மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மரத்தடி மாநாடு

ஊருக்கெல்லாம் சொல்லுமாம் பல்லி... அது விழுகுமாம், கழுநீர் பானையில துள்ளி! ஓவியம்: ஹரன்

##~##

காலையிலேயே 'ஏரோட்டி’ ஏகாம்பரத்தோடு தோட்டத்துக்கு வந்துவிட்ட 'வாத்தியார்’ வெள்ளைச்சாமி, செய்தித்தாள்களைப் படித்துக் கொண்டிருந்தார்.

வயல் வேலையில் தீவிரமாக இருந்த ஏரோட்டி, அந்தக் காலையிலேயே அக்னி வெயிலின் தாக்கத்தைச் சமாளிக்க முடியாதவராக, வேலைகளை அப்படியே நிறுத்தி விட்டு, சரசரவென தென்னை மரத்தில் ஏறி, இளநீர் காய்களை வெட்டிப் போட்டார்.

இருவரும் சீவிக் குடித்துக் கொண்டிருந்தபோதே, 'காய்கறி’ கண்ணம்மாவும் வந்து சேர்ந்துவிட, அவருக்கும் ஒன்றை வெட்டிக் கொடுத்தார் ஏரோட்டி.

மூவரும் அதைக் குடித்தபடியே... கதைக்க ஆரம்பிக்க, அன்றைய மாநாடும் ஆரம்பமானது...

''முதல்வரோட ஸ்ரீரங்கம் தொகுதியிலயே விவசாயிகளுக்கு அநியாயம்னு பொங்கி எழுந்து போராட ஆரம்பிச்சுருக்கறதைக் கேள்விப்பட்டீங்களா?'' என்று கட்டியம் சொன்ன வாத்தியார்,

''சமீபத்துல நடந்த சட்டசபை கூட்டத்துல, ஸ்ரீரங்கம் தொகுதியில இருக்குற மொண்டிப்பட்டி பஞ்சாயத்துல 1,200 கோடி ரூபாய்ல காகித ஆலை அமைக்கப்படும்னு அறிவிப்பை வெளியிட்டாங்க முதல்வரம்மா.

அதுக்கான வேலைகள் இப்ப ஜரூரா நடக்குது. மொண்டிப்பட்டி பஞ்சாயத்துல இருக்குற கொட்டப்பட்டி, போடுவார்பட்டி, வடுகப்பட்டி, பூங்குடிப்பட்டினு நிறைய ஊர்கள்ல தமிழ்நாடு காகித ஆலை அதிகாரிகள் வந்து நிலத்தை அளந்துருக்காங்க. அதுல 300 ஏக்கர் நெல் வயல், 250 ஏக்கர் கரும்பு வயல், மத்த பயிருங்க உள்ள நிலம் 300 ஏக்கர்னு எல்லாம் அடிபடுது. கிட்டத்தட்ட பத்தாயிரம் தென்னை, மா மரங்கள் இருக்குதாம். நல்ல தண்ணி வசதியோட ஏறத்தாழ 200 கிணறுகளும் இருக்குதாம்.

மரத்தடி மாநாடு

இப்படி நல்ல வளமான விளைநிலத்தை காலி பண்ணி, காகித ஆலை அமைச்சா... கிட்டத்தட்ட 2 ஆயிரம் விவசாயிகள் பாதிக்கப்படுவாங்களாம். அதனால, 'எங்க பகுதியில காகித ஆலை வரக்கூடாது’னு கலெக்டர்கிட்ட மனு கொடுத்திருக்காங்க விவசாயிங்க. 'குடும்பத்துல ஒருத்தருக்கு காகித ஆலையில வேலை போட்டுத் தர்றோம்’னும், 'தரிசு நிலங்களைத்தான் எடுப்போம். வளமான நிலங்களை எடுக்க மாட்டோம்’னு என்ªன்னவோ சொல்லி, சம்சாரிகளை சம்மதிக்க வெக்க பாக்கறாங்களாம் நியாயன்மாருங்க! ஆனாலும், விவசாயிங்க சம்மதிக்கலையாம்'' என்று சொன்னார்.

''ஆமாம், நெய்வேலி, சேலம், நரிமணம்னு ஒவ்வொரு ஊர்லயும் இப்படி ஏதாச்சும் ஆலைகளை அரசாங்கம் தொடங்கறப்ப எல்லாம், இப்படித்தானே வாக்குறுதி கொடுத்தாங்க. ஆனா, கடைசியில மண்ணு அள்ளிக் கொட்டுற கூலி வேலையைத்தானே கொடுத்தாங்க. அரசாங்கத்த நம்பி நிலத்த கொடுத்துட்டு... நாப்பது, அம்பது வருஷத்துக்கும் மேலா... நெய்வேலியில போராடிட்டேதானே இருக்காங்க சம்சாரிங்க'' என்று இடைச்செருகலான ஏரோட்டி,

''வளர்ச்சியைவிட விவசாயிங்களோட வாழ்வதாராம்தான் முக்கியம். அதைக் கெடுக்கற மாதிரி எந்தச் செயலையும் என் அரசாங்கம் ஆதரிக்காதுனு மத்திய அரசாங்கத்தோட 'கெயில்', கேஸ் குழாய பதிக்கற விஷயத்துல அறிக்கைவிட்ட அம்மா, இப்ப என்ன முடிவெடிக்கப் போறாங்கனு தெரியல...'' என்று ஒரு கேள்வியையும் எழுப்பினார்.

