மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மரத்தடி மாநாடு

ஓவியம்: ஹரன்

 உச்சத்தில் வெங்காயம்...

##~##

கிணற்றில் நீர்மட்டம் குறைந்து, 'கரகர’வென மோட்டாரில் சப்தம் கேட்கவும்... வயலில் தண்ணீர் கட்டிக்கொண்டிருந்த 'ஏரோட்டி’ ஏகாம்பரம் வேகமாக ஓடி வந்து 'சுவிட்’சை அணைத்துவிட்டு... கல்திட்டில் அமர்ந்திருந்த 'வாத்தியார்’ வெள்ளைச்சாமி முன் கவலையோடு வந்தமர்ந்தார்.

''நாலஞ்சு நாளா கரன்டு கொஞ்சம் பரவாயில்லாம வருது. ஆனா, கிணத்துலதான் தண்ணியில்ல. ஒரு மணி நேரம்கூட மோட்டாரை ஓட்ட முடியல. தண்ணி இறங்கிடுது'' என்று ஏரோட்டி சொல்ல,

''அக்னி வெயில் முடியுறதுக்கும், கேரளாவுல தென்மேற்குப் பருவமழை ஆரம்பிக்கறதுக்கும் சரியா இருந்துச்சு. வெக்கை குறைஞ்சதால கரன்ட் உபயோகமும் குறைஞ்சுருக்குதாம். அதேநேரம், காற்றாலை மின்சார உற்பத்தி அதிகரிச்சுருக்குதாம். அதனாலதான் ஓரளவுக்கு கரன்ட் வந்துகிட்டிருக்குதாம்'' என்று வாத்தியார் விளக்கிக் கொண்டிருக்கும்போதே, 'காய்கறி' கண்ணம்மாவும் வந்துசேர... களைகட்ட ஆரம்பித்தது, அன்றைய மாநாடு.

''இந்த சின்ன வெங்காயம், இப்படி விலை ஏறிப்போச்சே. கிலோ நூறு ரூபாயைத் தொட்டுடுச்சே!'' என்று கண்களை அகலமாக விரித்து காய்கறி ஆச்சர்யம் காட்ட...

''வெங்காயம் மட்டுமில்லை கண்ணம்மா... எல்லா காய்கறியும்தானே விலை ஏறிக்கிட்டே இருக்கு. வெங்காயம் உற்பத்தியே கிட்டத்தட்ட நின்னுடுச்சுனுதான் சொல்லணும். அதனாலதான் இப்படி விலை ஏறியிருக்கு.

மரத்தடி மாநாடு

ஈரோடு பக்கமெல்லாம் மஞ்சள் போட்டா... ஊடுபயிரா வெங்காயமும் போடுவாங்க. திருப்பூர், பல்லடம், உடுமலைப்பேட்டை பக்கமெல்லாம் சின்னவெங்காயத்தை நிறைய பேர் சாகுபடி பண்ணிக்கிட்டிருந்தாங்க. தண்ணி இல்லாம வறண்டு போனதால, வெங்காய சாகுபடியை பலரும் நிறுத்திட்டாங்க. மஞ்சளுக்கு விலை இல்லாததால ஈரோடு பக்கமெல்லாம் மஞ்சள் சாகுபடியையும் குறைச்சுக்கிட்டதால... வெங்காயமும் குறைஞ்சு போச்சு. அதனால தட்டுப்பாடு அதிகமாகி விலை ஏறிப்போச்சு. நெல் விலையும் கூடிக்கிட்டே இருக்குதாம். நெல் வரத்து குறைஞ்சுட்டதால பக்கத்து மாநிலங்கள்ல இருந்துதான் நெல் வருதாம். அரிசி விலையும் ஏறிக்கிட்டே இருக்கு. இந்த வருஷமும் மழை ஏமாத்தினா... புவ்வாவுக்கு லாட்டரிதான்'' என்று அபாயமணி அடித்தார், வாத்தியார்.

