சின்ன வெங்காயத்தை மிரட்டும்... சிக்கு பெங்காயி!
ஓவியம்: ஹரன்
##~## |
மக்காச்சோள வயலுக்குள் இறங்கிய ஆடுகளை விரட்டிக் கொண்டிருந்த 'ஏரோட்டி’ ஏகாம்பரம், 'காய்கறி’ கண்ணம்மாவின் தலை தென்பட்டதும் வரப்பேறி வர, இருவரும் வயல்காட்டுத் திட்டுக்கு வந்து சேர்ந்தனர். அங்கே வானத்தைத் தீவிரமாகப் பார்த்தபடி அமர்ந்திருந்த வாத்தியார்,
''என்னங்கய்யா... அண்ணாந்து எதையோ பார்த்துட்டே இருக்கீங்க? சைனாக்காரன் விட்ட ராக்கெட் ஏதாச்சும் நம்ம வயக்காட்டு பக்கம் வந்துட்டுருக்கோ...?!'' என்ற காய்கறியின் நக்கலானக் குரல் கேட்டதும்... சட்டென பார்வையைத் திருப்பினார்.
''மேகம் கருக்குது. ஆனா, மழை வர மாட்டேங்குது. தென்மேற்குப் பருவமழை பெய்யாதானு சம்சாரிங்கள்லாம் ஏங்கிக்கிட்டிருக்காங்க. கொடைக்கானல்ல இந்த மாசமெல்லாம் எப்பவும் சாரல் மழை அடிக்கும். இந்த வருஷம் எதிர்பார்த்த அளவுக்கு மழை இல்லை. தேனி பக்கமும் இதேதான் நிலமை.
பொள்ளாச்சி, வால்பாறை பக்கம்தான் ஓரளவுக்கு மழை பெஞ்சுக்கிட்டிருக்கு. நம்ம பக்கம் நிலைமையைப் பத்தி அந்த வருணபகவான்கிட்ட கேக்கலாம்னுதான் மேல பார்த்துட்டிருந்தேன்'' என்று சிரித்தபடியே அன்றைய மாநாட்டை ஆரம்பித்து வைத்தார் வாத்தியார்.
''அதான் காடு கண்ணிங்களையெல்லாம் இல்லாம பண்ணிட்டிருக்காங்களே... பிறகெப்படி மழை கொட்டும்?'' என்று நொந்து கொண்டார் காய்கறி!

''நெசம்தான் கண்ணம்மா... இப்பகூட மேற்குத் தொடர்ச்சி மலைகள்ல ஆக்கிரமிப்பு அதிகரிச்சுட்டே இருக்கறதால, வனத்தோட பரப்பு குறைஞ்சுட்டே வருது. வனப்பகுதிக்குள்ள, சுற்றுலா... ஓய்வு விடுதினு பல ரூபத்துல மக்கள் குடியேறுறது... காட்டுக்கு மட்டுமில்ல, அங்க இருக்கற விலங்குகளுக்கும் பாதிப்பை உண்டு பண்ணுதுனு கவலையோட பேச ஆரம்பிச்சுருக்காங்க வனத்துறையைச் சேர்ந்தவங்க.
போதுமான வனப்பரப்பு இல்லாம, உணவு, தண்ணீர் கிடைக்காமதான், விலங்குகள் எல்லாம் விளைநிலங்கள்ல புகுந்து சேதப்படுத்தறது நடக்குதாம். அதனால, வனப்பகுதிக்குள்ள மழை நீரை சேமிச்சு... நிலத்தடி நீரை உயர்த்துற வகையில் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில், நான்கு தடுப்பணை கட்டி மழைநீரை சேமிக்கவும், அந்தப் பகுதிகள்ல மரக்கன்னுங்கள நட்டு வளர்க்கவும் ஒரு கோடி ரூபாயை தமிழக அரசு ஒதுக்கியிருக்குதாம். 'இதன் மூலம், வன விலங்குகளோட குடிநீர் தேவை பூர்த்தியானா, விலங்குகள் எல்லாம் விளைநிலங்கள்ல நுழையறது குறையும்... நிலத்தடி நீரும் அதிகரிக்கும்'னு வனத்துறை அதிகாரிங்க சொல்றாங்க'' என்றார் ஏரோட்டி!
சட்டென்று அடுத்தச் செய்தியை ஆரம்பித்த வாத்தியார், ''திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்துக்குப் பக்கத்துல அத்திக்கோம்பைனு ஒரு ஊர் இருக்கு. இங்க வருஷா வருஷம் உச்சி மாகாளியம்மன் கோயில் கொடை எடுக்குற சமயத்துல, மாட்டுத்தாவணி கூடும். அதுல குதிரைகளும் விற்பனைக்கு வரும். எப்பவும் ஆயிரக்கணக்கான மாடுகள் வந்து 'ஜேஜே’னு இருக்கும். ஆனா, இந்த வருஷம் வெறிச்சோடிப் போச்சு. பேருக்குக் கொஞ்சமாத்தான் மாடுகள் வந்துச்சு. அதேசமயம், குதிரைகள் அதிகமா இருந்துச்சு. கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர் மாவட்டங்கள்ல இருந்து, காங்கேயம் காளைகளும் 'ரேஸ்’ மாடுகளும் ஓரளவுக்கு வந்துச்சு. ஆனா, பெரியளவுல விற்பனை இல்லைனு புலம்பிட்டிருந்தாங்க... விவசாயிங்களும், வியாபாரிகளும்'' என்று முடிக்க...
