மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நீங்கள் கேட்டவை : 'கரையானைக் கட்டுப்படுத்துவது எப்படி?’

படங்கள்: பொன். காசிராஜன், வீ. சக்திஅருணகிரி

  புறா பாண்டி

##~##

''நோனி மரங்கள் எந்த மாதிரியான நிலத்தில் வளரும். இதன் பயன் மற்றும் விற்பனை வாய்ப்பு பற்றி சொல்ல முடியுமா?'

சண்முகம், மேட்டூர்.

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மூத்த வேளாண் வல்லுநரும், முன்னோடி விவசாயியுமான சீனிவாசன் பதில் சொல்கிறார்.

''அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளில் நோனியைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறார்கள். ஆனால், இந்தியாவில் அதைப் பற்றி அறிந்தவர்கள் மிகவும் குறைவு. இத்தனைக்கும், நோனியின் தாயகம் இந்தியாதான். ஊர்கள்தோறும் உள்ள மஞ்சனத்தி மரத்தின் (நுனா) குடும்பத்தைச் சேர்ந்ததுதான் நோனி. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வரும் நோனி, வெளிநாட்டுக்காரர்கள் கண்ணில் பட்டவுடன்தான் வெளி உலகுக்கு அறிமுகமானது. அங்கு நோனியை 'தெய்வீக மரம்’ என்று கொண்டாடுகிறார்கள். பொதுவாக, சுரப்பிகளின் கோளாறுதான் நோய்களுக்கு மூலக்காரணம். அதை சரி செய்யும் பணியை நோனி செய்வதால், வந்த நோய் தீர்கிறது. வரும் நோய் தடுக்கப்படுகிறது. இதனால், சகல நோய்களுக்கும் இதைத் தீர்வாகப் பயன்படுத்துகிறார்கள்.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்புதான் நோனியைப்பற்றி கேள்விப்பட்டேன். அதன் பிறகு, பல இடங்களுக்குச் சென்று தகவல் சேகரித்தேன். அந்தமான் பகுதியில் நிறைய நோனி மரங்கள் உள்ளன. அதில் இருந்து 'மொரின்டா சிட்டி போலியா’ என்ற ரகத்தைத் தேர்வு செய்து, எனது நிலத்தில் 50 செடிகளை நடவு செய்தேன். அந்த மரங்கள் இப்போது, காய்த்துக் குலுங்குகின்றன. தண்ணீர் தேங்கி நிற்கும் நிலத்தைத் தவிர்த்து, மற்ற நிலங்களில் அருமையாக வளரும். அதுவும் உப்புநீரில் மிகச் சிறப்பாக வளர்கிறது. ஆரம்பத்தில் நோனி விதைகளை முளைக்க வைப்பது பெரிய சவாலாக இருந்தது. அதன் பிறகு, பஞ்சகவ்யா, அமுதக்கரைசல் அல்லது இ.எம் கலவையில் நோனி விதைகளை 24 மணி நேரம் ஊற வைத்து விதைத்தபோது, முப்பதே நாட்களில் முளைத்து விட்டன.

நீங்கள் கேட்டவை : 'கரையானைக் கட்டுப்படுத்துவது எப்படி?’

நடவு செய்த 18-ம் மாதத்தில் இருந்து, இது காய்ப்புக்கு வரும். மூன்று ஆண்டு வயது கொண்ட மரத்தில், 50 கிலோ முதல் 100 கிலோ வரை விளைச்சல் கிடைக்கும். இதில் இருந்து, சுமார் 10 லிட்டர் ஜூஸ் எடுக்கலாம். தற்போது, சந்தையில் 500 மில்லி நோனி ஜூஸ் 1,500 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இத்தனைக்கும், அந்த ஜூஸ் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட நோனி பவுடரில் இருந்துதான் தயாரிக்கப்படுகிறது. நேரடியாக பழத்தில் இருந்து எடுக்கப்படும் ஜூஸில்தான் சுவையும், தரமும் அதிகம். தமிழ்நாட்டில் வீடுகள்தோறும், நோனி மரங்கள் இருந்தால், மருத்துவச் செலவே அந்த குடும்பத்துக்கு வராது. தற்சமயம் நானும் சில நண்பர்களும் சொந்தப் பயன்பாட்டுக்கு மட்டுமே, நோனி வளர்த்து வருகிறோம். ஏக்கர் கணக்கில் சாகுபடி செய்தால்தான், சந்தையின் தேவையைப் பூர்த்தி செய்ய முடியும்.

