மரத்தடி மாநாடு : ஏறுமுகத்தில் பட்டுக்கூடு..!
##~## |
காலை வெயில் ஏறுவதற்கு முன்பாகவே 'ஏரோட்டி’ ஏகாம்பரத்தோடு கழனிக்கு வந்து விட்டார், 'வாத்தியார்’ வெள்ளைச்சாமி. வந்த வேகத்தில் கை வேலைகளை முடித்து... ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு அவிழ்த்துவிட்டு... வாத்தியாரிடம் வந்தமர்ந்த ஏரோட்டி... நாளிதழ்களில் கண்களை ஓட்டினார்.
''இன்னிக்கு என்னங்கய்யா முக்கியமான சேதி?'' என்றபடியே 'காய்கறி' கண்ணம்மா வந்து சேர, அன்றைய மாநாடு ஆரம்பமானது.
''கர்நாடகா மாநில கபினி அணையில் உபரி தண்ணியைத் திறந்து விட்டுட்டாங்க. நொடிக்கு 40 ஆயிரம் கன அடி அளவுக்கு தண்ணி வர்றதால, காவிரி ஆத்துல வெள்ளம் ஓடுது. மேட்டூர் அணைக்கு தண்ணி வர ஆரம்பிச்சுடுச்சு. காலம் கடந்தாவது இந்த வருஷம் குறுவை சாகுபடிக்கு தண்ணி கிடைச்சுடும்னு டெல்டா விவசாயிகள் ஓரளவுக்கு நம்பிக்கை சுமக்க ஆரம்பிச்சுருக்காங்களாம்'' என்று சந்தோஷமாகச் சொன்னார், வாத்தியார்.
''அதேபோல, வறட்சி நிவாரண நிதியை ஒழுங்கா கொடுத்தாங்கனா... தமிழ்நாடு முழுக்க இருக்கற எல்லா விவசாயிகளும் சந்தோஷப்படுவாங்கள்ல...'' என்று பீடிகை போட்ட ஏரோட்டி,
''ஊருக்கு ஊர் இந்த ஆளுங்கட்சிக்காரங்களும்... வி.ஏ.ஓ-வும் (கிராம நிர்வாக அதிகாரி) சேர்ந்துகிட்டு அடிக்கற கொள்ளையில... விவசாயிங்க பாடு திண்டாட்டமா இருக்குது. திருவாரூர் மாவட்டத்துல கோயில் நிலம், குடியிருப்புப் பகுதிகள் எல்லாத்தையும் வறட்சி பாதிச்ச நிலம்னு கணக்கெழுதி சுருட்டியிருக்காங்க. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தி, 'யார் யாருக்கு பணம் கொடுத்துருக்காங்க’னு தகவல் வாங்கிட்டாங்க. அதுல ஊழல் பண்ணது வெட்ட வெளிச்சமாகிடுச்சு. ஆதாரத்தோட கலெக்டர் நடராஜனுக்கு புகார் போகவே... வி.ஏ.ஓ. பக்கிரிசாமி, அவரோட உதவியாளர்கள் சிங்காரவேல், ஜெயக்குமார்னு மூணு பேரையும் சஸ்பெண்ட் பண்ணியிருக்கார்'' என்று சொன்னார்.
''ராமநாதபுரம் மாவட்டத்துலயும் இதே கதை சில ஊர்கள்ல நடந்திருக்கு. கலெக்டர் நந்தகுமார் கண்கொத்தி பாம்பா கவனிக்க ஆரம்பிக்கவே... அங்கயும் சில அதிகாரிங்க சிக்கியிருக்காங்க. அதுக்குப் பிறகு, பணமெல்லாம் ஒழுங்கா பட்டுவாடா ஆகியிருக்குதாம். தமிழ்நாட்டுலயே அதிகப்படியான தொகையா, இந்த மாவட்டத்துக்கு 131 கோடி ரூபாயை நிவாரண நிதியா ஒதுக்கினாங்க. 99.9% தொகையை பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பிரிச்சுக் கொடுத்துட்டாங்களாம். மீதமிருக்கற தொகையையும் கொடுக்கற வேலை ஒழுங்கா நடக்குதுனு சொல்லியிருக்காரு கலெக்டர்'' என்று தனக்கு வந்த தகவலைத் தட்டிவிட்டார் வாத்தியார்.
''அட்றா சக்கை... அட்றா சக்கை... இப்படிப்பட்ட ஆளுங்கள சுளுக்கெடுக்கவும் சில அதிகாரிங்க இருக்கறத நினைக்கும்போது... பெருமையாத்தான் இருக்கு'' என்று பாராட்டுப் பத்திரம் வாசித்தார் காய்கறி.

