகவுண்டன் பாளையத்தைச் சேர்ந்த மணிசேகர் பதில் சொல்கிறார்.
''மாட்டுப் பண்ணை மண்தரையில் இருப்பதுதான் நல்லது. ஆனால், அதில் சில குறைபாடுகள் உண்டு. மண் தரையாக இருந்தால், முழு சிறுநீரையும் சேகரிக்க முடியாது. சுத்தம் செய்வதிலும் சிரமம் உண்டு. இதனால், சிமென்ட் தரைகளை அமைத்து விடுகிறோம்.
சில பண்ணைகளில், வேலை எளிதாக முடிய வேண்டும் என்று தரையை வழவழப்பாக அமைத்து விடுகிறார்கள். இது முற்றிலும் தவறு. அதனால், மாடுகள் நிறக முடியாமல் அவதிப்படும். சில மாடுகளுக்கு கால் குளம்புகள் வளைந்து விடும். தரை சொர சொரப்பாக இருந்தால்... குளம்புகள் வ்ளையாது. லாடம் கட்டுபவரை அழைத்து வந்து வளைந்தக் குளம்புகளைச் சரி செய்ய முடியும்.
மேலை நாடுகளில் உள்ள மாட்டுப் பண்ணைகளில் மாடுகளின் குளம்புகளைப் பராமரிக்கவே தனி ஆளை வைத்திருப்பர். நகங்கள் அதிகமாக வளர்ந்தால், நமக்கு சிரமம் ஏற்படுவது போல, கால்நடைகளுக்கும் குளம்பு வளர்ந்தால் தொந்தரவாக இருக்கும். அதனால் அதை அவ்வப்போது கவனித்து சரி செய்ய வேண்டும்.''
தொடர்புக்கு, செல்போன்: 096266-17708.

''எனது விவசாயத் தேவைக்கு மண்புழு உரத்தை உற்பத்தி செய்து வருகிறேன். நான் பயன்படுத்தியது போக மீதியுள்ள மண்புழு உரங்களை விற்பனை செய்வது எப்படி?''
ஜி. நீலமேகன், கீழ்மத்தூர்.
மண்புழு உர உற்பத்தியில் அனுபவம் வாய்ந்த திருச்சி மாவட்ட முன்னோடி இயற்கை விவசாயி 'பணிக்கம்பட்டி’ என்.கோபாலகிருஷ்ணன் பதில் சொல்கிறார்.
''இயற்கை விவசாயம் வேகமாகப் பரவி வரும் இந்நேரத்தில் மண்புழு உர விற்பனை எளிதுதான். ஆனால், தரமான வகையில் மண்புழு உரத்தை உற்பத்தி செய்தால்தான், விற்பனை வாய்ப்பு பெருகும். அடுத்து, நாம் எப்படி உர உற்பத்தி செய்கிறோம் என்பதைப் பார்வையிட விவசாயிகளை அனுமதிக்க வேண்டும்.

மண்புழு உரத்தை அவர்களே உற்பத்தி செய்யவும் பயிற்சி கொடுக்கலாம். ஆரம்பத்தில், உங்கள் பண்ணைக்கு அருகில் உள்ளவர்களிடம் மண்புழு உரத்தை விற்பனை செய்யுங்கள். அவர்கள் மூலம் விற்பனை வாய்ப்பு கிடைக்கும். நீங்கள் மண்புழு உரம் விற்பதை மற்றவர்களுக்குத் தெரியப்படுத்தும் வகையில் நடவடிக்கைகளை எடுங்கள். அசோஸ்பைரில்லம், பாஸ்போ-பாக்டீரியா... போன்ற உயிர் உரங்களை மண்புழு உரத்துடன் கலந்து மதிப்புக் கூட்டியும் விற்கலாம். இதனால், மண்புழு உரத்தின் தரம் மேம்படும். நான், 20 ஆண்டுகளாக மண்புழு உரம் விற்கிறேன். இதுவரை பிரச்னை வந்ததில்லை. தேவைதான் அதிகரித்துக் கொண்டே உள்ளது.''
தொடர்புக்கு, செல்போன்: 94431-48224.
விவசாயம், கால்நடை, மீன்வளம் மற்றும் சுற்றுச்சூழல் என்று பல துறைகள் பற்றி வாசகர்களின் சந்தேகங்களுக்கான பதில்களை உரிய நிபுணர்களிடம் பெற்றுத் தருவதற்காகவே 'புறா பாண்டி' சும்மா 'பறபற'த்துக் கொண்டிருக்கிறார். உங்கள் கேள்விகளை 'நீங்கள் கேட்டவை', பசுமை விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-2. என்ற முகவரிக்கு தபால் மூலமும் pasumai vikatan.com என்ற முகவரிக்கு இ-மெயில் மூலமும் PVQA (space) உங்கள் கேள்வி (space) உங்கள் பெயர் டைப் செய்து 562636 என்ற எண்ணுக்கு செல்போன் மூலமும் அனுப்பலாம்.