அற்புதமான இந்த நோனி மரங்கள் கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் உள்ளன. அவற்றை முறையாக ஆராய்ச்சி செய்து, நிறைய கன்றுகளை உற்பத்தி செய்து வெளியிட்டால், நோனி சாகுபடி வரும் காலத்தில் விவசாயிகளுக்கு லாபம் தரும் பயிர்களில் முதலிடத்தைப் பிடிக்கும்.''

தொடர்புக்கு, செல்போன்: 82205-53461.

''சின்ன வெங்காயத்துக்கு சொட்டுநீர்ப் பாசனம் அமைக்கலாமா... அரசு மானியம் கிடைக்குமா?''

எம்.சுந்தரி, காஞ்சிபுரம்.

சென்னையில் உள்ள லேட்ரோ இரிக்கேஷன் நிறுவனத்தைச் சேர்ந்த, டி.ஆனந்த் பதில் சொல்கிறார்.

''தற்போது சின்ன வெங்காயத்தின் விலை கிலோ 100 ரூபாயைத் தாண்டி விட்டது. சின்ன வெங்காயம் சாகுபடி செய்ய, நிறைய தண்ணீர் தேவைப்படும். ஆனால், சொட்டுநீர்ப் பாசனம் மூலமாக குறைவான தண்ணீரில் பாசனம் செய்ய முடியும். இம்முறையில், செடியின் வேரில் நீர் பாய்வதால், நீர்த் தேவை பாதியாகக் குறைகிறது. அதுமட்டுமல்ல, களைகளும் அதிகமாக முளைப்பதில்லை. தமிழ்நாடு அரசின் தோட்டக்கலைத்துறை மூலம், சின்ன வெங்காயம் உட்பட அனைத்துவிதமான தோட்டக்கலைப் பயிர்களுக்கும் சொட்டுநீர் அமைக்க மானியம் வழங்கப்படுகிறது. 5 ஏக்கருக்குள் நிலம் உள்ள விவசாயிகளுக்கு 100% மானியமும், 5 ஏக்கர் முதல் 12 ஏக்கர் வரை உள்ள விவசாயிகளுக்கு 75% மானியமும் வழங்கப்படுகிறது. மானியம் தேவைப்படும் விவசாயிகள், அருகில் உள்ள தோட்டக்கலைத்துறை அலுவலகத்தை அணுகி விண்ணப்பம் அளிக்க வேண்டும்.

நீங்கள் கேட்டவை : 'கரையானைக் கட்டுப்படுத்துவது எப்படி?’

விண்ணப்பத்துடன், நிலத்தின் சிட்டா, அடங்கல், நில வரைபடம், ரேஷன் கார்டு, மற்றும் இரண்டு புகைப்படங்களைக் கொடுக்க வேண்டும். அதன் பிறகு தோட்டக்கலைத்துறை அலுவலர்கள், நிலத்துக்கு வந்து பார்வையிடுவார்கள். மானியம் பெறுவதற்கு அனைத்துத் தகுதிகளும் இருந்தால், உடனே சொட்டு நீர்ப் பாசனம் அமைக்க பரிந்துரை செய்வார்கள்.

அரசால் அங்கீகரிக்கப்பட்ட சொட்டு நீர்ப் பாசனம் அமைக்கும் நிறுவனங்களின் பட்டியல் உங்களிடம் வழங்கப்படும். அவற்றில் உங்களுக்கு எந்த நிறுவனத்தின் சேவை பிடித்துள்ளதோ, அதன் மூலம் அமைத்துக் கொள்ளலாம். 75% மானியம் பெறும் விவசாயிகள், தங்களின் பங்களிப்பான

25% தொகையைச் செலுத்தியவுடன், சொட்டுநீர்ப் பாசனக்கருவிகளை அமைத்து தந்து விடுவார்கள்.''

தொடர்புக்கு, செல்போன்: 94453-15582. 

''தென்னை மரங்களில் கரையான் தாக்குதல் உள்ளது. அதை எப்படித் தடுப்பது?''

