படங்கள்: எஸ். சாய் தர்மராஜ், தி. விஜய்,
புறா பாண்டி
##~## |
''பண்ணைக் குட்டை அமைக்க, அரசாங்கம் 100 சதவிகிதம் மானியம் கொடுப்பதாகச் சொல்கிறார்கள். இது உண்மையா? மானியம் பெற வேண்டுமானால், யாரை அணுக வேண்டும்?''
செ.வீ.பா. சங்கத்தமிழன், அன்னூர்.
கோயம்புத்தூர் மாவட்டம், அன்னூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர், கிருஷ்ணராஜன் பதில் சொல்கிறார்.
''தமிழ்நாட்டைப் பொருத்தவரை மழை பெய்யும் நாட்கள் மிகவும் குறைவு. ஓர் ஆண்டுக்குத் தேவையான ஒட்டுமொத்த மழையும், சில நாட்களில் கொட்டி தீர்த்துவிடும். ஆனால், பண்ணைக் குட்டைகள் அமைக்கப்பட்டிருந்தால், துளி மழை நீர்கூட வீணாகாமல் சேமித்து வைக்க முடியும். இதன் காரணமாக பண்ணையில் நிலத்தடி நீர்மட்டம் உயரும். இவ்வளவு பயன்கள் இருப்பதால்தான், தமிழக அரசு பண்ணைக் குட்டைத் திட்டத்தை அறிவித்துள்ளது. அதன்படி, அன்னூர் வட்டாரத்தில் ஒரு பேரூராட்சி மற்றும் 21 ஊராட்சிகளில், தலா மூன்று வீதம் 66 பண்ணைக் குட்டைகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
100 அடி நீளம், 100 அடி அகலம் மற்றும் 5 அடி ஆழம் என்ற அளவில் பண்ணைக் குட்டை அமைக்கப்பட வேண்டும். இதற்கு, அரசாங்கம் 100 சதவிகிதம் மானியம் அளிக்கிறது. தேவைப்படும் விவசாயிகள், இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு... அன்னூர் ஒன்றிய வேளாண் விரிவாக்க மையத்தில் பெயர் பதிவு செய்து கொள்ளலாம்.

முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்கிற அடிப்படையில் இச்சலுகையைப் பெறலாம். மற்றப் பகுதிகளில் உள்ள விவசாயிகள், அருகில் உள்ள வேளாண் விரிவாக்க மையத்தை அணுகினால்... இதுபற்றிய விவரங்கள் கிடைக்கும்.''
''எங்கள் வீட்டில் மழை நீரை சேகரித்து, குடிநீராகப் பயன்படுத்த விரும்புகிறோம். எத்தனை ஆண்டுகளுக்கு அந்த நீரைப் பயன்படுத்தலாம்?''
விஜயகுமார், ஈரோடு. திருவாரூரில் மழை நீர் ஆராய்ச்சி மையம் நடத்தி வரும் வரதராஜன் பதில் சொல்கிறார்.
''மழை நீர் மட்டும்தான் மனிதனுக்கான நீர். என்னதான், விலை உயர்ந்த 'மினரல் வாட்ட’ராக இருந்தாலும், அது மழை நீருக்கு ஈடாகாது. சுற்றுச்சூழல் கெட்டுப்போயுள்ள இந்தக் காலத்தில், மழை நீரை நேரடியாகப் பயன்படுத்த முடியாது. எனவே, சில நுட்பங்களைப் பின்பற்றி வடிகட்டிப் பயன்படுத்தலாம்.
வழக்கமாக மொட்டை மாடியில் இருந்து மழை நீர் கீழே செல்ல குழாய் இருக்கும். அந்தக் குழாய் வரும் பகுதியில் உள்ள ஜன்னலின் மேற்புறத்தில் மழை மற்றும் வெயிலுக்காக வைக்கப்படும் தடுப்பின் (சன் ஃஷேட்) மீது, குழாயுடன் கூடிய சிறிய பிளாஸ்டிக் வடிதொட்டியை வைத்துவிட வேண்டும். இந்த வடிதொட்டி, மொட்டைமாடியின் பரப்பளவில் 5 சதவிகிதம் அளவு கொண்டதாக இருக்க வேண்டும். ஜன்னலின் மேற்புரத் தடுப்பு, இந்தத் தொட்டியைத் தாங்கும் அளவுக்கு இருக்கிறதா என்று உறுதிப்படுத்திக் கொள்வது முக்கியம்!
தொட்டியின் அடியில் கோழி வலையைப் போட்டு அதன் மீது இரண்டு அடுக்காக கொசு வலையைப் பரப்ப வேண்டும். அதன் மீது மூங்கில், தேங்காய் சிரட்டை ஆகியவற்றை எரித்து, கிடைத்த கரியைப் போட்டு... அவல் ஜல்லியைப் பரப்ப வேண்டும். அதன் மீது, இரண்டு அடுக்குக் கொசுவலையைப் பரப்பி மூன்று அங்குல உயரத்துக்கு நன்றாக சலித்த மணலை நிரவினால், மழை நீர் வடிகட்டி தயார். இத்தொட்டியின் கீழ் உள்ள குழாயில் வெளி வரும் சுத்திகரிக்கப்பட்ட மழை நீரைச் சேகரித்து வைத்துப் பயன்படுத்தலாம்.

