மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நீங்கள் கேட்டவை

படங்கள்: வீ. நாகமணி

 புறா பாண்டி

##~##

''வீட்டுத் தோட்டம் அமைப்பது போல, வீட்டிலேயே காளான் வளர்க்க முடியுமா?''

எஸ். சுந்தரம், திருப்பூர்.

கோயம்புத்தூரில் எளிய முறையில் காளான் வளர்த்து வரும் வாசுதேவன், பதில் சொல்கிறார்.

''காளான் சத்து நிறைந்த உணவு. 'இதை வீட்டில் வளர்க்க முடியாது’ என்றுதான் பலரும் நினைக்கிறார்கள். நான், பரிட்சார்த்த முறையில் காளானை வீட்டில் வளர்த்து பார்த்தபோது, நன்றாகவே வந்தது. வழக்கமாக, பாலிதீன் பைகளில், சோளத்தட்டை, வைக்கோல் போன்றவற்றை வளர்ப்பு ஊடகமாகப் பயன்படுத்தித்தான் காளான் வளர்ப்பார்கள். ஆனால், காலியான ஒரு லிட்டர் பிளாஸ்டிக் பாட்டில்களில், வளர்ப்பு ஊடகமாக காய்ந்த இலை, தழைகள், கிழிந்த சணல் பை, துணிப்பை... போன்றவற்றைப் பயன்படுத்தியே வீட்டில் வளர்க்க முடியும்.

நீங்கள் கேட்டவை

இதற்காக தனி அறை ஒன்று தேவைப்படும். வீட்டின் ஏதாவது ஓர் அறையைத் தேர்ந்தெடுத்து, அதை இருட்டாக இருக்கும்படி பராமரிக்க வேண்டும். வளர்ப்பு ஊடகமாக நாம் பயன்படுத்தப் போகும் பொருட்களை சுடுநீரில் 5 மணி நேரம் ஊற வைத்து, நிழலில் உலர்த்திக் கொள்ள வேண்டும். பிளாஸ்டிக் பாட்டில்களின் வெளிப்புறம் மெல்லியதாகக் கீறிவிட வேண்டும். இதன் வழியாகத்தான் காளான் வெடித்து வெளியே வரும். ஒரு கிலோ வளர்ப்பு ஊடகத்தையும், 200 கிராம் காளான் தாய் வித்தையும் பாட்டிலில் சேர்த்து அடைத்து... இருட்டறைக்குள் தரையில் நிற்க வைக்க வேண்டும். தினமும் காலையும், மாலையும் பாட்டில்கள் மீது தண்ணீர் தெளித்து வர வேண்டும். 25 நாட்களில் காளான்கள் முளைத்து, பாட்டில்களில் இருக்கும் கீறல்கள் வழியே வெளியில் வரும். ஒரு பாட்டிலில் இருந்து இரண்டு அறுவடைகள் மூலமாக சுமார் 1 கிலோ அளவுக்கு, சுவையான காளான் கிடைக்கும்.

காளான் அறுவடை முடிந்தவுடன், மீண்டும் வளர்ப்பு ஊடகத்தைத் தயார் செய்து, காளான் வளர்க்கலாம். இப்படி ஐந்து பாட்டில்களில் காளான் வளர்க்க, ஐந்து அடி பரப்பளவு உள்ள சிறிய அறைகூட போதும். மொட்டை மாடியில், தென்னங்கீற்றுக் கொட்டகை இருந்தால், காளான் மிகவும் சிறப்பாக வளரும். காளான் வித்துக்கள், கோயம்புத்தூர் வேளாண் பல்கலைக்கழகத்தில் உள்ள காளான் துறையில் கிடைக்கும்.''

தொடர்புக்கு, காளான் துறை, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்-3.
தொலைபேசி: 0422-6611426.
வாசுதேவன், செல்போன்: 88839-02859.

''சவுக்கு, மலைவேம்பு... போன்ற மரக்கன்றுகளை உற்பத்தி செய்ய விரும்புகிறேன். இவற்றுக்கான வளர்ச்சி ஊக்கி, எங்கு கிடைக்கும்?''

ஆர். ரகுபதி, கிருஷ்ணகிரி.

கோயம்புத்தூரில் உள்ள வன மரபியல் மற்றும் மரப்பெருக்கு மையத்தின் விஞ்ஞானி, முனைவர். எஸ். முருகேசன் பதில் சொல்கிறார்.