''ஆனா, தமிழ்நாடு முழுக்க இப்படிப்பட்ட அதிகாரிங்க இல்லையே... அதனால, ஊருக்கு ஊர் விவசாயிங்க பணத்துல மஞ்ச குளிக்கறாங்க பலரும். இதைப் பத்தி 'பசுமை விகடன்' நிருபர்கிட்ட போன் போட்டு சொன்னேன். 'இந்த இதழ்லயே கண்டிப்பா அதைப்பத்தி எழுதறோம்'னு வாக்குறுதி கொடுத்திருக்கார் அந்த நிருபர்'' என்று கூடுதல் தகவல் தந்தார் ஏரோட்டி!
இதை ரசித்தபடியே ஆரம்பித்த வாத்தியார்... ''முக்கியமான ஒரு விஷயம். மறக்கறதுக்குள்ள சொல்லிடறேன். அதாவது... அங்கங்க மழை பேய்ஞ்சு தரிசா கிடந்த நிலங்கள்ல எல்லாம் புதுப்புல்லு முளைச்சுருக்குதுல்ல. அதுல ஆடு, மாடுங்கள மேய விடக்கூடாது. அதை மேய்ஞ்சா காய்ச்சல் வந்துடும். பாத்துக்கோ. அப்படி காய்ச்சல் வந்தா அசட்டையா இருக்காம... உடனே வைத்தியம் பாத்துடணும். இந்த காய்ச்சல் பரவாம இருக்கறதுக்கு தடுப்பூசியும் போட்டுக்கலாமாம்'' என எச்சரிக்கை செய்த வாத்தியார், அப்படியே அடுத்த செய்திக்குத் தாவினார்.
''பொள்ளாச்சி, ஆனைமலை, வேட்டைக்காரன்புதூர், ஆழியார், ஆண்டியூர்னு சுத்து வட்டாரத்துல ஏகப்பட்ட பேர் பட்டுக்கூடு உற்பத்தி பண்றாங்க. கொஞ்ச நாளைக்கு முன்னவரைக்கும் 'பட்டுக்கூடுக்கு சரியான விலை கிடைக்கலை’னு புலம்பிக்கிட்டிருந்தாங்க. ஒரு வாரமா கொஞ்சம் கொஞ்சமா விலை ஏற ஆரம்பிச்சுருக்குதாம். கர்நாடகா மாநிலத்துல இதுக்கு தேவை அதிகரிச்சுருக்கறதாலதான் விலை ஏறுதாம். போன மாசம் கோயம்புத்தூர் பகுதியில ஒரு கிலோ
300 ரூபாய்க்கு வித்தது, இப்போ 400 ரூபாயைத் தாண்டிடுச்சாம். இன்னும் விலை ஏறும்னு சொல்றாங்க. கர்நாடகா மாநிலம், ராம் நகர் பகுதியில கிலோ, 500 ரூபாய்க்கு விற்பனையாகுதாம்'' என்று சொன்னார்.
''ஆகா, காலையிலயே இப்படி தாக்குதே வெயில். இது இன்னும் ஏறுறதுக்குள்ள நான் கிளம்புறேன். போன தடவை போட்ட விடுகதைக்கு பதில் கண்டுபிடிச்சுட்டியா?'' என்று கேட்டார், காய்கறி.
''கன்னு நிக்க... கயிறு மேயுமாம்... அது என்ன?னுதானே கேட்டே... பூசணிக்கொடி! இதுகூட தெரியாதாக்கும்...'' என்று பெருமையாகச் சொன்னார், ஏரோட்டி.
'சரி, இந்தத் தடவை ஒரு கணக்கு போடுறேன் கண்டுபிடி... 'காலே அரைக்கால் காசுக்கு... நாலே அரைக்கால் வாழைக்காய். அப்போ காசுக்கு எத்தனை வாழைக்காய்?'' என்று காய்கறி சொன்னதுமே... ஏரோட்டியின் முகம் அஷ்ட கோணலானது. அதை ரசித்தபடியே காய்கறி கிளம்ப, முடிவுக்கு வந்தது அன்றைய மாநாடு!
மானிய விலையில் தக்கைப்பூண்டு!
நாமக்கல் மாவட்டம், மோகனூர் வேளாண் விரிவாக்க மைய உதவி இயக்குநர் விஜயராகவன் வெளியிட்டிருக்கும் செய்தி... 'தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், மோகனூர் வேளாண் விரிவாக்க மையத்தில் தக்கைப் பூண்டு விதை, 50 சதவிகித மானிய விலையில் விற்பனை செய்யப்படுகிறது. தேவைப்படும் விவசாயிகள், தங்கள் பகுதி உதவி வேளாண் அலுவலர்களை அணுகி, மானிய விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து கொடுத்து விதைகளை வாங்கிக் கொள்ளலாம். தக்கைப் பூண்டை விதைத்து, பூவெடுக்கும் சமயத்தில் மடக்கி உழுதால், மண்ணில் தழைச்சத்து அதிகரிக்கும். இதன் மூலம் உரச் செலவைக் குறைக்கலாம்' என்று கூறியிருக்கிறார்.