மழை நீர் சேகரிக்கும் 'பிளாஸ்டிக் டேங்க்’ கருப்பு நிறம் எனில், அதில் உள்ள நீரை அதிகபட்சம் ஓர் ஆண்டு வரைதான் பயன்படுத்த வேண்டும். காரணம், கருப்பு நிறம், வெப்பத்தை உள்வாங்கிக் கொண்டே இருக்கும். அதனால், அதில் உள்ள மழை நீரின் தன்மையும் மாறி விடும். வெள்ளை நிற டேங்க்காக இருந்தால், 8 ஆண்டுகள் வரைகூட கெட்டுப் போகாது.
மூன்று பேர் கொண்ட குடும்பத்துக்கு ஆயிரம் லிட்டர் கொள்ளவு உள்ள டேங்க் போதுமானது. ஒரு முறை இந்த அமைப்பை நிறுவிவிட்டால், 100 ஆண்டுகளுக்குப் பலன் கொடுக்கும். ஆயிரம் லிட்டர் கொள்ளவு கொண்ட வெள்ளை நிற டேங்க் அமைக்க, 10 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும்.''
தொடர்புக்கு, செல்போன்: 94431-52675.
''விவசாய நிலத்தை பத்து ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுக்க விரும்புகிறேன். சட்டப்படி என்ன செய்ய வேண்டும்?'
எஸ். கந்தசாமி, காஞ்சிபுரம். சென்னை உயர்நீதி மன்றத்தின் வழக்கறிஞர், என். ரமேஷ் பதில் சொல்கிறார்.
''தெரியாத, அறியாத நபர்கள்தான் என்றில்லை... நீண்ட காலம் பழகிய நண்பர், உறவினர்களாக இருந்தாலும், சட்டப்படியான குத்தகை ஒப்பந்தம் அவசியம்.

'தமிழ்நாடு பயிரிடும் குத்தகைதாரர் பாதுகாப்புச் சட்டம் 1955 சட்டப்பிரிவு-4 பி (2)’-ன்படி நிலத்தைக் குத்தகைக்கு எடுக்கும்போது, சில விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். நீங்கள் குத்தகைக்கு