நீங்கள் கேட்டவை

''மரக்கன்றுகள் உற்பத்திக்குப் பயன்படுத்தப்படும் இயற்கை உரங்கள் பற்றிய ஆராய்ச்சியில் பத்து ஆண்டுகள் ஈடுபட்டு, முடிவில் 'ட்ரீ ரிச் பயோ-பூஸ்டர்’ எனும் வளர்ச்சி ஊக்கியை உருவாக்கியுள்ளோம். சுற்றுச்சூழலுக்கு உகந்த இக்கலவை, வேகமாக வளரும் மர இனங்களான சவுக்கு, குமிழ், பெருமரம், மலைவேம்பு, தேக்கு மற்றும் யூக்லிப்டஸ் போன்ற மர வகை நாற்றுகளை வளர்க்க பெரி¢தும் பயன்படுகிறது. மண்புழு உரம், மட்கிய தென்னை நார்க்கழிவு, மண்கலவை, மரத்தூள், பசுந்தாள் உரம், காட்டாமணக்கு மற்றும் வில்வ பிண்ணாக்கு ஆகியவற்றுடன் தாவர வளர்ச்சி ஊக்கிகளை (பூஞ்சணங்கள், பாக்டீரியாக்கள் போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட நுண்ணுயிர் ஊட்டங்கள்) சேர்த்து, அவற்றின் வளர்ச்சியைத் தூண்டும் ஆற்றல் பரி¢சோதிக்கப்பட்டது. இந்த ஆய்வு முடிவில், மட்கிய தென்னை நார்க்கழிவு மற்றும் தொழுவுரத்துடன், பிற இயற்கை வளர்ச்சி ஊக்கிகளைச் சேர்த்த கலவை, மற்ற கலவைகளைவிட 30% முதல் 40% அதிக அளவு வளர்ச்சி அடைந்தது. இதை மையமாக வைத்துதான், 'ட்ரீ ரிச் பயோ- பூஸ்டர்’ வளர்ச்சி ஊக்கி உருவாக்கப்பட்டது. இந்த வளர்ச்சி ஊக்கியை மரப் பயிர்களுக்கு மட்டுமல்ல, கத்திரி, தக்காளி, மிளகாய்... போன்ற காய்கறி நாற்றுகளுக்கும் பயன்படுத்தலாம். இதைத் தயார் செய்யும் தொழில்நுட்பத்தை எங்கள் மையத்தில் கற்றுக் கொள்ளலாம்.''

தொடர்புக்கு, வன மரபியல் மற்றும்
வனப் பெருக்க மையம், ஆர்.எஸ்.புரம், கோயம்புத்தூர்-641002.
தொலைபேசி: 0422- 2484169, 2484100.

''வீட்டில் மூட்டைப்பூச்சித் தொல்லை அதிகமாக உள்ளது. அதை இயற்கை முறையில் கட்டுப்படுத்த வழி சொல்ல முடியுமா?'

ஹாஜியார், சென்னை. நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த பாரம்பரிய சித்த மருத்துவர்  க.கோ. மணிவாசகம் பதில் சொல்கிறார்.

''மூட்டைப்பூச்சிகளின் தாக்கம் முன்பு போல் பெரிய அளவில் இல்லாவிட்டாலும்... ஆங்காங்கே இருக்கவே செய்கிறது. இதற்காக ரசாயனங்களைப் பயன்படுத்துவது... மனிதர்களுக்கு பலவித இன்னல்களைத்தான் கொண்டு வரும். எனவே, மூட்டைப்பூச்சிகளை இயற்கை நுட்பத்தை வைத்தே கட்டுப்படுத்துவதுதான் சிறந்தது.

நீங்கள் கேட்டவை

மூட்டைப்பூச்சிகள், தாமரை வாசனையைக் கண்டால், அலறி அடித்து ஓடி விடும். தாமரை மலரைக் காய வைத்து, தூளாக்கி மூட்டைப்பூச்சிகள் இருக்கும் இடத்தில் தூவினால், அவை அந்தப் பக்கம் எட்டி கூடப் பார்க்காது. மூட்டைப்பூச்சிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால், ஒரு லிட்டர் நாட்டு மாட்டின் சிறுநீருக்கு, கால் கிலோ தாமரை இலை என்கிற அளவில் 8 நாட்களுக்கு ஊற வைத்து... ஒரு லிட்டர் கரைசலுக்கு, 10 லிட்டர் தண்ணீர் என்ற அளவில் கலந்து தெளித்தால், மூட்டைப்பூச்சிகளின் எண்ணிக்கை பெருமளவு குறைந்துவிடும். 15 நாட்கள் இடைவெளியில் மீண்டும் ஒரு முறை தெளித்தால் மொத்த மூட்டைப்பூச்சிகளையும் ஒழித்து விடலாம்.''