''ஊருக்கெல்லாம் சொல்லுமாம் பல்லி... அது விழுகுமாம் கழுநீர் பானையில துள்ளி'னு சொன்ன கதையால்ல இருக்கு'' என்று நக்கலாக காய்கறி சிரிக்க...

''அட நீ வேற கண்ணம்மா... கெயில், மத்திய அரசு நிறுவனம். ஆனா, இப்ப சொன்னது மாநில அரசாச்சே. சொன்னதை நிறைவேத்தாம விட்டுடுவாங்களா இந்தம்மா? 'குடிகாரன் பேச்சு... பொழுதுவிடிஞ்சா போச்சு, அரசியல்வாதி பேச்சு... அந்த நிமிஷமே போச்சு'ங்கறதுதானே நாட்டு நடப்பு.

வழக்கம்போல, 'எங்க பகுதியில காகித ஆலை வரணும்’னு கோரிக்கை வெச்சு ஒரு 500, 600 பேர் போராட்டத்துல இறங்கியிருக்காங்க. அம்மாவோட மனசு குளிரணும்கிறதுக்காக அந்தப் பகுதி ஆளுங்கட்சி புள்ளிகளோட ஏற்பாடுதானாம் இது. இதை வெச்சே, 'விவசாயிகளோட ஆதரவுடன் காகித ஆலை அமையும்'னு சீக்கிரமே அம்மா அறிக்கை விட்டுடுவாங்க'' என்றார், வேதனையுடன்.

''தொடர்ந்து, இப்படி விவசாயிக வயித்துலயே அடிச்சுட்டிருந்தா... நாடு என்னத்துக்காகுமோ?'' என்று ஆத்திரப்பட்ட காய்கறி, ஒரு செய்தியைச் சொன்னார்.

''எவ்வளவு வறட்சியா இருந்தாலும், சித்திரையில புழுதி உழவு ஓட்டுறதுக்கு ஒரு கோடை மழை பெய்ஞ்சுடும். இந்த வருஷம் நிறைய இடங்கள்ல அதுவும் இல்லாமப் போச்சாம். அதனால, மக்களெல்லாம் மழைக்காக என்னென்னவோ வேண்டுதல்களையெல்லாம் செய்ய ஆரம்பிச்சுருக்காங்க.

சேலம், ஆத்தூர் பக்கமிருக்கற கன்னிப்பொண்ணுங்க... வீடு வீடாப் போய் பிச்சை எடுத்து அந்தச் சாப்பாட்டை முச்சந்தியில வெச்சு பூஜை செஞ்சுருக்காங்க. ஒப்பாரி வெக்கிறது, கொடும்பாவி இழுக்குறதுனு எல்லா வழக்கத்தையும் நிறைவேத்தி கோயில்கள்ல பூஜையும் பண்ணிட்டிருக்காங்க. ஆனா, அந்த மழைச்சாமி, இதுவரைக்கும் கண் தொறந்தபாடில்லை'' என்றவர்,

''சரிசரி, வெயில் நேரத்துல போனாத்தான் இந்த தர்பூசணியையெல்லாம் வித்து முடிக்க முடியும். இந்தாங்க இதைச் சாப்பிடுங்க'’ என்று ஆளுக்கொரு தர்பூசணிக் கீற்றைக் கொடுத்தார். பிறகு, ''போன தடவை, 'கிண்ணம் நிறைய தண்ணி இருக்கு... ஆனா, குருவி குடிக்க வழி இல்லை அது என்ன?’னு கேட்டேனே, கண்டுபுடிச்சீங்களா?'' என்று காய்கறி கேட்க...

''இது தெரியாதா... இளநி'' என்று ஏரோட்டி சொல்ல... ''பரவாயில்லையே... நீங்களா கண்டுபுடிச்சுங்கீளா.. இல்ல தெருவுல சின்னப்பசங்ககிட்ட கேட்டுட்டு வந்தீங்களா...'' என்று சத்தம்போட்டு சிரித்தவர்,

''சரி சரி, இதையாவது நீங்களாவே கண்டுபுடிச்சு வைங்க பாக்கலாம்... 'குண்டு குள்ளனுக்கு குடுமி நிமிர்ந்தே இருக்குமாம்... அது யாரு?'' என்றபடி கிளம்ப, முடிவுக்கு வந்தது, அன்றைய மாநாடு.