எடுக்கும் நிலத்தின் சர்வே எண், அளவு, குத்தகைக் காலம், குத்தகைத் தொகை, செலுத்தும் முறை, நிலத்தின் பயன்பாடு, ஆகிய விவரங்களுடன், நில உரிமையாளருடன் குத்தகை ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அதில் இரு தரப்பினரும் கையப்பம் இடவேண்டும்.
மொத்தம் மூன்று ஒப்பந்தப் படிவங்கள் தயாரித்து, நீங்களும், நிலத்தின் உரிமையாளரும் தலா ஒரு படிவத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். மூன்றாவது படிவத்தை 15 நாட்களுக்குள் உங்கள் பகுதிக்குட்பட்ட வட்டாட்சியர் அலுவலகத்தில் பதிவுக்காக சமர்ப்பிக்க வேண்டும்.
குத்தகை ஒப்பந்தம், 'முத்திரைத்தாளில்தான் எழுதப்பட வேண்டும்’ என்கிற அவசியமில்லை. வெள்ளைத்தாளில் எழுதினாலே போதுமானது. குத்தகை ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ளபடி இருவரும் நடந்து கொள்ள வேண்டும். இதில், யாரேனும் விதி முறைகளை மீறினால், அவர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க முடியும்.''
''தீவனச் சோளம், தீவனத் தட்டைப்பயறு விதைகள் எங்கு கிடைக்கும்?''
ஆர். கணேசன், திருச்சி. நாமக்கல், வேளாண் அறிவியல் மையத்தின் பேராசிரியர் மற்றும் தலைவர், முனைவர்.பா. மோகன் பதில் சொல்கிறார்.
''எங்கள் வேளாண் அறிவியல் மையத்தில், அரசு-தனியார் கூட்டிணைவு முறையில், 'தீவனப் பயிர் விதைகள் உற்பத்தி மற்றும் விற்பனை’ என்ற திட்டத்தின் கீழ்... தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களைச் சார்ந்த 58 விவசாயிகள் ஒப்பந்த முறையில் தீவனப்பயிர் விதைகள் மற்றும் கரணைகளை உற்பத்தி செய்து விற்பனைக்குக் கொடுக்கிறார்கள்.
பல முறை அறுவடை செய்யும் தீவனச் சோளம், சூபாபுல் (சவண்டல்), அகத்தி (செஸ்பேனியா), கொழுக்கட்டைப் புல், தீவனத் தட்டைப்பயறு ஆகியவை எங்களிடம் விற்பனைக்கு உள்ளன. தமிழ்நாட்டில் வசிக்கும் விவசாயிகள், தீவனப் பயிர் விதைகள் பெற 'திட்ட ஒருங்கிணைப்பாளர், வேளாண் அறிவியல் நிலையம், நாமக்கல்’ என்ற பெயருக்கு வரைவோலை எடுத்து அனுப்பினால், கூரியர் தபால் மூலம் அனுப்பி வைக்கிறோம்.

வாங்கும் அளவு, 20 கிலோ வரையில் இருந்தால், துரித தபால் (கூரியர்) மூலமாக அனுப்பி வைப்போம் (ஒரு கிலோவுக்கு 40 ரூபாய் தபால் செலவு). தேவைப்படும் அளவு விதைக்கான தொகையோடு துரித தபால் செலவையும் வரைவோலை (டி.டி.) மூலமாக அனுப்ப வேண்டும். 20 கிலோவுக்கு மேற்பட்டால், 'டூ பே' (To Pay) அடிப்படையில் பார்சல் சர்வீஸ் மூலமாக விதைகள் அனுப்பப்படும். விதைகள் வேண்டி விண்ணப்பிக்கும் கடிதத்துடன் வரைவோலையையும் சேர்த்து, கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். ரகங்கள் மற்றும் விவரங்கள் தனியாக பெட்டிச் செய்தியில் கொடுக்கப்பட்டுள்ளன.
தொடர்புக்கு: பேராசிரியர் மற்றும் தலைவர், வேளாண் அறிவியல் நிலையம், கால்நடை அறிவியல் மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகம்,
நாமக்கல் - 637002.
தொலைபேசி: 04286-266244, 266345, 266650.
''இயற்கை வேளாண்மை சம்பந்தமான இலவசப் பயிற்சி எங்கு கிடைக்கும்?''
ஆர். விஜய், சென்னை-28.
''கரூர் மாவட்டம், கடவூரில் உள்ள 'வானகம்’ உயிர்ச்சூழல் பண்ணையில் நபார்டு வங்கியின் நிதியுதவியுடன், அவ்வப்போது, 'இயற்கை வேளாண் விஞ்ஞானி' கோ.நம்மாழ்வார் தலைமையில் இயற்கை விவசாயப் பயிற்சிகள் இலவசமாக நடத்தப்படுகின்றன.''
தொடர்புக்கு, செல்போன்: 94880-55546.