எஸ். கந்தசாமி, பொள்ளாச்சி.

கன்னியாகுமரி மாவட்ட முன்னோடி இயற்கை விவசாயி மீனாட்சிசுந்தரம் பதில் சொல்கிறார்.

''கரையான்கள், விவசாயிகளின் நண்பன்தான். ஆனால், சில நேரங்களில் இந்த நண்பன் அதிக உரிமை எடுத்துக் கொண்டு தொல்லைப் படுத்துவதுண்டு. பொதுவாக, தென்னந்தோப்புக்களில் உள்ள எல்லா மரங்களிலும் கரையான் தாக்குதல் இருக்காது. பச்சையான பொருளை கரையான்கள் உண்ணாது. வேர்கள், பட்டைகள் காய்ந்திருக்கும் மரங்களில் மட்டுமே கரையான்கள் இருக்கும்.

நீங்கள் கேட்டவை : 'கரையானைக் கட்டுப்படுத்துவது எப்படி?’

இதனால், மரங்களுக்கு பெரிய பாதிப்பு ஏற்படாது. இதனால், மரத்தில் காய் பறிக்க ஏறும்போது, கொஞ்சம் சிரமம் இருக்கும். கிரீஸ், கழிவு ஆயில் அல்லது தார் இவற்றில் ஏதாவதொன்றை அடிமரத்தில் இருந்து, இரண்டு அடி உயரத்துக்குப் பூசி விட்டால், கரையான் பிடிக்காது. கரையான் அதிகம் உள்ள தென்னந்தோப்புகளில், கோழிகளை வளர்க்கலாம். கரையான், கோழிகளுக்கு ஏற்ற நல்ல புரதச்சத்து கொண்ட உணவு. கரையான் வந்தால் வருத்தப்படுவதை விடுத்து, அதை லாபகரமாகப் பயன்படுத்தும் விதத்தை யோசிப்பதுதான் புத்திசாலித்தனம்.''

தொடர்புக்கு, செல்போன்: 94438-44752. 

''நாங்கள் 40 சென்ட் நிலத்தில் மீன் பண்ணை வைத்துள்ளோம். மீன்களைப் பிடிக்க ஈச்சம் ஓலையைத்தான் பயன்படுத்தி வருகிறோம். இதன் மூலம் மீன்களைப் பிடிப்பது கடினமாக உள்ளது. வேறு உபகரணங்கள் உண்டா?''

டி.எஸ். கோபாலன்,  சென்னை.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் உள்ள மீன்வளத் தொழில்நுட்ப மையத்தின் இயக்குநர், முனைவர். மணிகண்டவேலு பதில் சொல்கிறார்.

''ஈச்சம் ஓலையில் மீன் பிடிக்கும் முறை பாரம்பரியமான முறை. அது செலவு குறைந்த நுட்பம். என்றாலும், அதிக வேலை வாங்கும். தற்போது, குளங்களில் உள்ள மீன்களைப் பிடிக்க, வீச்சு வலை, இழு வலை மற்றும் செவில் வலை என மூன்று வகையான வலைகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த வலைகளைக் கொண்டு விரைவாக மீன்களைப் பிடித்து விடலாம். இந்த வகை வலைகள் கடற்கரையோரம் உள்ள நகரங்களில் விற்பனை செய்யப்படுகின்றன.

நீங்கள் கேட்டவை : 'கரையானைக் கட்டுப்படுத்துவது எப்படி?’

மீன் பிடிப்பது கூட ஒரு விதமான நுட்பமான பணிதான். இதைக் கற்றுக் கொள்ள விரும்பும் விவசாயிகள் எங்கள் மையத்தைத் தொடர்பு கொண்டு பயன் பெறலாம். மேலும், மீன் வளர்ப்பு, மீன் பதன முறைகள் குறித்தும் அவ்வப்போது பயிற்சி கொடுத்து வருகிறோம்.''

தொடர்புக்கு, இயக்குநர்,
மீன்வளத் தொழில்நுட்ப நிலையம்,
எல்.என். அரசுக் கல்லூரி வளாகம்,
பொன்னேரி, திருவள்ளூர்-601204.
தொலைபேசி: 044-27991566.