தொடர்புக்கு, செல்போன்: 98435-92039.

''பால் பண்ணை அமைக்க விரும்புகிறேன். கடனுதவியும், மானியமும் கிடைக்குமா?''

கே. நேரு, பீமாரெட்டியூர்.

பாரத ஸ்டேட் வங்கியின் முன்னாள் மேலாளரும், கால்நடை மருத்துவருமான
ஓ. ஹென்றி ஃபிரான்சிஸ் பதில் சொல்கிறார்.

''பால் பண்ணையை முழு நேரத் தொழிலாக செய்ய விரும்புபவர்களுக்கு, தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், கடன் உதவி வழங்கி வருகின்றன. குறிப்பாக, பாரத ஸ்டேட் வங்கியில் 'டெய்ரி பிளஸ்’ என்ற திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் இரண்டு மாடுகள் கொண்ட சிறிய பால் பண்ணை முதல், நூற்றுக்கணக்கான மாடுகள் கொண்ட பெரிய அளவு பால் பண்ணை அமைப்பது வரையிலும் கடன் உதவி பெறலாம்.

நீங்கள் கேட்டவை

கடன் பெறும் விவசாயிகள், கடன் தொகைக்கு ஈடாக, சொத்து அடமானம் வழங்க வேண்டும். பால் பண்ணை அமைக்க கடன் கொடுக்கும் போது, ஒரே நேரத்தில் முழுத் தொகையும் வழங்க மாட்டார்கள். உதாரணத்துக்கு 10 மாடுகள் கொண்ட பண்ணை தொடங்க விண்ணப்பித்தால், முதலில் 5 மாடுகளுக்கு கடன் கொடுப்பார்கள். அடுத்து, ஆறு மாதம் கழித்து, 5 மாடுகளுக்கு கடன் கொடுப்பார்கள். இதற்கு காரணம், ஆண்டு முழுக்க பண்ணையில் உள்ள மாடுகள் கறவையில் இருந்தால், ஆண்டு முழுக்க வருமானம் கிடைக்கும்... அப்போதுதான் தவணையை ஒழுங்காகச் செலுத்த முடியும் என்பதுதான்.

10 மாடுகளுக்கு, ஒரு ஏக்கர் அளவில் பசுந்தீவன உற்பத்தி செய்ய வேண்டும். உங்கள் பண்ணையில் உற்பத்தியாகும் பாலை கொள்முதல் செய்வதற்காக ஆவின் அல்லது தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளலாம். வாய்ப்பு இருந்தால், நீங்களேகூட நேரடியாக விற்பனையில் ஈடுபடலாம். பால் பண்ணை குறித்த முன் அனுபவம் இருந்தால், எளிதாகக் கடன் பெறலாம். புதியவர்கள், கால்நடை ஆராய்ச்சி மையங்கள், வேளாண் அறிவியல் மையங்களில் வழங்கப்படும் பயிற்சிகளைப் பெற்ற பிறகு பண்ணை தொடங்குவது நல்லது. பால் பண்ணை அமைக்க, தற்போது மானியம் வழங்கப்படுவதில்லை. அதேசமயம், பால் குளிரூட்டும் நிலையம் அமைக்க, நபார்டு வங்கியால் மானியம் வழங்கப்படுகிறது. மானியத் தொகையை உங்கள் கடன் கணக்கில் வரவு வைத்து விடுவார்கள்.''

தொடர்புக்கு, செல்போன்: 99408-67706.

''கொட்டாங்குச்சியை வைத்து, ஏதாவது தொழில் தொடங்க முடியுமா?''

டி. ராஜேஷ், மார்த்தாண்டம்.

''கேரள மாநிலம், கொச்சியில் தென்னை வளர்ச்சி வாரியம் செயல்பட்டு வருகிறது. இங்கு கொட்டாங்குச்சியில் இருந்து, கைவினைப்பொருட்கள் தயாரிப்பு, கொட்டாங்குச்சி கரி மூலம் ஆக்டிவேட்டட் கார்பன் தயாரிப்பு... போன்றவற்றுக்கான நிதியுதவிகள் வழங்கப்படுகின்றன.''

தொடர்புக்கு,

Coconut Development Board, Government of India, Ministry of Agriculture, P.B. No.1021, Kera Bhavan, Near SRV High School Road, Kochi-682011, Kerala, India Ph: 0484-2376265, 2377267, 2377266, 2376553.

நீங்கள் கேட்டவை