''ஆனா, ஆட்டுச் சந்தையெல்லாம் கனஜோரா நடக்குது தெரியுமோ...!'' என்று உற்சாகமாகச் சொன்னார் ஏரோட்டி!
''எல்லாம் அம்மா புண்ணியம்தான்'' என்று ஆமோதித்த வாத்தியார்,
''விலையில்லா ஆடுகள மக்களுக்கு அரசாங்கம் கொடுக்கறதால, எல்லா ஆட்டுச் சந்தைகள்லயும் ஆடுகளுக்கு அதிகத் தேவை இருக்குதாம். அதனால, வியாபாரிங்க உருப்படிக் கணக்குல விலை சொல்லாம, உயிர் எடைக் கணக்குல விலை சொல்ல ஆரம்பிச்சுட்டாங்களாம். உயிர் எடைக்கு கிலோ 600 ரூபாய் வரைக்கும் விலை சொல்றாங்களாம். 'வளர்ப்புக்குத்தான வாங்கிட்டுப் போறாங்க. குட்டி போட்டா சம்பாதிக்கலாம்ல’னு சொல்லியே கூடுதல் விலை வெக்கிறாங்களாம். இப்படியே போனா, இன்னும் கொஞ்ச நாள்ல ஆடு விலை எகிறி, கறி விலையும் ஆயிரம் ரூபாயைத் தொட்டுரும் போல இருக்கு'' என்று சொன்னார்.
''நல்லதுதானுங்கய்யா... அப்பதான சம்சாரிங்களும் கொஞ்சம் பொழைக்க முடியும். ஏதோ அம்மா புண்ணியத்துல பொழைச்சுப் போகட்டும்'' என்று ஆதரவுக்கரம் நீட்டினார் காய்கறி.
''ஆனா, உன்னைய மாதிரி காய் விக்கிற வியாபாரிக்கெல்லாம் அம்மா ஆப்பு அடிச்சுட்டாங்க தெரியுமா...?'' என்ற ஏரோட்டி,
''சென்னையில 31 இடத்துல மலிவு விலை காய்கறிக் கடைகளை திறந்துருக்காங்க, தெரியும்ல... விவசாயிகள்கிட்ட காய்கறிகளை நேரடியா கொள்முதல் செஞ்சு, இந்தக் கடைகள்ல குறைஞ்ச விலையில விக்கப் போறாங்களாம். இப்படியே தமிழ்நாடு முழுக்க கடைகளைத் தொறந்துட்டா... அப்புறம் உம்பாடு திண்டாட்டம்தான்'' என்று காய்கறியை வம்புக்கு இழுத்தார்.
''நானெல்லாம், உடம்பு முழுக்க எண்ணெயைத் தடவிக்கிட்டு ஆத்து மணல்ல உருண்டாலும் புரண்டாலும், ஒட்டுற மண்ணுதான் ஒட்டும்கறத நம்புற சாதி. எனக்குனு எப்பவும் ஒரு வியாபாரம் இருக்கு'' என்று அழுத்தமாகச் சொன்ன காய்கறி,
''சின்ன வெங்காயம் விலை எகிறிப்போய்க் கிடக்குதுல்ல. அதனால, ஆந்திரா மாநிலம் நெல்லூர்ல இருந்து 'சிட்டு வெங்காயம்’ங்குற சிகப்பு வெங்காயம் விற்பனைக்கு வந்துட்டிருக்கு. ஆந்திராவுல இதை 'சிக்கு பெங்காயி’னு சொல்றாங்க. கிலோ 30 ரூபாய்க்குக் கிடைக்கறதால, டேஸ்ட் இல்லாட்டியும் பரவாயில்லைனு நிறைய பேர் வாங்கிட்டுப் போறாங்க'' என்று ஒரு தகவலைத் தட்டிவிட்டவர்,
''சரி, இன்னும் நாலு வாடிக்கை வீடு பாக்கியிருக்கு... நான் கிளம்பணும். அதுக்கு முன்ன, அந்த விடுகதைக்கு பதில் கண்டுபுடிச்சுருந்தா... சொல்லுங்க'' என்று சொன்னார்.
''ஆயிரம் தச்சர் கூடி அமைஞ்ச மண்டபமாம்... புகை விட்டா கலைஞ்சுடுமாம். அதுதானே? தேன்கூடு. கண்டுபிடிச்சுட்டோம்ல...'' என்று தெம்பாகச் சொன்ன ஏரோட்டி,
''சரி, இந்தத் தடவை நான் கதைசொல்றேன். உன்னால வெடிக்க முடியுதானு பாப்போம். 'கன்னு நிக்க, கயிறு மேயுமாம்... அது என்ன?’ சொல்லு பாக்கலாம்...'' என்றார்.
மலங்க மலங்க விழித்த காய்கறி, ''விடையைத் தெரிஞ்சுக்கிட்டு வாரேன்'' என்றபடியே கூடையைத் தூக்க, முடிவுக்கு வந்தது, அன்றைய மாநாடு.