கூடையிலிருந்து ஆளுக்கு கொஞ்சம் நாவல் பழங்களை எடுத்துக் கொடுத்த காய்கறி, ''இந்த வருஷம் இப்போதான் நவ்வாப்பழ சீஸன் ஆரம்பிச்சுருக்கு. ஆரம்பிக்கும்போதே விலை உச்சத்துல இருக்குதாம். கிலோ நானூறு ரூபாய் வரைக்கும் விக்குதாம். போன வருஷம் கிலோ நூத்தம்பது ரூபாய்க்குதான் வித்துச்சு. அதேபோல, இந்த ஊட்டி பிளம்ஸ் கிலோ நூத்தி இருபது ரூபாய்க்கு விலைபோகுதாம்'' என்று விலைவாசித் தகவல்களையும் எடுத்து விட்டார்.

நாவல் பழத்தை சுவைத்தபடியே...

''திருநெல்வேலியில, 'செப்பறை வளபூமி பசுமை உலகம்'னு அமைப்பு ஒண்ணு, இருக்கு. இவங்க, மரம் வளர்க்கறதுக்கான பயிற்சியை தமிழ்நாடு முழுக்க கொடுத்துட்டு இருக்காங்க. விதை போட்டாலோ, நாத்து உருவாக்கி நட்டாலோ அது மரமாகுறதுக்கு ரொம்ப நாள் ஆகும்ல. இவங்க மரத்தோட கிளையை வெட்டி வெச்சு, அதை தொண்ணூறு நாள்ல முளைக்க வெக்கிற தொழில்நுட்பத்தைச் சொல்லிக் கொடுக்கறாங்க. ஆலமரம், அத்தி, வாகை மரம், உசிலை, பூவரசு மாதிரியான மரங்களை இப்படி வளர்க்க முடியுமாம்!'' என்று சொன்னார் ஏரோட்டி.

''நல்ல விஷயமா இருக்கே'' என்று ஆச்சர்யம் காட்டினார் வாத்தியார்.

''ஆத்தாடி... மழை வர்ற மாதிரி இருக்கு... நான் கிளம்புறேன்'' என்ற காய்கறி,

''போன தடவை, 'குண்டுக் குள்ளனுக்கு குடுமி நிமிர்ந்திருக்குமாம்... அது யாரு?’னு கேட்டேனே... கண்டுபிடிச்சீங்களா? என்று கேட்க... ''கத்திரிக்காய்தானே'' என்றார், வாத்தியார்.

''அட, ரொம்ப சுலபமா கதை போட்டுட்டேன் போல..! சரி, இப்பப் பார்க்கலாம், ஆயிரம் தச்சர் கூடி அமைஞ்ச மண்டபமாம்... புகை விட்டா கலைஞ்சுடுமாம். அது என்ன?'' எனச் சொன்னபடி காய்கறி நடையைக் கட்ட, முடிவுக்கு வந்தது, மாநாடு.

தொடர்புக்கு,
செப்பறை வளபூமி பசுமை உலகம்,
அமைப்பாளர், அர்ஜூன், செல்போன்: 97903-95796

 

 மீன் வளர்க்க படிப்பு...

தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் பொன்னேரி மற்றும் நாகப்பட்டினம் மீன்வளத் தொழில்நுட்ப நிலையங்களில், மீன்பிடிப்பு மற்றும் மீன் பதனிடுதல்; மீன் வளர்ப்பு ஆகிய தொழில்களில் பெருகி வரும் வேலை வாய்ப்புகளுக்கு ஏற்ப மாணவர்களை உருவாக்கும் நோக்கிலும், சுயவேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையிலும், ஓராண்டு சான்றிதழ் படிப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. நாகப்பட்டினத்தில் 'மீன் வளர்ப்பியல்’ என்ற படிப்பும், பொன்னேரியில் 'மீன் பிடிப்பு மற்றும் மீன் பதன முறைகள்’ என்ற படிப்பும் சொல்லித்தரப்பட உள்ளன. 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். பயிற்சியில், வகுப்பறை, சொற்பொழிவு, களப்பயிற்சி, பண்ணைப்பணி மற்றும் திட்டப்பணி ஆகியவை இடம்பெற உள்ளன.

மீன்வளத் தொழில்நுட்ப நிலையம், முதலாம் கடற்கரைச் சாலை, நாகப்பட்டினம்;

மீன்வளத் தொழில்நுட்ப நிலையம், எல்.என்.அரசு கல்லூரி வளாகம், பொன்னேரி, திருவள்ளூர்-601204,

தொலைபேசி: 044-27991566.

மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தூத்துக்குடி ஆகிய இடங்களில் 100 ரூபாய் கட்டணம் செலுத்தி விண்ணப்பத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.